சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கடவுளுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடலாமா?

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

திருமணம் முடிந்து ஒரு வருடம் வரை, ஆலய விழாக்களில்... குறிப்பாகத் தேர்த் திருவிழாக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்கிறார்களே, அப்படியா?

- ப.வினோத், புதுச்சேரி-9

திருமணம் முடிந்த பிறகு ஆலயம் செல்லலாம். திருவிழாக்களில் கலந்து கொள்ளலாம். இருவரும் சேர்ந்து அறத்தை நடைமுறைப்படுத்தலாம். உலக சுகங்களை அனுபவிக்கலாம். சம்பிரதாயங்களை நடைமுறைப்படுத்தலாம். மனதில் ஏற்படும் எண்ணங் களை இருவரும் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியைச் சந்திக்கலாம். தாம்பத்தியத்தின் பெருமையை நடைமுறைப்படுத்தி, பிறருக்கு விளக்கலாம்.

வாழ்க்கையின் நுழைவாயில், திருமணம். அதன் பிறகே, அவர்களது பிறப்பின் சாரம் அனுபவத்துக்கு வரும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற வரிசையில் நான்கையும் படிப்படியாக எட்டுவதற்கு ஆயத்தமாகும் நிகழ்வே திருமணம்!

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

அனுமன் அஷ்டோத்ர நாமாவளியில், 'பீம சோதரனே போற்றி’ என்று ஒரு வரி வருகிறது. எனில், பீமனுக்கு  அனுமன் சகோதரரா?

- சுசிலா உபேந்திரன், கோவை-38

வாயு பகவானின் அருளால் அஞ்சனாதேவிக்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர். வாயுவின் அருளால் குந்திதேவிக்குப் புதல்வனானவன் பீமசேனன். ஆக, வாயு பகவான்தான் இந்த இருவருக்கும் தகப்பன் முறை. எனில், பீமனும் அனுமனும் சகோதரர்கள்தானே!

வில்வம், துளசி போன்று, இறை மூர்த்தங் களுக்கு வெற்றிலை மாலை அணிவித்தும் வழிபடலாமா? வழிபாடுகளில் வெற்றிலை பயன்பாடு குறித்த நியதிகள் என்னென்ன?

- எம்.கீர்த்தனா, உடன்குடி

நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும் தாவரங்கள் ஏராளம் உண்டு. நம்முடைய உடல் உறுப்புகளுக்கு ஊக்கமளிக்கும் உணவு வகைகளும் ஏராளம். ஆனாலும், அன்றாட உணவில் நாம் சேர்க்கவேண்டிய தாவரங்கள் குறித்து வரையறைப் பட்டியல் உண்டு. ஒரு செயல்பாடு என்பது, வரையறுக்கப்பட்ட நியதியுடன் இருந்தால்தான் சிறக்கும். கடவுள் வழிபாட்டிலும் ஒரு வரையறை வேண்டும்.

வில்வம், துளசியைப் போன்றது தானே வெற்றிலையும்; அதை மாலையாக அணிவிக்கலாம் என்கிற புது சிந்தனை வரையறையை மீறியது. இறையுருவத்தை வழிபட, சாஸ்திரம் பரிந்துரைத்தவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நமது விருப்பத்தை நுழைக்கக் கூடாது. வெற்றிலையை உபசாரமாக அறிமுகம் செய்திருக்கிறது சாஸ்திரம். ஆக, உணவுக்குப் பிறகு உட் கொள்ளும் வெற்றிலையை மாலை யாக அணிவிப்பது நடைமுறைக்குப் புறம்பானது. பயன்பாடு பலனளிக்காமல் இருக்கும் உபசாரங்கள் ஏற்புடையது அல்ல. வழிபாட்டை விளையாட்டாக எண்ணக்கூடாது. அந்தந்தப் புலன் களின் தகுதிக்கு உரிய பொருள்களை மட்டுமே உபசாரத்தில் சேர்க்கலாம்.

அதேபோல், உபசாரத்தில் வெற் றிலையின் எண்ணிக்கையை நாம் ஏற்படுத்துகிறோம். சுப காரியம், அசுப காரியம் என்ற பாகுபாட்டை வைத்து வெற்றிலையின் எண்ணிக்கையை வரையறுப்பது சம்பிரதாயம். 16 உபசாரங்களில் வெற்றிலையும் ஒன்று. உண்ட உணவு சீரணிக்கவேண்டும் என்பதற்காக, பண்டைய காலங்களில் தாம்பூலம் ஏற்பதுண்டு. இதை மனதில் கொண்டு, ஆண்டவனுக்கும் உணவளித்த பிறகு வெற்றிலையும் அளிக்கிறோம். நமது நடைமுறையை ஆண்டவனிடமும் திணிக்கிறோம். அதாவது, நமது அனுபவம், கடவுள் உபசாரத்தில் ஊடுறுவியிருக்கிறது. நமக்கு எது மகிழ்ச்சி அளிக்குமோ அதை சாஸ்திரத்தின் பரிந்துரைக்கு உட்பட்டு செயல்படுத்துகிறோம்.

வெற்றிலை, பழம் போன்ற மாலை களை அணிவதில் நமக்கு விருப்பம் இருக்காது. வாழை இலையில் உணவு அருந்துவோம். அந்த இலையை உட் கொள்ளமாட்டோம். அதேபோல், குழம்பில் இருக்கும் கறிவேப்பிலையை யும் தவிர்த்துவிடுவோம்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

இறைவனுக்கு மாலையாக அணிவிக்க, இரண்டு கைகளில் அள்ளி அர்ச்சனை செய்ய இயற்கை அளித்த புஷ்பங்களே உகந்தவை. நுகர்ந்து மகிழும் மற்ற பொருட்களைவிட புஷ்பங்களுக்குத் தனியிடம் உண்டு. அதன் வாசனை- நுகரும் புலனையும், மென்மை- தொடுபுலனையும் மகிழ வைக்கும்.

மொய் எழுதும்போது, பணத்தையோ அல்லது பெற்றுக் கொள்பவரை மகிழ்விக்கும் பொருளையோதான் அளிக்கிறோம். வெற்றிலை மாலை அணிவிப்போமா என்ன?! ஆகவே, பக்தி மேலீட்டால், கிடைத்த பொருட்களை எல்லாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கலாம் என்ற எண்ணத்துடன் தேங்காய்- பழம், வெற்றிலை,

கடலை, வடை என புதுப்புது நடைமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறோம். சாஸ்திரத்துக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பக்தியை வளர்க்கிறதே என்று பெரியோர்களும் மௌனம் சாதிக்கிறார்கள். 'இப்படி வழிபடுபவர்கள் காலப்போக்கில் தெளிவு ஏற்பட்டு, உண்மையை ஏற்பார்கள்’ என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.ஆரம்பத்தில் விருப்பப்படி செயல்பட்டாலும், காலப்போக்கில் சிந்தனை வளம் பெற்று, வழிபாட்டு வரைமுறையை அறிந்து செயல்படும் பக்குவம் கிடைக்கும். வெற்றிலை வழிபாடும் அப்படித்தான்!

ஆதிசங்கரர் உபதேசித்தருளிய 'உபதேச பஞ்சகம்’ எனும் கிரந்தத்தின் உட்பொருளை விளக்குங்களேன்!

- ஜி.ராமதாஸ், தஞ்சை-2

##~##
தினமும் வேதம் ஓத வேண்டும். அது சொல்லும் செயல்பாட்டைத் தடையின்றி நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசையை வளர்த்துக்கொண்டு, அதை நிறைவேற்ற முயற்சிக்கும் செயல்களைத் தவிர்க்கவேண்டும்.

உலகவியலின் இன்பத்தில் இருக்கும் கெடுதலை உணர வேண்டும். உலக சுகங்கள் அத்தனையும் ஆரம்பத்தில் இனிக்கும்; முடிவு கசப்பாக இருக்கும்.

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய மூன்றும் மனதை அலைக்கழிப்பன. பெண்ணாசையில் வீழ்ந்தவன், அந்தச் சுகத்தைத் தக்கவைத்துக்கொள்ள, பொன்னாசைக்கும் மண்ணாசைக்கும் ஆட்படுகிறான்; தனது இலக்கை மறந்து பணம் ஈட்டுவதில் முனைகிறான். இதனால் ஏற்படும் துயரங்களில் சிக்கிக்கொண்டு தவிக்கிறான்.

இதிலிருந்து மீளும் வழியை சுருக்கமாகவும் விளக்கமாகவும் தெரிவிக்கிறது உபதேச பஞ்சகம். தகுந்த அறிஞர்களை அணுகி, அவர்கள் மூலம் அதைத் தெரிந்துகொள்வது சிறப்பு.

'இன்று இந்த நட்சத்திரம்; இத்தனை மணியில் இருந்து இத்தனை மணி வரை’ என்று எப்படிக் கணிக்கிறார்கள்?

கே.அனிதா, கோவை-42

ஜோதிடத்தில் 'கணிதம்’ என்று ஒரு பிரிவு உண்டு. ஆர்யபட்டர், பாஸ்கரர் ஆகியோரது கணித முறை, பஞ்ச சிந்தாந்திகா, கோள தீபிகை போன்ற கணித நூல்கள், மேலும் 'த்ருக்’ கணிதம், வாக்ய கணிதம், ஸாயனம், நிரயனம்,  லாஹரி, சைத்ரபஷ

அயனாம்சம், புது சிந்தனையில் வெளிவந்த கே.பி.அயனாம்சம், பி.வி.ராமன் அயனாம்சம், கலியுகத்தின் கடந்த நாட்களை அறிந்து, அதன் மூலம் செயல்படும்

கணிதமுறை, பஞ்சபோதம், வர்ஷாதி நூல் போன்ற பழைமையான கையேடுகளைக் கொண்டு, குறிப்பிட்ட நாளில் நட்சத்திரங்களை அறியும் நடைமுறை உண்டு. தற்போது, ஜோதிடக் கணித முறையை கணிப்பொறியில் இணைத்து நொடிப் பொழுதில் அறிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.

தனது சிந்தனையுடனும் கணிதத்தின் துணையுடனும் பஞ்சாங்கத்தைக் கணித்துச் சொன்ன வல்லுநர்கள் குழாம் பண்டைய காலத்தில் இருந்தது. புது சிந்தனையாளர்களின் தாக்கத்தால், பழைய கணித முறைகள் மறைந்து கொண்டிருக்கின்றன.

அவற்றின் மறைவு, சிறந்த கலையின் இழப்பு ஆகும். ஜோதிட வல்லுநர்கள், அதைப் பழைய வடிவத்திலேயே மக்களுக்கு அளிக்கவேண்டும். நமது படைப்பான விஞ்ஞானக் கருவிகள், ஒருவேளை அழிய நேர்ந்தாலும், பழைய கணித முறைகள் கைகொடுக்கும்- பவர்கட் தருணங்களில் தீப ஒளி கைகொடுப்பதைப் போல! பழைய கணித முறைகள் தரும் அடிப்படைத் தகவல்களே, புது சிந்தனை வளர ஆதாரம். அது மறைந்தால், புது சிந்தனைகளும் திசை திரும்பிவிடும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கச் செல்லும்போதோ, இறுதி ஊர்வலங்களில் பங்கேற்கும்போதோ பூணூல் அணியலாமா? பூணூல் மாற்றுவது குறித்து சாஸ்திரத்தின் அறிவுரை என்ன?

- ஆர்.ஜகதீஸன், திருச்சி-6

எப்போதும் இடது தோளில் தொங்கவேண்டிய ஒன்று பூணூல். துறவறம் ஏற்கும்போது, அது தோளில் இருந்து விலகும். பூத உடலை சுமக்கும் போதும் பூணூல் இருக்க வேண்டும். ஆனால்,

அந்த வேளையில் மாலை போல் மாற்றிக்கொள்ள வேண்டும். பூணூல் முற்றிலும் அறுந்துவிட்டால், உடனே மாற்ற வேண்டும்.

அழுக்கு ஏறியிருந்தாலும், மூன்றில் ஒரு நூல் அறுந்து போனாலும், எந்த நிமிடத்திலும் அறுந்து போகும் நிலையில் நைந்திருந்தாலும், பிறப்பு- இறப்பு போன்ற தீட்டுபட்ட வேளையிலும், பெண்மணிகள் மூன்று நாள் தீட்டைச் சந்திக்கும் வேளையிலும், தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு பிராயச்சித்தச் சடங்குகளில் ஈடுபடும்போதும் பூணூலை மாற்றுவது சிறப்பு. பூணூலை மாற்றும்போதுகூட, புதுப் பூணூலை அணிந்த பிறகே பழைய பூணூலை அகற்றவேண்டும் என்று இருப்பதால், எந்த வேளையிலும் பூணூல் இல்லாத தோளுடன் காட்சியளிக்கக் கூடாது. பெருமை தெரியாதவர்கள் அதை நூலாக நினைத்தாலும் அதன் தரம் குன்றிவிடாது.

- பதில்கள் தொடரும்...
படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்