Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

வி.ராம்ஜி

ஆலயம் தேடுவோம்!
##~##

காஞ்சிக்கு நிகரான புண்ணிய க்ஷேத்திரம் இல்லை என்று பெருமிதத்துடன் சொல்பவர்கள் உண்டு. சைவமும் வைணவமும் தழைத்துச் சிறந்த அற்புதமான பூமி, காஞ்சியம்பதி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காஞ்சியிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் பல்லவ மன்னர்களால் ஆலயங்கள் மிக அருமையான முறையில் கட்டப்பட்டன. பல நிவந்தங்கள் அளிக்கப்பட்டு, பூஜைகளும் பராமரிப்புகளும் செம்மையான முறையில் நடந்தேறின.

கோயில் நகரம் என்று கும்பகோணத்தைச் சொல்வார்கள். காஞ்சிபுரத்தையும் கோயில்நகரம் என்று தாராளமாக அழைக் கலாம். எங்கு திரும்பினாலும் கோயில், கோயில், கோயில் என கோபுரங்களும் பிரமாண்டப் பிராகாரங்களுமாகத் திகழ்கின்றன.

குறிப்பாக, சிவ காஞ்சி என்றும் விஷ்ணு காஞ்சி என்றும் சொல்லும் அளவுக்குக் காஞ்சியம்பதியில் சிவாலயங்களும் பெருமாளின் கோயில்களும் மிக அதிகமாக அமைந்துள்ளன.

பெருமாளின் அவதாரங்களை அறிவோம்தானே! ஒவ்வொரு அவதாரத்தின்போதும் திருமால், சிவனாரை வணங்கித் தொழுததான ஸ்தல புராணங் களைக் கொண்டிருக்கும் கோயில்கள் இங்கே அதிகம்.

'அவளூர் என்றொரு கிராமத்தில், ஸ்ரீசிங்கேஸ்வரர் எனும் கோயில், மிகவும் சிதிலம் அடைந்துள்ளது. இதுகுறித்து ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதுங்கள். விரைவில் இந்தக் கோயில் புதுப்பொலிவு பெறு வது உறுதி!’ என்று நம்பிக்கை யுடன் கோரிக்கை விடுத்திருந் தார், களக்காடு மாரிசுப்ரமணியன் எனும் வாசகர்.

ஆலயம் தேடுவோம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது வாலாஜாபாத். செங்கல் பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது வாலாஜாபாத். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அவளூர் எனும் மிகச் சிறிய கிராமம். இங்கே ஊருக்கு நடுவே, பாலாற்றங்கரையில் மிக அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவனார்.

ஒருகாலத்தில், மிகப் பிரமாண்டமான ஆலயமாக இருந்தது என்றும், பத்துப் பதினைந்து நாள் நடைபெறும் திருவிழாவைக் காண காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், திருமால்பூர் என பல ஊர்களில் இருந்தும் மக்கள், மாட்டுவண்டி கட்டிக் கொண்டு குடும்ப சகிதமாக இங்கு வந்து செல்வார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள், ஊர்மக்கள்.

பாலாறு இப்போது வெறும் மணலாறாகக் காட்சி அளிப்பது மிகக் கொடுமை! அந்த ஆற்றங்கரைக்கு அருகில், அழகுறக் கோயில்கொண்டிருக்கிறார் சிவனார். இங்கே சிவபெருமானின் திருநாமம்- ஸ்ரீசிங்கேஸ்வரர். ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் கோபம் தணித்த தலங்களில் இந்தத் தலமும் ஒன்று சொல்கிறார்கள் சிலர்.

பல்லவர்கள் கட்டிய ஆலயங்களில், சிம்மம் எனப்படும் சிங்க உருவத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். நிறையக் கோயில்களில் சிற்ப வடிவிலான சிம்மத்தைக் காணலாம். தவிர, மன்னர்களின் பெயர்களிலும் சிம்மம் இடம்பெற்றிருக்கும். எனவே, பல்லவர்கள் கட்டிய இந்தக் கோயிலில், குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு சிங்கேஸ்வரர் என்கிற திருநாமம் அமைந்திருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சிவனாரின் நடனத்தைக் காண ஆசைப்பட்டு ஆடல்வல்லானிடம் விண்ணப்பிக்க, சிவனாரின் அருளுரைப்படி காஞ்சியின் அவளூர் தலத்துக்கு வந்து, கடும் தவம் மேற் கொண்டாராம், நந்திதேவர். அதில் மகிழ்ந்து போன இறைவன் ஒருநாள் நந்திதேவருக்காக இங்கே திருநடனம் ஆடி தரிசனம் தந்தார் என்கிறது ஸ்தல புராணம்.

ஆலயம் தேடுவோம்!

