தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

செவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை!

என்ன விசேஷம்?சண்முக சிவாச்சார்யர்

##~##

முன்னோர் வழிபாடு!

ம் மனத்துள் இருக்கிற கவலைகளையெல்லாம் போக்கி, மகிழ்ச்சியைத் தரக்கூடிய அற்புதமான மாதம்- ஆடி மாதம்! 'ஆடிப் பாடிக் கொண்டாடுதல்’ என நாம் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்தானே... அதேபோல, இந்த ஒரு வருடம் முழுவதும் முழுமையான இன்பத்துடனும் நிம்மதியுடனும் அமைவதற்கு, ஆடி மாதத்தில் நாம் செய்கிற பூஜைகளும் விரதங்களும் ஆணிவேராக, அஸ்திவாரமாக இருக்கும் என்றால், அது மிகையில்லை.

காலையில் இருந்து கடுமையாக உழைத்து, மாலையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தாருடன் குதூகலித்து, மறுபடியும் மறுநாள் எழுந்து வேலைக்குச் செல்வதுதான், மனித வாழ்வின் அன்றாட நடைமுறை. மாலை வேளையில் குடும்பத்தாருடன் பொழுதைக் கழிப்பதும், சின்னச் சின்ன வீட்டு வேலைகளைச் செய்வதும், அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்வதுமே, மறுநாள் உழைப்பதற்கான உடல் தெம்பையும் மனோதிடத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.

செவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை!

அதுபோல, தேவர்களுக்கு மாலைப் பொழுதாக விளங்கக்கூடிய இந்த ஆடி மாதம் துவங்கி ஆறு மாதங்கள் வரையிலான காலத்தில், பண்டிகைகளும் விரதங்களும் நிறைந்திருக்கின்றன. அதை அனுஷ்டிப்பவர்களுக்குச் சகல சௌபாக்கியங்களும் தேடி வரும்.

ஆடி மாதப் பிறப்பை, தட்சிணாயன புண்ய காலம் என்று போற்றுவார்கள். நவக்கிரகங்களின் நாயகரான சூரிய பகவான், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குச் செல்கிறார். ஆடிப் பிறப்பின் மகத்தான நாள் இது. ஆடி மாதம் என்பது, பித்ருகாரகனான சூரிய பகவான், மாத்ருகாரகனான சந்திரனின் வீட்டில் அமர்கிற நன்னாள்.

சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாளையே அமாவாசை தினம் என்கிறோம். அந்த அமாவாசை நாள், முன்னோர்களுக்குக் கடன் அளிப்பதற்கும் தெய்வ வழிபாட்டுக்கும் சிறந்ததொரு தினமாக எப்படித் திகழ்கிறதோ, அதேபோல ஆடி மாதமானது மிக அற்புதமான, புனிதமான மாதமாகவும், முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுகிற மாதமாகவும் திகழ்கிறது. குறிப்பாக, ஆடி மாதத்தின் அமாவாசை தினம், மிகவும் புண்ணியம் வாய்ந்த நன்னாள்.

இந்த நாளில், அதிகாலையில் எழுந்து, அவரவர் வழக்கப்படி காலைப் பொழுதின் வழிபாடுகளையெல்லாம் செய்துவிட்டு, முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுதல் சிறப்பு. ராமேஸ்வரம், கங்கை, காவிரி, பவானி கூடுதுறை முதலான நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள், புண்ணிய நதிகளுக்குச் சென்று நீராடி, புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபட்டால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறலாம். 'அடடா! அப்படி நதிகள் எதுவும் எங்கள் ஊரிலோ ஊருக்கு அருகிலோ இல்லையே..?’ என்று எவரும் வருந்தத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே, முன்னோர்களை நினைத்துத் தர்ப்பணம் செய்யலாம்; தவறே இல்லை.

செவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை!

இன்னொரு விஷயம்... மற்ற மாதங்க ளிலும் மாதந்தோறும் அமாவாசை தினம் உண்டு என்பது நமக்குத் தெரியும். அதுபோன்ற அமாவாசை நாட்களில், பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களுக்கு உரிய கடனைச் செய்யாதவர்கள், கலங்கத் தேவையில்லை. இந்த ஆடி மாத நாளில், அமாவாசை தினத்தில் தவறாமல் நாம் செய்யும் முன்னோர்களுக்கான காரியங்களால் சகல சௌபாக்கியங்களும் நம் இல்லங்களில் பெருகும் என்பது உறுதி.

