Published:Updated:

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
காலக் கணிதத்தின் சூத்திரம்!
##~##

வாழ்வில் பிரச்னையைச் சந்திக்கிறான் ஒருவன். வெற்றி பெற பல கோணங்களில் அவன் சிந்தனை செயல்படுகிறது. ஆனாலும், தீர்வைச் சந்திக்க முடியவில்லை. சுற்றிச் சுற்றி சிந்தனை வெற்றி காண இயலாமல், ஆரம்பித்த இடத்திலேயே முற்றுப்பெறுகிறது. சிந்தனை படுத்துவிட்டது. ஜோதிடரை அணுகுகிறான். அவரது பரிந்துரை, சிந்தனையைத் தட்டி எழுப்பியது. தன் வசமிழந்தவன் ஜோதிடரின் சிந்தனையைத் தனது சிந்தனையாக மாற்றிக் கொள்கிறான். அதன் வழி செயல்பட்டுத் துயரம் அல்லது மகிழ்ச்சியைச் சந்திக்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோதிடரின் பரிந்துரையை அலசி ஆராயும் திறன் அப்போது அவனிடம் தென்படாது. அவன் அடிமையாகிவிடுவான். தீர்வு அவனில் திணிக்கப்பட்டுவிடும். ஜோதிடரின் விளக்கம் அவனுக்கு இதமாகப்படும். தீர்வை எட்டாத சிந்தனைக்கு வடிகால் கிடைத்ததில் மகிழ்வான். அவன் சராசரி மனிதனாக மாறுவான். துயரத்தை ஏற்று, பிதுங்கி வெளி வருவான். இப்போது பிரச்னையைப் பற்றிய சிந்தனை முடிந்ததால், அலசி ஆராயும் அறிவு வெளிப்பட்டுத் தனது தரத்தை உயர்த்திக் கொள்வான்.

பின்னடைவைச் சந்தித்த சிந்தனையைத் திசைதிருப்பிவிட்டவர் ஜோதிடர். ஜோதிடம் தெரியாதவனுக்கும் சிந்தனையைத் திசை திருப்ப இயலும். வருங்காலத்தை அறிந்தவன் என்கிற நம்பிக்கையில் ஜோதிடரின் தகவல் அவனுக்குப் பிடிக்கும். அவனது கர்மவினை ஜோதிடரைச் சந்திக்க வைத்து, பிரச்னையின் முடிவை ஏற்க வைக்கிறது என்ற உண்மையை நம்ப மாட்டான். கர்மவினையின் தூண்டுதலுக்கு உகந்தவாறு ஜோதிடர் செயல்பட்டார். அவர் வழிகாட்டி என்று சொல்ல இயலாது. அவர் கருவியாக மட்டுமே செயல்பட இயலும்.

திறமை, படிப்பு, பெருந்தன்மை, விவேகம் போன்றதெல்லாம் கர்மவினையின் முன் படுத்துவிடும். பொருளாதார நிபுணர், ஜமீன்தார், செல்வந்தர், செல்வாக்கு உடையவர், சீர்திருத்தவாதி, துறவி, அறிஞன், அமைச்சர், கலைஞர், சட்ட நிபுணர்கள், சமூக சேவகர்கள்... இப்படி சிந்தனை வளம் பெற்றவர்களும் ஜோதிடரிடம் அறிவுரை பெற அடைக்கலம் ஆவது உண்டு. இங்கெல்லாம் அவர்களது கர்மவினை வலுக்கட்டாயமாக இழுத்து ஜோதிடரிடம் அவர்களைச் சரணடைய வைக்கிறது. பெருமையோ, சிறுமையோ எதை அடைந்தாலும் திரும்பத் திரும்ப ஜோதிடரை அணுகுவதில் சுணக்கம் இருப்பதில்லை. அந்த அளவுக்கு கர்மவினையின் கை ஓங்கியிருக்கும். அதையும் தாண்டி வெற்றிபெற்ற அறிஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஜோதிடருக்கும் பிரச்னைகள் உண்டு. விடுபட முடியாமல் தவிப்பார். பலபேருக்கு வழிகாட்டியாக இருந்தவர் தனக்கு ஒரு வழி தெரியாமல் திணறுவதும் உண்டு. அவரையும் கர்மவினை விட்டு வைக்காது. அறிஞர்கள், கலைஞர்கள், துறவிகள், அரசியல் மேதைகள் ஆகியோருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொண்டு, அத்தனைபேரின் வெற்றிக்கும் தனது பரிந்துரையே காரணம் என்பதைப் பிரகடனப்படுத்தி, தற்பெருமையைப் பெருக்குபவர்களும் உண்டு. ஜோதிடரின் சிந்தனை சுயநலத்தில் திரும்பும்போது, உண்மையைத் தேடிக் கண்டறியும் சிந்தனை முடங்கிவிடும். இங்கு ஜோதிடரும் சராசரி மனிதனாகிவிடுவார்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

