மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 23

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்

சித்தம்... சிவம்... சாகசம்! - 23
##~##

ன்னன் வீரசேனனின் உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்தல் மூலம் உட்புகுந்திருப்பது திருமூலர் என்பதை அறிந்த அரசி, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். அரசி வரையில் உடல் மட்டுமே அரசன்; உயிரோ திருமூலர்! அதாவது, ஒரு சித்தயோகி. இந்நிலையில் உடலுக்கு மதிப்பளிப்பதா? உயிருக்கு மதிப்பளிப்பதா? இதனால் தன் கற்புநெறி என்னாகும்...? இப்படி அவளுக்குள் பல கேள்விகள்!

அரசிக்கு இருக்கும் இந்தக் கேள்விகள் திருமூலருக்கு இருக்காதா என்ன? கடந்த முறை மூலன் உடம்புக்குள் இரக்க உணர்ச்சி காரணமாகப் பிரவேசிக்க நேர்ந்தது. இம்முறையோ அரசன் உடம்புக்குள் இரக்க உணர்ச்சியால் மட்டுமல்ல; பல உண்மைகளை உலகுக்குப் புரியவைக்கவும் வேண்டியே இந்தப் பிரவேசம் நிகழ்ந்துள்ளது.

'பிறந்தவர் ஒருநாள் இறந்தே தீர வேண்டும். இந்த இறப்பு ஒன்றும் அழிவு அல்ல; இது ஒரு மாற்றம். உயிரின் யாத்திரையில் அதன் அனுபவங்களில் ஒன்றே உலக வாழ்வு! பிறப்பில் மேலான பிறப்பு மனிதப் பிறப்பு. இந்தப் பிறப்பை எடுக்கும்போதே முக்கால சிந்தனை ஏற்படுகிறது. முக்காலம் என்னும் நேற்று இன்று நாளை என்னும் காலகதி ஏற்படுவதே மனம் சிந்திப்பதால்தான்.

இந்த முக்கால சிந்தனை மூலம் பிறப்பை உணர்ந்து, அதன் மதிப்பை உணர்ந்து, மீண்டும் பிறந்துவிடாதபடி வினை புரிந்து, முக்தி அல்லது மோட்சம் எதுவுமில்லாது இறையோடு கலந்துவிடுதல் வேண்டும். இதற்கு உடம்பு பற்றிய தெளிவு, அதைக் கட்டியாளும் வலிமை மிக முக்கியம். இதை உணரும் தன்மை கொண்ட மானுடப் பிறப்பில் பிறந்தும், இதை உணராது காலத்தின் கைதிகளாய், உடம்பின் வசம் சிக்கி, அதன் விறுப்பு- வெறுப்புக்கு ஏற்ப நடந்துகொண்டு, திரும்பத் திரும்ப பலவித பிறப்பெடுத்து, உலக மாயையில் இருந்து விடுபட முடியாதவர்களாகவே மனிதர்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இதை உணர்த்த வேண்டும். குறிப்பாக, மக்களைக் கட்டி ஆளமுடிந்த அரசன், அரசிக்கு இது முக்கியம்!’ என்று உணர்ந்தே திருமூலர், அரசனின் உடலில் புகுந்தார்.

இப்படிப் புகுந்தவர், எவ்வளவு காலம் இருப்பார் என்பது அரசி உள்பட யாருக்கும் தெரியாது. அரசன் உடலில் அவர் புக நேர்ந்தது போல, நாளை தன் பழைய திருமூல உடம்பில் மீண்டும் புக நேர்ந்தால் தன் நிலை என்ன என்று யோசித்த அரசிக்கு, அப்படியரு நிலை ஏற்பட்டால், தான் கணவனை இழந்த விதவையாக பார்க்கப்படுவது மட்டுமல்ல, ஒரு கூடு பாய்ந்த சித்த யோகியோடும் வாழ்ந்தவள் என்று இந்த உலகம் தூற்றாதா என்றும் அஞ்சினாள்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 23

