Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்! - 82

யதுகுல சரித்திரம்!தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

##~##

'கிருஷ்ண எனும் பதத்துக்கு கறுப்பு என்று பொருள் சொல்கிறார்கள் ஞானிகள். ஆனால் நீயோ நீலவான வண்ணத்தினன். பிறகு ஏன், இப்படியொரு பெயரும் பொருளும்?!

ஓ! முதலும் முடிவும் அற்ற இந்த அண்டப் பேரண்டம் கறுப்பு.  அதன் கருப்பொருளான நீயும் ஆதியந்தம் இல்லாதவன். இந்த அளவற்ற அளவை, ஒரு வரையறைக்குள் அடங்கி விடாத உனது பிரமாண்டத்தை, பேரண்டத்துடன் ஒப்பிட நினைத்து, கிருஷ்ணன் எனும் திருநாமம் தந்தார்களோ?! எனில், நீ எவ்வளவு பெரியவன்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அன்றொரு நாள், நீ திரிவிக்கிரமனாய் வளர்ந்து விண்ணளந்த போது, பிரம்மதேவன் தனது கமண்டல நீரால் உன் திருப்பாதத்தைக் கழுவி பூஜித்தான். இறைவா, உன் திருப்பாதத்தை ஸ்பரிசித்த புண்ணியம்... கமண்டல நீர், புனித நதியாய் பரிணமித்தது; ஆகாய கங்கையாகப் பொங்கிப் பிரவகித்தது. அதை, தன் தலையில் அல்லவா தாங்கிக் கொண்டாடினார் பரமேஸ்வரன்.

எனக்கும் உன் பாதம் தழுவும் பாக்கியம் கிடைக்காதா?

பூதலத்தில் திருவெஃகா என்றொரு திருத்தலம். அங்கே, தன்னை விடுத்து நான்முகன் தனியே யாகம் செய்கிறான் என அறிந்த நாமகள் கோபம் கொண்டாள். வேகவதி எனும் நதியாய் மாறி மிக வேகமாய் பாய்ந்துவந்தாள், யாகத்தை அழிக்க. அப்போது, அவள் வரும் வழியில் பாம்பணை மீது பள்ளிகொண்டு, அணையாக மாறி அவளைத் தடுத்தாட்கொள்ளவில்லையா?

கங்கைக்கும் சரஸ்வதிக்கும் கிடைத்த திருவருள் எனக்கும் கிடைக்காதா?

தசாவதார திருத்தலங்கள்! - 82

மாலவா! உனது எழிலுருவை பாதாதிகேசமாய் தரிசிக்க ஆசை. ஆகவே, உனது பேருருவைச் சுருக்கிக் கொள். ஒரு குழந்தையாய் கொஞ்சித் தவழ்ந்து வா. முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற்போல் திகழும்... உன் பொற் பாதங்களின் விரல்கள் பத்தையும் பற்றி கண்களில் ஒற்றி மகிழும் பெரும் பாக்கியம் தா!'' என்று மருகினாள் யமுனாதேவி என்றே சொல்ல வேண்டும்.

அந்த நதிப்பெண்ணுக்குத்தான் எவ்வளவு ஏக்கம்? அவளுக்குள் எத்தகையதொரு பரிதவிப்பு? சமுத்திரத்தை உள்ளங்கைக்குள் அடக்கிவிட முடியுமா என்ன? முடியாதுதான். ஆனால் யமுனையின் இந்த ஏக்கமும் ஆவலும் பக்தியால் விளைந்தது. அதனால் பகவானும் அவளுக்கு வசப்பட்டான்.

எப்போது? துவாபரயுகத்தில்- மதுசூதனன் யதுகுல நாயகனாய் அவதரித்து வந்தபோது! அதுபற்றி தெரியுமுன், எம்பெருமான் உதித்த யதுகுலத்தின் மாண்புகளை விரிவாக அறிவோம்.

சந்திர வம்ச அரசர்களைப் பட்டியலிட்டு, அவர்களின் பெருமைகளை பரீட்சித்துவுக்கு சுகபிரம்மர் கூறியதாக விவரிக்கிறது ஸ்ரீமத் பாகவதம். அதன்படி, சந்திர வம்சத்து அரசர்களில் மிகவும் புகழுடன் திகழ்ந்தவர் புரூருவன். இவரு டைய மகன் ஆயு. அவருக்கு ஐந்து புத்திரர்கள். அவர்களில் மூத்தவன் நகுஷன்.

பாட்டனாரைப் போன்றே புகழ்பெற்ற நகுஷனுக்கு, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியதி, கிருதி ஆகியோரே அந்த ஆறு பேர். இவர்களில் மூத்தவனான யதிக்கு பட்டாபிஷேகம் சூட்ட விரும்பினார் நகுஷன். ஆனால், யதி ராஜ்ஜியம் வேண்டாம் என மறுத்துவிட்டான். எனவே, அவனுக்கு அடுத்தவனான யயாதிக்கு பட்டா பிஷேகம் செய்து வைத்துவிட்டு கானகம் சென்றார் நகுஷன்.

தசாவதார திருத்தலங்கள்! - 82

யயாதி, சுக்ராச்சார்யரின் மகள் தேவயானியையும் அசுர வேந்தனின் மகளான சர்மிஷ்டை என்பவளையும் மணந்தான். தேவயானிக்கு யது, துர்வஸு என்று இரண்டு மகன்கள். சர்மிஷ்டைக்கு த்ருஷ்யன், அனு, பூரு ஆகிய மூன்று மகன்கள். இவர்களில் யயாதி- தேவயானி தம்பதியின் மூத்த மகனான யதுவிடம் இருந்து துவங்குகிறது, பகவான் கிருஷ்ணன் அவதரித்த யது வம்ச சரித்திரம். பரிசுத்தமான இந்த யதுவம்ச சரித்திரத்தைக் கேட்டால், சகல பாவங்களில் இருந்தும் விமோசனம் கிடைக்கும் என்கிறது பாகவதம்.

யதுவின் மூத்த மைந்தன் ஸகஸ்ரஜித். இவனது மகன் சதஜித். இந்த சதஜித்தின் வம்சத்தில் வந்தவர்களே யாதவர், விருஷ்ணிகள், மாதவர்கள் எனப் பல பிரிவுகளாய் இருந்தனர். யதுவின் இரண்டாவது மகன் க்ரோஷ்டு. இவனது பிள்ளை விருஜினவான். இவன் குலத்தில் பிறந்தவர்கள் போஜர்கள், சாத்வதர்கள் என அழைக்கப்பட்டனர். இப்படியாக யதுகுலத்தில் தோன்றிய பல தலைமுறைகளுக்குப் பிறகு தேவமீடன் என்பவன் பிறந்தான். இவனது மகன் பெயர் சூரன். இவருக்குப் பிறந்தவரே, நம் கண்ணனின் தந்தை வசுதேவர்.  

அவருக்கு ஆனகதுந்துபி என்று இன்னொரு பெயரும் உண்டு. ஏன் தெரியுமா? வசுதேவர் பிறந்தபோது, தேவ துந்துபியும் ஆனக வாத்தியங்களும் முழங்கினவாம். ஆகையால் இப்படியரு விசேஷ நாமகரணம்! வசுதேவருக்கு ஏழு மனைவியர். அவர்களில் கடைசியானவளே, நம் தேவகித் தாயார்.

சுதேவர்- தேவகிக்கு கோலாகலமாக திருமணம் நடந்த கதையும், மணமக்கள் இருவரை யும் ரதத்தில் அமர்த்தி, இளவரசனான கம்சன் தேரை செலுத்த முற்பட்ட போது அசரீரி ஒலித்து, 'இந்த தம்பதிக்குப் பிறக்கப்போகும் எட்டாவது மகனால் உனக்கு அழிவு நிச்சயம்’ என எச்சரித்த சம்பவமும் நாமறிந்ததே.

இதனைத் தொடர்ந்து கம்சன் தேவகியைக் கொல்ல முற்பட்டதையும், வசுதேவரின் வேண்டுதலுக்கு இணங்கி அவர்களைக் கொல்லாமல் சிறையில் அடைத்த கதையையும், அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் கொன்றுவிட, 7-வது கரு யோக மாயாவின் மூலம் ரோகிணியின் மணிவயிற்றை அடைந்து பலராமனாகப் பிறந்ததையும் ஏற்கெனவே நாம் (பலராமன் கதையில் - 28.5.13 இதழில்)  படித்துவிட்டோம்.

தசாவதார திருத்தலங்கள்! - 82

அதற்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? இறை சித்தத்தின்படி யோகமாயா, நந்தகோபரின் மனைவி யசோதாவின் மணிவயிற்றில் கருவாகி, பெண்குழந்தையாய் பிறந்தாள். இங்கே சிறையில் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது.

எங்கும் சகல சுபகுணங்களும் நிறைந்து மங்கலம் சூழ, தெளிவான வானில் நட்சத்திரங் கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, கிரகங்கள் யாவும் நல்லதொரு நிலைக்கு நகர்ந்து நிற்க, ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரத்தில்... பூமழை பொழிய, தேவ துந்துபிகள் முழங்க மதுசூதனன் பிறந்தான்.

எவ்வளவு அழகு பாருங்கள்..!

நீலமேனியில் பீதாம்பரம் ஒளிவீச, மார்பில் ஸ்ரீவத்சமாகிய மரு, கழுத்தில் கௌஸ்துப மணி, கைகளில் கங்கணம், தோள்வளை துலங்க சங்கு, சக்கரம், கதாயுதம் முதலான ஆயுதங்களுடன் சதுர் புஜ நாயகனாய் அந்தத் தெய்வக்குழந்தை தவழ்வதைக் காணக் கண்கோடி வேண்டும்!

சாட்சாத்  ஸ்ரீஹரியே குழந்தையாக வந்து பிறந்திருக்கிறார் என்று தெரிந்தபோதிலும், பாவம் அவர்களின் மானுட மனம் வீணாக கம்சனை நினைத்து பயந்தது. அதைப் புரிந்து கொண்டதுபோல், குழந்தையும் தெய்வ நிலை விடுத்து மானுடக் குழந்தையாய் மாறி சிரித்தது.  

அதற்கு முன்னதாக... கோகுலத்தில் யசோதா விடம் தன்னைச் சேர்ப்பித்துவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை சிறைக் கொட்டடிக்கு எடுத்துவரும்படி தெய்வக்கட்டளை பிறந்தது.மறுகணம் வசுதேவரின் விலங்குகள் விடுபட சிறைக்கதவுகளும் தானாகத் திறந்துகொள்ள குழந்தையை கூடையில் சுமந்தபடி புறப்பட்டார் வசுதேவர். பெரும் மழை கொட்டித் தீர்த்தது.

வழியில் ஆர்ப்பரிப்புடன் குறுக்கிட்டாள்  யமுனை நதியாள். இந்த தருணத்துக்காகத்தானே அவள் காத்திருந்தாள். பகவானிடம் அவள் வைத்த வேண்டுதல் அதிஅற்புதமாக பலிக்கப் போகிறது!

- அவதாரம் தொடரும்...