இப்படி ஒன்றுக்கொன்று பெருமைப்படுத்திக்கொள்ளும் நடைமுறையும் தென்படுகிறது. பிரச்னையைச் சந்திக்கும் வேளையில், சரியான முடிவெடுக்கத் திணறும் தருணத்தில், பிறரது பரிந்துரையை தீர்வாக எண்ணிவிடும். ஆசாபாசங்களுடன் இணைந்த சிந்தனையே வெளிப்படும். அந்த ஆசாபாசங்களில் கர்மவினையானது, வாசனை வடிவில் ஒளிந்திருக்கும். அதன் விரிவாக்கம் ஆசாபாசங்கள். கர்மவினையைத் தொடாத சிந்தனையே நம்பகமானது. அது, தீர்வைத் துல்லியமாக வெளியிடும். கர்மவினையை அடியோடு அழித்தவன் அறிஞனாவான். அதை அகற்றவே அத்தனை தர்சனங்களும் போட்டி போட்டுக்கொண்டு மனித இனத்தை அறிவுறுத்த முந்திக்கொள்கின்றன.

அப்பாவி மக்களிடம் இருந்து அப்ளாஸ் வாங்குவது என்பது தகவலின் உயர்வுக்கு அளவுகோலாக மாறுவது உண்டு. 'தாங்கள் தந்த தகவலை வைத்து தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. அது தங்களுக்கு இழப்பை அளித்தால், அதற்கு நான் பொறுப்பு இல்லை’ என்று கணிப்பொறி ஜாதகங்கள் சிலவற்றின் முகப்பில் தென்படுகிறது. 'வருங்காலத்தைத் துல்லியமாக எடுத்துரைக்கும் திறமை அந்த பிரம்மாவுக்கு மட்டுமே உண்டு’ என்ற வாசகத்தை முகப்பில் காட்டுவதுடன்... 'ஆனால் நான் துல்லியமாக உங்களுக்குச் சொல்வேன்’ என்பதாகத் திகழும் முடிவுரைப் பகுதியும் சில கணிப்பொறி ஜாதகங்களில் தென்படுகிறது.  இந்த வாக்கியங்களை ஆராய்வதற்கு மனம் இல்லாமல், வருங்காலத்தை அறிய அடிக்கடி ஜோதிடரை அணுகத் தோன்றும். கர்மவினை சிந்தனையை மறக்கச் செய்கிறது. கர்மவினையால் தூண்டப்பட்டு வலுக்கட்டாயமாக வசமிழந்து ஜோதிடரைச் சரணடைகிறான் என்கிறது ஜோதிடம் (அவச: தைவக்ஞ ஸன்னிதிதேமதி...).

கர்மவினை அனுபவத்துக்கு வராமல் அழியாது. துயரத்தைத் தாங்கும் மனவலிமையை வளர்ப்பது அதற்குப் பரிகாரம். ஜாதகம் கர்மவினையின் உருவத்தை அறிய முழுமூச்சுடன் செயல்படும். லக்ன ராசி, சந்திரன் இருக்கும் ராசி, இரண்டு ராசிகளின் அதிபர்கள் இருக்கும் ராசி, லக்னம், சந்திரன், இவர்களது நவாம்சக ராசி இந்த ஆறு ராசிகளின் கூட்டுப்பலனில் கர்மவினையின் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிறது ஜோதிடம் (ராசி க்ஷேத்ரகிருஹர்ஷபானி பவனம் சைகார்த்தஸம்ப்ரத்யயே). ஆறு நீதிபதிகள் (ராசிகள்) இணைந்து ஆராய்ந்த தீர்ப்பு அது.

