Published:Updated:

பயணம்... பரவசம்!

லதானந்த்

பயணம்... பரவசம்!

த்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகான நகரம் ரிஷிகேஷ். இது, இமயமலையின் அடிவாரப் பகுதி. கங்கை நதி இமயமலையின் சிவாலிக் குன்றுகளைவிட்டு நீங்கி, வட இந்தியாவின் சமவெளியில் பாய ஆரம்பிக்கும் இடம்தான் ரிஷிகேஷ்.

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புண்ணிய ஸ்தலங்களை 'சோட்டா சார்தாம்’ என்பார்கள். அந்த 4 தலங்களுக்கும் செல்லும் நுழைவாயிலாக இருப்பது ரிஷிகேஷ்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

'ஹ்ருஷிகேசா’ என்பது விஷ்ணுவின் திருநாமங்களில் ஒன்று. அதிலிருந்து ரிஷிகேஷ் என்கிற பெயர் வந்ததாகக் கூறுவர். ஹ்ருஷிகேசா என்பதற்குப் 'புலன்களுக்கு அதிபதி’ என்று பொருள் கூறுவர். ஸ்கந்தபுராணத்தில் இந்த இடம் 'குப்ஜம்ரக்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக்னிதேவன் பாவ விமோசனம் அடைந்த இடம் என்பதால் 'அக்னி தீர்த்தம்' என்றும் சொல்வர்.

ரிஷிகேஷ் என்ற பெயர் வர இன்னொரு சுவாரஸ்யமான காரணமும் சொல்கிறார்கள். அதன்படி, வேத காலத்தில் ரிஷிகள் அத்தனை பேரும் ஒரே நாளில்தான் இங்குள்ள கங்கையில் அடிக்கடி வந்து நீராடுவார்களாம். அதனால் அவர்களது கேசத்தில் இருந்து நீர் எப்போதும் சொட்டிக்கொண்டே இருக்குமாம். அதனால் இந்தப் பகுதி ரிஷிகேஷ் என்று அழைக்கப்பட்டதாம்.

இங்கே கங்கை நதி பாயும் ஓரங்களில் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. யோகா கற்றுத்தரும் பல நிறுவனங்களும் செயல்படுகின் றன. ஆயுர்வேத சிகிச்சைகளுக்கும் சிறந்த இடமாகத் திகழ்கிறது ரிஷிகேஷ். லாஹிரி வஸ்துகள் மற்றும் அசைவ உணவுகளை பெரும்பாலும் இங்கே யாரும் பயன்படுத்துவது இல்லை.

இங்கே பாயும் கங்கை ஆற்றில் பிளாஸ்டிக் கட்டுமரங்களில் செல்லும் ராஃப்டிங் (மார்ச் முதல் செப்டம்பர் வரை) புகழ்பெற்றது. காலில் எலாஸ்டிக் கயிற்றைக் கட்டிக்கொண்டு உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் 'பங்கீ ஜம்ப்பிங்’ இங்கே ஸ்பெஷல்!

பயணம்... பரவசம்!

இங்கே அமைந்துள்ள கைலாஷ் ஆஸ்ரம வித்யாபீடத்தில் சுவாமி விவேகானந்தர், சுவாமி ராமதீர்த்தர், சுவாமி சிவானந்தர் ஆகியோர் பயின்று இருக்கிறார்கள்.

ரிஷிகேஷில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் மடங்களை நிறுவி, குறைந்த வாடகைக்கு விட்டுள்ளனர். நாங்கள் தங்கி இருந்ததும் அப்படியான ஒரு மடத்தில்தான். அடிப்படை வசதிகள் அனைத்தையும் கொண்ட அந்த மடத்தின் பெயர், 'கோவிலூர் வேதாந்த மடம்’. கங்கை ஆற்றுக்குச் சுமார் அரை கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது இது.

சென்ற அத்தியாயத்தில் லக்ஷ்மண் ஜூலா பற்றிப் பார்த்தோம். இனி, இங்குள்ள புகழ்பெற்ற திருத்தலங்கள் மற்றும் இடங்களுக்குச் சென்று வருவோம்.

ராமேஷ்வர் மஹாதேவ் ஆலயம்: லக்ஷ்மண் ஜூலாவைக் கடந்து கொஞ்ச தூரம் நடந்தால், இந்த ஆலயத்தை அடையலாம். ஆலயம் சின்னதுதான் என்றாலும், கம்பீரமாக இருக்கிறது. இங்கே லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.

பயணம்... பரவசம்!

ராம் ஜூலா: லக்ஷ்மண் ஜூலா போன்றதுதான் ராம் ஜூலா எனும் இரும்புத் தொங்கு பாலம். ஆனால், லக்ஷ்மண் ஜூலாவைவிடப் பெரியது. 450 அடி நீளமும், கங்கை ஆற்றுக்கு மேல் 59 அடி உயரமும் கொண்டது.

கீதா பவன்: கங்கை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது இது. பக்தர்கள் இலவசமாகத் தங்குவதற்காக 1000 அறைகள் இங்கே இருக்கின்றன. இங்குள்ள சொற்பொழிவுக் கூடத்தில் தினமும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. நாடெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள் இங்கே தங்கி, கங்கையில் நீராடிய பிறகு, தியானத்தில் ஈடுபடுகின்றனர். மிக மலிவான விலையில் தரமான உணவுக்கும் இங்கே ஏற்பாடு செய்கிறார்கள். சாது சந்நியாசிகளுக்கு இலவச உணவு மற்றும் உடைகளும் தருகிறார்கள்.

