சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

நாரதர் கதைகள் - 11

இது நான்கு வேத சாரம்எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

##~##

ரு மோசமான அழுகுரல் எங்கிருந்தோ மிக நீண்டதாய், மிக சோகமாய் ஒலித்தது. வானில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நாரதர் காதில் அது விழுந்தது. எங்கிருந்து வருகிறது என்று ஆவலாகப் பார்த்தார். அது நரகத்திலிருந்து வருகிறது என்று தெரிந்து கொண்டார். நரகத்தின் பக்கம் போனார்.

கோடிக்கணக்கான மக்கள் உள்ளே பல்வேறு வேதனைகளில் உழன்று கொண்டிருந்தார்கள். அழுதுகொண்டி ருந்தார்கள். தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த இடம் முழுவதும் மீறியபடி ஒரு குரல் அதிக சத்தத்தோடு இருந்தது. யார் என்று பார்த்தார். முற்பிறப்பில் அந்தணராக பிறந்தவனின் ஆன்மா அங்கு வேதனைப்பட்டுக்கொண்டு இருப்பதைக் கவனித்தார். என்ன பாவம் செய்திருக்கிறான். என்ன இடத்தில் இருக்கிறான். இன்னும் எத்தனை நாள் இந்த வேதனை என்று கவனிக்கும்போது, இன்னும் பல நூற்றாண்டுகள் அவன் இந்த வேதனையில் வாழ வேண்டும் என்பது நாரதருக்குத் தெரிந்தது.

நாரதர் கதைகள் - 11

அவன் நாரதரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான். ''என்னால் ஒன்றும் செய்ய முடியாதப்பா, நீ செய்த தீங்குகள் உன்னை அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா? உன்னால் கடவுள் நாமத்தைக்கூட இங்கு சொல்ல முடியவில்லையே, அவ்வளவு வேதனைப்படுகிறாயே. என்ன செய்வது. நான் உனக்காக பிரார்த்தனை செய்கிறேன்'' என்று கண்மூடி நாராயண ஜபம் செய்தபடி நரகத்தை விட்டு வெளியே வந்தார் நாரதர். அவன், அவர் போன திக்கை நோக்கி வணங்கினான். அவனுக்குப் பெயர் கவுற்சனன்.

அவன் காஞ்சிபுரத்தில் அந்தணனாகப் பிறந்தவன். முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயனாக, நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல வசதியான வாழ்க்கை அவனுக்குக் கிடைத்தது. ஆனால் படிப்பறிவை வளர்த்துக் கொள்ளாமல், நல்லவர்களோடு கூடியிராமல், கொஞ்சம் நஞ்சம் படிப்பையும் மற்றவருக்குக் கெடுதல் செய்வதில் அதிகம் செலவழித்தான். திருடினால் இன்னும் பணக்காரனாக ஆகலாம் என்று தீர்மானித்தான். எப்போது திருடினால் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கலாம் என்று சிந்தித்து ஜோதிட நூலைக் கற்றான். அதில் நிபுணனானான். அந்த வித்தையை மற்றவர் பொருளை அபகரிப்பதிலேயே உபயோகப்படுத்தினான்.

நாரதர் கதைகள் - 11

அப்படிக் களவு செய்து சம்பாதித்த பொருளை விலை மாதர்களோடும் சூதாட்டக்காரர்களோடும் செலவழித்தான். தன்னுடைய விருப்பத்துக்குக் குறுக்கே வருபவர்களை அடித்து உதைத்தான். ஏளனம் செய்தான். தன்னைக் கண்டு எல்லோரும் நடுங்க வேண்டும் என்று ஆர்ப்பரித்தான்.