தமிழகத்தில், சாளரத்தின் வழியே நந்திதேவர் சிவதரிசனம் செய்யும் கோயில்கள் மிகமிகக் குறைவு. அதனை சாளரக் கோயில்கள் என்று சொல்வார்கள். அப்படிச் சாளரம் வழியே இறைவனைத் தரிசிக்கும் கோயில்களில், பிரதோஷ நாளில் வந்து வழிபட்டால், பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்!

இதோ... பாலாற்றங்கரையில் சிங்கேஸ்வரர் எனும் திருநாமத்துடன் வீற்றிருக்கும் சிவனா ருக்கு ஒருகாலத்தில் பிரதோஷ பூஜையும் மகா சிவராத்திரியும் அமர்க்களப்பட்டதாம்! ஆனால் இன்றைக்கு வழிபாடுகளே இல்லாமல், பிரமாண்டமான ஆலயமாக இருந்த நிலை மாறி, மதிலோ பிராகாரமோ இல்லாமல், அர்த்தமண்டபமோ மகாமண்டபமோ இல்லா மல் சுருங்கிப் போய்விட்ட கொடுமையை என்னவென்று சொல்வது?

வில்வமும் புன்னைமரமும் ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஆலயம், இன்றைக்கு விருட்சமும் இல்லாமல் விழாக்களும் இல் லாமல் இருக்கிறது. ''இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடக்கவேண்டும்; பழையபடி விழாக்களும் பண்டிகைகளும் விமரிசையாக நடைபெறவேண்டும்; தரிசனம் செய்து சிவன் அருளைப் பெறுவதற்கு வெளியூர் அன்பர்கள் ஏராளமானோர் வரவேண்டும். அருமையான அலங்காரத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதை ஊரே திரண்டு தரிசிக்க வேண்டும்; அதுதான் எங்கள் அனைவரின் ஆசை!'' என்று நெகிழ்வுடன் தெரிவிக்கிறார், மனோகர். இவர், சிங்கேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

தொண்டை நாட்டில், பல்லவர்களால் கட்டப்பட்ட கோயில், பாண்டிய மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம், பரிதாபகரமாகக் காட்சி தரலாமா?

இங்கே, அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகாமாட்சி அம்பாள். காஞ்சியை ஆட்சி செய்யும் கருணைத் தாய், ஸ்ரீகாமாட்சி அம்பாள் குடிகொண்டிருக்கும் கோயில், வழிபாடுகளும் மக்கள் கூட்டமுமாக இருக்க வேண்டாமா? அவளருளைப் பெற்று, உலக மக்கள் யாவரும் நிம்மதியும் சந்தோஷமுமாக வாழ வேண்டாமா?

இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு... காஞ்சி மகாபெரியவா அவளூர் கிராமத்துக்கு வந்து, பாலாற்றில் நீராடி, ஸ்ரீசிங்கேஸ்வரரையும் ஸ்ரீகாமாட்சி அம்பாளையும் வழிபட்டிருக்கிறாராம். 'தினமும் இங்கே விளக்கேத்துங்கோ! இன்னிக்கி இல்லேன்னாலும் என்னிக்காவது ஒரு நாள்... புண்ணியம் பண்ணினவா காசும் பணமுமா கொடுத்து இதுக்கு நிச்சயம் திருப்பணி செஞ்சுடுவா!’ என அருளியிருக்கிறாராம்.

ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசிங்கேஸ்வரர் கோயிலின் திருப்பணிக்கு உங்களால் முடிந்த அளவுக்கு சிமென்ட் வாங்கிக் கொடுங்கள்; மகேசனின் கோயிலுக்கு மண்ணும் கல்லுமாக வழங்குங்கள். அது உங்கள் வம்சம் செழிக்க பேரருள் புரியும். சிவனாருக்கும் அம்பாளுக்கும் தவிர, பரிவார தெய்வங்களுக்கும் இங்கு சந்நிதிகள் இல்லை. அவர்களுக்கு சந்நிதிகள் அமைக்கவும், திருவிக்கிரகத் திருமேனியைச் செய்யவும் உங்க ளால் முடிந்ததைச் செய்து உதவுங்கள்.

அது உங்களையும் உங்கள் வம்சத்தையும் வாழையடி வாழையென வாழ வைக்கும். சந்தோஷத்தையும் அமைதியையும் உங்கள் இல்லங்களில் தழைக்கச் செய்யும்.

படங்கள்: ரா.மூகாம்பிகை

எங்கே இருக்கிறது?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது வாலாஜாபாத். செங்கல்பட்டில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால், அவளூர் எனும் கிராமத்தையும் அங்கே அமைந்துள்ள ஸ்ரீசிங்கேஸ்வரர் ஆலயத்தையும் தரிசிக்கலாம்.

வாலாஜாபாத்தில் இருந்து மினி பஸ், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளன.