தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

வி.ராம்ஜி

##~##

'கல்யாணத்துக்கு அவசியம் வந்திருந்து, விழாவை சிறப்பிச்சுத் தரணும்’ என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்வதும், 'என்னிக்குக் கல்யாணம்? கண்டிப்பா வரேன்! இது நம்ம வீட்டுக் கல்யாணமாச்சே, வராம இருப்பேனா?’ என, பத்திரிகையை வாங்கிக்கொண்டு, புன்னகையுடன் தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதும் இங்கே நடந்துகொண்டேதான் இருக்கின்றது.

திருமணத்துக்கு அழைப்பு வந்தபோது, தேவர்களும் முனிவர்களும் அப்படித்தான் புளகாங்கிதம் அடைந்தார்கள். 'மலையரசனின் மகளுக்கும் சிவனாருக்கும் அல்லவா திருமணம்?! அந்தப் பெருவிழாவைக் காண்பதே நமக்குப் பெருமை அல்லவா... புண்ணியம் அல்லவா!’ என்று ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். அந்தக் குறிப்பிட்ட நாளில், தேவர்களும் முனிவர்களும் ஆர்வத்துடனும் பக்தியுடனும் இமயமலை நோக்கிச் செல்லத் துவங்கினார்கள். அந்த உயர்ந்த மலையை அடைந்தார்கள். இதனால் தேசத்தின் தெற்குப் பகுதி மேலெழும்பி, வடக்குப் பகுதி தாழ்ந்தது!

''என் அம்மையே... அப்பனே! உங்களின் திருமணத்தைக் காணும் பாக்கியத்தை அடியேனுக்கும் தந்தருளிய உங்கள் கருணையே கருணை!'' என்று கண்களில் நீர் ததும்ப, சிவ- பார்வதியின் திருக்கோலத்தைத் தரிசிப்பதற்காகக் காத்திருந் தார் மாமுனிவர் அகத்தியர்.

ஆலயம் தேடுவோம்!

அவரை அழைத்த சிவனார், ''உடனே தென் திசைக்குச் சென்று, வடக்கையும் தெற்கையும் சமன்படுத்தும் பணியில் ஈடுபடுங்கள். உங்களின் தவ வலிமையால், மிக எளிதாக இந்தக் காரியம் ஈடேறும்!'' என அருளினார். அதைக் கேட்டதும் அகத்திய முனிவரின் முகம் வாடிப் போனது. ''இறைவா, உங்கள் திருமணக் கோலத்தைக் காண மிகுந்த ஆவலுடன் வந்தேன். ஆனால்....'' என்று சொல்ல வந்ததைப் பூரணமாக முடிக்க இயலாமல் தழுதழுத்தார். கண்களில் இருந்து கரகரவென நீர் பெருக்கெடுத்தது.

''என்ன இது... சின்னக் குழந்தை போல் அழுகிறீரே! சதா சர்வகாலமும் என்னைப் பற்றியே நினைத்திருக்கும் உமக்கு, எவருக்கும் தராத வரம் ஒன்றை இப்போது தருகிறேன். எங்களின் திருமணக் கோலத்தைக் காண வேண்டும் என்று எப்போதெல்லாம் நினைக்கிறீரோ, அந்தக் க்ஷணமே திருமணக் கோலத்தில் நானும் உமையவளும் உமக்குத் தரிசனம் தருவோம்!'' என அருளினார் சிவனார்.

இதைக் கேட்டு அகம் மலர்ந்தார் அகத்தியர். உடனே, தெற்கு நோக்கிப் புறப்பட்டார். வழியில், நீர்நிலைகள் நிறைந்த இடங்களில், தனது நித்தியானுஷ்டானங்களைச் செய்து விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். அப்படி, தான் தங்கிய இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தார் அகத்தியர். 'என் சிவனே...

திருமணக் கோலத்தைக் காட்டி அருளுங்கள்!’ என மனமுருகிப் பிரார்த்தித்தார். அந்த க்ஷணமே, அங்கே சர்வ அலங்காரங்களுடன் மாலையும் கழுத்துமாக, அழகே உருவெனக் கொண்ட மணமக்களாக, சிவ- பார்வதி காட்சி அளிக்க, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் அகத்தியர்.

இப்படியாக, தெற்கு நோக்கிப் பயணப்பட்ட இடங்களிலெல்லாம் அகத்தியர் சிவனை வழிபட்டார். அவர் பூஜை செய்த இடங்கள் எல்லாம் பின்னாளில் அரசர் பெருமக்களால் அடையாளம் காணப்பட்டு, அங்கே அழகிய கோயில்கள் கட்டப்பட்டு, வழிபாட்டுத் தலங் களாகக் கொண்டாடப்பட்டன. இப்படி, திருமணக் கோலத்தில் ஈசனும் பார்வதியுமாக அகத்தியருக்குத் தரிசனம் தந்த தலங்கள் நம் தேசத்தில் ஏராளம்! திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில், நெம்மேலி எனும் கிராமத்தில் உள்ள அந்தக் கோயிலும் அகத்தியர் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அற்புதமான திருத்தலம்தான்.

ஆலயம் தேடுவோம்!

