தொடர்கள்
Published:Updated:

நாரதர் கதைகள் - 10

இது நான்கு வேத சாரம்எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

##~##

''முன்னொரு காலத்தில் கௌதம முனிவரிடத்தில் இந்திரன் பிழைபட்டு மிகப் பெரிய சாபத்துக்கு உள்ளானான். பிறகு, சிந்தாமணி விநாயகரை வணங்கி, அந்த சாபம் நீங்கப் பெற்றான். அதைச் சொல்கிறேன், கேள்!'' என்றார் நாரதர்.

''ருக்மாங்கதா, நீ சாதாரண அரசன். உத்தமமாக வாழ்ந்த உன்னை விதி சதி செய்து இந்தச் சாபம் வாங்கும்படி மாற்றிவிட்டது. ஒழுக்கமற்று நடக்க மாட்டேன் என்று உறுதியாக நின்றதால் உனக்கு  சாபம் கிடைத்தது. ஆனால் உன்னைப் போன்று அல்லாமல், திட்டமிட்டு ஒழுக்கம் தவறி அதனால் சாபம் பெற்ற ஒருவரையும் விநாயகர் காப்பாற்றியிருக்கிறார்.

ஒருமுறை, இந்திரனோடு அவன் சபையிலே உட்கார்ந்திருந்தேன். தேவலோகப் பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள்மீது கவனம் செலுத்தாமல் என் மனம் நாராயண ஸ்மரணையிலேயே இருந்தது. நான் வேறு எங்கோ லயித்திருப்பதை இந்திரன் கண்டு, ''இவ்வளவு அழகிய பெண்கள் இத்தனை அற்புதமாக நடனமாட, நீங்கள் அவர்களைக் கவனிக்காமல் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறீர்களே... இந்தப் பெண்கள் உங்களைக் கவரவில்லையா?'' என்று கேட்டான்.

''இவர்கள் அப்படி ஒன்றும் அழகாக இல்லையே!'' என்றேன் நான். இந்திரன் திடுக்கிட்டான்.

''என்ன சொல்கிறீர்கள்? ரம்பை, ஊர்வசி போன்ற இந்த தேவலோகப் பெண்களா அழகு இல்லை என்கிறீர்கள்? இவர்களை விட அழகான பெண்கள் வேறு எங்கு இருக்கிறார்கள்?'' என்று இந்திரன் கேட்க, ''பூமியில் இருக்கிறார்கள்'' என்று நான் பதில் சொன்னேன்.

நாரதர் கதைகள் - 10

''பூமியில் எங்கு இருக்கிறார்கள்?'' என்று அவன் தொடர்ந்து கேட்டான். ஏனென்றால், எது எல்லாம் அழகோ, அதெல்லாம் தனக்கு வேண்டும் என்ற பேராவல் பிடித்தவன் இந்திரன். இந்தப் பிரபஞ்சத்தில் எவையெல்லாம் உயர்வோ, அவையெல்லாம் தன் அரசவையில் இருக்க வேண்டும்; அதைத் தான் அனுபவிக்க வேண்டும் என்கிற வேகம் கொண்டவன்.

அவன் கேட்ட விதத்தில், மிகப் பெரிய அழகியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினான். நான் யோசனை செய்தேன். அழகு என்றால் என்ன என்று இவனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினேன்.

''கௌதம முனிவருடைய மனைவி அகலிகை பேரழகி. அவள் நடந்து வந்தால், பூங்கொடிகள் நாணுகின்றன. மான்கள் மருளுகின்றன. காடு நிசப்தமாகிறது. நீர் திசைமாறி ஓடுகிறது. அவள் இருக்கும் திசைப்பக்கம் வருகிறது. கதிரவன் அவள் மீது நேரடியாய் தன் கதிர்கள் படாது, மேகத்தில் மறைத்துக்கொள்கிறான். அவளைப் பார்க்கும்போதே எல்லோரும் பணிவோடு நமஸ்கரிக்கிறார்கள். திரு மகளும் கலைமகளும் அலைமகளும் ஒன்று சேர்ந்த அழகாக அவள் இருக்கிறாள். ஒரு முனிவருக்கு மனைவியாக இருந்து, அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மிகத் துல்லியமாகச் செய்து, மிக ஒடுக்கமான ஒரு வாழ்வை வாழ்வதால், அவள் கற்புநெறியின் வெளிச்சம் அவளைப் பேரழகியாக மாற்றியிருக்கிறது. அழகு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள, நீ அவளை ஒருமுறை பார்த்தால் போதும்!'' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவன் குழம்பத் துவங்கினான். குழம்பியதே தெளியும். அவன் இன்னும் குழம்பட்டும் என்று விட்டுவிட்டு வந்துவிட்டேன். அவன் பூவுலகம் போய், கௌதம முனிவரது ஆஸ்ரமம் தேடி, தொலைவிலிருந்த அகலிகையைப் பார்த்தான். திகைத்துப் போனான். துவண்டு போனான். காமத்தால் தடுமாறி, ஆஸ்ரமத்துப் படியேறினான். தன்னை கௌதம முனிவராக உருமாற்றிக் கொண்டான். உள்ளுக்குள்ளே சலசலப்பு கேட்டது. சட்டென்று இருட்டில் ஒளிந்து கொண்டான். கௌதம முனிவர் வெளியே வந்தார். வானம் பார்த்தார். 'என்ன நாழிகை இப்போது? ஏன் என் தூக்கம் கலைந்துவிட்டது?’ என்று நட்சத்திரங்களைத் தேடினார். அவன் நழுவி, சற்றுத் தூரம் போய், சேவல் போலக் குரல் கொடுத்தான்.

'ஹா, முதல் ஜாமம் முடிந்து விட்டதா? நல்லது, குளிக்கப் போவோம்!’ என அவர் ஆற்றங்கரை நோக்கிப் புறப்பட்டார். இந்திரன் வெளிச்சத்துக்கு வந்தான். சேவலாகக் குரல் கொடுத்தவன், முனிவராக உள்ளே நுழைந்தான். படுத்துக்கொண்டிருந்த அகலிகை திடுக்கிட்டு எழுந்தாள்.

''என்ன திடுமென்று திரும்பி விட்டீர்கள்? அதற்குள் குளியல் முடிந்துவிட்டதா?'' என்று கேட்டாள்.

''இல்லை. ஆற்றங்கரையில் ஓர் அழகி குளித்துக் கொண்டிருப் பதைப் பார்த்தேன். எனக்கு மனம் தாங்கவில்லை. எனவே, உன்னைத் தேடி ஓடி வந்து விட்டேன். உன்னோடு கூட வேண்டும் என்கிற ஆவல் வந்துவிட்டது!'' என்று சொல்ல, அவள் குழப்பத்தோடு படுக்கையை நீவியபடி, 'இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே? இதுவரை இப்படி நடந்ததே இல்லையே?

நாரதர் கதைகள் - 10

ஆயினும், புருஷன் கூப்பிடுகிறார். பணியத்தானே வேண்டும்!’ என்று நினைத்தபடி, கணவர் உருவிலிருந்த இந்திரனின் அழைப்புக்குத் தன்னைத் தளர்த்திக் கொண்டாள். அவன் அணைக்க, அவளும் இறுக்கிக் கொண்டாள். வேகமாக இந்திரன் அவளோடு முயங்கினான். பல்வேறுவிதமான காமப் பேச்சுகள் அவனிடமிருந்து வெளிப்பட்டன.

ஆச்சரியத்தோடு செவிமடுத்த அவள் ஒரு கட்டத்தில் சட்டென்று, ''யார் நீ? என் புருஷன் ஒருபோதும் இந்த மாதிரியான வார்த்தை களைச் சொல்லமாட்டார். பெண்ணோடு கூடும் போதுகூட உத்தமமான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பது நல்ல மரபு. என் புருஷன் என்னிடம் தவறான வார்த்தைகளைக் கூடல் நேரத்திலும் சொன்னது இல்லை. ஆனால், வந்ததிலிருந்து ஆபாசமான வார்த்தைகளையே பேசிக்கொண்டிருக்கிறாய். உண்மையைச் சொல், யார் நீ? போ, வெளியே போ!'' என்று பிடித்துத் தள்ளினாள்.

இந்திரன் எழுந்து நின்றான். தன்னுடைய நிஜ உருவத்தைக் காட்டினான். அப்படி சுயரூபத் தைக் காட்டினால், தேவர்களின் தலைவன் இந்திரனே நம்மைத் தேடி வந்துவிட்டானா என அகலிகை மனம் மயங்கி, கை விரித்து அழைப்பாள் என்று தப்புக் கணக்குப் போட்டான்.