எப்பாடு பட்டேனும் மிகுந்த நம்பிக்கையுடனும் தூய்மையுடனும் தர்ப்பணத்தைச் செய்யுங்கள். இந்த உடலானது கடவுளாலும் தாய்- தந்தையாலும் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. நம் உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் பலமாக அடிபட்டிருந்தால், நம்மால் எந்தவொரு செயலையும் செவ்வனே செய்யமுடியாது. அப்படியிருக்க, இந்த உடலே இல்லாது போனால், நம் கர்மவினைகளை எவ்விதம் போக்கிக் கொள்வது என்று சிந்தியுங்கள். ஆக, கடவுளாலும் பெற்றோர்களாலும் நமக்குக் கிடைத்த இந்தப் பிறவிக்கு நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது அவசியமல்லவா?

தொலைதூரத்தில் ஒருவர் இருந்தாலும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசமுடிகிறது, இன்றைக்கு. அதேபோல், ரிஷி பெருமக்களால் வழங்கப்பட்டுள்ள இந்தக் கிரியைகளால், நம்மால் நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. நம் முன்னோர்களுக்கான கடனைச் செய்து அவர்களைத் திருப்திப்படுத்தினால், நமக்கு மட்டுமின்றி நம் சந்ததியினருக்கும் மிகப் பெரிய நன்மைகளும் பலமும் கிடைக்கும் என்பது உறுதி.

செவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை!

அதேபோல், பித்ருக்களுக்குக் கடன் அளிப்பது போலான காரியங்களில், தர்ப் பணம் செய்து வைக்கிற புரோகிதருக்கு தாம்பாளம் ஒன்றில் அரிசி, பயத்தம்பருப்பு, வெல்லம், வாழைக்காய், வெற்றிலை- பாக்கு, தட்சணை என நம்மால் இயன்றதை வழங்கி, அவர்களை நமஸ்கரிக்க வேண்டும். நம் முன்னோர்களின் பிரதிநிதிகளாக நம் வீட்டுக்கு வந்திருக்கும் அவர்களைத் திருப்திப்படுத்தினால், நம் பித்ருக்கள் மகிழ்வர் என்கின்றன சாஸ்திர நூல்கள்.

ஆடி அமாவாசை எனப்படும் புனித நாளில், அலுவலக வேலை இருந்தாலும், அரை நாளேனும் விடுமுறை எடுத்துக்கொண்டு, ஆற அமர பித்ருக்களுக்கான வழிபாட்டில் இறங்குங்கள். முழு ஈடுபாட்டுடன் பித்ருக்கடனை நிறைவேற்றுங்கள்.

முக்கியமாக, ஏழை எளியோருக்குத் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யுங்கள். உங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்துச் சிறக்கும்.

செவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை!

இந்த முறை ஆடி அமாவாசை, செவ்வாய்க்கிழமை நாளில் வருகிறது. இது குடும்பத்தில் கூடுதல் சிறப்பையும் மேன்மையையும் தரும் என்கிறார்கள் பெரியோர். செவ்வாய்க்கிழமை மாலையில், ஸ்ரீபராசக்தியை, ஸ்ரீகாளியை வழிபடுவது தெய்விக ஆற்றலை அதிகரிக்கும். பௌமாவாஸ்யாம் என்று போற்றக்கூடிய இந்த செவ்வாய்க்கிழமையும் அமாவாசையும் வருகிற இந்த ஆடி மாதத்தில் வீட்டில் இருந்துகொண்டோ அல்லது அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டபடியோ 'ஓம் காள்யை நம:’ என 108 முறை சொல்வது மிக மிக நல்லது. அது, உங்களைத் தெளிவாக்கி, குடும்பத்தில் ஒற்றுமையையும் உத்தியோகத்தில் உயர்வையும் சமூகத்தில் அந்தஸ்தையும் தரும்.

பக்தர்களாகிய குழந்தைகளுக்குத் தேவியானவள் அருளக் காத்திருக்கும் அற்புதத் தருணம், இந்த நாள். எனவே, பித்ருக்களையும் தேவியையும் ஆராதிக்க மறந்துவிடாதீர்கள்.