இத்தகைய கொடிய அந்தணனுக்கு கற்பின் திலகமாக மனைவி அமைந்தாள். அவன் மூலம் அவளுக்கு ஓர் ஆண் மகன் பிறந்தான். குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் நோயுற்று கவுற்சனன் இறந்துவிட்டான். அவன் இறந்தது கண்டு அக்கம்பக்கத்தார் கோயிலுக்குப் போய் பூஜை செய்தார்கள். கடவுளைக் கும்பிட்டார்கள். 'பாவி ஒழிந்தான்’ என்று சிந்தித்தார்கள். ஒரு ஆத்மாகூட அவனுக்காக வருதப்படவில்லை. அவன் மனைவி மௌனமாக அந்த இழப்பை தாங்கிக்கொண்டாள். அவள் சந்தோஷப்படவும் இல்லை; வருத்தப்படவும் இல்லை. இது விதி என்று மௌனமாக இருந்தாள். வருத்தப்படவேண்டிய யாரும் வருத்தப்படாததால் செய்த பாவங்கள் அதிகமானதால், பலரை தூஷித்ததால், அடித்து உதைத்ததால், பொருள் திருடியதால் நரகத்தின் மிகக் கொடுமையான தண்டனைக்கு ஆட்பட்டான். அவன் செய்த பாவங்களைப் போல பல நூறு மடங்கு வேதனைகள் அவன் மீது பாய்ந்தன. உடம்பு இருக்கிறது என்ற நினைப்பை ஏற்படுத்தி, அந்த உடம்புக்கு தண்டனையும் நரகத்தில் கொடுத்தார்கள். கசையால் அடித்தார்கள். கத்தியால் குத்தினார்கள். உடம்பே இல்லாதபோதும் அவற்றையெல்லாம் அனுபவிப்பதாக பயந்து அரற்றினான். அந்த பயம்தான் அவனைப் பெருங்குரல் எடுத்து அழத் தூண்டியது.

நாரதர் அவனைப் பற்றி மனம் வருந்தியவாறே நடக்க, கீழே அவனுடைய மகன் நதிக்கரை ஒன்றில் நீராடி, தந்தைக்கு தர்ப்பணங்கள் செய்வதைக் கவனித்தார். அவனுக்கு அருகே வந்தார். அவனுக்கு மட்டும் தெரியும்படியாக கரையில் நின்றார். அவன் ஓடோடி வந்து அவர் காலில் விழுந்தான்.

நாரதர் கதைகள் - 11

''நாரதரே... நாரதரே...'' என்று வணங்கினான். ஆமென்ற நாரதர், அவனை உற்றுப் பார்த்தார்.

ஒரு கயவனுக்கு மகனாகப் பிறந்தாலும் அவன் மிக உத்தமனாக இருந்தான். நல்ல தாயால் வளர்க்கப்பட்டு, நல்ல விஷயங்கள் போதிக்கப்பட்டு நல்வழியில் வாழ்ந்து வந்தான். பலருக்கும் உதவி செய்யவே பிறவி எடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டான். அவ்விதமாகவே கேட்டாலும், கேட்காது போனாலும் உதவிகள் செய்தான். அதேசமயம் ஊரார் அவன் தந்தையைப் பற்றி அவனிடம் நினைவுகூர்வார்கள்.

''உன் தந்தையைப் போல, ஒரு அயோக்கியனை நான் பார்த்ததில்லை. என் சொத்துக்கள் எல்லாம் போயிற்று அய்யா'' என்று பெரிதாய் குறைப்படுவோர் முன்பு கைகூப்பி நின்றான். தந்தையை மன்னித்து விடும்படி வேண்டினான். யாரிடம் தந்தையைப் பற்றி குறை கேட்டாலும் நின்று கவனித்து செவிமடுத்து, 'அய்யோ! என் தந்தை இவ்வளவு கெட்ட பெயர் வாங்கியிருக்கிறாரே’ என்று வேதனையோடு இருப்பது அவன் வழக்கமாகப் போயிற்று,

நதிகளில் நீராடுவதும், கோயிலுக்குப் போவதும், புண்ணிய காரியங்கள் செய்வதும் தன் தந்தைக்கு உதவி செய்யுமா என்ற எண்ணத்தோடே செய்தான்.

நாரதர் அவனை ஆசீர்வதித்தார்.

''உன் தந்தை நரகத்தில் மிகவும் வேதனைப் படுகிறார். சொல்லொண்ணா துயரம். எனக்கே மனம் கலங்கிப் போயிற்று. அந்த அழுகைக் குரலைக் கேட்டுத்தான் நான் அந்தப்பக்கம் போனேன். அது உன் தந்தையின் குரல் என்று தெரிந்தது. அவரை விசாரிக்காமலேயே அவருடைய வாழ்வு நிலைமையை, இப்போது இருக்கிற அவஸ்தையை நான் புரிந்து கொண்டேன்'' என்றார்.

''ஊராரின் பழிச் சொல்லே எனக்கு மிகுந்த வேதனையைக்  கொடுத்தது. இப்போது நீங்கள் வேறு வந்து என் தந்தை வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லும்போது  மனம் பதைக்கிறது. இதற்கு மாற்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். யார் மூலம் அவருக்கு விடியும் என்ற உபாயத்தை நீங்கள் சொல்ல வேண்டும். அவர் யாராக இருப்பினும் அவர் பாதம் பணிந்து வேண்டி அவருக்கு அடிமையாக வேலை செய்து என் தந்தையை நரகத்திலிருந்து மீட்பேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்'' என்று மண்டியிட்டு கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

நாரதர் மனம் கனிந்தார்.

''இது பெரிய விஷயமில்லை. நல்ல பிள்ளையாக நீ பிறந்திருக்கிறாய், நல்ல தாயால் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இந்த நல்ல குணமே உன் தந்தையைக் காப்பாற்றும். ஆனால், செய்த

நாரதர் கதைகள் - 11

பாவங்கள் அதிகம் என்பதால், உடனடியாக நிவாரணம் பெற, திருக்குற்றால மலைக்குப் போய் அங்கே குற்றாலநாதரை சேவித்து உத்தராயன காலத்திலிருந்து ஆறு மாத காலம் வரை அந்தக் குற்றால அருவியில் தினந்தோறும் குளித்து, பூஜை செய்து, சிவனாரை வணங்கி உன் தந்தையின்  பாவங்கள் போக வேண்டும் என்று வேண்டிக்கொள். ஆறாவது மாத முடிவில் கையில் நீர்  எடுத்து, 'இந்த ஆறு மாதமும் நான் செய்த சிவபூஜை ஆடிய நீராட்டம் எல்லாம் என் தந்தைக்குப் போக வேண்டும்’ என்று மனமார நீர் வார்த்து தர்ப்பணம் செய்து விடு. அந்தப் புண்ணியம் உன் தந்தைக்குப் போனால் அந்த க்ஷணமே உன் தந்தை நரகத்திலிருந்து விடுபடுவார். இதைச் செய்; உனக்கு மேலும் புண்ணியம் கிடைக்கும்'' என்று சொல்ல, அவன் அவ்விதமே செய்து தன் தந்தையை துக்கத்திலிருந்து விடுவித்தான்.

இருக்கும்போது மட்டுமே நல்ல பிள்ளைகள் உதவுவதில்லை; இறந்த பிறகும் ஒருவருடைய ஆன்மா குணமடைய, அது நேர்வழியில் போக, அதற்கு நல்ல பிறப்பு கிடைக்க, நல்ல பிள்ளைகள் பெறவேண்டும். நல்ல பிள்ளைகள்தான் அந்த மாபெரும் உதவியையும் செய்ய முடியும். நல்ல பிள்ளை பெற்றவனுக்கு சூட்சுமமாக வழி சொல்லிக் கொடுத்து, தன் தந்தையை மீட்கிற உபாயத்தை சொல்லி, அந்த நல்ல பிள்ளைக்கு மேலும் பெருமை சேர்த்த நாரதருடைய மகிமை மிகப் பெரியது. பிறருக்கு உதவி செய்வதே வாழ்க்கை என்ற அந்தத் தன்மை மிக அரியது.

- தொடரும்...