''நான் இந்திரன். இந்திராணி முதலிய பெண்களையெல்லாம் விட்டுவிட்டு உன்னை நோக்கி ஓடி வந்திருக்கிறேன். அவர்களையெல்லாம்விட பேரழகி நீ. வா!'' என்று அவளை நோக்கி வந்தான். அவள் பதறினாள். அவனை விட்டு விலகி, கதவு திறந்து வெளியே ஓடினாள்.

கௌதம முனிவர் அப்போதுதான் மூங்கில் படலைத் திறந்துகொண்டு, உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். ''கால் அலம்ப தண்ணீர்'' என்று கேட்டார். அவள் உள்ளே போனாள். இந்திரன் நடுநடுங்கி நின்றான். அவள் தண்ணீர் கொண்டு வந்தாள். 'என்ன ஆயிற்று உனக்கு! தடுக்கென்று வெளியே வந்தாய்; சடக்கென்று உள்ளே போனாய். தாமதமாய் தண்ணீர் கொண்டு வருகிறாய். நெற்றியில் மங்கலச் சின்னம் இல்லை. உடம்பில் நல்ல வாசனை வரவில்லை. என்ன ஆயிற்று? ஏன் நிலைகுலைந்து இருக்கிறாய்? ஏன் உன் முகம் வாட்டமாக இருக்கிறது? என்னதான் நடந்தது, சொல்?'' என்றார்.

நடந்ததை நடந்தபடி கௌதமரிடம் அகலிகை விவரித்தாள்.

''என்ன பேதமை இது! வந்தது புருஷன் இல்லை என்றுகூட ஒரு தர்மபத்தினிக்குத் தெரியாதா? உன் புருஷனின் அசைவு என்ன வென்று உனக்குத் தெரியாதா? வாசலில் நின்று என் வருகையைச் சொல்லாது, நான் என்றேனும் உள்ளே நுழைந்திருக்கிறேனா? திருடனைப்போல உள்ளே நுழைந்த இவனை நீ அப்போதே சந்தேகப்பட்டிருக்கவேண்டாமா? உள்ளுக்குள்ளே ஒரு பெண் எப்படியிருப்பாளோ, என்ன நிலையில் இருப்பாளோ என்பது தெரியாமல், கதவு தட்டாது, குரல் கொடுக்காது ஒரு புருஷன் உள்ளே நுழையக்கூடாது. அவள் மனைவியே ஆயினும் அவன் அவ்விதம் செய்யலாகாது. இந்த தர்மத்தைதான் நான் இத்தனை நாள் கடைப்பிடித்து வருகிறேன். அதற்கு மாறாக, படல் திறந்து, கதவு திறந்து, திடுமென்று ஒருவன் உள்ளே நுழைந்து, படுக்கையில் அமர்ந்திருக்கிற உன்னைப் பார்த்தான் என்றால், அப்போதே அந்த க்ஷணமே அவன் தவறானவன் என்று உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? உணர்ச்சியற்றவளா நீ? வெறும் கல்லா நீ? சே, பட்ட மரம்கூடத் துளிர்க்கும். நீ கருங்கல். வெறும் கல். போ. உணர்ச்சி இல்லை அல்லவா? போ. கல்லாகவே போ! கல்லாய்க் கிட!'' என்று சபித்தார்.

அவர் காலில் அகலிகை பணிந்து, அவர் சாபத்தை ஏற்றாள். கண்ணீர் வடித்தாள். கௌதமர், தன் அழகிய மனைவி தன்னை மீறி ஏற்பட்ட தவறுக்காக வருந்தித் துடிப்பதை கண்டு, மனம் இரங்கினார்.

''ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி தன் தம்பியோடு இந்தப் பக்கம் வரும்போது, அவர்களை விஸ்வாமித்திர மகரிஷி உன் இருப்பிடத்துக்கு அழைத்து வருவார். ஸ்ரீராமனின் கால் பட்டு நீ மறுபடியும் சுய உருவம் பெறுவாய். அதுவரை உணர்ச்சிகளைச் சிதறவிட்ட நீ, கல்லாய் இரு!'' என்று ஆசீர்வதித்தார். அகலிகை கல்லானாள்.

