மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 9

சேதி சொல்லும் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

ஆலயம் ஆயிரம்!முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 9
##~##

ராஜசிம்மேஸ்வரம் எனும் காஞ்சிபுரத்து ஸ்ரீகயிலாசநாதர் கோயிலின் கருவறையில், புறச்சுவர்களில் முறையே ஸ்ரீகௌரி பிரசாததேவர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஉமாமகேஸ்வரர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஹரிஹரர், ஸ்ரீலிங்கோத்பவர், பிச்சை உகக்கும் பிட்சாடனர், சந்தியா தாண்டவமூர்த்தி, சம்ஹார தாண்டவமூர்த்தி, ஸ்ரீகணேசர், ஸ்ரீவீணாதரர், ஊர்த்துவ தாண்டவர், காலசம்ஹாரர், சிம்மவாஹினியாக தேவி, ஸ்ரீதிரிபுரசம்ஹாரர், ஸ்ரீபைரவி, ஸ்ரீபைரவர், ஸ்ரீயோகேச மூர்த்தி, ஸ்ரீகௌசிகி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஜேஷ்டாதேவி, ஸ்ரீகங்காதரன் என இருபத்து மூன்று எழிலார்ந்த தெய்வ வடிவங்கள் இடம் பெற்றிருப்பதைத் தரிசிக்கலாம்.

இந்தச் சிற்பங்கள் அனைத்தும் இந்தியக் கலை இயல் வரலாற்றில் தனி இடம் பெற்றுத் திகழ்பவை. தென்புறச் சுவரில் காணப்படும் ஆலமர்ச்செல்வரின் சிற்பம் தனித்தன்மை வாய்ந்தது. ஆலமரத்தின் கீழ் அண்ணல் நான்கு திருக்கரங்களுடனும், ஒரு காலை மடக்கிக்கொண்டு மறு காலைத் தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்த நிலையில், அழகே உருவெனக் காட்சி தருகிறார்.

வலது மேற்கரத்தில் உருத்திராட்ச மாலையும், இடது மேற்கரத்தில் எரி கொள்ளியும் திகழ, ஜடாபாரத்துடன் காணப்பெறுகிறார். வலது முன்கரம் உடைந்துள்ளது. இடது முன்கரத்தால் வியாக்கியான முத்திரை காட்டுகிறார். காலடியில் இரண்டு மான்களும், யானையும் படுத்துள்ளன. ஸ்வாமியின் தலைக்கு மேலே மகர தோரணத்தில் கணபதியார் திருவுருவம் உள்ளது. தாமரைத்தடாகம், உருமும் சிம்மங்கள், சனகாதி முனிவர்கள் ஆகிய சிற்பங்கள் இரண்டு பக்கங்களிலும் காணப்படுகின்றன.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 9

மேற்குத் திசையில், எட்டுத் திருக்கரங்களுடன் சந்தியா தாண்டவமாடும் சிவனாரின் சிற்பம், பிரமிக்கத்தக்க ஒன்று. அந்தி மயங்கும் வேளையில் உமையவள் பார்க்க, அவர் ஆடுகிறார் என்பதை நமக்கு உணர்த்துவது அற்புதம். ஒரு கையை ஊன்றியும், ஒரு காலைத் தூக்கி மடித்த நிலையில் நின்றவாறும் காட்சி தருகிறார் உமையவள். சிவனாரின் திருமுகத்தில் ஆனந்தத்தையும் அன்னையின் திருமுகத்தில் சாந்தத்தையும் தத்ரூபமாகக் காட்டுகிற சிற்ப நுட்பத்தில் நாம் கிறங்கி நிற்போம், அங்கேயே!

இதையடுத்து, சம்ஹாரத் தாண்டவமாடுகிற சிவபெருமானின் சிற்பம். பத்துத் திருக்கரங்களும் விரித்த சடையும் கொண்டு ஆடுகிற ஈசன், ஒரு கரத்தைத் தலைக்கு மேலே உயர்த்தி, ஒரு காலை மண்டியிட்டபடி, இன்னொரு காலைப் பின்னோக்கி மடக்கி வைத்து ஆடும் அழகே அழகு! அந்தியில் நடனமாடியபோது இருந்த ஆனந்தம் இங்கே இல்லை. மாறாக, ரௌத்திரமே சிற்ப முகத்திலும் கண்களிலும் தெறிக்கிறது. அது சரி... சம்ஹாரத் தாண்டவத்தில் இருக்கும்போது ஆனந்தம் எப்படி ஒளிரும்?!

இங்கே, இந்தச் சிற்பத்தில் இன்னொரு ஆச்சரிய பிரமிப்பு! திருக்கரத்தில் சாமரம் ஏந்தியபடி நிற்கும் ஸ்ரீகங்காதேவியின் சிற்பத்தை வேறு எங்கும் பார்க்கவே முடியாது. அத்தனை நுட்பமாக இதை வடித்துள்ளனர், சிற்பிகள்.  

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 9

அடுத்து, கருவறையின் புறச்சுவரில் ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தைத் தரிசிக்கலாம். ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்தவாறு, மார்பில் வீணையை வைத்துக்கொண்டு திருக்காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அவரின் காலடியில் குள்ள பூதம் ஒன்று கைத்தாளம் தட்டி மகிழும் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.

சிவனாரின் முடியழகும், படம் எடுத்தாடும் பாம்பின் சீற்றமும், சிவனார் தரித்துள்ள இடுப்பு ஆடையின் மடிப்புகளும் தத்ரூபமாகக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

இன்னொரு பக்கத்தில், பூதகணங்களின் அணிவகுப்பு. சிம்ம முக பூதமும் இசைக் கருவிகளை இயக்குகிற பூதங்களும் என வரிசையாகக் காட்சி அளிக்கிற சிற்பத்தைப் பார்க்கலாம்.

கருவறையின் மேற்குத் திசையில் லிங்கோத்பவர் தரிசனம் தருகிறார். ஒருபக்கம் திருமாலும் சூரிய- சந்திரர்களும் ஈசனை வணங்கியபடி நிற்க, ஜோதி வடிவான ஈசன் நெருப்புத் தூணில் இருந்து எட்டுத் திருக்கரங்கள் கொண்டு வெளிப்படும் சிற்ப நுட்பம், நம்மைப் பிரமிக்க வைக்கும்.

மேலே உள்ள மகர தோரணத்தில், யோக மூர்த்தியாகத் திகழும் சிவபெருமானின் சிற்றுருவச் சிற்பம் உள்ளது. பன்றியாக பூமியை அகழ்ந்து பார்க்கிற திருமாலின் வடிவம் சற்றே சிதைந்துள்ளது. பறக்கும் பிரம்மாவின் வடிவமோ பேரெழிலுடன் திகழ்கிறது. ஒவ்வொரு சிற்பக் காட்சிக்கும் இடையே பாயும் சிம்மங்கள் உயிர்ப்புடன் திகழ்வதைக் காணலாம்.

காஞ்சி ஸ்ரீகயிலாயநாதர் கோயிலின் தனிச் சிறப்புகளில் இவையும் ஒன்று.

- புரட்டுவோம்