
ஆலயம் ஆயிரம்!முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
##~## |
தஞ்சையில், கி.பி.1014-ஆம் வருடம், சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்ட முதலாம் ராஜேந்திரசோழன், முதல் பத்து வருடங்கள் வரை தஞ்சை அரண்மனையிலேயே தங்கி, ஆட்சி புரிந்து வந்தான். மலேசியா, இந்தோனேஷியா, பாலித்தீவுகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள், போர்னியோ போன்ற கிழக்காசிய நாடுகளை வெற்றி கண்டு, அங்கெல்லாம் புலிக்கொடியை பறக்கச் செய்த மாபெரும் வெற்றியாளன் அவன்.
பின்னர், ராஜேந்திர சோழன் புதியதொரு தலைநகரை நிர்மாணித்தான். அங்கே, பெருவுடையார் கோயிலைப் போலவே, அதாவது தஞ்சாவூரில் உள்ள பெரியகோயிலைப் போலவே சிவாலயம் ஒன்றை எடுப்பித்தான். அந்த நகரத்துக்கு நீராதாரம் வேண்டும் என்பதால், மிகப்பெரிய ஏரி ஒன்றையும் வெட்டுவித்தான்.

அந்தக் காலகட்டத்தில், அவனின் போர்த்தளபதிகளும் வீரர்களும் வங்கதேசம் வரை படையெடுத்து வென்றனர். கங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான பொற்குடங்களில் புனிதநீரை எடுத்து வந்தனர். அந்தப் புண்ணிய நீரால், தான் நிர்மாணித்த புதிய நகரத்தைப் புனிதப்படுத்தினான். அங்கே, தான் கட்டிய கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் கங்கை நீரால் அபிஷேகம் செய்து, வணங்கினான்.

அந்த மிகப் பெரிய ஏரியில் கங்கை நீரைக் கலந்து, ஏரியைப் புனிதப்படுத்தினான். அதற்குச் சோழகங்கம் எனப் பெயரிட்டு மகிழ்ந்தான். சிவாலயத்துக்கு 'கங்கை கொண்ட சோழீச்சரம்’ எனப் பெயர் சூட்டினான்.
இன்றைக்கும் பார்த்துப் பிரமிக்கத்தக்க அளவில் பிரமாண்டமாகத் திகழ்கிறது கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயில். ஆனால் என்ன.... ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கோயில், இன்றைக்குப் பாதியளவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அந்நியப் படையெடுப்புகள், கிழக்கிந்திய- ஆங்கிலேயக் கம்பெனியாரின் தாக்குதல்கள், பிரெஞ்சுப் படையினரின் அட்டூழியம், கீழணை கட்டுவதற்காக ஆங்கிலேயப் பொதுப்பணித் துறையினர் வெடி வைத்துத் தகர்த்தது எனப் பல காரணங்களால், கோயிலின் கட்டடப் பகுதிகளும் சிற்பங்களும் அழிந்துபோயின. ஆனாலும், எஞ்சியிருப்பவையே மாபெரும் பொக்கிஷங்களாக, பிரமிப்பின் உச்சகட்டமாகத் திகழ்கின்றன.
கோயில் விமானத்தின் தென்புறம் தேவகோஷ்டத்தில் திருமகளின் சிற்பம், சிற்பியின் அதிஅற்புதப் படைப்புக்குச் சான்று! திருமகள் என்பவள், பண்டைய காலத்தில் தாய்தெய்வமாகப் போற்றி வணங்கப்பட்டதாகச் சொல்கின்றன, கல்வெட்டுகள். மலர்ந்த தாமரைப் பூவின்மீது தாயார் அமர்ந்திருக்கிறாள்.

