Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 25

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்

சித்தம்... சிவம்... சாகசம்! - 25

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்

Published:Updated:
சித்தம்... சிவம்... சாகசம்! - 25
##~##

''ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந் திரங்களெச்சில்
மோதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்
மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொளியுமெச்சில்
ஏதிலெச்சி லில்லதில்லை யில்லையில்லை யில்லையே!’

- சிவ வாக்கியர்

சிவ வாக்கியர்! திருமூலரைத் தொடர்ந்து நாம் அறிந்துகொள்ளப் போகிறவர் இவர். சித்தராக வாழ்வதெற்கென்றே பிறந்தவர் இவர் என்பார்கள். எவ்வளவோ சித்த புருஷர்கள்..! அவ்வளவு பேரையும் காலம் மெள்ள மெள்ளத்தான் சித்தனாக மாற்றியது. குழந்தைப் பிராயம், அதைக் கடந்த வாலிபப் பருவம், பின்பு அதையும் கடந்து இல்வாழ்க்கைக் காலம் என மனிதர்கள் படிப்படியாகத்தான் முதிர்ச்சியுறுகிறார்கள். இதில், குழந்தைப் பிராயத்துக்குப் பாவ புண்ணியங்கள் இல்லை. ஏனென்றால், இது ஏதுமறியாப் பருவம்.

இந்த ஏதுமறியாப் பருவத்துக்கு உணர்ச்சிகளே கணக்கு. இந்த உணர்ச்சியின்பாற்பட்டு பாவம் செய்தாலும் புண்ணியம் செய்தாலும், அதை எவரும் பொருட்படுத்துவதில்லை. அடுத்து, விடலை கடந்த வாலிபப் பிராயம். ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற தைரியமும், பாய்ந்து வரும் காளையை அடக்கும் சாதுர்யமும் கலந்த பருவம். ஆனால், இந்தப் பிராயத்தில் செய்யும் தவறுகள் பாதிப்பை ஏற்படுத்தும்.

இப்படி மானுடப் பருவங்களுக்குப் பின்னாலே அவற்றுக்கேற்ற தன்மைகள் உள்ளன. இந்தத் தன்மைகளுக்கு ஆட்பட்டே மனிதன் வாழ்ந்தாக வேண்டும். ஆனால், எதிலும் விதிவிலக்குகள் இருப்பதுபோல, இதிலும் விதி விலக்கானவர்கள் இருக்கவே செய்கின்றனர். அப்படி ஒரு விதிவிலக்கான சித்த புருஷர் சிவ வாக்கியர்.

இந்த மண்ணில் வாழ்வதற்காகப் பிறக்கும் பிள்ளைகள் பொதுவாகக் 'குவா... குவா’ என்றுதானே அழும்? இந்தப் பிள்ளையோ 'சிவா சிவா’ என்று அழுதது. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..? அப்படி அழுததே அவரது பெயருக்கான காரணமாகிவிட்டது. எப்போதும் 'சிவா சிவா’ என்று சொன்ன இந்தப் பிள்ளைக்கு 'சிவ வாக்கியன்’ என்று பொருத்தமாகப் பெயரிட்டுவிட்டனர்.

''அது எப்படி, ஒரு குழந்தை பிறக்கும்போதே இத்தனைத் தெளிவுடன் 'சிவா சிவா’ என அழும்? தான் யார், தன்னைப் பெற்ற தாய்- தந்தை யார்? எங்கு பிறந்திருக்கிறோம்? எதற்கு பிறந்திருக்கிறோம்? - இப்படி எந்த ஒரு கேள்விக்கும் விடை தெரிந்திராத நிலையில், தெரிந்துகொள்ள முடியாத நிலையில், அதாவது மனம் என்கிற ஒன்றே உருவாகியிராத நிலையில், அது எப்படி 'சிவ சிவா’ எனச் சொல்ல முடியும்? அது நாவின் பிறழ்ச்சியான ஒலியாகத்தான் இருக்கும்!'' என்று சிலர் அதைப் பற்றிக் கருத்து கூறினர். ஆனால், பிள்ளை வளர வளர, அதனிடம் தென்பட்ட விஷயங்கள், அப்படிக் கூறியவர்கள் வாயை அடைத்துவிட்டன.

