சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

நாரதர் கதைகள் - 8

எழுத்துச் சித்தர் பாலகுமாரன், ஓவியம்: பத்மவாசன்

நாரதர் கதைகள் - 8

சிவமுனி தனக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த அழகிய பெண் மானைப் பார்த்துக் காமுற்றார். அந்த எண்ணமே அந்த மானின் வயிற்றுக்குள் சென்று சூல் கொண்டது. சூல் கொண்ட அந்த இடத்தை நோக்கி, சூட்சுமமாக இருந்த சுந்தரவல்லி போய் அமர்ந்துகொண்டாள். அவளைத் தாங்கமுடியாத அந்த பெண் மான்,

##~##
சிறிது காலம் அவளைச் சுமந்துவிட்டு, வேடர்கள் பறித்து வைத்திருந்த வள்ளிக்கிழங்கு பள்ளத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுவிட்டுப் போயிற்று. மறுநாள், குழந்தை யின் சப்தம் கேட்டு வந்து பார்த்தார்கள் வேடர்கள். வாரியெடுத்து அணைத்துக் கொண்டார்கள். வள்ளிக்கிழங்கு பறித்த பள்ளத்தில் பிறந்ததால், அந்தக் குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டார்கள். இரண்டு குழந்தைகளும் அற்புதமாக வளர்ந்தன.

இந்திரலோகம் சென்று தெய்வயானையைப் பெண் கேட்டு, இந்திரன் தாரை வார்த்துத் தர, அவளை முருகன் மணந்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.

வள்ளி இடைவிடாது முருகப் பெருமானையே நினைத்துக் கொண்டிருந்தாள். தக்க சமயத்தில் முருகன் அவள் எதிரே போய், கிழ வேடத்தில் நின்றார். கிழவர் யார் என்று வள்ளிக்குத் தெரியவில்லை. பணிந்து வரவேற்றாள். ''தள்ளாத வயதில் இந்த வெயிலில் நடந்து வந்திருக்கிறீரே, என்ன வேண்டும்?'' என்று கேட்டாள்.

''தாகம், தண்ணீர், கொஞ்சம் விசிறு, வெப்பம்'' என்று குழறலாய் முருகன் நடித்தார். வள்ளி அருகே வந்து குவளையில் இருந்த நீரை கிழவரின் வாயில் ஊற்றினாள். முந்தானையால் விசிறிவிட்டாள்.

''இன்னும் அருகே வந்து விசிறு. காற்று போதவில்லை'' என்றார் முருகன். வள்ளி இன்னும் நெருக்கமாக நின்றுகொண்டாள். அவள் வாசனை முருகனின் மூக்கைத் துளைத்தது. முருகன் போடும் நாடகத்தை நாரதர் விலகி நின்று ரசித்தார்.

அருகில் நின்ற வள்ளியின்மீது தெரியாது கைபடுவதுபோல் நடித்து, பிறகு மெள்ள அவளை அணைத்துக்கொண்டு எழும்போது அவளின் தோள்பட்டையில் கை ஊன்றி எழுந்து, தடுமாறி, விழுந்துவிடாமல் இருக்க மீண்டும் மெள்ள அணைத்துக்கொண்டு, பல்வேறு விதமாக முருகன் அந்தப் பெண்ணைத் தொட்டுச் சீண்டினார். ஒருகட்டத்தில் வள்ளி புரிந்துகொண்டாள்.

''பெரியவரே, நீங்கள் என்னிடம் தவறாக நடந்துகொள்கிறீர்கள். உங்கள் தாகத்திற்கு உதவி செய்தேன். களைப்பைப் போக்கினேன். அதற்கு நீங்கள் என்னிடம் நடந்துகொள்ளும் முறை இதுதானா?'' என்று கோபப்பட்டாள்.

நாரதர் கதைகள் - 8

''இல்லையம்மா! தாகத்திற்கு உதவியதும், களைப்பைப் போக்கியதும் மிக உத்தமமான காரியம். ஆனாலும், உன்னை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தபோது, எனக்குப் பழைய நினைவுகள் கிளறிவிட்டன. உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். தவறாக எண்ணாதே! உன்னை எப்போதும் தொட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது'' என்று கிழவனார் அத்துமீற, சினந்து விலகினாள் வள்ளி.

''எனக்குத் திருமணம் என் மனதளவில் நிச்சயமாகிவிட்டது!''

''அப்படியா, யாரது?''

