மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்: 9

ஒரு கதை... ஒரு தீர்வு!அருண் சரண்யா, ஓவியம்: சசி

##~##

மின்னல் வேகத்தில் முகபாவங்களை யாரால் மாற்ற முடியும்?

சில தினங்களுக்கு முன்புவரை சிவாஜிகணேசன், கமல்ஹாசன், விக்ரம்... இப்படியான சில திரைப்பட நட்சத்திரங்களே என் நினைவுக்கு வந்திருப்பார்கள். அந்த வரிசையில் சமீபமாக என் நண்பனும் சேர்ந்துவிட்டான்.

எங்கள் இருவருக்குமே தெரிந்த ஒரு பொது நண்பருக்குத் திருமணம். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம். சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தான் நண்பன். அந்தநேரத்தில், இடையூறாக அவன் செல்போன் ஒலித்தது. சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என, சத்திரத்துக்கு வெளிப்புறம் போய்ப் பேசிவிட்டு வந்தான். திரும்பி வந்தபோது, அவன் முகத்தில் கடும் கோபம்.

அதற்கு மேல் அவனால் அங்கு இருக்க முடிய வில்லை. 'சரி, நான் கிளம்பறேன். நீ சாப்பிட்டுவிட்டு அப்புறம் வா!'' என்று எழுந்துகொண்டான். சற்றுப் படபடப்பாக இருந்தான்.  

இப்படியான நிலையில் அவன் தனியாக காரை ஓட்டிச் செல்வது சரியாகப்படவில்லை எனக்கு. எனவே, நானும் உடன்வருவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டேன். காரை நான் செலுத்த, பக்கத்தில் வெகுநேரம் மௌனமாகவே வந்தான் நண்பன். துக்கச் செய்தியாக இருந்தால் சொல்லி இருப்பான். இது ஏதோ கோபமூட்டும் செய்தி. மனத்துக்குள்ளேயே பொருமிக் கொண்டிருக்கிறான் என நினைத்து, அதை அவன் தானாக வெளிப்படுத்தட்டும் எனக் காத்திருந்தேன்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பேசத் தொடங்கினான்... 'ப்ச்... இங்கே நல்லவங்களுக்கே காலமில்லேடா!'' என்றான்.

நான் மௌனமாகவே இருந்தேன்.  

'உண்மையா உழைக்கிறவங்களுக்கு இது காலம் இல்லே!'' என்றான், அடுத்ததாக. தொடர்ந்து... 'எங்க கம்பெனியிலே பிரமோஷன் லிஸ்ட் வெளியாகி இருக்கு. எனக்கு இந்த வருஷமும் பிரமோஷன் இல்லை.எனக்கு அதுகூட வருத்தமில்லைடா. தினேஷ் பயலுக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு!''

விடை சொல்லும் வேதங்கள்: 9

'யார் அந்த தினேஷ்? நான் பார்த்திருக்கேனா?'' என்று கேட்டேன்.

'இல்லை. அந்த நாயை நீ பார்த்ததில்லை!'' என்றபோது அவனது ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகமாகியிருக்கும் என்று தோன்றியது.

வண்டியை சாலை ஓரம் நிறுத்தினேன். 'இப்ப சொல்லு'' என்றேன்.  

'பெருமைக்காகச் சொல்லலை... என்னோடு ஒப்பிட்டால் வேலையில் தினேஷ் அத்தனைச் சூட்டிகை இல்லை. நான் எம்.பி.ஏ. அவன் வெறும் எம்.ஏ-தான். இங்கிலீஷ்ல தப்பில்லாம ஒரு லெட்டர் டிக்டேட் பண்ணத் தெரியாது. பாஸுக்கு நல்லா 'ஐஸ்’ வைப்பான். இப்படிக் காக்கா பிடிச்சே காரியத்தைச் சாதிச்சுக்கறதில் கில்லாடி அவன்.  எனக்கிருக்கும் திறமைக்கும் ஐ.க்யூ-வுக்கும் எனக்கு எப்பவோ பிரமோஷன் கிடைச்சிருக்கணும். ஆனா, என் விதி... இங்கே எவனுக்கும் திறமையை மதிக்கத் தெரியலை!''

