Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 35

சத்திய விஜயம்!பி.என்.பரசுராமன்

ஞானப் பொக்கிஷம்: 35

சத்திய விஜயம்!பி.என்.பரசுராமன்

Published:Updated:
##~##

துவாபர யுகத்தின் முடிவில், நாரதர் பிரம்மாவிடம் சென்றார்.

''தந்தையே! எல்லா இடங்களிலும் சுற்றி வருகின்ற நான், கலியை (தோஷங்கள் மிகுந்த கலியுகத்தை) எவ்வாறு தாண்டிச் செல்வேன்?' என்று கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்கு பிரம்மதேவர், ''நாரதா! எல்லா வேதங்களின் ரஹஸ்யமான தாத்பர்யத்தைச் சொல்கிறேன், கேள். அதனால், நீ கலியின் துன்பத்தை அடைய மாட்டாய். பகவானும் ஆதி புருஷனுமான நாராயணனின் நாமத்தைச் சொன்ன மாத்திரத்தில், கலி இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்!'' என்றார்.

''அப்படிப்பட்ட நாமம் எது?'' என நாரதர் கேட்க... அதற்கு பிரம்மா,

' 'ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!’

என்ற இந்தப் பதினாறு நாமங்களையும் சேர்த்துச் சொன்னால், கலியின் தோஷம் நாசமாகிவிடும். சகல வேதங்களும் இதைத் தவிர வேறு வழி இல்லை என்றே கூறுகின்றன'' என்று பதில் சொன்னார்.

'கலி சந்தரனோபநிஷத்’ சொல்லும் கதை இது.

ஞானப் பொக்கிஷம்: 35

இந்தத் தகவலைச் சொல்லி ஆரம்பிக் கிறது, 'சத்திய விஜயம்’ என்னும் நூல். 1957-ல் வெளிவந்த இந்த நூலில், பல அபூர்வமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துமே, ராமாயணத்தைத் தத்துவார்த்தமாக விளக்கும் உண்மைத் தகவல்கள்.

மேலும், 'ஆதாம்- ஏவாள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? நம் நூல்களில், அவர்கள் இருவரும் எங்கு இடம் பெறுகிறார் கள்? அவர்களைப் பற்றிய உண்மை என்ன?’ என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கும் நூல் இது.

'உபநிஷத்சாரம்’ என்று தொடக்கத்திலேயே ஒரு பகுதியை வைத்து, அதில் நசிகேதஸ் கதையைச் சொல்லியிருக்கிறது. அதாவது, கடோபநிஷத்தின் தொடக்கம்!

வாஜசிரவர் (வாஜஸ்ரவஸர்) என்ற அந்தணர், தன் உடைமைகள் அனைத்தையும் தானமாகக் கொடுத்து ஒரு யாகம் செய்தார். ஏராளமான பசுக்களைத் தானம் செய்தார். அந்தப் பசுக்கள் எல்லாம் பற்கள் இல்லாதவை; தண்ணீர் குடிக்க முடியாதவை; கறவை இல்லாதவை.

அவர் அவ்வாறு தானம் கொடுத்துக் கொண்டிருந்ததை, அவர் பிள்ளையான நசிகேதஸ் பார்த்தான். 'இப்படிப்பட்ட பயனற்ற தானங்களால் என்ன பயன்?’ என்று எண்ணினான் அவன். விமர்சிக்கவும் செய்தான்.

பின்பு, தன் தந்தையிடம், ''அப்பா! என்னை யாருக்குத் தட்சிணையாகக் கொடுக்கப் போகிறீர்கள்?'' எனக் கேட்டான்.

எரிச்சலுற்ற அவன் தந்தை, 'எமனுக்கு!'' என்றார்.

பிறகு, 'கோபப்பட்டு ஆத்திரத்தில் இப்படிச் சொல்லிவிட்டோமே... இதனால் ஏதும் விபரீதம் விளையுமோ?’ என்று குழம்பினார்; கவலையுற்றார்.

அப்போது நசிகேதஸ், 'தந்தையே! எமனிடம் நான் தனியாகவா போகிறேன்? எனக்கு முன்னால் ஏராளமானோர் அவனிடம் போயிருக்கிறார்கள். எனக்குப் பின்னும் ஏராளமானோர் அவனிடம் போகப் போகிறார்கள். நெற்பயிர்களைப் போல மனிதர்கள் வளர்ந்து முதிர்ந்து அறுபடுகிறார்கள்; மறுபடி முளைக்கிறார்கள். அவ்வளவுதானே?'' என்று சொல்லிவிட்டு, அவனே எமனின் இருப்பிடம் தேடிப் போய்விட்டான்.