இந்தத் தலத்தின் இறைவனுக்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என்று திருநாமம். அம்பிகை - ஸ்ரீஅபூர்வநாயகி. ஒருகாலத்தில், திருக்கல்யாண உத்ஸவம் இங்கே மிகவும் பிரசித்தம். சிவனாரும் பார்வதியும் திருக்கல்யாணக் கோலத்தில் திருவீதியுலா வருவதைத் தரிசித்தாலே, விரைவில் திருமணத் தடைகள் நீங்கும்; நினைத்தது போலவே வாழ்க்கைத் துணை அமைவர் என்பது ஐதீகம்! ஆனால், திருவீதியுலா வருவதற்கு உத்ஸவ மூர்த்தங்களோ வாகனங்களோ இப்போது இல்லை என்பதுதான் வேதனை. அதுமட்டுமல்ல... பெரிய மதில் இருந்த இடத்தில் இப்போது அதன் தடங்கள் மட்டுமே உள்ளன. கோபுரத்தைக் காணவே காணோம். பிராகாரங்களோ கொடிமரமோ நந்தியோ பலிபீடமோ எதுவுமில்லாமல், களையிழந்து காணப்படுகிறது ஆலயம்.

தற்போது, திருப்பணிக் கமிட்டியினரின் உதவியோடு சிவலிங்கத் திருமேனிக்கு, ஸ்ரீஅகஸ்தீஸ்வரருக்கு ஓலைக்குடிசை ஒன்று அமைத்து, வழிபட்டு வருகின்றனர் ஊர்மக்கள். ''ரொம்ப வருஷமா வழிபாடோ பூஜைகளோ இல்லாம இருக்கிற கோயில் இது. மத்த கோயிலைப் போலவே மண்டபம், சந்நிதி, கருவறைன்னு இருக்கணும்; மூல மூர்த்தங்களுக்குத் தனித் தனிச் சந்நிதிகள் அமைக்கணும்; திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேகமும் நடக்கணும். இதான் எங்க ஊர்மக்களோட விருப்பம், பிரார்த்தனை எல்லாமே!'' என நெக்குருகிச் சொல் கிறார்கள், திருப்பணிக் கமிட்டியினர்.

சிவனாரும் பார்வதியும் தங்களின் மங்கலகரமான திருமணக் கோலத்தை அகத்தியருக்குக் காட்டியருளிய தலம், எத்தனையோ பேருக்குக் கல்யாண வரங்களைத் தந்தருளிய ஆலயம், களையின்றி வழிபாடுகளும் இல்லாமல் இருப்பது சரிதானா?

அகத்தியர் வழிபட்டு அருள்பெற்ற திருத்தலம், அதே சாந்நித் தியத்துடன் இன்றைக்கும் இருக்கிறது. ஆனால், சாந்நித்தியம் கொண்ட அந்த லிங்கத் திருமேனிக்கு அபிஷேகமும் வில்வமும் வேண்டாமா? வஸ்திரம் அணிவித்து நைவேத்தியம் படைப்பது தானே முறை?

ஆலயம் தேடுவோம்!

ஊருக்கே படியளக்கும் ஈசன், ஒரு ஓலைக்குடிசையில் வாசம் செய்வதைப் பார்த்ததும், நெஞ்சே பதறிப் போகிறதே! பார்க்கவே முடியாதபடி, கண்களில் நீர் திரையிட்டு மறைக்கிறதே! இந்தக் கோயிலுக்கு ஒரு கும்பாபிஷேகம் நடந்து, அந்தக் கும்பாபிஷேகத்தின் திருப்பணியில் நாம் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக்கொண்டால், நம் சொந்த பந்தத்தில் உள்ளவர்களின் திருமணத் தடைகூட, அகன்றுவிடும்; நம் சந்ததிகள் சத்தான வாழ்வுடன் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது உறுதி!

அம்பாள் அபூர்வநாயகி, மிகுந்த வரப்பிரசாதி. நம் தாயைப் போல நம்மிடம் பரிவு காட்டி, அருளும் பொருளும் அள்ளித் தரக்கூடியவள். அவளுக்குப் புடவை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல்

நைவேத்தியம் செய்து, அவளின் திருச்சந்நிதி அமைவதற்கு உங்கள் பேருதவியைத் தாருங்கள். நம் வீட்டுக்கு சூட்சும வடிவில் வந்து, நம்மையும் நம் குலத்தையும் காத்தருள்வாள்; நம் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தருள்வாள் அந்தத் தேவி! ஸ்ரீஅபூர்வநாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத் திருப் பணிக்கு உதவுங்கள். உங்கள் இல்லத்துக்கும் வருவாள் உமையவள்.

படங்கள்: செ.சிவபாலன்

எங்கே இருக்கிறது?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது நெம்மேலி கிராமம் (39.நெம்மேலி என்கின்றனர் ஊர்மக்கள்). கும்பகோணம் - திருவாரூர் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் சுமார் 30 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது நன்னிலம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவு பயணித்தால், நெம்மேலி கிராமத்தையும் அங்கே உள்ள ஸ்ரீஅபூர்வநாயகி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம்.

நன்னிலத்தில் இருந்து நெம்மேலி செல்ல பஸ் வசதி குறைவு. ஆட்டோவில் செல்லலாம்.