தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நாரதர் கதைகள் - 9

நாரதர் கதைகள் - 9

நாரதர் கதைகள் - 9
##~##

றைவன் பெயரை யார் சொன்னாலும், எங்கு சொன்னாலும் நாரத மகரிஷிக்குத் தெரிந்துவிடும். உண்மையாய், ஆழமாய், அடர்த்தியாய் ஒருவர் தன் மனதுக்குள்ளேயே இறைவழிபாடு செய்கிறபோது, அந்த அதிர்வலைகளை அவர் எளிதில் உணர்ந்து கொள்வார். யார், எதற்கு இப்படி ஆழ்ந்து தியானிக்கிறார்கள், எதற்கு இப்படி இறைவனை அழைக்கிறார்கள் என்று ஆவல் கொள்வார். அங்கே போய், யார் என்னவென்று கேட்டு தீர விசாரித்து, தேவையெனில் அவருக்கு உதவி செய்வது நாரத மகரிஷிக்குச் சந்தோஷமான விஷயம்.

நாரதர் அப்படி ஒரு நினைவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது, மிகச் சமீபத்தில் விநாயகப் பெருமானை வேண்டியபடி யாரோ உட்கார்ந் திருப்பதைக் கண்டார். அந்த மனிதர் உள்ளத்தில் இருந்து மிக கனமாய் கணபதி ஸ்தோத்திரங்கள் எழுந்தன. மிகப் பெரிய இறைஞ்சல் தென்பட்டது. ஆனால், அந்த இறைஞ்சல் அமைதியாக இருந்தது; அந்த இறைஞ்சல் நம்பிக்கையோடு இருந்தது; அந்த இறைஞ்சல் ஆர்வமாக இருந்தது. அது அந்தச் சுற்றுச்சூழலை மாற்றியது; மணக்க வைத்தது; தாவரங்களைச் செழிக்க வைத்தது; காற்றை அமைதிப்படுத்தியது.

அட, இந்த இடத்தின் சூழ்நிலையே மாறும் வண்ணம் யாரோ மந்திரம் ஜபிக்கிறார்களே, என்ன, எதற்கு என்று அந்த இடம் வந்தார். ஒரு பெரிய ஆலமரத்தடியில் இடுப்பில் வேட்டியுடன் தோளில் போர்வையுடன், தரையில் துண்டு விரித்து

மரத்தின் மீது சாய்ந்து யாரோ ஒருவன் விநாயகரை வேண்டிக் கொண்டிருந்தான். மிகுந்த துன்பத்தில் இருந்ததுபோல அவன் உடலமைப்பு காட்டிக் கொடுத்தது. அவனுள் ஒரு மெல்லிய முனகல் இருந்தது. வேதனை இருந்தது. ஏன் தனக்கு இப்படி ஆயிற்று என்ற நொய்மை இருந்தது. நாரதர் அவன் முன்பு தோன்றினார்.

''யாரப்பா நீ? என்ன வேண்டுமென்று இப்படி விநாயகரைத் துதித்துக் கொண்டிருக்கிறாய்? உன் அங்க லட்சணங்கள் அழகாக இருக்கின்றன. ஆனால், உடம்பில் ஏதோ ஒரு கெடுதல் இருப்பது போல் தெரிகிறதே, என்ன ஆயிற்று? எழுந்து நில்! வெளிச்சத்துக்கு வா!'' என்று கட்டளை இட்டார்.

அவன் எழுந்து நின்றான். வெகுநாள் ஒரே இடத்தில் இருந்ததுபோலத் தள்ளாடினான். விழுது களைப் பிடித்துக்கொண்டு வெளிச்சத்துக்கு வந்து நின்றான்.

''யாரப்பா நீ?'' - நாரதர் கனிவோடு அவனை விசாரித்தார்.

''அழகனாகவும், அரசனாகவும் இருக்கக்கூடிய லட்சணங்கள் உன்னிடம் இருக்கின்றன. ஆனால், உன் மனமோ மென்மையாய், மிக நொய்மையாய் ஏதோ வேண்டுவதற்கு இறைஞ்சுவதாய் இருக்கிறது. ஏன் இங்கு தனியே இருக்கிறாய்? எனக்கு உன்னைப் பற்றிய விவரம் சொல்'' என்று கேட்டார்.