கருத்த சூல் கொண்ட மேகங்கள் மழையைப் பொழியும். அதனால், அங்கே வளமையும் செழுமையும் அதிகரிக்கும். இதைச் சுட்டிக்காட்டுவதற்காக, தாமரை மீது திருமகள் அமர்ந்திருக்க, மேலே உள்ள இரண்டு யானைகளும் நீரைச் சொரியும்படி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. யானைகள், சூல் கொண்ட கருமேகங்களின் குறியீடு. இரண்டு யானைகளின் உடலானது பாதியாகவும், மீதியாக மேகங்களின் தோற்றமும் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு நகரவே தோன்றாது, நமக்கு.

ஸ்ரீகஜலட்சுமிக்கு அருகில் உள்ள வாயிலையட்டி இரண்டு பிரமாண்ட துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. துவாரபாலகரின் காலடியில், புழுவைப் போலத் திகழும் பாம்பு ஒன்று, தன் வாயில் யானை ஒன்றைக் கவ்வி விழுங்குவது போன்ற காட்சியைப் பார்க்கலாம். சுமார் 15 அடி உயரம் உள்ள துவாரபாலகர் சிற்பம், மிரட்டலான வேலைப்பாடு! இப்போது உண்மையான யானையின் அளவிலேயே அந்த யானைச் சிற்பத்தையும் கணித்தபடி பார்த்தால், மிரண்டே போவோம் நாம். அந்த துவாரபாலகர் தன் கையை உயர்த்தி, விரல் சுட்டி, ஈசனே மிகப் பெரியவன், அவன் ஆகாசமூர்த்தி என்பதைச் சொல்லாமல் சொல்கிற அழகே அழகு!
விமானத்தின் தென்புற தேவகோஷ்டத்தில் இன்னுமொரு சிற்பம்... ரிஷபத்தின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்தபடி உமையருபாகன் நிற்கும் சிற்பம், சிற்பக்கலையின் மேன்மையை எடுத்துரைக்கிறது. அந்தக் கோஷ்டத்தை அடுத்து இருக்கிற மாடத்தில், கையில் மழுவையும் சங்கையும் ஏந்தியபடி சிவ-விஷ்ணு... அதாவது ஹரிஹரனின் திருவுருவத்தைத் தரிசிக்கலாம். இந்தச் சிற்பத்தில், ஹரிஹரனின் வலதுபுற திருமுகத்தையும் இடதுபுற திருமுகத்தையும் உற்றுக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?

கங்கைகொண்ட சோழபுரம் எனும் அற்புதமான தலத்துக்கு வந்து, அந்தக் கோயிலில் உள்ள இந்தச் சிற்பத்தைத் தனித்தனியே கூர்ந்து பாருங்கள். இரண்டு வேறுபட்ட முகபாவங்களும் அந்த ஒருமுகத்தில் தெரிவது போன்று வடித்திருப்பதைப் பார்த்து ரசிக்கலாம்; வியக்கலாம்!
ஸ்ரீவிமானத்தின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் ஸ்ரீஆடல்வல்லானின் திருவடிவம், ஈடு இணை இல்லாத சிற்ப அழகு! திருவாலங்காட்டுத் திருத்தலத்தில் ஈசன் நடனமாடுகிறான் என்பதைக் காட்ட, ஆலமரக்கிளை ஒன்று, மேலே காட்டப்பட்டுள்ளது. அங்கே, திருநடனம் புரியும் ஈசனின் முத்துப்பற்கள் அப்படியே ஜ்வலிக்கின்றன.
ஆனந்தத்தின் உச்சத்தில், மகிழ்ச்சி முழுதும் பரவியபடி அந்த அருட்பார்வையும் திருமுகமும் வெளிப்படுத்துகிற உணர்ச்சிப் பெருக்கினைச் சொல்லில் வடிக்க வார்த்தைகளே இல்லை.
சிவனார் மகிழ்ச்சியும் சிரிப்புமாக இருக்கிறார் என்றால், ஸ்ரீகாளிதேவியோ தன் முகத்தில் மொத்தக் கோபத்தையும் குவித்தபடி இருக்கிறாள்.
- புரட்டுவோம்