நசிகேதஸ் போன நேரம், எமனின் இருப்பிடத்தில் அவன் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. பிறகு எமன் வந்து, தன்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டி, அவனுக்கு மூன்று வரங்கள் தந்தார்.

நசிகேதஸ் கேட்ட முதல் வரம்... ''என் தந்தை மனம் சாந்தி அடைந்து, என் மேல் அவர் கொண்ட கோபம் தீர வேண்டும்'' என்பதே!

ஞானப் பொக்கிஷம்: 35

அதன்பிறகு அவன் கேட்ட இரண்டு வரங்களும் அவற்றுக்கான பதில்களுமாகக் 'கடோபநிஷத்’ தொடங்குகிறது எனக் கூறுகிறது 'சத்திய விஜயம்’ என்னும் இந்த நூல்.

ஞானப் பொக்கிஷம்: 35

வாஜசிரவர் கறவை இல்லாத பசுக்கள் எத்தனை வைத்திருந்தார்? எதற்காக அவற்றை வைத்திருந்தார்? அவற்றை எப்படிக் காப்பாற்றினார்? அவரிடம் தானம் பெற்றவர்கள் யார்? நசிகேதஸின் தாயார் யார்? வாஜசிரவர் பத்தினி இல்லாமல் யாகம் செய்தாரா?

ஞானப் பொக்கிஷம்: 35

 நசிகேதஸ் எமலோகம் போனதும், அவன் உடம்பை சம்ஸ்காரம் செய்தார் களா? அவன் உடம்போடே, எமலோகம் போயிருந்தால், தான் திரும்பி வந்ததும் தன் தந்தை தன்னைத் தெரிந்துகொண்டு வரவேற்பாரா என்ற சந்தேகம் அவனுக்கு ஏன் வந்தது?

ஞானப் பொக்கிஷம்: 35

 நசிகேதஸ் எமலோகத்தில் மூன்று நாட்கள் காத்திருக்கக் காரணம் என்ன? எமனுக்கும் தூக்கம் உண்டா? அல்லது, வெளியில் வேறு ஜோலி உண்டா?

- இப்படிப் பலவிதமான கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு உண்டான பதில்களையும் இந்த நூல் தெளிவாகவே விவரிக்கிறது.

கோதானம் செய்வதால் எல்லாப் பாவங்களும் விலகி, ஒருவன் புண்ணியசாலியாகி விடுகிறான் என்று சொல்வோம். மகா பாதகங் களைச் செய்த ஒருவன், பசுவைத் தானம் செய்தால் அவன் பாவமெல்லாம் போய்விடும் என்றால், அதன்பின் உலகில் யாருமே பாவம் செய்ய பயப்பட மாட்டார்களே? இப்படியெல்லாம் கேட்டு, கோ தானம் பற்றிய உண்மையை இந்த நூல் சுட்டிக்காட்டி விளக்குகிறது.

மேலும், ராமாயணத்தைப் பற்றிய அபூர்வமான தத்துவார்த்தங்களை ஒவ்வொரு காண்டமாக அலசி ஆராய்கிறது.

அகலிகையைப் பற்றிய விவரமும், சுந்தரகாண்டம் எனப் பெயர் வந்ததற்கான காரணமும் இதில் கிடைக்கின்றன. ஸ்ரீராமர் அவதரித்ததைப் பற்றிச் சொல்லும்போது மாதம்- பக்ஷம்- திதி- நக்ஷத்திரம் என்பன வற்றைச் சொல்வோம். ஆனால், வருஷம் சொல்லப்படுவதில்லை. அது ஏன்? வாலி மனைவி தாரை, சுக்ரீவன் மனைவி ருமை ஆகியோரைப் பற்றிய அபூர்வமான தகவல்கள் என, ராமாயணத்தைப் பற்றிப் பலவிதங்களிலும் சொல்லி, நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் நூல் இது.

சைவம்- வைணவம் என்ற பேதமில்லாமல், இந்து மதத்தின் அஸ்திவாரத்தையே காட்டுகிறது இந்த நூல்.

கே.கோபால கிருஷ்ணன் என்பவரால் தொகுக்கப்பட்ட 'சத்திய விஜயம்’ என்ற இந்த நூல், அனைவரும் படித்து உணர வேண்டிய ஒன்று. குறிப்பாக, ராமாயணச் சொற்பொழிவாளர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். 1957-ல் வெளிவந்ததாக இருந்தாலும், சென்னையில் உள்ள 'ஹிக்கின்பாதம்ஸில்’ கிடைக்கிறது.

தெளிவைத் தந்து அமைதியைத் தரும் அபூர்வமான நூலான இதை நாமும் வாசிப்போமே!

- இன்னும் அள்ளுவோம்...