நண்பனின் குரலிலும் முகபாவத்திலும் கோபம், ஆற்றாமை இவற்றுடன் வேறொரு உணர்வும் புலப்பட்டது. அது, கர்வம்!  

''இதே மாதிரிதான் ரெண்டு பேருக்கு நடுவே போட்டி வந்ததா நம்ம புராணங்கள் சொல்லுது...'' என்று குறுக்கிட்டு, அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.  

நாரதருடன் தான் வைத்த பந்தயத்தில் சத்யபாமா தோற்று விட்டாள். இப்படியாகும் என அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இல்லையென்றால், ''போட்டியில் நான் தோற்றால் இந்தப் பக்கமே இனி தலைகாட்ட மாட்டேன். ஆனால், நீங்கள் தோற்றால், கண்ணனை அழைத்துக்கொண்டு நான் போய்விடுவேன்'' என்று நாரதர் வைத்த சவாலுக்கு தைரியமாக ஒப்புக்கொண்டிருப்பாளா?

'நான் தோற்றுவிட்டேன்தான். அதற்காக என் கண்ணனை இழந்து விட முடியுமா?’ - சத்யபாமாவின் மனம் வேகமாக வேலை செய்தது.

'நாரதரே! கண்ணனின் எடைக்கு நிகரான தங்கம் தருகிறேன். அதை எடுத்துக்கொண்டு, கண்ணனை விட்டுவிடுங்கள்'' என்றாள்.

நாரதர் கண்ணனைப் பார்த்தார். 'ஒப்புக்கொள்’ என்பதுபோல் முகக்குறிப்பு காட்டினார் கண்ணன். நாரதரும் ஒப்புக்கொண்டார்.  உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டாள் சத்யபாமா. ஒரு பெரிய துலாக்கோல் கொண்டுவரப்பட்டது. அதன் ஒரு தட்டில் கண்ணன் உட்கார,  மறு தட்டில் தன்னிடமிருந்த தங்கக் கட்டிகளை வைத்தாள். ஆனால், அந்தத் தட்டு கீழே இறங்கவேயில்லை. அடுத்து, தன்னிடமிருந்த ஆபரணங்களையெல்லாம் கொண்டு வந்து அதே தட்டில் வைத்தாள். ஊஹூம்! கண்ணன் உட்கார்ந்திருந்த தட்டு கொஞ்சம்கூட மேல் நோக்கி நகரக் காணோம். அதிர்ச்சி அடைந்தாள் சத்யபாமா. உடனே, தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி துலாபாரத் தட்டில் வைத்தாள். அப்போதும் தராசு முள் முழுக்க முழுக்கக் கண்ணன் அமர்ந்திருந்த தட்டின் பக்கமே தாழ்ந்திருந்தது.  இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டாள் சத்யபாமா.

அப்போது ருக்மிணி அந்தப் பக்கமாக வந்தாள். கண்ணன் தராசுத் தட்டில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும், அவளுக்கு வியப்பாக இருந்தது. நடந்ததை நாரதர் கூற, ருக்மிணி அதிர்ச்சியானாள்.  

கண்ணனைப் பணயமாக வைத்து ஒரு பந்தயம் நடத்தலாமா? சரி, அதுபற்றி இப்போது பேசிப் பயனில்லை. கண்ணன் வெளியேறக் கூடாது; அதுதான் இப்போது முக்கியம் என்று நினைத்த ருக்மிணி, அங்கிருந்த துளசிமாடத்தை மும்முறை வலம் வந்தாள். கையில் ஒரே ஒரு துளசி தளத்தை எடுத்துக்கொண்டாள். கண்ணன் அமர்ந்திருந்த துலாக்கோலை வலம் வந்தாள். கண்ணனை நமஸ்கரித்தாள். பிறகு, தன் கையிலிருந்த துளசி இலையை பயபக்தியுடன் கண்ணனின் எதிர்த் தட்டில் வைத்தாள்.  

என்ன ஆச்சரியம்! கண்ணன் அமர்ந் திருந்த தட்டு மெள்ள மெள்ள மேலேறி, துலாக்கோல் செங்குத்தாக நின்றது.