லக்னத்தின் பலனை, மற்ற 11 ராசிகளின் கூட்டுப்பலனை இணைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். 2-ஆம் பாவத்தை வரையறுக்க... அதை லக்னமாக மாற்றி மற்ற ராசிகளோடு இணைத்து பல நிர்ணயம் செய்ய வேண்டும். எந்த பாவமானாலும் மற்ற பாவங்களோடு இணைந்து பலனை இறுதியாக்க வேண்டும். பூர்வ புண்ணியத்தை வரையறுக்க ஐந்தாம் பாவத்தைக் கவனிக்கும் வேளையில், ஐந்துக்கு ஐந்தின் 9-ஆம் பாவத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியை வரையறுக்க... 4-யும், நான்குக்கு நான்கான 7-யும் இணைத்துக் கொள்ள வேண்டும். பாவாத்பாவத்தை கவனிக்கச் சொல்லும் ஜோதிடம்.

ஜாதக சிந்தனையில் எண்ணிக்கையின் முறை அலாதியானது. 4-க்கு 4 என்றால் எட்டு அல்ல; 7. நான்கு வரை எண்ணிய பிறகு, அந்த நான்கை முதலாகக் கொண்டு ஒன்று என்று ஆரம்பிக்க வேண்டும். 4, 5, 6, 7 என்று எண்ணும்போது 7 ஆகிவிடும். 8-ஐ நாம் ஏற்கவேண்டுமானால், எச்சரிக்கையாக 4-க்கு 4 என்று சொல்லாமல், 'சதுரசிரம்’... அதாவது, நாலும் எட்டும் என்று தெளிவுபடுத்தும். எட்டாவது வீடு ஆயுளை வரையறுக்கும். எட்டின் எட்டும் ஆயுளை வரையறுக்கும். எட்டின் எட்டு என்பது லக்னத்தின் மூன்று. இங்கே முதலில் எண்ணிய 8-ஐ ஒன்று என்று ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் மூன்று எட்டாகும். மூன்றின் பன்னிரண்டும், எட்டின் பன்னிரண்டும் மாரகஸ்தானம். இறப்பை வரையறுக்கும் என்று சொல்லும். மூன்றின் பன்னிரண்டு - 2. எட்டின் பன்னிரண்டு - 7. அதாவது, ஏழும் இரண்டும் மாரக ஸ்தானம். இங்கு எட்டையும் மூன்றையும் ஒன்று என்று வைத்து எண்ணினால் மட்டுமே ஏழும் இரண்டும் 12 ஆக மாறும். இங்கெல்லாம் ஜோதிடத்தின் எண்ணும் முறை மாறியிருக்கும் (அஷ்டமம்ஹி ஆயுஷஸ்தானம் அஷ்டமாத் அஷ்டமம் சயத்). கேந்திரம், த்ரிகோணம், மஹேந்திரம் போன்ற வகைகளில் எண்ணும் முறையும் அப்படியே! ஆகையால்தான் செவ்வாய் 4-யும், 7-யும், 8-யும் பார்க்கிறார் என்று சொல்லவேண்டி வந்தது. பாவாத்பாவம் சொன்னால் எட்டு விடுபட்டுவிடும். ராசி பலனை 'பாவத்தை’ வைத்து இறுதி செய்யவேண்டும். (பாவப்ரவ்ருத்தௌஹிபலப்ரவ்ருத்தி:)

காலக் கணிதத்தின் சூத்திரம்!

ஆறு ராசிகளை அலசி ஆராயும் வேளையில்... அந்த ராசிகளின் அதிபர்கள், அதில் வீற்றிருக்கும் கிரகங்கள், அதைப் பார்க்கும் கிரகங்கள், ராசிகளில் வீற்றிருக்கும் நட்சத்திரங்கள் ஆகிய அத்தனையும் ஆராயப்பட்டுவிடும். லக்ன ராசி, சந்திர ராசி - இவற்றுக்கு வலுவூட்டும் வகையில், மற்ற 4 ராசிநாதர்கள் இணையும்போது, துல்லியமான பலனை எட்ட வழிவகுக்கும். 12-ல் ஆறு ராசிகள் ஆராயப்பட்டுவிட்டது. அதில் முக்கியமாக லக்னமும், சந்திரனும் இணைந்திருப்பதால் (ஆன்மாவும் மனமும், சூரியனும் சந்திரனும்) கர்மவினையின் உருவும் கண்ணுக்குப் புலப்பட்டுவிடும்.

