Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

காவிரியின் வடகரைக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?வி.ராம்ஜி

ஆலயம் தேடுவோம்!

காவிரியின் வடகரைக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?வி.ராம்ஜி

Published:Updated:
##~##

மருதூர் ஸ்ரீராஜராஜேஸ்வரர் கோயில்

 ரசாட்சி செய்வது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. மக்களின் மனம் கோணாமலும், அவர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும்படியாகவும் சிந்தித்துச் செயல்படவேண்டும். அத்துடன், தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் வளர்ச்சி அடையவேண்டும் என்றும், விவசாயத்திலும் பசுமையிலும் வேலைவாய்ப்பிலும் வசதி வாய்ப்பிலும் குறைவில்லாத ஊராக, தேசமாக இருக்கவேண்டும் என்றும் திட்டமிட்டுச் செயல்படுத்தவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாவற்றுக்கும் மேலாக, எதிரிகள் நம் தேசத்தில் ஊடுருவாமல் கண்கொத்திப் பாம்பாக இருந்து, ஒரு பெரும்படையை எல்லையோரங்களில் கண்காணிக்கச் செய்யவேண்டும். முன்னதாக யாரெல்லாம் எதிரிகள், எவரெல்லாம் நண்பர்கள் என்பதை ஒரு மன்னன் தெளிவுற அறிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆக, ஒரு தேசத்துக்கு மன்னனாக, தலைவனாக இருப்பது என்பது சாமானியம் அல்ல. தன்னலத்தை மறந்துவிட்டு எப்போதும் தேசம் குறித்த சிந்தனையில் ஒரு மன்னன் இருந்தால்தான், அவனுடைய மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்கள். இதை அறிந்து உணர்ந்து செயல்படுபவனே சிறந்த மன்னனாகத் திகழமுடியும்.

ஆலயம் தேடுவோம்!

தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த சரபோஜி மகாராஜா, ஆழ்ந்த கவலையில் இருந்தார். படுத்தால் தூக்கம் வரவில்லை. எந்நேரமும் ஒருவித படபடப்பில் இருந்தார். வேளாண்மையில் சிறந்து விளங்குகிற, காவிரி பாய்ந்தோடுகிற தஞ்சைத் தரணியை வேறு எவரும் அபகரித்துவிடக்கூடாதே என்று பதறியபடியே இருந்தார். ராமநாதபுரத்தில் இருந்தும் மதுரையில் இருந்தும் அங்கே ஆட்சி செய்பவர்களால் இடையூறுகளும் எதிர்ப்பும் வலுத்தபடியே இருந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிப் போனார் மன்னர்.

சமீபகாலமாகவே, மதுரையில் இருந்தும் ராமநாதபுரத்தில் இருந்தும் வீரர்களும் ஒற்றர்களும் மக்களுடன் மக்களாகக் கலந்து, வேவு பார்த்தபடி இருக்கிறார்கள் என்பதை ஒற்றர்கள் மூலமாக அறிந்துகொண்ட மன்னர், தனது படைவீரர்களை ஊர் எல்லைகளில் குடியமர்த்தி, அவர்களுக்கு மூன்று வேளைகளும் உணவும் மற்றும் தேவையான அனைத்தும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.

சரபோஜி ராஜாவின் முக்கிய மந்திரிகளில் ஒருவர் லட்சுமண பண்டிதர். அவரை அழைத்து, 'மதுரையில் இருந்தும் ராமநாதபுரத்தில் இருந்தும் குடைச்சல்களும் குழப்பங்களும் வந்து தாக்கிக்கொண்டே இருக்கின்றனவே... இந்தச் சூழ்ச்சிகளில் சிக்கி, தஞ்சை தேசத்தைத் தாரை வார்த்துவிடுவோமோ’ என்று தன் கவலையை வெளிப்படுத்தினார்.

'கவலையை விடுங்கள். இந்த தேசம் செழிக்கவும் எதிரிகள் தொல்லையில் இருந்து மீளவும் அழகிய சிவாலயம் ஒன்றை எழுப்புவது எனப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். தஞ்சைப் பெரியகோயில் உட்பட பல ஆலயங்கள் இங்கே அப்படி ஒரு பிரார்த்தனையாலோ வழிபாட்டாலோதான் கட்டப் பட்டிருக்கவேண்டும்’ என்று சொன்னார் லட்சுமண பண்டிதர். 'அப்படியே ஆகட்டும் அமைச்சரே..! எங்கே கோயில் கட்டவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து, கோயில் கட்டும் பணியையும் முன்னின்று செய்துவிடுங்கள்’ எனக் கட்டளைபோலும் அறிவித்தார் மன்னர்.

காவிரியின் வடகரையில் கோயிலைக் கட்டுவது எனத் தீர்மானித்த லட்சுமண பண்டிதர், தஞ்சையில் இருந்து திருக்குடந்தை எனப்படும் கும்பகோணத்துக்கு வந்தார். சுவாமிமலையில் தரிசனத்தை முடித்துவிட்டுத் திருவிடைமருதூர், தருமபுரம் என வழிநெடுக தலங்களில் உள்ள இறைவனைத் தரிசித்து விட்டு, அப்படியே மயூரநாதர் குடிகொண்டிருக்கும் மாயூரம் எனப்படும் இன்றைய மயிலாடு துறைக்கு வந்தார். அங்கேயும் தரிசனம் முடிந்தது.

ஆலயம் தேடுவோம்!

