சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கல்யாணம் கைகூடும்... மணமாலை தோள்சேரும்!

தென்னாடுடையாரின் திருமணக் கோலங்கள்

கல்யாணம் கைகூடும்... மணமாலை தோள்சேரும்!
கல்யாணம் கைகூடும்... மணமாலை தோள்சேரும்!


பங்குனி உத்திரத் திருநாளில்...

கல்யாணம் கைகூடும்... மணமாலை தோள்சேரும்!

ங்கலங்கள் நிறைந்த மகத்தான மாதம்- பங்குனி. திருத்தலங்கள் பலவும் திருவிழா காண்பதும், பூவுலகு காக்கும் அம்பிகைக்கு பூச்சொரிதல் நிகழ்வதும் இந்த மாதத்தில்தான். விபீஷணனுக்கு திருவரங்கர் கிடைத்ததும், திருவரங்கர் ஸ்ரீரங்கத்தை அடைந்ததும் பங்குனி மாதத்தில்தான்.

அதுமட்டுமா? தெய்வத் திருமணங்கள் பல நிகழ்ந்ததும் புண்ணியமிகு பங்குனியில்தான் என்கின்றன புராணங்கள். குறிப்பாக... விடையேறு நாயகனாம் ஈசன், உமையவளைக் கைத்தலம் பற்றியது, ஒரு பங்குனி உத்திர நன்னாளில்.

இந்தத் திருநாளன்று பல்வேறு தலங்களில் நிகழும் ஈசனின் திருக்கல்யாண வைபவத்தையும், மணக்கோலத்தில் அவர் காட்சி தரும் ஆலயங்களையும் தரிசிப்பதால், கல்யாணத் தடை நீங்கும், மண மாலை தோள் சேரும், மாங்கல்ய பலம் பெருகும் என அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள்.

பல்வேறு திருமணக் கோலங்களில் ஈசன் அருள் புரியும் தலங்களை நாமும் தரிசிப்போம்!

கன்னிகாதான திருமணக் கோலம்

##~##
தி
ருமண வகைகளில் ஒன்று கன்னிகாதான திருமணம். மகளுக்கேற்ற மணமகனைத் தேர்ந்தெடுத்து, ஒரு சுப முகூர்த்த நாளில், உற்றார் உறவினர் சூழ, அவர்களின் முன்னிலையில் தன் பெண்ணை, மாப்பிள்ளைக்குத் தானமாக அளித்துத் திருமணம் செய்யும் முறை இது.

கன்னிகையைத் தானமாக அளிக்கும் சடங்கை மையமாகக் கொண்டிருப்பதால் இதை 'கன்னிகாதான திருமணம்’ என்பார்கள். மதுரையின் பிரசித்திபெற்ற சிற்பமான மீனாட்சி கல்யாணம், கன்னிகாதான திருமணக் கோலமேயாகும். பொன்னார் மேனியனாம் சோமசுந்தரக் கடவுளுக்கு, தடாதகைப் பிராட்டியாம் மீனாட்சி அம்மையை, பெருமாள் கன்னிகாதானம் செய்து வைக்கும் அற்புதக் கோலம் இது.

ஆகம நூல்களில் கன்னிகாதான திருமணமே அதிகம் விவரிக்கப்படுகிறது. இதையட்டி, பல்வேறு தலங்களில் சிவ- பார்வதியர் உலாத்திருமேனிகள் பல அமைக்கப்பட்டிருக்கின்றன. திருவெண்காடு, திருவான்மியூர் ஆகிய தலங்களில் உள்ள திருமணக்கோலமும் இதுவேயாகும்.

கல்யாணம் கைகூடும்... மணமாலை தோள்சேரும்!

இந்தக் கோலத்தில்... சிவபெருமான் நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். மேற்கரங்கள் மான்- மழு ஏந்தியிருக்க, கீழ் வலது கையால் அம்பிகையை ஏற்கும் பாவனையில் காட்சி தருகிறார். அவரின் இடது கரத்தில், அபய முத்திரை அல்லது வரத முத்திரை திகழும்.