நாரதர் கதைகள் - 9

''என் பெயர் ருக்மாங்கதன். வீமன் என்பவருடைய மகன். நான் விதர்ப்ப தேசத்தின் அரசன். என் மக்கள் என் மீது பிரியம் உள்ளவர்கள். நானும் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். ஒரு நல்ல அரசனாக நான் அவர்களை ஆண்டு வந்தேன். என் குடிபடையினரும் எனக்கு அடங்கி என்மீது உயிரையே வைத்திருந்தார்கள்.

ஒருநாள், என் தேசத்து விவசாயிகள் ஒன்று கூடி, தங்களுடைய பயிர்களை மிருகங்கள் அழிக்கின்றன என்றும், யானைகள் கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்துவிடுகின்றன என்றும், வாழைக்குலையைக் கரடிகள் சாப்பிட்டு விடுகின்றன என்றும், நெற்பயிர் களூடே காட்டெருமைகள் புகுந்து மேய்ந்து, நாசம் செய்துவிடுகின்றன என்றும், இவற்றைத் துரத்திக்கொண்டு சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்கள் வருகின்றன என்றும், அந்த எருமைகளை எதிர்க்க முடியாமல் திசை திரும்பி ஊருக்குள் நுழைந்து மக்களைக் கொல்வதும், ரணப்படுத்துவதுமாக அட்டகாசம் செய்கின்றன என்றும் சொன்னார்கள்.

அவர்கள் கண்களில் நீர் காணப் பொறுக்காது நான் உடனடியாக படை திரட்டிக்கொண்டு, அவர்களைச் சுற்றியுள்ள காடுகளுக்குப் போனேன். யானைகளை அடித்துத் துரத்தினேன்; காட்டெருமைகளைக் கொன்றேன்; கரடிகளையும் குரங்குகளையும் வனம் விட்டு ஓடுமாறு செய்தேன். இவற்றைத் துரத்தி வரும் சிங்கம், சிறுத்தை, புலி போன்ற மிருகங்களை அம்பெய்தும், வேல் எறிந்தும் கொன்றேன். மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். தொடர்ந்து காவல் இருக்க வேண்டும் என்றார்கள். வேறு பக்கம் உள்ள காட்டைக் காட்டினார்கள். நான் அந்தப் பக்கமும் இதே விதமாக மிருகங்களைத் துரத்திக் கொண்டு போனேன். நல்ல வெயில்; கடும் தாகம். என்னிடமிருந்த பைகளில் நீர் தீர்ந்துவிட்டது. ஒரு புலியைத் துரத்திக்கொண்டு சென்றதில் நான் வெகுதூரம் வந்துவிட்டேன். என் படைகள் பின் தங்கிவிட்டன...''

அவன் தொடர்ந்து பேசினான்... ''சற்றுத் தொலைவில் ஓர் ஆஸ்ரமம் இருந்தது. அழகியதாய், உறுதியானதாய், பெரியதாய் இருந்தது அந்த ஆஸ்ரமம். அது மிகச் சிறந்த முனிவருடைய ஆஸ்ரமம் என்பதை அதன் வாயிலில் நிற்கும்போதே புரிந்துகொண்டேன். கை தட்டி உள்ளே இருப்பவர்களை வெளியே அழைத்தேன். நல்ல உயரமும், கட்டுக்கோப்பான உடம்பும், அழகிய முகமும் கொண்டவளாக ஒரு பெண் வெளியே வந்தாள். கதவு திறந்து என்னை வரவேற்றாள்.

'தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும். நான் காட்டுக்கு வேட்டையாட வந்தவன். என் பெயர் ருக்மாங்கதன். விதர்ப்ப தேசத்து அரசன். என்னுடைய தோல் பையில் தண்ணீர் தீர்ந்துவிட்டது. மிகுந்த தாகமாக இருக்கிறது. தயவுசெய்து குடிக்க நீர் தர வேண்டும். தோற் பையிலும் நிரப்பித் தரவேண்டும்’ என்று பணிவாகக் கேட்டேன்...''

ஆள் அரவமில்லாத காட்டில் தண்ணீர் கேட்டு வந்திருக்கும் அழகனான ருக்மாங்கதனை அந்தப் பெண் வியப்போடு பார்த்தாள். அவள் மனத்துள் காமம் கிளர்ந்தது.

நாரதர் கதைகள் - 9

''உங்கள் வரவு நல்வரவாக வேண் டும். என் பெயர் முகுந்தை. இந்த ஆஸ்ரமத்து முனிவரின் மனைவி. உங்களைப் பார்க்கும்போது மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது. இவ்வளவு அழகா என்று வியப்பு ஏற்படுகிறது. ஆண்களில் இவ்வளவு லட்சணம் பொருந்தியவர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. மிகச் சிறப்பான அங்க அழகுகளோடு இருக்கிறீர்கள். கம்பீரமாகப் பேசுகிறீர்கள். உங்கள் மொழி வளமிக்கதாக இருக்கிறது.