சித்தம்... சிவம்... சாகசம்! - 25

சிவ வாக்கியர் பிறந்த இடத்தின் அருகே ஒரு சிவாலயம் இருந்தது. அந்த ஆலயத்துக்கு சிவ வாக்கியரை அவரது தாய் தூக்கிச் சென்ற வேளையில், உள்ளிருந்த சிவலிங்கத் திருமேனியை உற்றுப் பார்த்த பிள்ளை, 'சிவா சிவா’ என்றது. 'ஆம்... இதுவே சிவம்..’ என்றாள் தாய். பிள்ளை உடனே கை தட்டி 'சிவா சிவா’ என்று ராகம் போட்டுப் பாடத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டவர்கள் 'இது விட்ட குறை, தொட்ட குறை’ என்றனர்.

முன் ஜென்மத்தில் பரம சிவபக்தனாக இருந்து, அதே பிரக்ஞையோடு உயிர் பிரிந்திருந்தால்தான், இப்படி ஒரு நிலை குழந்தைப் பிராயத்தில் ஏற்பட முடியும் என்றும் சிலர் கூறினர்.

- சிவ வாக்கியர் குறித்து இப்படி பல வியாக்யானங்கள்.

அவரோ மற்ற எல்லாக் குழந்தைகளையும் போல ஓடியாடி விளையாடாமல், அந்தக் கோயிலே கதியெனக் கிடந்தார். கோயில் அர்ச்சகருக்கு உதவியாகப் பூக்கள் பறிப்பது, ஸ்வாமி அபிஷேகத்துக்கு உதவுவது என்று செயல்பட்டவர், சில காலத்திலேயே அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொண்டார்.

'ஏனப்பா திருப்பணி செய்வதை நிறுத்தி விட்டாய்?’ என்று சிலர் கேட்டனர்.

'உங்களுக்குத்தான் இது திருப்பணி; எனக்கில்லை. எனக்குள் இருக்கும் ஈசனே வெளியேயும் இருக்கிறான். இருவரும் ஒருவரே! நான் வெளியே உள்ளதைத் துதிக்கும்போது உள்ளிருப்பதை உணராத ஒரு நிலை உருவாகிவிடுகிறது. எனக்குள் அவனிருக்க எனக்கெதற்கு வெளி?'' என்றார்.

மிகச் சிறிய வயதிலேயே சிவ வாக்கியர் கேட்ட இந்தக் கேள்வியில் உள்ள உட்பொருளைப் புரிந்துகொள்ளும் சக்தி பலருக்கு இல்லை. சிலர் தவறாகப் புரிந்து கொண்டதோடு, 'கொஞ்சம் விட்டா 'நானே சிவன்’ என்றுகூடக் கூறுவாய் போலத் தெரிகிறதே?'' என்று கோபமாய்க் கேட்டனர்.

''அதிலென்ன சந்தேகம்? நான் சிவன்தான். நான் மட்டுமா சிவன்? நீங்களும்தான்..!’ என்று அவர் பதில் கூறவும், சிவ வாக்கியரை புத்திகெட்ட ஒரு பித்தனாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

சிவ வாக்கியருக்கும் இப்படித் தன்னை விமர்சிப்பவர்களுக்கு நடுவில் காலத்தைக் கழிக்க விருப்பமில்லை. ஏதோ ஒரு சக்தி அவரை காசி நோக்கித் தள்ளிச் சென்றது. அதற்குக் காரணமும் இருந்தது.

காசியில்தான் சிவ யோகிகள் அதிகம். அவர்களில் ஒருவர் தொடர்பு ஏற்பட்டாலும் போதும்; தான் உணர்ந்தவற்றை அவரிடம் கூறி, தன்னை மேலும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று சிவ வாக்கியர் கருதினார். பெற்றோர்களாலும் ஓரளவுக்கு மேல் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சித்தம்... சிவம்... சாகசம்! - 25

'என்மேல் வைக்கும் பாசத்தை அந்த ஈசன் மேல் வையுங்கள். அவனை வெளியில் தேடாதீர்கள். உங்களுக்குள் தேடுங்கள். தேடிக் கண்டுபிடித்து, அவனிடம் சரணடைந்து விடுங்கள். அப்படிச் சரணடைவதுதான் என் நோக்கம். நான் என்னுள் அவன் இருப்பதை உணர்ந்துவிட்டேன். ஆனால், என்னால் உங்களுக்குள் அவன் இருப்பதை உணர்த்த முடியவில்லை. எதனால் அது முடியவில்லை என்பதைக் கண்டறிந்து, எப்படியாவது அனைவருக்கும் நான் அந்த ஈசனை உணர்த்துவேன். அதுவே என் நோக்கம்!'' என்று பெற்றோரிடம் கூறிவிட்டு, காசிக்குப் புறப்பட்டுவிட்டார்.

அது, இந்தக் காலமா என்ன... ஒரு ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் இரு தினங்களில் காசியை அடைந்துவிட! அந்த நாட்களில் நடந்தோ, அல்லது வண்டி கட்டிக்கொண்டோதான் செல்ல வேண்டும். வழியில் எது வேண்டுமானால் ஏற்படலாம். பத்து பேர் காசிக்குப் புறப்பட்டால், ஒருவர்தான் அந்த ஊரைச் சென்று சேர்வார். மற்றவர்கள் வழியிலேயே மடிந்து முடிவார்கள். சிவ வாக்கியரோ ஸ்திதப் பிரக்ஞை கொண்டவர். தவிர, திருவோடு பிறந்தவர் ஆதலால், அவரது பயணத்தில் பெரிதாக எந்த இடையூறும் ஏற்படவில்லை. அத்தோடு, அவருக்குக் காசியில் பல ஞான அனுபவங்கள் ஏற்பட வேண்டும் என்பது விதி.

எப்போதும் விதி வழியேதான் வாழ்வு செல்லும். ஒரு விதி தனக்கேற்ப பஞ்ச பூதங்களின் மேலும் ஆதிக்கம் செலுத்தும். விதிப்படி ஒருவன் கொல்லப்பட வேண்டும் என்றிந்தால், கொலைகாரன் தேடி வருவான். கொலையாக வேண்டியவனும் அவனைத் தேடி அடைவான். அப்போது சூழலும் அமைதியாக வேடிக்கை பார்க்கும்.

உலகின் மாறாத அதிசயம், விதியின் செயல்பாடுதான்! அந்த விதி சிவ வாக்கியரை ஒரு மூன்றாண்டு நடைப்பயணத்தில் தாடியும் மீசையுமாக, யோகிக்கு உண்டான தோற்றத் தோடு கங்கைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது.

இந்தப் புண்ணிய மண்ணில் எவ்வளவோ நதிகள்! எதற்கும் இல்லாத சிறப்பு கங்கைக்கு இருப்பது எதனால் என்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். பொதுவாக, ஒரு நதி உருவாக நிச்சயம் ஒரு மலை வேண்டும். மலைமேல் பொழியும் மழைதான் விசையோடு வீழ்ந்து ஓடி, நதியாகிறது. இல்லாவிட்டால், தேங்கி ஏரி, குளமாகும் சாத்தியமே அதிகம். அந்த வகையில், மலை என்பது மண்மிசை மிக உயரமான ஒன்று மட்டுமல்ல; ஆற்றல் எனும் சக்தியை மிகுதியாகத் தன் வசம் கொண்டிருக்கும் ஒன்றும்கூட! அதிலும், இமயமலை பிற மலைகளைப் போலக் கல்லும் மண்ணுமானது அல்ல; அது பனியால் மூடப் பட்ட ஒரு மலை. பிற மலைகள் மேல் விழும் மழையானது, அந்த மலையின் மண்ணின் குணத்தோடு தாவரங்களின் தன்மையையும் சுமந்துகொண்டு மண்ணுக்கு வரும்.

ஆனால், இமயத்தில் மண்ணின் தன்மைக்கு இடமே இல்லை. தாவரங்களைத் தழுவும் தன்மைக்கும் இடமில்லை. குளிர்ந்த பனிக்கட்டியானது சூரியனின் கிரணம் பட்டு உருகி வரும் நீராகவே கங்கை நீர் உள்ளது. மற்றவை பெருகி வருபவை என்றால், கங்கை நீர் உருகி வருவதாகும். பெருகி வருவதுள் மண் குணம்; உருகி வருவதனுள் சூரியனின் உஷ்ண குணம். இதனாலேயே இந்த நீரில் கெடாத தன்மை அதிகம். அடுத்து, பாவம் என்னும் அழுக்கை இந்தத் தீயின் குணம் எரித்துவிடுகிறது.

கங்கையை நுட்பமாக ஆய்ந்து, விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் நீராடி, பிறவித் தளையை அறுத்தெறிய வருபவர்கள் மிக அதிகம். அதிலும், இது மாயை மிகுந்த வாழ்வு என்று தெளிந்த யோகிகள், கங்கையையும் அதன் கரையையும் தங்கள் வாழ்விடமாகக் கருதினார்கள். அப்படி எண்ணினால் மட்டும் போதாது; கங்கையை எப்படி நோக்க வேண்டும் என்பதன் பின்னாலே ஒரு கதையும் உண்டு.

ஒரு கோணத்தில் அது ஒரு வேடிக்கையான கதை; இன்னொரு கோணத்திலோ மிகப்பெரிய பொருட்செரிவு கொண்டது! இந்தக் கதை, கயிலாயத்தில் அந்த ஆதிசிவன்- பார்வதியிடம் இருந்தே தொடங்குகிறது.

கயிலாயத்தில் பார்வதிதேவி யோக நிமித்தம் கண்களை மூட முயலும்போதெல்லாம், பூவுலகில் இருந்து பக்தர்கள் துன்பம் தாளாம லும், சரியான வழி தெரியாமலும் உடைந்து அழுது, 'இறைவா, காப்பாற்று!’ என்றும், 'தாயே, காப்பாற்று!’ என்றும் கைகளை உயர்த்திப் பிரார்த்திக்கும் கூக்குரல்தான் கேட்கிறது. இந்தக் கூக்குரல் பார்வதியையே ஆச்சரியப்படுத்தி, ஈசனிடம் விவாதம் புரியவும் காரணமாகிவிடுகிறது.

''பிரபோ... என்னால் தியானத்தில் மூழ்கவே முடியவில்லை. பூவுலகில் இருந்து ஒருவர் மாற்றி ஒருவர் குரல் கொடுத்தபடியே உள்ளனர். அங்கே குறை இல்லாத மனிதர்களே இல்லை எனத் தோன்றுகிறது. உங்கள் படைப்பில் மனிதக் கூட்டம் இப்படி அல்லல் படலாமா?'' என்று கேட்கிறாள்.

''அதற்கு நான் என்ன செய்ய முடியும் தேவி? அவரவர் பாவத்தை அவரவர் அனுபவிக்கத் தானே வேண்டும்?'' என்று திருப்பிக் கேட்கிறார் ஈசன். பார்வதிதேவியிடம் இதனால் அதிர்ச்சி!

- சிலிர்ப்போம்...