இங்கே இருக்கும் ஆலமரத்தின் கீழ் சுவாமி ராமதீர்த்தர் முதலான மகான்கள் தவம் செய்திருக்கிறார்கள். கங்கையில் நீராட வசதியாக இரு படித்துறைகளும் இங்கே இருக்கின்றன. சுவர்களில் புராண இதிகாசக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

பயணம்... பரவசம்!

ஸ்வர்க் ஆஸ்ரமம்: லக்ஷ்மண் ஜூலாவில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம், தெற்கே கங்கைக் கரையோரமாக நடந்தால், இந்த ஆஸ்ரமத்தை அடையலாம். பல கோயில்கள், கடைகள், நீராடும் இடங்கள் இங்கே அமைந்துள்ளன. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின்போது பலவித சடங்குகளை இங்கே செய்கிறார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளோருக்குத் தங்கும் இடம், உணவு ஆகியவற்றை இலவசமாக அளிப்பதுதான் இந்த ஆஸ்ரமத்தின் நோக்கம். இதற்காகவே ஒரு கமிட்டியும் செயல்படுகிறது. ஆன்மிகப் புத்தகங்களும் சஞ்சிகைகளும் நிரம்பிய அற்புதமான நூலகம் ஒன்றும் இங்கே இருக்கிறது.

இமயமலையின் அரிய வகை மூலிகைகளையும், கங்கை நீரையும் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கும் மருத்துவமனை ஒன்றும் இங்கே சேவை செய்து வருகிறது. மாமரங்களை இமயமலைச் சாரலில் நடுவது புண்ணியச் செயலாகக் கருதப்படுவதால், ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான மாமரக் கன்றுகள் இங்கே நடப்படுகின்றன. ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும், உணவும் அளிக்கும் சமஸ்கிருத வித்யாலயா பள்ளியும் இங்கே செயல்படுவது சிறப்பு.

பயணம்... பரவசம்!

சிவானந்தா ஆஸ்ரமம்: 'டிவைன் லைஃப் சொஸைட்டி’ எனும் உலகளாவிய ஆன்மிக நிறுவனம் 300 கிளைகளைக் கொண்டது. அதன் தலைமையகமாக விளங்குவது ரிஷிகேஷில் இருக்கும் இந்த சிவானந்தா ஆஸ்ரமம். சுவாமி சிவானந்தர் இந்த ஆஸ்ரமத்தை 1932-ல் ஏற்படுத்தினார். சேவை மனப்பான்மையும் தொண்டு உள்ளமும் உள்ள எவரும் இந்த ஆஸ்ரமத்தில் சேரலாம்; பிறருக்கு உதவி புரிந்து வாழலாம். உணவு மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றுக்குக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அன்பர்கள் கொடுக்கும் நன்கொடை மூலமே இதனை ஆஸ்ரம நிர்வாகம் செய்து வருகிறது.

அந்தக் காலத்தில் பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லை. நடந்துதான் போக வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்காக இந்த ஆஸ்ரமத்தை ஸ்தாபித்தவர், யாத்ரீகர்களுக்கு வயிறார உணவு கொடுத்து, மலைப் பாதையில் ஊன்றி நடக்க ஒரு தடியும் கொடுப்பாராம். அதோடு, போர்த்திக்கொள்ள ஒரு கம்பளியும் தந்தாராம். அந்தக் கம்பளி கறுப்பு நிறத்தில் இருக்குமாம். அதனால் அவரை மக்கள் அன்போடு, 'காலி கம்பளிவாலா’ என்று அழைத்தார்களாம் (காலி என்றால் கறுப்பு என்று அர்த்தம்). அவருக்கு இங்கே ஒரு கோயில் இருக்கிறது.

இவை தவிர, ரிஷிகேஷில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் நீலகண்ட மஹாதேவர் ஆலயமும், 21 கி.மீ. தூரத்தில் வசிஷ்டர் வசித்த குகையும் இருக்கின்றன. போதுமான கால அவகாசம் இல்லாததால், எங்களால் அவற்றை தரிசிக்க இயலவில்லை.

அதிகாலை புறப்பட்டு, ரிஷிகேஷில் இத்தனை இடங்களையும் பார்த்துவிட்டு, பகல் 11 மணிக்கெல்லாம் பரிசல் மூலம் கங்கை ஆற்றைக் கடந்து, நாங்கள் தங்கி இருந்த மடத்துக்கு வந்து சேர்ந்தோம். இரவெல்லாம் வாகனத்தில் பயணம் செய்த அலுப்பில் மதியம் 1 மணி வரை ஓய்வு. பிறகு சுடச்சுட சாம்பார், பொரியல், கூட்டு, அப்பளம், ரசம், தயிரோடு திவ்யமாக சாப்பாடு. பாயசமும் உண்டு. மதியம் 2 மணியளவில் ரிஷிகேஷில் இருந்து இமயமலையின் சிகரங்களில் சஞ்சரிக்கும் பயணம் துவங்கியது.

வழியெங்கும் கங்கையின் தரிசனம்; உடலெங்கும் கங்கையில் நீராடிய மகிழ்ச்சி; மனமெங்கும் கங்கையின் நினைவு. 'எந்த நீரையும் கங்கை என்று சொன்னாலே, அது பாவங்களைப் போக்கும்’ என்று பெரியாழ்வார் சொன்னதை மனம் அசைபோட்டது. கங்கையிலேயே மூழ்கிய நினைவுகளுடன் பெரியாழ்வார் திருமொழியை மனம் பாடியது.

'தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
தடிந்தவெம் தாசரதிபோய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட
எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற
கண்டம் என்னும் கடிநகரே’

- யாத்திரை தொடரும்...