Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்! - 83

தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

தசாவதார திருத்தலங்கள்! - 83

தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

Published:Updated:
##~##

முனாவுக்குத்தான் எத்தனை ஆர்வமும் சந்தோஷமும்! கண்ணனின் பாதக் கமலங்களை ஸ்பரிசிப்பதில். சிவந்து திகழும் அந்தத் தாமரைப் பாதங்களின் சிற்றிதழ்களாகத் திகழும் சிறுவிரல்களைப் பற்றிக்கொள்ள பரபரத்தாள்.

ஆஹா! இந்த தெய்வக்குழந்தையின் பாதங்களைத்தான் பாருங்களேன்... ஒரு பாதத்தில் சங்கு; மற்றொன்றில் சக்கரக் குறி. 'இறைவா! உன் பாதம் பணிகிறேன்; அந்தப் புனிதக் குறிகளை என் தலையில் பதித்துவிடு; பெரும்பேறு அடைவேன்’ என அரற்றுகிறாளோ அந்த நதிப்பெண்ணாள்? யமுனையின் இரைச்சல் இன்னும் அதிகமானது! ஆனந்தக் கூச்சலுடன் பொங்கி எழுந்து நீர்த் திவலைகளை அள்ளி வீசி, கண்ணனை அபிஷேகிக்க முற்பட்டாள். வசுதேவரின் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது. அவரது நாசியைத் தொட்டுச் சென்றது யமுனையின் நீர்மட்டம்.  திக்குமுக்காடிப் போனார் கண்ணனின் தந்தை!

ஸ்ரீகிருஷ்ண குழந்தையும் அதைப் புரிந்துகொண்டது. மெள்ள தனது பிஞ்சுப் பாதத்தை குடலைக்கு வெளியே நீட்டி, நீர்ப்பரப்பில் போட்டது. அவ்வளவுதான்... கொதிக்கும் உலையில் நீரூற்றியது போன்று, யமுனையின் ஆரவாரம் அடங்கி அமைதியானது. பேரமைதி பூரணத்துவத்தின் அடையாளம்!

எத்தகையதொரு கொடுப்பினை யமுனைக்கு?! திருவடி தீண்டல் மட்டுமா... தோழர்களோடு கண்ணனின் விளையாடல்களும், யதுகுலத்தவருடனான அவனது அருளாடல்களும் நிகழப்போவது யமுனையின் கரைகளில்தானே!

தசாவதார திருத்தலங்கள்! - 83

மிகப் புனிதம் பெற்றுவிட்டாள் யமுனா. அதனாலன்றோ 'தூய பெருநீர் யமுனைத் துறைவனை’ என்று கண்ணனோடு யமுனை யையும் சேர்த்துப் போற்றுகிறாள் ஆண்டாள். யமுனா நதி மட்டுமல்ல ஒட்டுமொத்த பூமியும் அல்லவா புனிதம் அடைந்தது, கிருஷ்ணாவதாரத்தால்!

ஆமாம்! கண்ணனின் லீலைகள், அருளாடல்கள், அசுரவதங்கள் அனைத்தும் தர்மம் பெருக்கி, பூமகளின் புனிதம் காத்தன.

ரக்கி பூதனையைத் தெரியும்தானே உங்களுக்கு?! முலைப்பாலுடன் விஷம் புகட்டி முகுந்தனைக் கொல்ல வந்த பூதனையைக் குறித்து ஒரு கதை உண்டு.

வாமன அவதாரத்தில் எம்பெருமான் சிற்றுருவம் எடுத்து வந்தார் அல்லவா? பால வடிவினரான அவரைக் கண்டதும், மகாபலியின்  மகளான ரத்னமாலா மகிழ்ந்து போனாளாம். அவளின் தாய்மைக் குணம், அந்தக் குழந்தைக்குப் பாலூட்ட ஆசைப்பட்டதாம். ஆனால், அந்த பாலகனே திரிவிக்கிரமனாக வளர்ந்து, தன் தந்தையை பாதாளத் துக்கு அழுத்தியதும் கோபம் கொண் டாள் ரத்னமாலா. தாய்ப் பாலூட்ட விரும்பிய அவளது தாய்மைக்குணம், 'இவனை விஷம் புகட்டி கொன்றாலும் தகும்’ எனும் எண்ணும் அளவுக்கு அரக்கக் குணமாக மாறியது.

அதன் விளைவு துவாபர யுகத்தில் எதிரொலித்தது என்பார்கள்.

தசாவதார திருத்தலங்கள்! - 83

இங்கே ரத்னமாலா பூதனையாக வந்தாள். குழந்தை கிருஷ்ணனுக்கு விஷப் பாலூட்ட முனைந்தாள். ஆனால், கண்ணன் பாலுடன் அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சியதோடு, பூதனையின் முன்வினையையும் உறிஞ்சி எடுத்து விட்டான். அவளுக்கு நற்கதி கிடைத்தது. அசுரப் பெண்ணுக்கே இப்படியரு பாக்கியம் என்றால், கண்ணனை வளர்த்தெடுத்த யதுகுலம் அடைந்த பேற்றினைக் கேட்கவா வேண்டும்?!