பராசக்தியே மாரியாகவும், பிடாரியாகவும், பச்சையம்மனாகவும், இன்னும் பல திருக் கோலங்களில் நம்மை வழிநடத்தி, பக்கத் துணையாக நிற்கிறாள். ''சமயபுரத்து மாரியம்மா, சஞ்சலங்கள் தீரும் அம்மா!'' என்றோ, அல்லது தங்களுக்கு எப்படி அவளிடம் பிரார்த்திக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்படிச் சொல்லி மனதார வேண்டுங்கள். சிவப்பு நிற மலர்களாலும், கூழ் போன்ற நைவேத்தியங்களாலும் குளிர்ந்து போய்விடுவாள் அவள்.

வெற்றியைத் தருகிற விஜய வருடத்தில், முன்னோர்களுக்கு உகந்த ஆடி அமாவாசையானது, அம்பிகைக்கு உரிய செவ்வாய்க் கிழமையில் வருவது நம் பாக்கியம். இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வழிபடுங்கள்; வளம் பெறுவீர்கள்!

செவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை!

ஆடிக்கிருத்திகை (31.7.2013, புதன், ஆடி 15), முருகப் பெருமானை வழிபட மிகச் சிறந்த நாள். ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை நட்சத்திரம், போற்றுதலுக்கு உரியது. சூரியன், சந்திரனின் ராசியில் அமர்ந்திருப்பதாலும், சிவசக்தியின் மைந்தனான கந்தகுமாரனை கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் ஆறு நக்ஷத்திரங்களின் கூட்டான கிருத்திகை நட்சத்திரமும், கடக ராசியில் குரு பகவான் உச்சம் பெற்று இருப்பதாலும், ஆடிக்கிருத்திகை எனும் அற்புத நாளில், முருகக் கடவுளை கண் குளிரத் தரிசித்து, மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.  

சூரனை சம்ஹாரம் செய்ய உதித்த குழந்தை குமரக் கடவுள். தந்தைக்கு உபதேசம் செய்தவர். படைப்புத் தொழிலைச் செய்து வரும் பிரம்மனுக்குப் பிரணவத்தின் பொருளை உணர்த்தியவர். இவரை வழிபட, நமக்கு அறிவு வளரும். குழந்தை வரம் வேண்டுவோர், இந்த நாளில் விரதமிருந்து வேண்டினால், விரைவில் பிள்ளை வரம் பெறலாம். குழந்தையைப் பெற்றவர்கள் அவர்களை நல்லவர்களாக வளர்ப்பதற்கும் முருகன் துணை நிற்பார்.

அன்று காலை முதல் மாலை வரை அன்னத்தைத் தவிர்த்து, பழங்கள் அல்லது மிதமான உணவை உட்கொள்ளுங்கள். கந்தனுக்குப் பிடித்த திருப்புகழ், கந்தர் சஷ்டி கவசம் போன்ற துதிகளைப் பக்தியுடன் சொல்லி வழிபடுங்கள். வேண்டுவதையெல்லாம் தந்தருள்வான் வேலவன்.

செவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை!

ஆடி அற்புதங்கள்!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம், குத்தகை, காணிக்கை மூலம் வரும் நெல்லை அளந்து வரவு-செலவு கணக்கைத் தாயாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தக் கோயிலின் முதல் தர்மகர்த்தாவாகப் பெரியாழ்வார் தொடங்கிய இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத் திருவிழாவில் ஒன்பது நாட்கள் உத்ஸவம் நடக்கும். உயரமான தேரில் ஒன்பது சக்கரங்கள், ஒன்பது கட்டுகள், ஒன்பது வடங்கள் என எல்லாமே 9 என்ற எண்ணிக்கையில் வருவதாக அமைந்திருக்கும்.

ஆடிமாத ஏகாதசியன்று பண்டரிபுரம் விட்டல் மந்திரிலிருந்து ஸ்ரீஞானேஸ்வரரின் பாதுகைகளைச் சுமந்துகொண்டு பல்லக்கு பவனி வருவது வழக்கம். மேலும் தேஹுவில் இருந்து ஸ்ரீதுக்காராம் பல்லக்கும், வேறு பல இடங்களிலிருந்து பல்லக்குகளும் பண்டரிபுரத்தில் பவனி வருவது பரவசமாக இருக்கும்.

- ஆர்.பத்மப்ரியா, சென்னை