''முருகன். சிவனின் இரண்டாவது குமாரர். அவருடைய தீண்டுதலுக்காகவே நான் காத்திருக்கிறேன். அவரைத் திருமணம் புரிந்துகொள்வதற்காகவே வளர்ந்து நிற்கிறேன். அவரைத் தவிர, வேறு எவரையும் மனத்தாலும் தீண்டேன். உம்மை நல்லவர் என்று நினைத்தேன். ஆனால், காட்டுக்குள் தனிமையில் இருக்கிற இளம்பெண்ணிடம் அருவருப்பாகப் பேசுகிறீர்கள். அத்துமீறி நடந்து கொள்கிறீர்கள். உங்களை எச்சரிக்கிறேன். விலகியே இருங்கள். இல்லாவிட்டால் நான் பொல்லாதவளாகிவிடுவேன்!'' என்று தடியை எடுத்துக்கொண்டு அவரை அடிப்பது போல் மிரட்டினாள்.

கிழவர் பயப்படுவதுபோல் நடித்தார். மயங்கிச் சரிவதுபோல் மரத்தைப் பிடித்துக்கொண்டார். மனத்துக்குள் தன் தமையனை தியானித்தார்.

''எல்லாம் வல்ல என் அண்ணனே! எனக்கு ஓர் உதவி தேவைப்படுகிறது. ஜென்ம ஜென்மமாய் எனக்காகக் காத்திருக்கும் இந்தப் பெண்ணை நான் அடைய, நீதான் உதவி செய்ய வேண்டும். இவள் என் அருகே வரும்படி தந்திரம் செய்ய வேண்டும். இவளை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும்!'' என்று தலைவணங்கி வேண்டினார்.

சட்டென்று விநாயகப் பெருமான் அங்கே ஒரு பெரிய காட்டு யானையாகத் தோன்றினார். ஏதோ சலசலப்பு கேட்கவும், வள்ளி திரும்பிப் பார்த்தாள். பின்னால் மரங்கள் அசைவது தெரிந்தது.

'இதென்ன மரங்கள் இந்த ஆட்டம் ஆடுகின் றனவே, அப்படி என்ன வருகிறது!’ என்று  பயந்து நாலாப்புறமும் பார்த்தாள். புதர்களை விலக்கி, மரங்களை ஒடித்து, ஒரு பெரிய காட்டு யானை அங்கு நுழைந்தது. பிளிறியது.. வள்ளி பயந்தாள். ஓடிப்போய் அந்தக் கிழவரை அணைத்துக்கொண்டாள்.

''சற்று முன்புதானே சொன்னாய்... முருகனைத் தவிர வேறு யாரையும் மனத்தாலும் தீண்டேன் என்று?''

நாரதர் கதைகள் - 8

''ஆமாம் அய்யா! நான் பயத்தில் உங்களிடம் வந்து ஒட்டிக்கொண்டேனே தவிர, இப்போதும் என் மனத்துக்குள் முருகன்தான் இருக்கிறார். உங்கள் ரூபத்தில் அந்த முருகனைத்தான் நான் காண்கிறேன். முருகனை என்னிடமிருந்து எவராலும் பிரிக்க முடியாது!'' என்று அந்த நேரத்திலும் உரத்த குரலில் வாதிட்டாள் வள்ளி.

முருகனுக்கு அந்தப் பெண்ணின் மன உறுதி பிடித்திருந்தது. தன் தமையனாரை நோக்கிக் கை கூப்பினார். யானை மறைந்து, அங்கே விநாயகர் உருவம் தோன்றியது.

''நீ யாரைத் தழுவிக் கொண்டிருக்கிறாயோ அவன் கிழவனல்ல; குமரன். எனக்கு இளையவன். அழகன். முருகன். திரும்பிப் பார்!'' என்று விநாயகர் சொல்ல, வள்ளி திரும்பிப் பார்த்தாள்.

கையில் வேலோடு, அழகிய புன்முறுவலோடு, திருநீறோடு, அகன்ற மார்போடு, சிவந்த மேனியோடு, தங்கக் கிரீடத்தோடு முருகப் பெருமான் அங்கே நின்றிருந்தார். வள்ளிக்கு நாணமும் சந்தோஷமும் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே பொங்கின. அவள் விநாயகரை வணங்கினாள். ஆசீர்வதிக்கும்படி கேட்டாள். மறுபடி எழுந்து தன் கணவனை வணங்கினாள். அவனுக்கு அருகே பெருமையோடு இடுப்பில் கை கோத்து நின்றுகொண்டாள்.

''உலகிலேயே மிக அற்புதமான ஜோடி என்பது பார்த்தாலே தெரிகிறது'' என்று விநாயகர் ஆசீர்வதித்தார்.

''கற்பியல் திருமணம் எப்படி உத்தமமோ, அதே போல உங்கள் காதல் திருமணமும் உத்தமம்'' என்று அந்தத் திருமணத்தை ஆதரித்தார். விநாயகர் சொல்லை வேதமந்திரமாக எடுத்துக்கொண்டு, முருகனின் கை கோத்துக் கொண்டாள் வள்ளி. அந்த வனம் முழுவதும் அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். கூடிக் குலவினார்கள்.

வள்ளியைக் காணாது வேடுவர் தலைவனும் மற்ற வேடுவர்களும் எல்லா இடங்களிலும் தேட, வேடுவர் தலைவன் தன்னுடைய ஒற்றர்கள் மூலம் அவர்கள் இருப்பிடம் அறிந்தான். தன் பெண்ணோடு ஒரு பலம் மிகுந்த ஆண் மகன் இருக்கிறான் என்று தெரிந்து, தன் படைகளோடு அந்த இடத்துக்குப் போனான். தொலைவில் தன் மகள் ஒரு ஆணோடு இருப்பது தெரிந்து, வேகமாக மூச்சிரைத்து ஓடிப் போக, அந்த இடத்தில் ஒரு கொன்றை மரம் இருந்தது. மகள் மட்டும் நின்றுகொண்டிருந்தாள்.

''எங்கே அவன்?'' என்று வள்ளியை மிரட்ட, முருகன் மரமாகி நிற்பதை வள்ளி சொல்ல, வேடர்கள் அதைப் பிடுங்க முயற்சித்தபோது, முருகப் பெருமான் தன் சேவலை அழைக்க, அது மிக உரத்த குரலில் ஒலி எழுப்பியது. அந்த ஒலியின் வேகமும் அதிர்வும் தாங்காது அந்த வேடர்கள் மடிந்தார்கள். வள்ளி துயருற்றாள்.

''கவலைப்படாதே! என்னை சீறிச் சினந்தவர்கள் மீது நாம் நம்முடைய பலத்தைக் காட்டினோம். திருத்தணிகை போவோம், வா!'' என்று அவளை அழைத்துக்கொண்டு திருத்தணிகை சென்று, அங்கே அவளைத் திருமணம் செய்துகொண்டார் முருகன். நாரதர் முன்வந்து வாழ்த்தினார்.

தன்னுடைய வேடுவர்கள் மடிந்தது கண்டு வள்ளி உள்ளுக்குள் துயரடைந்திருப்பது தெரிந்து, நாரதர் வேடுவர்களை எழுப்புமாறு முருகனை வேண்டினார். அவ்விதமே முருகனின் அருள்பெற்று வேடுவர்கள் எழுந்தார்கள். தங்கள் முறைப்படி வள்ளியை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

எந்தத் திருமணம் சரி? தகப்பனின் சம்மதத்துடன் நடக்கும் திருமணம் சரியா, தானே முன் வந்து தன் புருஷனைத் தேடிக்கொண்டு, அவனோடு கலந்து பழகியபின், பெற்றோரின் விருப்பத்தோடு அவனை மணந்துகொள்வது சரியா என்ற கேள்வி வருகிறபோது, இரண்டுமே சரி என்ற விஷயம் உறுதியாகிறது.

திருமணம் என்பது சடங்கு அல்ல. அது ஒரு தவத்தின் பயன். திருமணம் என்பது வெறும் வழிமுறை அல்ல. அது ஒரு வாழ்க்கையின் திருப்பம். மரம் பூத்துக் குலுங்கி பிறகு கனிகள் கொடுக்கும் பருவமே, திருமணம்! வீட்டில் வைத்த மரமாக இருந்தால் என்ன, காட்டில் வளர்ந்த மரமாக இருந்தால் என்ன... சரியான நேரத்தில் மலர வேண்டும்; கனி கொடுக்க வேண்டும்; பயனுற வேண்டும்; பயன் தர வேண்டும். இதுவே முக்கியம்! மனம் ஒருமித்த காதலே முக்கியம். தவம் செய்து புருஷனை அடைய வேண்டியதே குறிக்கோள். தனக்கு நல்ல புருஷன் வேண்டும் என்று பெண்கள் நோன்பு நோற்பதே முக்கிய வேலை.

தன்னை நேசிக்கிற பெண்ணைக் கைவிடாது, அவளை முறைப்படி திருமணம் செய்துகொள்வதே ஆண் மகனின் கடமை. என்ன எதிர்ப்பு வந்தாலும் அதைத் துச்சமென நினைத்து, தன்னை நேசித்த பெண்ணின் கரம் பற்றுதலே ஆண்மை. பெற்றவர்கள் புறக்கணித்துவிட்டார்களே, அவர்கள் துன்பப்பட்டுவிட்டார்களே என்று மனம் மயங்கி, மதி மயங்கி நிற்காமல், புருஷனின் கைப்பிடித்து, பின்பு தன்னுடைய பெற்றோரைப் பற்றி எடுத்துச் சொல்லுதல் பெண்டிர்க்கு அழகு! அதன் மூலம் மறுபடியும் நல்லுறவு பெருகுவது சிறப்பு.

உற்றுப் பார்க்கும்போது, நாரதருடைய இந்தக் கணிப்பு நல்ல கதையாய், உலகத்திற்கு நீதியாய் விளங்குவது தெரியவரும்.

நாரதர் காட்டிய திருமண முறைகளை உலகம் இன்றளவும் கைப்பற்றி வருகிறது.

- தொடரும்...