இதற்கு ஒரே வழிதான் உள்ளது. நடந்தது நடந்துவிட்டது. இனி, இந்த யோகிதான் தன் வரையில் எல்லாம்! இந்த உடம்பை விட்டுத் திருமூலர் விலகிடாத வண்ணம் இருக்க ஒரே வழிதான் உள்ளது. அது, அந்தத் திருமூலரின் உடலை அழித்துவிடுவது ஒன்றுதான். எனவே, தனது வீரர்களை அழைத்து, அந்த உடலை எரித்துவிட உத்தரவிட்டாள் அரசி. அவர்களும் அவ்வாறே செய்யச் சென்றார்கள்.

அரசியும் திருமூலரோடு ஒன்றும் அறியாதவள் போல வாழத் தொடங்கினாள். திருமூலரும் ஓர் அரசனின் சுகபோகங்களையும், ராஜ மரியாதைகளையும், ராஜ்ஜிய செயல்பாடுகளையும் அணு அணுவாய் உணரும் வாய்ப்பைப் பெற்றார். ஒருமுறை, வேட்டைக்குச் செல்லும் சாக்கில் தன் உடலைக் காணச் சென்றவர், அங்கே உடல் இல்லாமல் சாம்பல் பூத்திருப்பது கண்டு, உண்மையை ஞான திருஷ்டியால் அந்த நொடியே உணர்ந்துகொண்டார்.

அவருக்கு உடனே அரசியின் மேல் கோபம் தான் வரவேண்டும். ஆனால், வரவில்லை. காரணம், அரசி உலகை எண்ணி பயந்தது முதல், சுமங்கலியாக வாழ விரும்பியது வரை சகலமும் அவருக்குப் புரிந்தது.

அதே நேரம், அரசனின் உடலில் இருந்து கொண்டு யோகநெறிகளைப் பின்பற்றித் தன்னாலும் வாழ முடியாத இக்கட்டான சூழ்நிலையும் திருமூலருக்குப் புரிந்தது. இந்த அனுபவங்கள் 'நிலைப்பாடு’ என்பதன் தன்மையை அவருக்கும் உணர்த்தின.

திருமூலர் தனது செயல்பாடுகளை எல்லாம் தெரிந்துகொண்டுவிட்டதை அரசியும் அறிந்து, அவர் காலில் விழுந்து, தன்னை மன்னிக்கக் கோரினாள்.

''இதில் மன்னிக்க எதுவுமில்லை. அரசனாக வாழ்ந்து பல உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். நாட்டில் சில புதிய நெறிகளை நான் உருவாக்கினாலும், இந்த உடம்பைக் கொண்டு எனக்கான யோக நெறிகளை என்னால் பின்பற்ற இயலாது. உன்னையும் என்னால் பூரண மகிழ்வுக்கு ஆளாக்க முடியவில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் ஆசை, மாயை போன்றவற்றின் சக்தியை மிக நன்றாகப் புரிந்துகொண்டேன்'' என்றார் திருமூலர்.

அரசி அவரை அரசனாகத் தொடர்ந்து வாழ வேண்டினாள்; ஆனால், திருமூலர் மறுத்துவிட்டார் என்பர். அரச உடம்புக்குப் பின் அவர் ஒரு வேதியனின் உடம்புக்குள் புக நேர்ந்ததாம்! ஜம்புகேஸ்வரம் எனப்படும் திருவானைக்காவல் திருத்தலத் தில் ஒரு பிராமண இளைஞன் பிராணாயாம மூச்சுப் பயிற்சி யில் குரு உபதேசம் இன்றி இறங்கப் போய், அதில் சிக்கி உயிரையே விட்டுவிட நேர்கிறது.