ஜோதிடம் சொல்லும் வழியில் நமது சிந்தனையைச் செயல்படுத்தினால் போதுமானது. ஆராய்ச்சி என்ற போர்வையில் நமது சிந்தனையை நுழைக்கும்போது, கர்மவினையை எட்ட இயலாமல், தோராயமாக பலன் சொல்ல வேண்டி வருகிறது. ரிஷிகள் சொன்ன வழியில் பயணித்தால், எல்லோரது முடிவும் ஒன்றாக இருக்கும்.  உதாரணமாக இந்த 6 ராசிகளில், சந்திர ராசியின் அதிபதி இருக்கும் ராசி மிதுனம் என்று வைத்துக்கொள்வோம். அந்த அதிபதி திருவாதிரைக் காலில் இருந்தால், உடனே திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். ராகு இருக்கும் ராசி மகரம். அவன் 'திருவோண’ காலில்- சந்திரன் நின்ற நட்சத்திரத்தில் இருக்கிறான். சந்திரன் இருக்கும் நட்சத்திரம்; அது 'திருவாதிரை’ கால்... இப்படி சுற்றிச் சுற்றி முடிவு தெரியாமல் தோராயமான பதில் வருவது தவறு. சந்திர ராசி ஆராய்ச்சிக்கு உட்படும்போது திருவாதிரையும் இணைந்துவிடும். அதன் பிறகு, திருவாதிரையைத் தனியாகப் பிரித்து ராகுவை இணைத்து, ராகுவின் நட்சத்திரத்தை மீண்டும் இணைத்துச் சுற்றிச் சுற்றி வருவது தவறு.

இப்படி அடிப்படை இல்லாத ஆராய்ச்சியில் புதுப்புது ஜோதிட முறைகள் தோன்றி ஜோதிடத்தின் தனி உருவம் மங்கலாகிவிட்டது. ஒருவன் நட்சத்திரத்தை எண்ண ஆரம்பித்தான். அஸ்வினி என்று  துவங்கி சித்திரை வரை எண்ணினான். அதன் பிறகு வைகாசி, ஆனி என்று மாதத்தை எண்ண ஆரம்பித்தான். கார்த்திகை மாதம் வரை எண்ணினான். பிறகு ரோகிணி, மிருகசீரிஷம் என்று நட்சத்திரத்தில் நுழைந்தான்!

நட்சத்திரமும் முடிவடையாது; ராசியும் முடிவடையாது. ஆராய்ந்து முடிவெடுத்தது ரிஷிகளின் சிந்தனை. அதில் அரைகுறையான ஆராய்ச்சி விபரீதத்தில் முடிவடையலாம். முக்காலமும் உணர்ந்த முனிவர்கள், மனித சிந்தனையின் எல்லையை எட்டியவர்கள். அதை நம்பலாம்.

அம்சகத்தில் நட்சத்திர பாதம் இணைந்துவிடும். ராசி, க்ஷேத்ரம், ஹோரா, த்ரேக்காணம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம் இவற்றில் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும். எல்லா கிரங்களுடைய பங்கும் ராசியில் உண்டு. அப்படியிருக்க ராசி, நட்சத்திரத்தைத் தனியாகப் பிரித்து, பல ராசிகளில் தாவி, அதில் இருக்கும் நட்சத்திரத்தையும் கிரகத்தையும் சேர்த்துப் பலன் சொல்ல முனைவது குழப்பத்தில் முடிவடையும்.

முதலில், பொறுமையாக ரிஷிகளின் சிந்தனைப்போக்கைப் புரிந்துகொள்வோம். அதில் இறுதிப் பலன் தென்படாத நிலையில் ஆராய்ச்சியைத் துவக்குவோம். அப்போது ஆராய்ச்சிக்குப் பெருமை இருக்கும். கர்ம வினையைக் கண்டுபிடிப்பது ஜோதிடத்தின் இலக்கு. அதற்கு வேண்டிய தகவலை ஜோதிடம் திரட்டித் தந்திருக்கிறது. அதை உள்வாங்கிச் செயல்பட்டு, பழக்கம் வந்த பிறகு, தனி ஆராய்ச்சியில் அதற்குப் பெருமை சேர்ப்பது சிறப்பாகும்.

வாழ்க்கையுடன் இணைந்த ஜோதிடத்தை உருக்குலையாமல் வளர்த்து, அடுத்த பரம்பரைக்கு அளிக்க வேண்டும். அது இயற்கையின் சொத்து. நமது திறமையின்மை அதன் தரத்தைத் தாழ்த்தக்கூடாது. நமது ஜோதிட அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; ஆராய்ச்சி தேவைப்படாமல் போய்விடும்.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism