தொடர்கள்
Published:Updated:

பயணம்... பரவசம்!

லதானந்த்

##~##

ரிஷிகேஷ் தரிசனம் முடிந்ததும், கேதார்நாத் நோக்கிப் பயணித்தோம். ரிஷிகேஷில் இருந்து மதியம் புறப்பட்ட நாங்கள், 106 கி.மீ. பயணம் செய்து, மாலை சுமார் 6 மணிக்கு ஸ்ரீநகர் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தோம் (இது, ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகர் அல்ல!). குன்னூர் மாதிரியான அம்சங்களுடன் இருக்கிறது இந்த ஸ்ரீநகர்.

இங்கே, அலகநந்தா என்ற ஆற்றின் கரைக்கு மிக அருகில் இருந்த அடுக்குமாடி விடுதி ஒன்றில் தங்கினோம். அறையின் கதவைத் திறந்து பின்பக்கம் உள்ள பால்கனியில் அமர்ந்தால், அலகநந்தா ஆற்றின் அற்புத அழகை ரசிக்கலாம். இந்த ஆறு, அதன்பிறகு 22 நாளில் 'மேக வெடிப்பு’ நிகழ்ந்து, காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுக்கப் போகிறது என்கிற உண்மை தெரியாமல், அப்போது விடுதியில் சாவகாசமாக அமர்ந்திருந்தது இப்போது மனக்கண்ணில் நிழலாடுகிறது.

அடுத்த நாள், அதிகாலை 3 மணிக்கு எழுப்பி வெந்நீர் கொடுத்தார்கள். குளித்து முடித்த பிறகு, விடியற்காலை 4 மணி சுமாருக்குப் புறப்பட்டு, இடையில் ஓரிடத்தில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் பயணித்தோம்.

நீங்கள் மலைப்பதையில் பயணம் செய்திருக்கலாம். அப்போது, ஒரு மாவட்டத்தின் ஒரு பகுதி மலையாக இருந்திருக்கும். உதாரணமாக, கொடைக்கானல். அல்லது, ஒரு மாவட்டமே மலை மாவட்டமாக இருக்கும். உதாரணம், நீலகிரி. ஆனால், ஒரு மாநிலமே மலையில் அமைந்திருக்கிறது என்றால், அதுதான் இமயமலையில் அமைந்துள்ள உத்தரகாண்ட்.

பயணம்... பரவசம்!

மற்ற இடங்களின் மலைப் பயணத்துக்கும் கேதார்நாத் பயணத்துக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கே பெரும்பாலான இடங்களில் பாதைகளுக்குக் கைப்பிடிச் சுவரே இல்லை. அதல பாதாள விளிம்பிலேயே பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், பயணம் நெடுகிலும் ஏதாவது ஒரு ஜீவ நதி பெருத்த ஓசையோடு நுரைத்துக்கொண்டு நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஒருபுறம் நெடிய மலையும், மறுபுறம் மிக ஆழமான பகுதியில் சீறும் நதியும் நமது பயணப் பாதைக்கு இரு மருங்கிலும் இருக்கின்றன.

மதிய உணவைப் பொட்டலம் கட்டிக் கையில் கொடுத்துக் கேதார்நாத்தில் தங்கவேண்டிய விடுதி விவரங்களையும் டூர் ஏற்பாட்டாளர்கள் அளித்திருந்தார்கள்.

கௌரிகுண்ட் என்ற இடம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும். அங்கிருந்து 14 கி.மீ. தூரத்தில் கேதார்நாத் இருக்கிறது. மேல் நோக்கிச் சரிவான பாதை பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. ஒருபுறம் மலைகள், மறுபுறம் அதல பாதாளம், அங்கே பொங்கிப் பிரவகித்து ஓடும் மந்தாகினி ஆறு... என அச்சமூட்டும் பயணம் இது என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். கௌரிகுண்ட்டில் இருந்து குதிரை மூலமும், நடைப் பயணமாகவும், டோலி மூலமும், ஹெலிகாப்டர் மூலமும், அவரவர் வசதிக்குத் தகுந்தவாறு கேதார்நாத்துக்கு வருகின்றனர்.  

குதிரை மூலம் கேதார்நாத் செல்ல ஆளன்றுக்கு ரூ.1,200 வசூலிக்கிறார்கள். திரும்ப வருவதற்கு ரூ.700 மட்டும் ஆகிறது. டோலியில் செல்பவர்களின் எடைக்குத் தக்கபடி சுமைகூலியாக ரூ.2,000 முதல் 3,000 வரை வாங்குகிறார்கள். ஹெலிகாப்டர் பயணத்துக்குப் போக வர ரூ.6,000 ஆகிறது.

பயணம்... பரவசம்!

நாங்கள் குதிரைச் சவாரியைத் தேர்ந்தெடுத்தோம். கௌரிகுண்ட் பகுதியில் அரை கி.மீ. மிகக் குறுகலான சந்துகளில் நடந்தால், மாபெரும் குதிரை லாயம் ஒன்று வருகிறது. அங்கிருந்து குதிரைச் சவாரி ஆரம்பமாகிறது.

குதிரைக்காரர்களில் சிலர் அவ்வளவு நாணயமானவர்கள் அல்ல. பாதி வழியிலேயே இறக்கிவிட்டுக் கூடுதல் பணம் கேட்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, அவர்களது லைசன்ஸை முதலிலேயே வாங்கி வைத்துக்கொள்ளுமாறு டிக்கட் கொடுக்கும் இடத்தில் அறிவுரை சொல்கிறார்கள். அதைப் பின்பற்றுவது நல்லது.

மிகவும் ஆயாசத்தைத் தந்த பயணம் அது. பாதம், கெண்டைக்கால், இடுப்பு எனப் பல பாகங்களிலும் கடுகடுவென வலி. சரியாக 7 கி.மீ. பயணத்துக்குப் பிறகு ராம்பாரா என்னும் இடத்தில் குதிரைகள் இளைப்பாறின. நாங்கள் கொண்டுபோயிருந்த பொட்டலங்களில் இருந்த ஆகாரத்தைச் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் மீதம் இருந்த 7 கி.மீ. கடுமையான பயணத்தை மேற்கொண்டோம்.

குதிரைப் பயணத்துக்கு இடையில் கேதார்நாத் பற்றி லேசாகப் பார்ப்போமா?

ருத்ர பிரயாக் மாவட்டத்தில், ருத்ர பிரயாகையில் இருந்து 75 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கேதார்நாத் புனிதத் தலம். கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீட்டர் உயரமுள்ள பகுதி இது. மந்தாகினி ஆறு உற்பத்தி ஆகும் சோராபரி பனிப்பகுதியின் அருகே இருக்கிறது. கைக்கெட்டும் தூரத்தில், கார்வால் இமயத்தின் பனி மலைகள் சூழ்ந்திருக்கின்றன. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கட்டடங்கள் மந்தாகினி ஆற்றின் கரை ஓரமாகவே கட்டப்பட்டிருக்கின்றன. கோயிலுக்குப் பின்புறம் 6,940 மீட்டர் கடல் மட்டத்துக்கு மேல் கேதார்நாத் சிகரம் தென்படுகிறது.

சிவபெருமான் பார்வதியை மணந்த இடமான திரிஜுகி நாராயண், உஹிமத், ஜுவாலாமுகி, காளிமத் முதலான பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்கள் இந்த வழி நெடுகிலும் இருக்கின்றன. கேதார்நாத் பயணத் திட்டத்துடன் கூடுதலாக ஓரிரு நாட்கள் ஒதுக்கி இருந்தால் மட்டுமே, இவற்றைத் தரிசிக்க முடியும்.

சத்ய யுகத்தில் இங்கே அரசாண்ட மன்னர் கேதார் என்பவர். அவரைச் சிறப்பிக்கும் விதமாக இந்தப் பகுதி கேதார்நாத் என அழைக்கப்படுகிறது. இன்னும் சிலர், புராண காலத்தில் இந்தப் பகுதி 'கேதார் கண்டம்’ என அழைக்கப்பட்டதாகவும், இங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் கேதார்நாத் என அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

பாண்டவர்கள் குருக்ஷேத்திரப் போரில் தங்களது பல உறவினர்களையும் கொல்ல நேரிட்டது அல்லவா? அந்தப் பாவங்களைப் போக்கிக்கொள்ள சிவனை வழிபட்ட இடம் இது என மகாபாரதம் சொல்கிறது. இந்த ஆலயம் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், ஆதி சங்கராச்சார்யரால் புனரமைக்கப்பட்டது எனவும் தலபுராணம் சொல்கிறது. இங்கே இருக்கும் சிவலிங்கம் இந்துக்களின் புனித ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் அக்ஷயதிருதியை அன்று (ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத் துவக்கத்தில்) கேதார்நாத் ஆலயம் பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படுகிறது. கிருத்திகை பௌர்ணமியின்போது (அக்டோபர் மாதக் கடைசி அல்லது நவம்பர் மாதத் துவக்கத்தில்) மூடப்படுகிறது. பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிரே மூடப்படுவதற்குக் காரணம். குளிர்காலம் மிகவும் கடுமையானதாகவும் பனிப் பொழிவு மிக்கதாகவும் இருப்பதால் கேதார்நாத்தில் யாரும் அப்போது வசிப்பதில்லை. அந்த நேரத்தில் கேதார்நாத் ஆலயத்தின் உத்ஸவ மூர்த்தி, குப்தகாசி என்னும் இடத்துக்கு அருகே இருக்கும் உஹிமத் என்ற பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். மக்களும் அண்டை கிராமங்களுக்கு இடம் பெயர்ந்துவிடுகின்றனர். கேதார்நாத்தின் கிழக்குப் பகுதியில் பைரவர் ஆலயம் ஒன்று இருக்கிறது. குளிர்காலத்தில் கேதார்நாத் கிராமத்தை பைரவர் பாதுகாப்பதாக ஐதீகம்.

பயணம்... பரவசம்!

கேதார்நாத்தை அடைந்த பிறகுதான் ஒரு விஷயம் உறைத்தது. எத்தனையோ குளிர்ப் பிரதேசங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த மாதிரி எலும்பைத் துளைக்கும் குளிரை அனுபவித்ததே இல்லை. இத்தனைக்கும் 'சீசன்’ என்று சொல்லப்படும் மே மாதத்தின் 14-ஆம் தேதியே இப்படி இருந்தால், குளிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும்போதே உடம்பு கிடுகிடுக்கிறது. ஸ்வெட்டர், சாக்ஸ், கிளவுஸ், தொப்பி, போர்வை என எல்லாவற்றையும் மீறிக் குளிர் ஊசியாகக் உடம்பைத் துளைக்கிறது. வெடவெட என நடுங்கியபடி, மாலையிலேயே ஸ்ரீகேதார்நாதரைச் சேவித்தோம். நாங்கள் சென்ற நேரம், தரிசனத்துக்காக இந்த ஆண்டு கோயில் திறக்கப்பட்டுச் சில நாட்களே ஆகியிருந்ததால், பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

கர்ப்பக்கிரகமும் மண்டபமும் கொண்ட இந்த ஆலயம் பனி மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த நிலப்பரப்பில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. கற்பாறையில் செதுக்கப்பட்ட நந்தியும் இருக்கிறது. கோயிலுக்குள் இருக்கும் மண்டபத்தில் பஞ்ச பாண்டவர்களின் சிலைகள், திரௌபதி, கிருஷ்ணர், நந்தி  உருவங்கள் இருக்கின்றன. கர்ப்பக்கிரகத்தில் முக்கோண வடிவில் சிரசு வடிவில் உள்ள சிலையே மூலவராக வணங்கப்படுகிறது. கோயிலுக்கு அருகிலேயே ஆதிசங்கரரின் மகாசமாதி இருக்கிறது. தரிசனம் முடிந்து, விடுதிக்கு வந்து உறங்கிப்போனோம்.

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளச்சேதத்தில் கேதார்நாத் கிராமம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. கேதார்நாத்துக்கு மூன்று பக்கங்களும் பனி மலைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றின் உச்சியில் இருந்த மாபெரும் பனிப்பாறை கேதார்நாத்தின் மேல்புறம் இருந்த நீர் தேங்கும் பகுதியில் விழுந்து, உடைப்பை ஏற்படுத்தி, அங்கிருந்த நீரும், மழை நீரும் சேர்ந்து மாபெரும் வெள்ளப்பெருக்காய் மாறிப் பெருத்த சேதத்தை விளைவித்துவிட்டன.

பக்தர்கள் இங்கு சென்று தரிசிக்க இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. கேதார்நாத் கிராமமே பெரும் சேதத்துக்கு ஆளானாலும், ஆலயம் மட்டும் அதிக சேதம் அடையாமல் இருக்கிறது.

'ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே'

என்ற தேவாரப் பாடலில் திருநாவுக்கரசர் பாடிப் போற்றிய கேதார்நாத் நினைவுகளுடன், மறுநாள் காலை 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டோம். மறுபடியும் குதிரைச் சவாரிதான். 14 கி.மீ. பயணத்தை சுமார் 4 மணி நேரத்தில் கடந்து, கௌரிகுண்டை அடைந்தோம். அங்கிருந்து வாகனம் மூலம்  7 கி.மீ. தூரத்தில் இருக்கும் சீதாப்பூர் என்ற இடத்தை அடைந்து, அன்றைய இரவு அங்கேயே தங்கினோம்.

- யாத்திரை தொடரும்...