சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - கோவை - சரவணம்பட்டி ஸ்ரீகுமரக்கடவுள்

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - கோவை - சரவணம்பட்டி ஸ்ரீகுமரக்கடவுள்

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - கோவை - சரவணம்பட்டி ஸ்ரீகுமரக்கடவுள்
திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - கோவை - சரவணம்பட்டி ஸ்ரீகுமரக்கடவுள்

கொங்கு நகரமாம் கோயம்புத்தூரில், மருதமலையில் குடிகொண்டிருக்கிறான், முருகப்பெருமான். அதேபோல், கோவையில் இன்னொரு மலையும் உண்டு; அது, ரத்தினகிரி மலை. இங்கே, நின்ற திருக்கோலத்தில் அழகுத் திருமுருகன் அற்புதமாகக் கோயில் கொண்டுள்ளான்.

கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது சரவணம்பட்டி. ரத்தினகிரி மலையில் குமரக்கடவுள் கோயில் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிப்பதால், இந்த ஊருக்கு சரவணம்பட்டி எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர்!

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், ரத்தினகிரி மலையே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்குமாம். அந்த மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் சிவ-பார்வதி, திருமால் மற்றும் பூதேவி ஆகியோரின் திருவுருவங்களில் முருகப்பெருமான் திருக்காட்சி தந்தருள்வது சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். அப்போது முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்க, சரவணம்பட்டியில் உள்ள கோயிலில் இருந்து சிவ-பார்வதி, திருமால், பூதேவி ஆகியோர் மலையில் தரிசனம் தருகின்றனர்.  

இதேபோல், தை அமாவாசை நாளில், இங்கு பால் குடம் எடுத்து முருகப்பெருமானைப் பிரார்த்தித்தால், நினைத்த காரியம் யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம், மாங்கல்ய வரம் கிடைக்கப் பெறுவார்கள். இந்த நாளில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்!

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - கோவை - சரவணம்பட்டி ஸ்ரீகுமரக்கடவுள்
##~##
இப்படியாக, வருடம் முழுவதும் விசேஷங்களும் விழாக்களும் இருந்தாலும், பங்குனி உத்திரத் திருநாள்தான் இங்கு அதிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கையில் கூடை கூடை யாகப் பூக்களைச் சுமந்தபடி, காவடி எடுத்தபடி, மலையை வலம் வந்து, பிறகு மலையேறி, அழகுக் குமரனுக்கு பூக்கள் சார்த்தி வழிபடுகின்றனர். அப்போது பல வண்ண மலர்களால், குமரக்கடவுளைத் தரிசிப்பது பெரும் புண்ணியம். இல்லறம் சிறக்கவும் செழிக்கவும் செய்வார், குமரக்கடவுள் என்பது ஐதீகம்!

தவிர, மாதந்தோறும் பௌர்ணமியில் கிரிவலம் வந்து, குமரக்கடவுளைத் தரிசித்தால், ஒரு குறையுமின்றி சீரும் சிறப்புமாக வாழலாம் என்கின்றனர் கோவைப் பகுதி மக்கள்.

பங்குனி உத்திர நன்னாளில், கூடை கூடையாக பூக்களை எடுத்துக்கொண்டு, கிரிவலம் வந்து குமரனைத் தரிசித்து, பூக்களால் அர்ச்சியுங்கள்; மூட்டையெனக் குவிந்துகிடக்கும் துன்பங்களும் பாவங்களும் சட்டென மறைவதை உணர்வீர்கள்!

- ம.பிருந்தா
படங்கள்: வெ.பாலாஜி