மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 10

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 10

காஞ்சிபுரத்துக் கயிலாசமான ராஜசிம்மேச்சரத்தில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மணற்கற்கள் என்று கூறப்படும் ஒருவகைக் கல்லால் உருவாக்கப் பெற்றவை. அவை கருங்கற் சிற்பங்களின் உறுதித்தன்மையைவிட சற்றுக் குறைவு உடையவைதான்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 10
##~##

அந்த மணற் கற்சிற்பங்களை வழுவழுப்பாகச் செய்ய இயலாது. அதனால்தான் ராஜசிம்ம பல்லவன், கச்சிப்பேட்டுப் பெரிய தளியில் எடுத்த மணற் கற்சிற்பங்களின் மீது சுண்ணாம்புக் காரையைப் பூசி, அதன் மேல் வண்ணங்களைத் தீட்டச் செய்தான். இன்றைக்கும் ஸ்ரீகயிலாசநாதர் கோயில் சிற்பங்கள் சிலவற்றில் பழைய சுண்ணாம்புக் காரையையும், அதன் மேல் வண்ணங்கள் தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த திருப்பணிகளின்போது, மணற் கற்சிற்பங்கள்மீது அளவுக்கு அதிகமான சுண்ணாம்புக் காரையைப் பூசி, பல்லவ சிற்பங்களின் அழகைக் குறைத்து விட்டார்கள். ஆனாலும், அவர்கள் பூசிய பூச்சு கால வெள்ளத்தில் சிதைந்து விழுந்து விட்டதால், பல்லவச் சிற்பிகள் படைத்த நுட்பத்தையும் எழிலையும் இப்போது நம்மால் பார்க்கமுடிகிறது.

திருச்சுற்றில் உள்ள சிற்றாலயம் ஒன்றில் கிராதார்ஜுனர் புராணக் காட்சி இடம்பெற்றுள்ளதைக் காணலாம். மூகாசுரன் பன்றி வடிவில் காட்டில் திரிந்தபோது, அங்கு தவம் புரிய வந்த அர்ஜுனன் தனக்கு இன்னல் தந்த பன்றியைக் கொல்ல அம்பு தொடுத்தான். அதே நேரத்தில், அங்கு வேடுவனாக வந்த சிவபெருமான் அதே பன்றி மீது அம்பு எய்ய, பன்றி வீழ்ந்தது. இருவரும் தான்தான் பன்றியை வீழ்த்தியதாக ஒருவருக்கொருவர் பூசல் கொண்டு சண்டையிட்டார்கள். இந்தக் காட்சியை விளக்குகிற சிற்பப் படைப்பை இங்கே கண்டு பிரமிக்கலாம்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 10

பின்புலத்தில் பன்றி நிற்க, வேடுவனாக வந்த ஈசனை தன் வில்லால் அர்ஜுனன் தாக்க முற்படுகிறான். ஒருவருக்கொருவர் எதிரெதிர் நின்று மோதும் அந்தக் காட்சியை பல்லவச் சிற்பி அப்படியே சிற்பமாக கல்லில் வடித்துள்ள நுட்பம் நம்மை வியக்கச் செய்கிறது.

கருவறைச் சுவரில் எழிலார்ந்த சிம்மத் தூண்கள் அழகு செய்ய, கோஷ்ட மாடம் ஒன்றில் கங்காளத்தைத் தோளில் சுமந்தவாறு பிட்சாடனர் செல்கிறார். அந்தக் கோலத்துக்கே உரிய பாதரட்சைகள், அதேவிதமாக அவரின் திருவடியை அலங்கரிக்கின்றன.

தாருகாவனத்து ரிஷிப் பெண்கள் மண்டியிட்டு அமர்ந்தவாறு பணி செய்கின்றனர். பின்புலத்தில் ரிஷி ஒருவர், தலைக்கு மேல் கையுயர்த்தி தங்கள் மனைவியர் ஏமாறும் அவலத்தைக் காட்டி நிற்கிறார். பிறை மாடத்தின் கீழே யானை ஒன்று படுத்துள்ளது. மேலே, சிவபெருமான் காலை மடித்தும் உயர்த்தியும் சம்ஹாரத் தாண்டவம் ஆடி நிற்கிறார்.

திருச்சுற்றின் மேற்புறம் சப்தமாதர் ஏழு பேரும் நீண்ட ஆசனம் ஒன்றில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கருவறை கோஷ்டத்தில் மார்கண்டேயனுக்காக காலனை (எமன்) தன் காலால் உதைத்து உருட்டுகிற காலகால தேவரின் சிற்பம் காணப்பெறுகிறது. நான்கு திருக்கரங்களோடு இந்தத் தேவதேவன் கையில் திரிசூலமும் பாசமும் கொண்டு, ஒரு கரத்தால் தர்ஜனி முத்திரையும் மற்றொரு கையால் விஸ்மய முத்திரையும் காட்டியவாறு, விழுந்து கிடக்கிற எமன் மீது தன் வலக்காலை வைத்து, இடக் காலால் அவன் தலையை அழுத்த முற்படுகிறார். அழுத்தம் தாங்க இயலாத எமன் வாய் பிளந்து அலறுகிறான். ஈசனாரின் முகத்தில் கோபமும், எமன் முகத்தில் வேதனையும் வெளிப்படுவதை அப்படியே தத்ரூபமாகத் தரிசிக்கலாம்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 10

மற்றொரு கோஷ்டத்தில், திரிபுராந்தகராக சிவபெருமான் தேர் மீது எழுந்தருளும் காட்சியும் இங்கே வடிக்கப்பட்டுள்ளது. எட்டுக் கரங்களுடன் திகழும் பரமனுக்கு மேலே குடை திகழ, சிவனார் வில்லேந்தியவாறு கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

அவருக்கு அருகே திருமால் நிற்க, கீழே பூத கணங்கள் வாள், கதை போன்ற ஆயுதங்களை ஏந்திப் போரிடுகின்றனர். திரிபுர அசுரர்களைத் தன் புன்முறுவலால் எரித்த திரிபுராந்தகரின் எழிற் கோலத்தைச் சிற்பிகள் கல்லில் அழகுற வடித்துவிட்டார்கள். ஆனால், வார்த்தைகளில் அதனை வடிப்பது கடினமாக உள்ளது.

ஒரு மாடத்தில், பாய்ந்து வரும் சிம்மத்தின் முதுகில் அமர்ந்தவாறு ஸ்ரீதுர்கா தேவியின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. ஒரு கையால் வில்லை ஏந்தியவாறு அம்பறாத்துணியிலிருந்து அம்பை எடுக்க முயற்சி செய்கிறாள் தேவி. மற்ற திருக்கரங்களில் தேவியின் ஆயுதங்கள் உள்ளன. இந்தச் சிற்பத்தின் ஒரு சில பகுதிகள் சிதைவுற்றிருப்பினும், தேவியின் முகத்தில் காணப்பெறும் கருணையின் வெளிப்பாட்டுக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது.

மற்றொரு மாடத்தில், தேவி திரிபுரபைரவியாக ஆசனத்தின் மீது ஒரு காலை மடித்த நிலையில் அமர்ந்துள்ளாள். திரிசூலம், பரசு, கபாலம், அக்கமாலை ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். முகத்தில் ரௌத்திரத்தின் முழு வெளிப்பாட்டையும் நாம் கண்டு உணரலாம்.

இப்படியாக... எண்ணிலடங்காத சிற்பங்கள் பலவற்றைத் தாங்கி நிற்கும் காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்துக்குள் சென்று சிற்ப நுட்பங்களைப் பார்த்தால், உன்னதங்கள் பலவற்றைக் கண்ட புதிய மனிதனாகவே மாறி வெளியே வருவோம்.

- புரட்டுவோம்