அம்பிகையின் வலப்புறம், பொற்கலசத்தை ஏந்தி நீர் வார்த்துக் கன்னிகாதானம் செய்பவராகத் திருமால் காட்சி தர, மணப்பெண்ணின் தோழியாக திருமகளும், திருமண வேள்வியை நடத்துபவராகப் பிரம்மதேவனும் உள்ளார். சில ஓவியங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களில் விநாயகர், தும்புரு, நாரதர், ரிஷிகள், முனிவர்கள், கந்தர்வர்கள், சரஸ்வதி, கணங்கள், அரம்பையர் ஆகியோரும் சேர்ந்திருப்பர்.

தஞ்சைப் பெரியகோயிலில் ராஜராஜனின் மனைவி செய்து அளித்த கல்யாண சுந்தரர் வடிவம் கன்னிகாதான கோலமேயாகும்.

கைத்தலம் பற்றும் திருமணக்கோலம்

கல்யாணம் கைகூடும்... மணமாலை தோள்சேரும்!

திருமணச் சடங்குகளில் முக்கியமான ஒன்று கைத்தலம் பற்றுதல். மணமகளின் கையை மந்திரங்கள் முழங்க மணமகன் பற்றிக்கொள்வதை பாணிக்கிரகணம் என்பர் (பாணி - உள்ளங்கை, கிரகணம்- பிடித்துக் கொள்ளுதல்).

குணின் முரசியம்ப ஒற்றை வலம்புரி குளிர வாணி
துணைவனே சடங்கு செய்ய சுருதி மங்கல நாண் சாத்தி
இணையிலி முக்கண் எம்மான் இமயமான் மலர்க்கைப் பற்றி
மணநிறை கோலங்காட்டி வானவர் வாழ்த்த நின்றார் - என்று,

சிவனார் உமையவளைக் கைத்தலம் பற்றிய காட்சியைச் சிறப்பிக்கின்றன புராணங்கள்.திருமணஞ்சேரி, திருவாரூர், திருவாவடுதுறை, வேள்விக்குடி, கோனேரி ராஜபுரம் ஆகிய தலங்களில் உள்ள சிவ பார்வதி திருமணக்கோலங்கள் இத்தகைய பாணிக்கிரகண கோலங்களேயாகும். இந்தத் திருக்கோலத்தில், சிவபெருமானின் மேற்கரங்கள் மான்- மழு தாங்கியிருக்க, கீழ் வலது கரம் அம்பிகையின் கரத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறது.

கல்யாணம் கைகூடும்... மணமாலை தோள்சேரும்!


வேள்வித் தீயை வலம்வரும் கோலம்

திருமணத்தின் மற்றுமொரு முக்கியமான சடங்கு, மணவறையை வலம் வருதல். மணமகளின் கையை மணமகன் பற்றிக்கொண்டு மணவேள்விச்சாலையையும், மணமண்டபத்தையும் மும்முறை வலம் வருவது வழக்கம். இது அவர்கள் மூன்று உலகத்தையும் வலம் வந்ததற்கு ஒப்பாகுமாம்! சிவனாரும் பார்வதியாளின் கரம் பற்றி வேள்வித் தீயை வலம் வந்தார். எப்படித் தெரியுமா?

ஆயிரம் தீபங்கள் கொண்ட பெரிய விளக்கை நாகராஜன் முன்னால் ஏந்திச் செல்ல, திருமகள் வழிகாட்ட, கலைவாணி மங்கலங்கள் பாடி வர, பர்வதராஜ குமாரியான பார்வதியின் கரம் பிடித்து வேள்வித் தீயை வலம் வந்தார் பரம்பொருள். அப்போது செழுமையான வேள்வித் தீ வலம் சுழித்து ஓங்கியது. அதில் மணமக்கள் நெற்பொரிகளைத் தூவினர். அற்புதமான இந்தக் காட்சியை, 'பிலந்துறை வேந்தனோர் ஆயிரப் பெருந்தீபம் ஏந்த...’ எனத் துவங்கி, வெகு அற்புதமாக வர்ணிக்கிறது திருக்குற்றாலப் புராணம்.

அச்சுதமங்கலம் சிவாலயக் கோஷ்டத் திலும், காஞ்சி- ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்திலும் எழுந்தருளும் ஸ்ரீகல்யாண சுந்தரரின் திருவடிவம் இந்தக் கோலத்திலேயே உள்ளது.