உங்களுடைய அசைவுகள் கம்பீரமானதாக இருக்கின்றன. கவிதை மொழியும், கம்பீரமான தோற்றமும், கட்டுடலும், அழகிய கண்களும், மிருதுவான பேச் சும் கொண்ட உங்களைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கிறது.

உங்களோடு கை கோத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. என்னோடு கூடுதற்காகத் தாங்கள் வரவேண்டும். நான் முனிவரின் மனைவி என்று தயங்காதீர்கள். ஒரு பெண் விருப்பப்பட்டால், அவளுடைய காமத்தைத் தீர்ப்பது ஓர் ஆடவனின் கடமை. மேலும், நீங்களாக முன்னேறி வந்து என் கற்பைக் கெடுப்பதுதான் தவறே தவிர, நான் அழைத்து நீங்கள் வந்தால் அது தவறாகாது.

தாகத்தைத் தணிக்க உமக்கு எப்படித் தண்ணீர் வேண் டுமோ அதே போல, காமத்தில் தவிக்கிற எனக்கு உங்களுடைய அணைப்பு தேவை யாக இருக்கிறது. வாருங்கள்... என் அருகே வாருங்கள்!'' என்று கை நீட்டி வரவேற்றாள்.

ருக்மாங்கதன் விலகி நின்றான். ''அன்னையே! நீங்கள் முனிவரின் மனைவி. நான் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிற ஓர் அரசன். பழி பாவங்களுக்கு அஞ்சுபவன். என் மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி வேட்டையாட வந்திருக்கிறேன். வந்த இடத்தில் எனக்கு இந்தத் துன்பம் நேர்ந்தது, தயவுசெய்து தாகத்துக்கு தண்ணீர் கொடுத்து, என்னை ஆசீர்வதித்து அனுப்புங்கள். மற்றபடி, தகாத வார்த்தைகள் எதுவும் பேச வேண் டாம். தகாத செயல்கள் எதுவும் செய்ய நான் தயாராக இல்லை. என்னை மன்னியுங்கள்!'' என்று பணிவாக மறுத்தான்.

''என்ன இது... ஒரு பெண் விரும்பி அழைத்தும் கூட அவளை விட்டு விலகிப் போகிறீர்களே, ஏன்?

நான் அழகாக இல்லையா? என் கட்டழகு உங் களைத் தூண்டவில்லையா? என் பேச்சில் கனிவு இல்லையா? நான் ஒயிலாக இல்லையா? படிப்பறிவு இல்லாதவளாகத் தென்படுகிறேனா? என்னை வெறுப்பதற்கு உண்டான காரணம் என்ன, சொல் லுங்கள்'' என்று முகுந்தை கேட்க,

''நீங்கள் பிறர் மனைவி'' என்றான் அவன் பணிவோடு.

நாரதர் கதைகள் - 9

''அதைப் பற்றி உங்களுக்கென்ன கஷ்டம்? நானே ஆசைப்பட்டுத்தானே வருகிறேன்! என் புருஷன் வந்தால்கூட நீங்கள் இதைத் தெளிவாகச் சொல்ல லாமே? 'நான் மறுத்தேன். உங்கள் மனைவிதான் வற்புறுத்தினாள்’ என்று சொல்லலாமே?

உங்கள் மீது பிழை இல்லை எனும்போது அவர் உங்களை எதுவும் செய்யமாட்டாரே! எனவே, நீங்கள் எது குறித்தும் பயப்பட வேண்டாம். வாரும்; வந்து கூடும்'' என்று அவள் அவன் மார்பில் வந்து சாய்ந்தாள்.

ருக்மாங்கதன் அவளை உதறித் தள்ளினான். அவள் தரையில் விழுந்தாள். எழுந்து நின்றாள். கோபமானாள். ''மிகப் பெரிய அழகன், மிகச் சிறந்த அரசன், மக்கள் மீது மிகுந்த பிரியமுள்ளவன், நல்லபடியாக நாட்டை ஆள்பவன் என்கிற எண்ணத்தில்தானே இப்படி என்னிடம் திமிராக நடந்து கொள்கிறாய்? என்ன பெரிய பொல்லாத அழகு உன்னு டைய அழகு! இந்த அழகை என்னால் குலைத்துவிட முடியாதா? உன் அழகு மற்றவருக்குப் பயன்பட வேண்டும் என்றுதானே அழைத்தேன்? உன் அழகு என்னைத் தொந்தரவு செய்கிறது என்றுதானே கூப்பிட்டேன்? அந்த அழகைக் கொண்டு என்னுள் அனலை மூட்டிவிட்டு நீ போய் விடுவாய்; நான் காமத்தில் கிடந்து சாக வேண்டுமா? என்ன கூத்து இது? உடனடியாக வந்து என்னைத் தழுவு!'' என்று அவள் கட்டளை போல் சொல்ல, அவன் ''முடியாது'' என்று மறுத்தான்.