'இந்தக் கதை இப்போது எதற்கு?'' என்று கேட்டான் நண்பன்.  

'சத்யபாமாவின் அகங்காரம் அவள் கண்ணை மறைத்தது. அன்பால்தான் இறைவனைச் சரிசெய்ய முடியும் என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை. அதுபோல, தினேஷ§க்குப் பதவி உயர்வு கொடுக்கப் பட்டதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை நீ உணரவில்லையோ என்று தோன்றுகிறது'' என்றேன்.  

'ஏன் உணராமல்..? மேலதிகாரியைக் காக்கா பிடித்ததால்தான் அவனுக்குப் பதவி உயர்வு!''-  சொன்னதையே மீண்டும் சொன்னான் அவன்.

'காக்கா பிடித்தான் என்று எதை வைத்துச் சொல்கிறாய்?'' என்றேன்.  

'மேலதிகாரி நுழைந்தவுடன் கூழைக் கும்பிடு போடுவான். அவருக்கு பர்சனலாக தேவைப்படும் விஷயங்களைச் செய்து கொடுப்பான். யாரைப் பார்த்தாலும் ஈன்னு இளிப்பான். கம்பெனி வேலையை முன்னேபின்னே செய்தாலும், ஆபீஸில் பணியாற்றுபவர்களின் பிறந்த நாள், திருமண நாளையெல்லாம் ஞாபகம் வெச்சுட்டு வாழ்த்துவான். பரிசுகள் அளிப்பான். வேலையில என்னைவிட ஸ்லோ! ஆனால், அவனோ சாமர்த்தியமாகத் தன் வேலைகளைப் பிறரிடம் தள்ளி, அவர்களைக் கொண்டு நோகாமல் செய்து முடித்துவிடுவான்!''

'தினேஷ் செய்யறதிலே என்ன தப்பு?'' என்றேன் நான். ''காலையில் நுழைந்தவுடன் ஒருவரை விஷ் செய்வதோ, வணங்குவதோ, புன்னகைப்பதோ நாகரிகத்தின் அடையாளம். நாள் முழுவதும் சேர்ந்துதான் பணியாற்றவேண்டும் எனும்போது ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் உதவி செய்துகொள்வதில் தப்பில்லையே! மத்தவங்களோட பிறந்தநாளை ஞாபகம் வச்சுட்டு வாழ்த்துவது நல்ல விஷயம்தானே? உண்மையில், ஒரு குழுவுக்குத் தலைவனாக இருப்பதற்கான முக்கியத் தகுதி, தன் கீழ் பணியாற்றும் அனைவரையும் அரவணைத்து, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களைக் கொண்டு வேலையைக் கச்சிதமாக முடிப்பதுதான். உங்கள் கம்பெனி நிர்வாகம் டீம் ​லீடராக அவனைத் தேர்ந்தெடுத்ததற்கு இவையே காரணங்கள் என்பது, நீ இப்போது அவனைப் பற்றிச் சொன்னதிலிருந்தே புரிகிறது. இனிமையாகப் பழகுவதும், புரிந்துகொண்டு செயல்படுவதும் ஒரு டீம் லீடருக்குத் தேவைப்படும் தலையாய பண்புகள். நீ அவற்றை உன் கோணத்தில் மட்டுமே பார்த்து, ஐஸ் வைப்பது, காக்கா பிடிப்பது என்று உன் சிந்தனையைக் குறுக்கிக்கொண்டு யோசிக்கிறாய். நாம் திறமையாக வேலை செய்தால் மட்டும் போதாதுடா; அடுத்தவரையும் திறமையாகப் பணியாற்ற வைக்கவேண்டும். ஒரு நல்ல தலைமைக்கு அதுதான் அழகு! ஆத்திரப்படாமல் நான் சொன்னதை யோசித்துப் பார்!'' என்றேன்.  

எனக்கு நம்பிக்கை இருக்கிறது... அவன் யோசிப்பான்; தன்னை மாற்றிக் கொள்வான்!

- தீர்வுகள் தொடரும்...