முளைப்பாலிகை விடச் செல்லும் திருமணக்கோலம்

கல்யாணம் கைகூடும்... மணமாலை தோள்சேரும்!

முளைப்பாலிகைகளை வளர்த்து வழிபடுதல் என்பது நீண்ட நெடு நாட்களாகப் போற்றப்பட்டு வரும் சடங்காகும். திருமணம், பெரு விழாக்கள், கும்பாபிஷேகம் ஆகிய வைபவங்களில் முளைப்பாலிகை விடுதல் ஓர் அங்கமாகத் திகழ்கிறது. நெல், உளுந்து, எள், பச்சைப் பயறு, கடுகு ஆகிய ஐந்தும் பாலிகைக்கு உரிய தானியங்களாகும். இந்தத் தானியங்களை இடும் பாலிகைக் கிண்ணங்களில் பிரம்மன், சூரியன், எமதேவன் ஆகியோர் நிலைப்படுத்தி வணங்கப் படுகின்றனர். அதேபோல், 12 பாலிகைக் கிண்ணங்களில் 12 சூரியரையும், இடையே உள்ள கலசத் தில் சந்திரனையும் ஆவாஹனம் செய்து வழிபடுதல் ஆகம முறை.

திருமணத்தை ஒட்டி 5, 7 அல்லது 9 நாட்களுக்கு முன்னதாகவே... மண மகனும் மணமகளும் அவரவர் வீட்டில், மந்திரம் கூறி விதையிட்டு, தினமும் நீருற்றி முளைப்பாலிகை வளர்ப்பார்கள். திருமண நாளில் மணமேடையில் வைக்கப்படும் பாலிகைகளை, மணம் முடிந்ததும் மணமக்கள் வழிபடுவர். சில சமூகத்தவரில், மண மக்கள் மணவறையை வலம் வரும் போது, இளம் பெண்கள் இந்த முளைப்பாலிகைகளை ஏந்தியபடி பின்னால் வருவது வழக்கம். திருமணத் துக்குப் பிறகு முளைப்பாலிகைகளை வயல் வெளியிலோ நீர்நிலையிலோ சேர்த்து, தங்கள் மணவாழ்க்கையும் செழித்து வளர வேண்டும் என வேண்டிக்கொள்வார்கள்.

முளைப்பாலிகைச் சடங்கை பாலிகாவிசர்ஜனம் என்பார்கள். சிவ- பார்வதியர் மணவறையை வலம் வந்தபோது, சப்தமாதர்களும் பாலிகை ஏந்தி வலம் வந்ததாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

திருவீழிமிழலையில் அருள்புரியும் ஸ்ரீமாப்பிள்ளைசாமி, பாலிகாவிசர்ஜனத் திருமணக் கோலத்தில் அருள்கிறார். இதில் பெருமான் வலக்கரத்தில் ராஜகம்பீரத்துக்கும் விவசாயத் துக்கும் உரிய செண்டை ஏந்தியுள்ளார். அவருடைய இடது கரம் இடபத்தின் மீது ஊன்றியுள்ளது. வலப்பக்கத்தில் அம்பிகை எழுந்தருளியுள்ளாள். மேலும், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயம் போன்ற தலங்களில் இந்த வகையிலான திருமணக்கோல நாதரை தரிசிக்கலாம்.

இந்தக் கல்யாணசுந்தரரை வழிபடு வதால் ராஜவசியமும் சர்வஜன வசியமும் உண்டாகும் என மந்திர நூல்கள் கூறுகின்றன.

வரதான கோலம்

கல்யாணம் கைகூடும்... மணமாலை தோள்சேரும்!

திருமணம் நடந்த பிறகு, மணமக்களை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி, திருமணத்துக்கு வந்தவர்கள் வரிசையாக வந்து வாழ்த்துவர். அப்போது மணமக்கள் அவர்களுக்குத் தாம்பூலமும், பரிசும் அளிப்பார்கள். இதன்படி சிவனும் பார்வதியும் திருமணம் முடிந்த பிறகு, உயர்ந்த சிம்மாசனத்தின் மீது அமர்ந்திருந்து, அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை வேண்டியவாறு அளித்தனர். இந்த நிலையே வரதான கோலமாகும். இதுபற்றிக் காஞ்சி புராணம் சிறப்பிக்கிறது.