ஆயர்பாடியில் கண்ணன் நிகழ்த்திய லீலைகளை கதை கதை யாய்ப் பாடி வைத்திருக்கிறார்கள் அடியார்கள்.

தயிர் கடையும் அம்மாவிடம் வெண்ணெய் வேண்டி வருவான். ''அம்மா அதென்ன பானைக்குள் 'கர்... புர்...’ என்று சத்தம்?’ எனக் கேட்பான். யசோதைக்கு அவன் திட்டம் தெரியும் என்பதால், அவனை பயம்காட்ட ''பானைக்குள் பூதம்'' என்பாள். கண்ணன் லேசுப்பட்டவனா? ''அப்படியா! அந்தப் பூதத்தை என்னிடம் விட்டுவிடுங்கள்; ஒரு கை பார்க்கிறேன்'' என்றபடி திரண்டு நிற்கும் வெண்ணெயை கைகொள்ளாமல் எடுத்துக்கொண்டு ஓடி ஒளிவான். யசோதைக்கே இப்படியென்றால் ஆயர்பாடியின் மற்ற ஆய்ச்சியர்கள் பாடுகளைச் சொல்லி மாளாது!

தசாவதார திருத்தலங்கள்! - 83

அந்தக் கதையை பெரியாழ்வார் மிக அழகாக விவரிக்கிறார்.

வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை
வெற்பிடை இட்டு அதன்ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
காக்க கில்லோம் உன்மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும் தீமை
புரைபுரையால் இவைச் செய்யவல்ல
அண்ணற்கு கண்ணான் ஓர்மகனைப் பெற்ற
அசோதை நங்காய் உன்  மகனைக் காவாய்

- எனப் பாடுகிறார் பெரியாழ்வார். அதாவது, ''வெண்ணெய் திருடுகிறான். அதாவது பரவாயில்லை. வெண்ணெய் காலியானதும் வெறும் கலத்தை மலைப் பாறைகளில் போட்டு உடைத்து, அந்தச் சத்தத்தில் மகிழ்கிறான்! இந்த சேஷ்டைகளை எல்லாம் எங்கிருந்து கற்றானோ தெரியவில்லை. பலராமனுக்கு தம்பியா இவன்?! புண்ணில் புளியைக் கரைத்து ஊற்றியது போல் இருக்கிறது உன் பிள்ளையின் சேஷ்டைகள் எல்லாம். அவனைக் கொஞ்சம் அடக்கி வை!'' என்று யசோதையிடம் கண்ணனைக் குறித்து ஆய்ச்சியர் புலம்புவதைச் சித்திரிக்கிறது இந்தப் பாடல்!

ப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஸ்ரீகிருஷ்ணனின் பால பருவ விளையாடல்களை! அவற்றை எல்லாம் கேட்கக் கேட்க... அவனைக் குழந்தையாய் தரிசிக்க நம் மனமும் ஆசைப்படும் இல்லையா?!

வாருங்கள் குருவாயூருக்குச் செல்வோம்!

குழந்தை கிருஷ்ணனாக ஸ்ரீகுருவாயூரப்பன் அருளும் அற்புதமான க்ஷேத்திரம் குருவாயூர். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 'தென் துவாரகை’ எனப் போற்றப்படும் இத்தலத்தின் பெருமையை நாரத புராணத்தின் 'குருபாவனபுர மகாத்மியம்’ வெகு அழகாக விவரிக்கிறது.

துவாபர யுகத்தில், 'துவாரகையை ஏழு நாட்களில் கடல் கொள்ளும். அந்த வெள்ளப் பரப்பில் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும்... அதை தேவகுரு பிருகஸ்பதி மூலம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்!’ என்று உத்தவரிடம் அருளினார் ஸ்ரீகிருஷ்ணர்.

குருவும் வாயு பகவானும் அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய இடம் தேடினர். அப்போது கேரளத்தில் தாமரைக் குளக்கரை ஒன்றில் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் அருளியபடி விஸ்வகர்மா நிர்மாணித்த கோயிலில் அந்த விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தனர் (அந்த சிவபெருமான் மம்மியூரில், பார்வதிதேவியுடன் எழுந்தருளியுள்ளார் என்பது ஐதீகம்). இவ்வாறு குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தால் இந்தத் தலம் 'குருவாயூர்’ ஆனது.

நாராயணீயம், பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை ஆகிய ஞானநூல்களும் போற்றும் ஸ்ரீகுருவாயூரப்பன் இந்தக் கலியுகத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்த ஆலயத்தின் 'கம்சவத தூண்’. இதை அமைத்தது, சாட்சாத் ஸ்ரீகுருவாயூரப்பன்!

அதென்ன கதை..?

- அவதாரம் தொடரும்...