சித்தம்... சிவம்... சாகசம்! - 23

அவனது உடம்புக்குள் புகுந்து எழும் திருமூலர், அதன்பின் அந்த உடம்பில் இருந்தவாறே தனது யோக நெறியைத் தொடர்ந்தார்; உலக மாயையினை முற்றாக வெற்றிகொண்ட பிறகே திருமந்திரத்தைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது.

திருமந்திரமானது 3,000 பாடல்களைக் கொண்டது. இதை, திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, ஆண்டுக்கொன்றாகப் படைத்தார் எனும் கருத்து பெரிதும் ஆய்வுக்குரியது.

நம் வரையில் ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது. திருமூலரும் நான்கு வரியில் உள்ள ஒரு திருமந்திரப் பாடலுக்கு இந்தப் பன்னிரண்டு மாதங்களை எடுத்துக் கொண்டார் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. அதற்கு அவர் வாக்கில் எங்கேயும் சான்றுகள் இல்லை. ஆனால், அவர் சராசரி மனித வாழ்வும் வாழவில்லை; நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பதற்கு 'ஒப்பில் ஒரு கோடி யுகம் இருந்தேனே...’ எனும் வரி சான்றாக விளங்குகிறது.

ஆனாலும், மூவாயிரம் பாடல்களுக்குப் பின் மூவாயிரம் ஆண்டுகள் என்பதை சான்றோர்கள் மிகைப்பட உரைத்ததாகவோ, மூவாயிரம் பாடலுக்கு மூவாயிரம் ஆண்டு என்று கவிதைச் சந்தக்கணக்கு போலச் சொல்லிச் சென்றதாகவோ கருதவும் இடமில்லை. இதன்பின் நுட்பமான பொருள் இருக்கிறது. அது செழுமையான ஆய்வுக்கு உரியது.

திருமந்திரத்தை பக்தியோடும் பாங்கோடும் கற்று, அதன் கருத்தைக் கசடற உணர்ந்த நிலையில், இதற்கான விடையை ஒருவேளை நாம் உணர நேரலாம். அப்படி உணர்ந்திட திருமூலரின் திருவருளும் துணை செய்ய வேண்டும் என்பதும் முக்கியம்.

ஒரு குருவாக அவரை ஏற்று, அவரிடம் சரண் புகுந்து, பின் ஒரு மாணாக்க உணர்வோடு திருமந்திரத் துக்குள் கற்கப் புகுந்தால்... பல அரிய உண்மைகளை நாம் உணர முடியும். அரிய உண்மைகள் என்பது கூட லௌகீகமாகக் கூறப்படுவதே..!

ஞானப்பாடு என்று கூறினாலே சரியாக இருக்கும். புலன்களுக்குப் புலனா வதை அறிய முற்படுவதே அறிவு. புலனாவதற்கு அப்பாலும் ஊடுருவ முடிவதே ஞானம்.

அந்தவகையில், திருமூலரின் சில பாடல்களையும், அதன் ஆழ்ந்த பொருட்கட்டையும் அறிய முற்படுவோம்.

'நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூலது கார்ப்பரிசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே’

- என்று ஒரு திருமந்திரப் பாடல். இது, எது பிராமணீயம் என்பதற்கு விளக்கம் தருகிறது.

'எண்ணி ஒருநாள் இயங்கிடில் பிங்கலை
தண்ணிய மூவாண்டில் தப்பாது மரணம்
ஒண்ணிய உபாயத்தில் ஓடிடில் பத்துநாள்
மண்ணில் மதி ஆறில் மரிப்பான் குறி இதே’

- எனும் பாடல், மனித உயிரானது ஓர் உடலை விட்டுப் பிரிவதற்கு முன் காட்டும் குறிகளைப் பற்றிச் சொல்கிறது. இதை உணர்ந்தால், எப்போது மரணம் என்று கூறிவிடலாம்.

இப்படி ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஒவ்வொரு உண்மை. அவை பற்றி, வரும் இதழில் காண்போம்.

- சிலிர்ப்போம்...