பொதுவாக, இது அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டிய வரலாற்றுடன் தொடர்புபடுத்தப் பட்டுள்ளது. வேதாரண்யம் (திருமறைக்காடு) திருமழிசை, நல்லூர், இடும்பாவனம், திருவேற்காடு போன்ற தலங்களில், கருவறையில், சிவலிங்கத் துக்குப் பின்னணியில் இந்தக் காட்சியைக் கண்டு மகிழலாம். கேரள மாநிலம்- கொல்லம் ஸ்ரீஉமாமகேசுவரர் ஆலயத் திலுள்ள திருவடிவமும் வரதான திருமணக்கோலமேயாகும். இந்த திருவடிவை உமாமகேசுவர வடிவம் என்றும் அழைக்கின்றனர்.

திருவிளையாடல் நாயகனின் இந்தத் திருமணக் கோலங்களை மனதால் தியானித்து வணங்க, மங்கல வாழ்வு ஸித்திக்கும். மனதுக்கினிய மணவாழ்க்கை கிடைக்கும். பங்குனி உத்திரத்தில் கல்யாண கோலத்தில் அருளும் அம்மையப்பனை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

பார் புகழும் பங்குனியில்...

ங்குனி மாதத்தில் இரண்டு ஏகாதசி விரதங்கள். பங்குனி மாதத் தேய்பிறையில் வருவது விஜயா ஏகாதசி. இந்த நாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்காமல் என்றும் சொல்வர்), ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசம் வைத்து, அதில் நாராயணரின் திருவடிவை வரைந்து, முறைப்படி வழிபட வேண்டும். மறு நாள் துவாதசி அன்று, ஒரு சாது அல்லது ஏழைக்கு உணவு அளித்து, பூஜை செய்த கலசத்தையும் தானியங்களையும் அவருக்குத் தர வேண்டும். அதன் பிறகே நாம் உணவு உண்ண வேண்டும். இந்த விரதத்தைக் கடைப் பிடிப்பதால் தடைகள் நீங்கி, காரிய ஜெயம் உண்டாகும்.

பங்குனி வளர்பிறையில் வருவது ஆமலகீ ஏகாதசி. இந்த நாளில் உபவாசம் இருந்து நெல்லி மரத்தின் அடியில் தூய்மை செய்து, அங்கு பரசுராமனின் திருவடிவம் வரையப் பட்ட கலசத்தைப் பிரதிஷ்டை செய்து, முறைப்படி வழிபட வேண்டும். அதன் பிறகு நெல்லி மரத்தை வலம் வந்து வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டவர்களுக்கு, ஆயிரம் பசுமாடுகளை தானம் செய்த புண்ணியம் கிடைக்குமாம்!

சமயபுரத்தில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிறன்று பங்குனித் திருவிழா துவங்க, கூட்டம் கூட்டமாக வந்து சமயபுரத்தாளை பக்தர்கள் வணங்கிச் செல்வர். விழாவின் 8-ஆம் நாளன்று இவ்வூர் மக்கள் தங்கள் வீடுகளில் இளநீர்க் காய்களையே அம்பிகையாக அமைத்து வழிபடுவது விசேஷம்.

பழநி பங்குனித் தேரோட்டமும் விசேஷம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி... எனப் பல்வேறு வகைக் காவடிகளைச் சுமந்தபடி, தண்டாயுத பாணியைத் தரிசிக்க வரும் பக்தர்களின் ஆட்டமும் பாட்டமும் காணக் கண்கோடி வேண்டும். பங்குனி உத்திரத் திருநாளன்று ஸ்ரீபாலமுருகனை வழிபடுவதுடன், காவடிக் கதையான, இடும்பனுக்கு கந்தன் அருளிய வரலாறைப் படிப்பதும் சிறப்பு.

திருஞானசம்பந்தர் போற்றிய விழாக்களுள் திருமயிலை பங்குனிப் பெருவிழாவும் ஒன்று. விழாவையட்டி  நிகழும் கபாலீச்சரத்தின் தேரோட்டமும், அறுபத்துமூவர் விழாவும் உலகப் பிரசித்தம். அடியார்க்கு அடியாரான அந்த ஆண்டவனை, அறுபத்து மூவர் விழாவன்று தரிசிக்க,  

  இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.