Published:Updated:

வாலி என்றொரு காவியம்!

பி.என்.பரசுராமன்

##~##

ற்கெனவே ஒரு துறையில் ஒரு ஜாம்பவான் கோலோச்சிக் கொண்டிருக்கும்போது, அதே இடத்தில் புதிதாக நுழைந்து, தன் வெற்றிக்கொடியை நாட்டுவது என்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. ஆனால், அதைச் சாதித்துக் காட்டியவர் காவியக் கவிஞர் வாலி. அவர் எழுதிய 'மாதவிப் பொன் மயிலாள்...’ பாடலைக் கேட்டுக் கண்ணதாசனே வியந்து, அவரது வீடு தேடிப்போய் பாராட்டியுள்ளார்.

வைணவரான வாலி தீவிர முருக பக்தர். அதற்கு அவரே சொன்ன காரணம் இது...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒருமுறை, வாலியின் சகோதரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பலப்பல மருத்துவர்களும் கையை விரித்துவிட்ட நிலையில், ஒரு மருத்துவர் தானே முன்வந்து சிகிச்சை அளித்தார். என்ன மாயம் செய்தாரோ... வாலியின் சகோதரி பிழைத்தெழுந்தார். அது ஒரு மெடிக்கிள் மிராக்கிள்! அந்த மருத்துவரின் பெயர்... டாக்டர் சுப்ரமணியம்.

'ஆஹா! அந்த முருகப்பெருமானே வந்து என் சகோதரியை பிழைக்க வைத்திருக்கிறான்’ என்று மெய்ம்மறந்தார் வாலி. அது முதல் அவர் தீவிர முருக பக்தராக ஆனார். அவர் எழுதிய முதல் பாடல் கந்தனைப் பற்றியதுதான்! 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனை உனை மறவேன்...’

டி.எம்.எஸ்ஸின் வளமான குரலில், இசைத் தட்டில் வெளிவந்த அந்தப் பாடலின் பின்பக்கத்தில் 'ஓராறு முகமும் ஈராறு கரமும்...’ என்று துவங்கும் பாடல் இடம்பெற்றது. வாலி எழுதிய இந்த இரண்டாவது பாடலும் கந்தவேளைப் போற்றும் பாடல்தான்!

தமிழகத்தில் தெய்வ மறுப்புக் கொள்கை கரைபுரண்டு ஓடிய காலத்தில், அதைத் தடுத்து நிறுத்தி, எல்லா இடங்களிலும் ஆன்மிகப் பேரலையை எழுப்பிய பாடல்கள் இவை.

வாலி என்றொரு காவியம்!

கந்தனைக் கணநேரம்கூட மறக்காத காவியக் கவிஞர் வாலி, 'தமிழ்க் கடவுள்’ என்ற பெயரில் கந்தபுராணத்தை புதுக் கவிதையில் வடித்து முடித்தார். ஒரு கவிஞனின் கையெழுத்திலேயே அச்சாகி வெளிவந்த முதல் தமிழ்க் காவிய நூல் இதுதான்.

அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம் எனப் பல ஆன்மிக நூல்களை எழுதிய வாலி பேசும்போதுகூட ஆன்மிகத் துளிகள் தெறிக்கும்.

ஒருமுறை வாலியும் நானும் அல்லயன்ஸ் சீனிவாசன் காரில் போய்க்கொண்டிருந்தோம். அந்தக் காரின் டேஷ் போர்டு முழுவதும் புசுபுசுவென கரடித் தோலால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. அதைப் பார்த்த நான் வாலியிடம், 'அண்ணா... இங்கே பார்த்தீங்களா? கரடியைத் தூக்கி இப்படி வெச்சிருக்காங்க!' என்றேன்.

நான் முடிப்பதற்குள்ளாகவே வாலி குறுக்கிட்டு, 'என்ன ஓய்... வாலி இருக்கிற இடத்துல கரடி இருக்காதா, என்ன?' என்றார்.

நாங்கள் குபுக்கென்று சிரித்துவிட்டோம். ராமாயணத்தில், கரடியான ஜாம்பவான் வாலியுடன்தானே இருந்தார்?!

சொல் நயமும் பொருள் நயமும் மிக்க காவியக் கவிஞரான வாலி, இன்று நம்முடன் இல்லை. கடவுள் திருவடிகளில் காவியம் படைக்க இணைந்துவிட்டார். அவர் இல்லையென்றாலும், அவர் இயற்றிய நூல்கள் மூலம் காவியக் கவிஞராக என்றென்றும் அவர் நம்மிடையே வாழ்ந்துகொண்டே இருப்பார்.