''அப்படியா? போ, விலகிப் போ! வெறுமே போகாதே. என்னிடமிருந்து சாபத்தை வாங்கிக் கொண்டு போ! இந்த அழகுதானே உன்னை கர்வப்பட வைக்கிறது? இந்த அழகுதானே என்னை அலட்சியப்படுத்த வைக்கிறது? சகலரையும்விட மிகச் சிறந்தவன் என்கிற அகம்பாவ நினைப்பைக் கொடுக்கும் உன் அழகு நாசமாகப் போகட்டும். உன்னை குஷ்டரோகம் பீடிக்கட்டும். உனது கை-கால்கள் விளங்காது போகட்டும். உன் பலம் குறையட்டும்'' என்று ஆத்திரத்தோடு வசைமாரி பொழிந்தாள் முகுந்தை.

அந்த க்ஷணமே அவன் உடம்பு மாறிற்று; தோல்கள் வெடித்தன; கைகள் சுருங்கின; விரல்கள் முனை மழுங்கித் தேய்ந்தன; முழங்கால் மடங்கிற்று. நடை தள்ளாடிற்று. அவன் வேலிப்படலைப் பிடித்தபடியே வெளியேறினான். அவன் போவதை அவள் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

'ஏன் இப்படி ஆயிற்று எனக்கு? நல்லதுதானே செய்தேன். உத்தமமாக நடந்துகொண்டதற்கு யாரேனும் சாபம் தருவார்களா? அப்படியும் நடக்குமா? அது பலிக்கவும் செய்யுமா? என்ன அபத்தம் இது! எதற்காக எனக்கு இது ஏற்பட்டது?’ என்று மனம் குன்றியவனாக, அவன் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தான். அவன் படைகள் அவனைப் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தன. இந்த ஆலமரத்துப் பக்கம் அவை வரவில்லை.

நாரதர் வந்து விசாரித்ததும் அவன் தன் கதையைச் சொன்னான். ''அடடே! அதனால்தான் இங்கு உட்கார்ந்து விநாயகரை துதித்துக்கொண்டிருக்கிறாயா? சற்று தூரத்தில் சிந்தாமணி விநாயகர் என்று ஒரு விநாயகர் இருக்கிறார். மிக அழகான கோயிலில் குடியிருக்கிறார். அந்தக் கோயிலுக்கு அருகே ஒரு குளம் இருக்கிறது. நான் அங்கு ஒரு விநோதம் கண்டேன்.

அந்தக் குளத்தில் ஒரு குஷ்டரோகி தன்னுடைய நோய் போக வேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாது சாதாரணமாக மூழ்கி எழுந்தான். உடனடியாக அவன் நோய் தீர்ந்தது. அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்ததுமே அவன் வாலிபனாகவும், தேக வலுவுள்ளவனாகவும் அழகனாகவும் மாறினான். நீயும் அந்தச் சிந்தாமணி விநாயகர் கோயில் குளத்தில் மூழ்கி எழு!'' என்று வழிகாட்டினார்.

அவன் நாரதருக்கு நன்றி சொன்னான்.

''நீங்களாகவே வலியவந்து மற்றவருக்கு உதவி செய்கிறீர்கள் நாரத மகரிஷியே! உங்களுக்கு இணையாக யாரேனும் உண்டா? மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போல் பெரும் தெய்வங்களும் செய்வதில்லை.

நாரத மகரிஷியே, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். தாங்கள் மேலும் சில விவரங்களை எனக்குச் சொல்ல வேண்டும்'' என்றான் ருக்மாங்கதன்.

''என்ன அது?'' - நாரதர் கேட்டார்.

''சிந்தாமணி விநாயகரை பூஜித்துப் பயனடைந்தோர் வேறு யாரேனும் இருக்கிறார் களா?'' என்று வினவினான்.

''இருக்கிறார்கள்'' என்று நாரதர் சந்தோஷமாகச் சொன்னார்.

- தொடரும்...