அப்படியே காவிரியின் வடகரையோரமாக, பூம்புகார் நோக்கிப் பயணப்பட்டார். வழியில் மருதவனத்தைக் கண்டு, அங்கே சிறிது நேரம் இளைப்பாறினார். அந்த இடத்தின் சூழலும் குளிர்ந்த சீதோஷ்ணமும் பரவியிருந்த நறுமணமும், அங்கேயே ஒரு கோயில் எழுப்பி னால் என்ன என்கிற முடிவுக்கு அவரைக் கொண்டுவந்தது. உடனடியாக, தஞ்சையில் இருந்து மராட்டிய அந்தணர்களை வரவழைத்து அங்கே யாகங்களும் ஹோமங்களும் செய்தார். சிவாச்சார்யர்களை அழைத்து, சிவபூஜை செய்வதற்குத் தயாராகும்படி உத்தரவிட்டார்.

மளமளவென வேலைகள் துவங்கின. மருத வனத்தின் அந்தப் பகுதி, அழகிய கிராமமாக உருவானது. வீடுகள் கட்டப்பட்டன. தெருக்கள் அமைக்கப்பட்டன. மக்கள் குளிப்பதற்கு வசதியாக குளங்கள் வெட்டப்பட்டன. கோயிலில் பூஜை செய்பவர்கள், கோயிலை நிர்வகிப் பவர்கள், சுத்தப்படுத்தி பராமரிப்பவர்கள் என அனைவரும் தஞ்சாவூரில் இருந்தும் கும்பகோணத்தில் இருந்தும் வரவழைக்கப்பட்டனர்.

அங்கே அழகிய சிவாலயம் உருவானது. மன்னரும் மந்திரிகளும் வீரர்களும் பொதுமக்களும் சூழ... கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. மருதவனம் கிராமமாக உருவாகி, மருதூர் என்று  அழைக்கப்பட்டது. அங்கே குடிகொண்டிருக்கும் சிவனாருக்கு ஸ்ரீராஜராஜேஸ் வரர் எனும் திருநாமம் சூட்டப் பட்டது. அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீதேவநாயகி. சரபோஜி ராஜாவின் சங்கடங் களும் சஞ்சலங்களும் காற்றில் கரைந்து காணாது போயின.

ஆலயம் தேடுவோம்!

கிழக்கே ஸ்ரீகடைமுடிநாதர், மேற்கே ஸ்ரீமயூரநாதர், வடக்கில் ஸ்ரீவைத்தியநாதர், தெற்கில் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்க... காவிரியின் வடகரையில் ஒய்யாரமாக இருந்தபடி, உலக மக்களுக்கு அருள்கிறார் ஸ்ரீராஜ ராஜேஸ்வரர்.

ஒருகாலத்தில், ஆறுகால பூஜை என்ன... மாதப் பிறப்பிலும் அமாவாசையிலும் பௌர்ணமியிலும் வழிபாடுகள் என்ன... திருவிழாக்களும் கோலாகலங்களும் என்ன... திருவீதியுலாக்களும் ஸ்வாமி அலங்காரங்களும் என்ன... என்று அமர்க்களப்பட்ட ஆலயம் இது. ஆனால், இன்றைக்கு வெறிச்சோடிக் காணப்படுகிறது கோயில்.

மண்டபங்கள் சிதைந்து, பிராகாரங்களில் முட்புதர்கள் வளர்ந்து, பூஜை செய்யவும் ஆளின்றி, பூஜிப்பதைத் தரிசிக்கவும் மக்களின்றி பரிதாபமாக உள்ள நிலையைப் பார்த்தால், நெஞ்சே பதறுகிறது.

''கோயிலுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த நிலங்களெல்லாம் காலப்போக்கில் கோயிலுக்குச் சொந்தமில்லாது போய்விட்டன. 1952-ஆம் வருஷத்திலும், அதன் பிறகு ஒருமுறையும் என இரண்டு முறை காஞ்சி மகாபெரியவா இந்தக் கோயிலுக்கு வந்து, ஸ்ரீராஜராஜேஸ்வரரைத் தரிசித்து, இங்கே ஜபதபங்கள் செய்து, மக்களுக்கு அருளாசி வழங்கிச் சென்றுள்ளார். அற்புதமான கோயில் மீண்டும் பொலிவுக்கு வந்து, கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதே இந்த ஊர்மக்களின் விருப்பமும் பிரார்த்தனையும்'' என்று கண்ணீருடன் சொல்கிறார் சுவாமிநாதன். கோயிலின் பரம்பரை தர்மகர்த்தா.

ஊரையும் மக்களையும் செழிக்கச் செய்த ஸ்ரீதேவநாயகி சமேத ஸ்ரீராஜராஜேஸ்வரர் திருக்கோயில் திருப்பணியில் நாமும் பங்கு பெறுவோம். எதிரிகள் தொல்லையில் இருந்து மீட்டு, காத்தருளும் இறைவனுக்கு, அவன் குடிகொண்டிருக்கும் கோயிலின் புனரமைப்புக்கு நம்மால் ஆனதைச் செய்வோம்; அந்த சத்காரியத்தில் நாமும் பங்கெடுப்போம்.

ஸ்ரீராஜராஜேஸ்வரரின் பேரருளால் எல்லா நலமும் பெற்று வாழையடி வாழ, நமக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது! இந்தக் கோயில் திருப்பணியில் பங்கேற்று, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோமே!

படங்கள்: ஆர்.அருண்பாண்டியன்

எங்கே இருக்கிறது?

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது மருதூர். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள அற்புதமான இந்தத் தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவநாயகி சமேத ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஆலயம்.

21, 12 எனும் எண்கள் கொண்ட டவுன் பஸ்கள், மயிலாடுதுறையில் இருந்து வந்து செல்கின்றன. மினி பஸ் வசதியும் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism