Published:Updated:

திகில் பயணம்... திகட்டாத பேரின்பம்!

மல்லிகை மலை குடசாத்திரி- அஷோக்குமார், சென்னை

திகில் பயணம்... திகட்டாத பேரின்பம்!

குடசாத்திரி போயிருக்கிறீர்களா? கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகையை தரிசிக்க வருவோர் அவசியம் போய்ப் பார்க்கவேண்டிய அற்புத இடம் இது! ஸ்ரீமூகாம்பிகை கோயிலை விட்டு வெளியே வந்து, தலையை உயர்த்தினால் போதும்... சுமார் 21 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் குடசாத்திரி மலையைப் பார்க்கலாம். இங்குதான் ஆதிசங்கரர் ஸ்ரீமூகாம்பிகையைப் பார்த்து அழைத்து வந்தார் என்பர். அரிய மூலிகைகளும், புண்ணிய நதிகளும் கொண்ட ஸ்தலம் குடசாத்திரி மலை. இத்தனை விசேஷங்கள் இருந்தும், அநேகம் பேர் அங்கே போகாததற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- ரிஸ்க்!

- காரும் போகாது!

- பஸ்ஸும் கிடையாது!

ஜாதகத்தில் ஆயுட்பாவமான எட்டாம் இடம் பலமாக உள்ளவர்களுக்கு மட்டும் ஜீப் கிடைக்கும் என்றார்கள். இந்த 'திகில்’ விவரங்கள் தெரிந்த உடனேயே 'பல்டி’ அடித்தேன். ''இங்கிருந்தே கும்பிட்டுக்கலாமே!'' என்றேன்.

''அப்பா! கட்டாயம் போயே ஆகணும்'' என்றான் என் மகன்.

''என் மாதிரி இளகின- பலவீனமான இதயம் உள்ளவர்களால் மலையெல்லாம் ஏற முடியாது. 'டிரெக்கிங்’ வேற இருக்காம்'' என்று நான் மறுபடியும் சொல்ல... ''இம்சை அரசன் மாதிரி புறமுதுகிட்டுப் பின்வாங்காதீங்கப்பா'' என்று வலுக்கட்டாயமாக இழுத்தான் மகன். ''இந்த மலை ஏற்றத்துக்கு உன் அம்மாவின் கால் முட்டி இடம் கொடுக்காதுடா...'' என்று நான் கரிசனமாகச் சொல்லி முடிப்பதற்குள், ''ஏங்க..! நான் அஹோபிலம் மலை மேலேயே நடந்திருக்கேன். இது என்ன ஜுஜுபி! இந்த மலையேற்றத்துக்கு நான் தயார்'' என்றாள் மனைவி.

வேறு வழி? ஒரு ஜீப் பிடித்து, குடசாத்திரிக்குப் புறப்பட்டோம். ஸ்ரீமூகாம்பிகை கோயில் நிர்வாகத்தால் இயங்கி வரும் அன்னதானக் கூடத்தைக் கடந்து, இடது பக்கம் திரும்பினால் மலையேற்றம் ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் சாதாரண 'தார்’ சாலையில்தான் ஏறிக் கொண்டிருந்தோம். இருபுறமும், பச்சை பச்சையாக, உயரம் காண முடியாத மரங்கள் இது காட்டுப்பாதை என்பதை உணர்த்தின. அருகில் சௌபர்ணிகா நதியும் எங்களுடனேயே வந்துகொண்டிருந்தது. நதியில் முழங்கால் அளவுதான் நீர் இருந்தது. மலை உச்சிக்குப் போவதற்குள் இந்த நதி பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடலாம் என்று பார்க்கிறேன்.

சௌபர்ணிகா என்பது கருடனின் இன்னொரு பெயர். கருடனின் தாய் வினதை, பந்தயம் ஒன்றில் தோற்று அடிமையாகி, நிறையச் சிரமப்பட்டதால், மனச் சாந்தி வேண்டி இங்கே தவம் புரிந்தது கருடன். அதன் தவத்தை மெச்சிய தேவி அதற்கு தரிசனம் தர... குடசாத்திரியில் உருவான இந்த சாதாரண நதி சௌபர்ணிகா என்னும் புண்ணிய நதியாகிவிட்டது.

திடுதிப்பென்று, எங்கள் பயணத்தில் சாலையின் முகம் மாறி, கரடு முரடாகியது. தாறுமாறாகக் குதித்துக் குதித்து ஓடியது ஜீப். உட்கார்ந்தபடியே, அகப்பட்ட கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டோம்.

காட்டுப் பகுதி கொஞ்சம் அடர்த்தியாய் மாற, திடீரென்று பாதையே இல்லாத மலை மீது, குத்துமதிப்பாக மையமாகப் போய்க்கொண்டிருந்தோம். ஜீப் கொஞ்சம் சாலை யில் இருந்து தவறி இறங்கினாலும்... அதோ கதிதான்!

திகில் பயணம்... திகட்டாத பேரின்பம்!

கடைசியில், ஒருவழியாக ஒரு சிறிய ஊருக்கு வந்து சேர்ந்தோம். மலையில் இருந்து சிலர் கீழே இறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் துளிக்கூட பயம் என்பதே தெரியவில்லை! எங்களுக்குத்தான் இந்த திகில், பயம் எல்லாம்! அந்தச் சிறிய ஊருக்கு மேல் ஜீப் போகாது என்பதால், மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். சிறிது தொலைவுக்குப் பாதை இல்லா மல் பாறைகளும் மரங்களுமாக இருந்தது. மலை உச்சியை அடைவதற்குள் குடசாத்திரி மலை பற்றிச் சொல்லிவிடட்டுமா?

மல்லிகை மலை என்பதுதான் குடசாத்திரியின் அர்த்தம். கடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரம். வருடத்திற்கு எட்டு மாதங்கள் மழை இருக்கும். அங் கிருக்கும் காட்டுக்குள் புலி, சிறுத்தை, பாம்புகள் எட்டிப் பார்ப்பது உண்டு. 1862-ஆம் ஆண்டைய ரெக் கார்டுகளில், ஆங்கிலேயர்கள் இம்மலையைப் பற்றித் தெளிவாகக் குறித்து வைத்திருக்கிறார்கள். ஒருமுறை, மலையில் இரும்புத் தாதுக்கள் இருப்பதால், சுரங்கம் தோண்டப் பார்த்தது அரசாங்கம். ஊரே கூடிப் போராடித் தடுத்துவிட்டார்களாம்.

சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு, மலை உச்சிக்கு வந்து சேர்ந்தோம். தூரத்தில்... நீலவானமும் கடலும் இணைந்து உடுப்பியும், மங்கணூரும் குத்துமதிப்பாய் அரபிக்கடல் அருகே எங்கள் பார்வைக்குத் தெரிந்தன.

திகில் பயணம்... திகட்டாத பேரின்பம்!

அங்கிருந்து மேலும் 20 நிமிட பயணம். மீண்டும் ஒரு காட்டு வழிப் பாதை. அங்கே ஒரு கடைக்காரர் மோரும் தர்பூசணியும் வேர்க்கடலையும் விற்றுக் கொண்டிருந்தார். அங்கே ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தோம். ''இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?'' என்று கேட்டதற்கு, ''இப்படிப் போய் முதலில் குகை விநாயகரைப் பார்த்து விட்டு வாருங்கள். அப்புறம் இங்கிருந்து நடந்தா பார்க்க வேண்டிய இடம் வரும்'' என்றார்.

அவர் சொன்னபடியே செய்தோம். மறுபடியும், காட்டுப் பகுதிக்குள் ஊடுருவி, மையமாய் நடந்தால்... மற்றொரு பரந்த பச்சைப்பசும் புல்வெளி. நடந்து நடந்து உடம்பில் அயர்ச்சி உருவானாலும், இதமான காற்று ஆதரவாக எங்களை வருடியது.

''பொல்யூஷன் இல்லாத நூறு சதவிகிதம் சுத்தமான காற்று'' என்றேன் நான். ''இதுதான் தெய்விகக் காற்று'' என்றாள் மனைவி.

அங்கிருந்து இன்னொரு மலை உச்சி. 'ஏண்டா வந்தோம்’ என்று அலுத்துக்கொண்டே ஏறினால்...

ஒரு மண்டபம்! இதை இப்படி அழைக்கக்கூடாதாம். 'சர்வஜன பீடம்’ என்றார்கள். கோபுரம் இல்லை. கலசம் இல்லை. ஆகம விதிகள் ஏதுமில்லாமல் இருந்தாலும், அதைக் காணும்போது 'கஷ்டப்பட்டதுக்குப் பலன் இல் லாமல் இல்லை’ என்றுதான் எங்களுக்குத் தோன்றியது.

அந்த மண்டபத்தை நெருங்க நெருங்க, யாரோ உட்கார்ந்து வரவேற்பது போல இருந்தது. நெருங்கி வந்துவிட்டால்... அட! சாட்சாத் ஸ்ரீஆதிசங்கரர்!

திகில் பயணம்... திகட்டாத பேரின்பம்!

இது ஒன்றும் பெரிய பிரமாண்டமான சிலை இல்லை தான். கேதார்நாத்தில் அவரது சமாதி மீது பளிங்குச் சிலையைப் பார்த்திருக்கிறேன். கோகர்ணத்தில் கடல் பார்த்தபடி அவர் இருப்பதை தரிசித்திருக்கிறேன். ஸ்ரீசைலத்தில்கூட அவரை சிலை வடித்திருக்கிறார்கள். எவ்வித பூஜை புனஸ்காரங்கள், சிறப்பு தரிசனம், நேத்ர சேவா என்கிற அவஸ்தைகள் எல்லாம் இல்லாமல், அழகாய் அம்சமாய் இருந்தார் ஸ்ரீஆதிசங்கரர்.

இப்போது எங்களுக்கு அயர்ச்சி இல்லை. மலைகள் ஏறிய வலி மறந்தோம்! சோர்வு போயே போச்சு!

இருந்தாலும், 'இந்த மண்டபம், ஸ்ரீ ஆதிசங்கரர்... இவ்வளவுதானா? இதற்கா இத்தனைப் பாடு?’ என்று மனசு கேட்டது அங்கே இருந்த புரோகிதர் காதுகளில் விழுந்திருக்கும்போல! தானாக முன்வந்து, கன்னடம் கலந்த தமிழில் விளக்கினார்.

''இதே மாதிரியான பீடம் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிர மித்துள்ள காஷ்மீரில் உள்ளது. அதை நிர்மாணித்தவர் பகவான் சங்கரர். அதற்கு வயது ஆயிரம் இருக்கும். இங்கிருந்து தவமிருந்த ஆதிசங்கரருக்கு, இந்த கோலம் போட்ட இடத்தில்தான் ஸ்ரீமூகாம்பிகை தேவி தரிசனம் தந்தாள்'' என்றவர், பிளந்த கற்தரையில் போடப்பட்டிருந்த அந்தக் கோலத்தை எங்களுக்குக் காண்பித்தார். அந்த இடத்தைத் தொட்டு வணங்கியபோது, தேவியின் பாதத்தில் விழுந்து சேவித்தது போலிருந்தது.

''இங்கே எழுந்தருளிய தேவியை, தனது ஊரான காலடிக்குக் கூட்டிச்செல்ல நினைத்து, தாயை அழைத் தார், சங்கரர். 'சரி வருகிறேன். நீ முன்னால் போ, பின்னாடியே நான் வருவேன். எக்காரணத்தைக் கொண்டும் திரும்பிப் பார்க்கக்கூடாது’ என்று நிபந்தனை யிட்டாள் தேவி. ஒப்புக்கொண்டு நடந்தார் சங்கரர். மலையை விட்டு இறங்கி கொல்லூர் வந்தபோது, பின்னால் வந்துகொண்டிருந்த தேவியின் ஜல், ஜல் என்ற கொலுசு சத்தம் நின்றுவிட்டது. தன்னையறியாமல் சங்கரர் திரும்பிப் பார்க்க, கொல்லூரிலேயே தங்கி விட்டாள் ஸ்ரீ மூகாம்பிகை' என்று விளக்கம் சொன்ன புரோகிதர், ''இங்கே தேவியின் தரிசனம் கண்ட பிறகு தான் சௌந்தர்ய லஹரியை இயற்றினார் ஆதிசங்கரர்'' என்ற இன்னொரு உபரித் தகவலையும் தெரிவித்தார்.

அந்த இடத்தில் இருந்து கொஞ்சம் ரிஸ்க் எடுத்து மலையேறினால், சௌபர்ணிகா நதி உற்பத்தியாகும் இடம் வரும் என்றார்கள். எங்களால் அதற்கு மேல் நடக்கத் தெம்பில்லை என்பதால், 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற பழமொழியை ஞாபகப்படுத்திக்கொண்டு, திரும்பி நடந்தோம்.

அப்போது எங்கள் மனத்தில் நிம்மதி இருந்தது. அமைதி நிரம்பியிருந்தது. கொல்லூரில் ஏற்படாத பரவசம் இங்கே உண்டாகியிருந்தது.

அனுபவித்துக்கொண்டே இறங்கினால், சட்டென்று மோர் கடை; மீண்டும் தொடர்ந்தால்... பெரிய இறக்கம்! முக்கால் மணி நேரம் மூச்சுப் பிடித்து ஏறியதை ஐந்தே நிமிடத்தில் இறங்கியது போலிருந்தது. திரும்பும்போது பயம் எதுவும் தெரியவில்லை. காசு கொடுத்து, கஷ்டப் பட்டு நடந்து வந்தாலும், கஷ்டப்பட்டதற்கான பலன் கிடைத்த மகிழ்ச்சியை உணர முடிந்தது.

''பயணம் எப்படி இருந்தது?' - மனைவி கேட்டாள்.

அதற்கு நான் சொன்ன பதில்: ''ஜென்ம சாபல்யம் அடைந்தேன்!''