இந்திரன் குடிசைக்குள்ளேயே பயந்து ஒடுங்கி இருந்தான். ஒரு பூனை போல தன்னை மாற்றிக்கொண்டு, கிடைத்த சந்து வழியே வெளியே போக முயற்சித்தான். கௌதமரின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது. ''நீ இந்திரன். தேவர்களுக்குத் தலைவன். நாங்களெல்லாம் தினசரி பூஜையில் உங்களுக்கெல்லாம் அர்க்யம் விட்டுக் கொண்டிருக்கிறோம். யாகத்தில் ஒரு அவிர் பாகத்தை உங்களுக்குத் தருகிறோம். அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டிய நீ ஏன் இவ்வளவு இழிவான செயலைச் செய்தாய்? உன் பதவிக்கும் உன் கௌரவத்துக்கும் இது எவ்வளவு பெரிய இழுக்கு! யோனியின்மீது ஆசை வைத்து அல்லவா இங்கு வந்தாய்? உன் உடம்பு முழுவதும் யோனியாகப் போகட்டும்!'' என்று சபித்தார். இந்திரன் அஞ்சி நடுங்கினான்.

நாரதர் கதைகள் - 10

'இதைவிடக் கடுமையான தண்டனை உலகத்தில் உண்டோ!’ என்று கதறினான். யார் முகத்திலும் முழிக்க விரும்பாது, ஒரு தாமரைப் பூவின் தண்டுக்குள் நுழைந்து, அதன் அடிவேரைப் பற்றி நின்றான். இந்திரனைக் காணாது தேவர் உலகம் தவித்தது. பிரம்மா முதற்கொண்டு பலரும் அவனைத் தேடினார்கள். நடந்ததைப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் எல்லோரும் கௌதம முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, ''இந்திரன் இல்லாது தேவலோகம் தடுமாறுகிறது. தலைவன் இல்லாது தவிக்கிறது. எனவே, உங்கள் கோபத்தைக் குறைத்து, அவனது தவற்றை மன்னித்தருள வேண்டும். இந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்க வேண்டும்'' என்று இறைஞ்சினார்கள்.

கௌதமர் மனம் இரங்கினார். விநாயக மந்திரத்தை அவனுக்கு உபதேசிக்குமாறு சொன்னார். வியாழ பகவான், விநாயக மந்திரத்தை இந்திரனுக்கு உபதேசிக்க, இந்திரன் விநாயக மந்திரத் தைச் சொன்னான். இந்தக் கதம்பவனத்துக்கு வந்து, இந்தக் குளத்திலே மூழ்கி எழுந்து, விநாயகரை வேண்டினான். அவன் உடம்பு முழுவதும் யோனிகள் மறைந்து, கண்களாக மாறின. அன்றிலிருந்து, ஆயிரம் கண்களுடைய தேவனாக இந்திரன் இருந்து வருகிறான். கதம்பவனத்து சிந்தாமணி விநாயகர் மிகவும் சிறப்பு உடையவர். எங்கு சிந்தாமணி விநாயகரைப் பார்த்தாலும், அவர் உச்சகட்டமான சக்தி என்பதைப் புரிந்துகொள். அவரை வணங்கி, உன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள். சிந்தாமணி விநாயகர் மிகச் சிறப்பு உடையவர்!'' என்று நாரதர் சொல்லி முடித்தார்.

ருக்மாங்கதன் கதம்ப வனத்துக் குளத்தில் மூழ்கி, விநாயக மந்திரத்தை ஜபித்தான். அவனுடைய உடம்பிலிருந்து குஷ்டரோகம் மறைந்தது. அவன் திடகாத்திரமாய், தெளிவுள்ளவனாய் நகரத்துக்குத் திரும்பி, அரசாட்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தான். ருக்மாங்கதனை மனமார வாழ்த்திவிட்டு, ''எல்லாச் சிறப்புகளும் பெறுவாய்'' என்று ஆசீர்வதித்துவிட்டு, அந்த இடம் விட்டு அகன்றார் நாரதர்.

சிந்தாமணி விநாயகரின் சிறப்பு நாரதரால் சொல்லப் பட்டது. விநாயகர் மந்திர ஜபம் முக்கியம் என்று அவரால் நிரூபிக்கப்பட்டது. விநாயகர் எல்லா வினைகளையும் வேரறுக்க வல்லவர் என்று பலபேருக்கு அவருடைய கதையால் புரிந்தது.

- தொடரும்...