மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 24

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்

சித்தம்... சிவம்... சாகசம்! - 24
##~##

'அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பல உள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே!’

- திருமந்திரம்

திருமூலரின் திருமந்திரப் பாடல்களில் பல பாடல்கள் அரிய பல கருத்துக்களை மிக எளிமையாகச் சொல்லிவிடுகின்றன. உதாரணத்துக்கு, 'மரத்தை மறைத்தது மாமத யானை’ என்னும் பாடல். தமிழ்ச் சான்றோர்கள் இந்தப் பாடலைப் பெரிதும் வியந்து பேசுவார்கள்.

'மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே!’

- இதுதான் அந்தப் பாடல்.

அதாவது, ஒரு யானை பொம்மை இருக் கிறது. அது மரத்தால் செய்யப்பட்டது. அதை ஒரு குழந்தை பார்க்கும்போது அதற்கு மரம் தெரியாது; யானைதான் தெரியும். அதை மரமாகப் பார்ப்பவர்களுக்கோ யானை தெரியாது.

இதைப் போலத்தான், பஞ்சபூதங்களைப் பார்க்கும்போது ஞானிகளுக்கு அது தனித் தனியே பஞ்ச பூதங்களாகத் தெரியாது; அதைப் படைத்த பரமன்தான் தெரிவான். தனித்தனியே நீர், நிலம், காற்று என்று இவற்றைப் பிரித்துப் பார்ப்பவர்களுக்கோ பரமன் தெரியமாட்டான்.

இந்தப் பாடலின் மூலம், ஒரு விஷயம் பார்க்கப்படுவதில்தான் அதன் பரிமாணம் புலனாகிறது என்பது தெரிகிறது அல்லவா? பார்க்கப்படுவதிலும்கூட எப்படிப் பார்க் கிறோம், எங்கிருந்து பார்க்கிறோம் என்பது மிக முக்கியப் பங்கை வகிக்கிறது.

ஒரு பெரும் கூட்டம். ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். அதில் ஒருவர் தூரத்தில் முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கும் இன்னொருவர், அவரது பின் தோற்றத்தை வைத்து, தன் நண்பர்களில் ஒருவராக அவரைக் கருதி அருகில் சென்று, தோளில் கைபோட்டு, அந்த நண்பரின் பெயரையும் சொல்லி அழைக்கிறார். ஆனால், அந்த நபர் திரும்பினால் அவர் வேறு ஒருவர் என்பது தெரிகிறது. உடனேயே, தான் தவறாக அனுமானித்துவிட்டதை இவரும் கூறுகிறார். இப்படி நமக்கெல்லாமும்கூட நடந்திருக்கும்.

இந்தச் சம்பவம், பார்ப்பது மட்டும் போதாது; சரியான கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது அல்லவா?

சித்தம்... சிவம்... சாகசம்! - 24

ஒருவர் வாழ்வில் இன்று எவ்வளவோ சம்பவங்கள். அவற்றுள் இந்தப் 'பார்ப்பதால்’ வரும் குழப்பங்களுக்கு மிகவே இடம் கிடைத்து விடுகிறது. தெளிவில்லாத பல குழப்பங்கள் நமக்குள் இருந்தால், இந்தத் தவறான பார்வைக் கோணமே அதில் முதலிடம் வகிக்கிறது.

திருமூலர் எப்படிப் பார்க்க வேண்டும் என்று மட்டும் கூறவில்லை; எப்படி வாழ வேண்டும், எப்படிப் பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எது நிலையானது, எது துன்பம் தருவது என்று, மனித வாழ்வின் அவ்வளவு விஷயங்களுக்கும் திருமந்திரப் பாடல்கள் வாயிலாக வழிகாட்டு கிறார். அவர் பாடல்களில், சான்றோர் உலகம் மிக வியந்து மிகப் பெரிதாகக் கருதுவது, உடல் குறித்த அவரது சிந்தனைகளைத்தான்!

'உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்
றுடம்பினை யானிருந் தோம்பு கின்றேனே...!

- இது, திருமந்திரப் பாடல்களில் ஒன்று. இதில், நம் ஒவ்வொருவர் உடம்பையும் கோயில் என்கிறார். நம் உள்ளே உள்ள ஜீவனா கிய ஆன்மாவே சிவமாகிய கடவுள் என்கிறார்.

'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயமறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’

என்பதும் திருமந்திரப் பாடல்தான். இன்று உடல் வளர்த்தலை நம் சமூகத்தில் மிகத் தவறாகப் புரிந்துகொண்டு, நாக்கு கேட்பதை எல்லாம் தின்பதும், தின்ற களைப்பு தீர உறங்குவதும்தான் வாழ்க்கை என்று பலர் உள்ளனர். உடல் வளர்த்தலுக்குப் பொருள் இதுவல்ல. நோயற்றதாகவும், சக்தியின் வங்கியாகவும் இந்த உடலை ஆக்கிக்கொள்வதே உடல் வளர்த்தல் என்பதற்குச் சரியான பொருளாகும்.

நோயற்றதாகவும் சக்தியின் இருப்பிடமாகவும் இதை வைத்துக்கொள்வது எப்படி? மருத்து வர்கள் கூறுவதுபோல நடைப்பயிற்சி செய்து, உடற்பயிற்சிகள் செய்து, சத்தான உணவை உண்டு, நன்கு தூங்கி எழுவதால் மட்டும் நல்ல உடல் அமைந்துவிடுமா என்றால், அதுதான் இல்லை என்பதே பதிலாகும். அதை, கலகலப்பான ஆரோக்கிய உடல் எனலாம். ஆனால், நல்ல உடலுக்கான இலக்கணம் வேறு. ஆரோக்கியமான உடல் உடையவர், உடம்புக்கு பயந்தும் அடங்கியும் நடப்பவராவார். நல்ல உடல் கொண்டவர் வரையிலோ, இந்த உடலானது அவர் மனத்துக்குக் கட்டுப்பட்டுச் செயலாற்றும்.

முன்னதாக, உடல் குறித்த ஒரு அறிவும் தெளிவும் மிக முக்கியம். இன்றைய விஞ்ஞானம் நம் உடல் உறுப்புகளுக்கெல்லாம் ஒரு பெயரை வைத்துள்ளது. அது எதனால் இயங்குகிறது என்பதைக் கூறுகிறது. நோயுறும்போது எந்தக் கிருமியால் நோயுற்றோம் என்பதைக் கண்டறிந்து கூறி, அந்த கிருமியை அழித்திட வழிவகை செய்கிறது. அவ்வளவுதான்!

ஆனால், நமது உபநிடதங்கள் உடல் குறித்து விரிவான பல அரிய செய்திகளைத் தருகின்றன. அந்த வகையில், ஐந்து வித அமைப்புகளுக்குள் நம் உடலும் உயிரும் இருப்பதை அவை தெரிவிக்கின்றன. 'அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்’ - இதுவே அந்த ஐவகை நிலை.

உணவால் வளரும் உடல்தான் அன்னமய கோசம் எனப்படுகிறது. இதனூடே சுவாசித்து நடப்பது பிராணமயம்; மனத்தால் எண்ணங்களுக்கு ஆட் பட்டிருப்பது மனோமயம்; அறிவாலே இவற்றை உணர்ந்து தெளிவது ஞானமயம்; ஞானமயத் தில் லயிக்கத் தொடங்கிவிட்டாலே ஆனந்தமயம் ஏற்பட்டுவிடுகிறது.

சித்தம்... சிவம்... சாகசம்! - 24

அத்வைத சித்தாந்தப்படி ஒவ்வொருவருக்கும் மூன்றுவித உடம்புகள் இருக்கின்றன. ஒன்று, தூல சரீரம். அடுத்து, சூட்சும சரீரம். மூன்றாவது, காரண சரீரம். இதில், தூல சரீரம் ஐவகை பூதத்தால் ஆனது. அதாவது, நம் வசம் இருப்பது. சூட்சும சரீரமோ பத்தொன்பது கூறுகளால் ஆனது. அதாவது, ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், நான்கு அந்தகரணங்கள் மற்றும் ஐந்து பிராணன்கள் கொண்டது.

இவை அத்தனையாலும் யோகம் பிரியும்போது மனம் ஒடுங்கி, உடம்பும் அடங்கி, குண்டலினி மேல் எழும்பி, அது உச்சந்தலையை அடைந்து, ஒரு பேரின்ப நிலை ஏற்படும்போதுள்ள சரீரம்தான் காரண சரீரம்.

திருமூலர் குண்டலினியைப் பெரிதும் வற்புறுத்துகிறார். குண்டலினி யோகப் பயிற்சியை அவர் ஒரு யாகம் செய்வதோடு ஒப்பிடுகிறார். குண்டலினியில் வென்றவர், உடம்பைப் பற்றி கவலைப்படத் தேவையே இல்லை. இந்த உடம்பைப் படகாக்கிக்கொண்டு, அவர் பிறப்பெனும் பெரும் ஆற்றை மூழ்காமல் கடந்துவிடலாம்.

குண்டலினி பற்றித் திருமூலர் மட்டுமில்லை; பாம்பாட்டிச் சித்தர் முதல் காரைச் சித்தர் வரை பலரும் பாடியுள்ளனர். இது, அத்தனைச் சுலபத்தில் வசப்படாத ஒரு பெரும் வித்தை. பூர்வ ஜென்ம புண்ணியம். தகுந்த குருநாதரின் வழிகாட்டலோடு, நிகழ்கால வாழ்வில் காமத்தை வென்று உடம்பைப் புரிந்து வாழும் ஒரு நிலைப்பாட்டோடு ஒருவர் இருந்தாலே இது வசப்படும். ஏனென்றால், குண்டலினிக்கு மூலமாய்ப் பயன்படுவது விந்துவாகும். இது பரம்பரைத் தொடர்போடு வரும் ஒன்று. இந்த விந்துவே ஒரு வகையில் ஆசை, பாசம், காமம், குரோதம் முதலானவை தோன்றவும் பெரும் காரணமாக உள்ளது.

ஆணுக்கு விந்தும், பெண்ணுக்குச் சுரோணிதமுமே அவர்களை முழுமையான மனிதர்களாகக் கருதச் செய்கின்றன. இதில் குறைபாடு நேர்ந்துவிடும் பட்சத்தில், அவர்களை முழுமையாக கருத முடிவதில்லை. ஏனென்றால், இதிலிருந்தே வம்சம் விருத்தி ஆகிறது. இதனாலேயே உறவுகள் தோன்றுகின்றன. ஒரு துறவி இதை அடக்கிக் கரைசேர்கிறான். அல்லாதவர்கள், இதைத் தங்கள் பந்தங்களாக ஆக்கி, இல்வாழ்வுக்கான தர்மத்தைப் பின்பற்றிக் கரைசேர்கிறார்கள்.

இதில், அடக்கிக் கரை சேர்வதில்தான் குண்டலினி யோகம் வருகிறது. இந்த யோகத்தில்தான் விந்துவானது வைரமாகிறது. விந்துவைக் கட்டுப்படுத்தி, நிறுத்த முற்படுவது என்பது அசாத்தியமான ஒரு செயல். மிகுந்த மனக் கட்டுப்பாடும் உடல்மேல் ஆதிக்கமும் செலுத்த முடிந்தவர்களுக்கே இது சாத்தியம். அப்படி நிறுத்தியதை, முதுகுத் தண்டுவடம் வழியாக உச்சந்தலைக்குக் கொண்டுசெல்வது என்பது குண்டலினியில் இன்னொரு விதம்.

இப்படிச் செய்யும் யோகியின் உடலில் வியர்வைகூட நறுமணத்தோடு மணக்குமாம். இதைச் செய்ய முடிந்தவர்களை நாத சித்தர்கள் என்பர். நாத சித்தர்கள் இப்படிச் செய்வதன் மூலம், பஞ்சபூதங்கள் வசம் சிக்கி அதன் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் உடம்பைத் தங்கள் மன ஆளுமையின் கீழ் கொண்டுவந்து, அந்த பஞ்சபூதங்களின் இயல்பையே மாற்றி விடுகிறார்கள். இதனால், இவர்களின் உடம்பு கோள்களின் பிடியில் இருந்தும் விடுபட்டு ஒரு தனிச் சக்தியாக மாறிவிடுகிறது. இந்தத் தனிச் சக்தியைக் கடவுள் நிலை என்று தாராளமாகக் கூறலாம்.

ஏனெனில், இந்தச் சக்தி சுதந்திரமாய் நித்ய இன்பத்தோடு உலகின் எந்தவொரு சக்திக்கும் கட்டுப்படாததாய், முடிந்தால் அந்த சக்தி களை எல்லாம் அடக்கி ஒடுக்க வல்லதாய் ஆகிவிடுகிறது. இறைத்தன்மை என்பதும் அப்படிப்பட்டதுதானே? இந்நிலையில் இருந்து திருமூலர் பாடியதே கீழ்க்காணும் பாடல்.

'தன்னையறிய தனக்கொரு கேடில்லை
தன்னையறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே..!’

இப்படிப் பாடிய திருமூலரிடம் இன்னொரு சிறப்பும் உண்டு. அது, தான் எழுதிய பாடலின் படி அவர் நடந்து காட்டியதுதான். இன்று அறக் கருத்துக்களை பலரும் கூறுகின்றனர். ஆனால், அந்தக் கருத்துப்படி அவர்கள் நடக்கிறார்களா என்று பார்த்தால் பெரிதாக இடிக்கும்.

அவர்களிடம் கேட்டால், இதற்கும் ஒரு பதிலைத் தயாராக வைத்திருப்பார்கள். 'அறவழி செல்லாமல் நான்தான் அழிந்துவிட்டேன். மற்றவர்களாவது அறவழியில் சென்று நல்ல விதமாய் வாழட்டுமே என்றே கூறுகிறேன்’ என்பர். இதைக் கேட்கும்போது, அவர்களின் அந்த நல்ல எண்ணம், அவர்கள் செய்யாததை நம் வரையில் மன்னித்துவிடச் செய்துவிடும். ஆனால்,  திருமூலர் அப்படிப்பட்டவர் அல்ல.

'ஞாலம் அறிய நரை திரை மாறிடும்
பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே’

என்கிறார் அவர். அதாவது, 'உடம்பைப் பற்றி முழுமையாக அறிந்து குண்டலினியில் மூழ்கியவர்க்கு நரை திரைகூடப் போய்விடும். பாலனைப் போல சிறு பிள்ளையாகிவிட முடியும். அதாவது, வயதாவது அப்படியே நின்றுபோகும். இது பொய் அல்ல; நந்தி மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்’ என்கிறார் திருமூலர்.

- சிலிர்ப்போம்...