Election bannerElection banner
Published:Updated:

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!
பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பயணம்... பரவசம்! - 17லதானந்த்

##~##

கௌரி குண்ட்- கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியை கேதார்நாத்தின் நுழைவாயில் என்றே சொல்லலாம். இந்தப் பெயரில் உள்ள கௌரி என்பது பார்வதிதேவியின் இன்னொரு திருநாமம்தான். இங்கே வெந்நீர் குளம் ஒன்றும் குளிர்நீர் குளம் ஒன்றும் இருக்கிறது. இவற்றில் நீராடினால் பாவங்களும் துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. கௌரிதேவிக்கு ஓர் ஆலயமும் இங்கே உண்டு. இங்குள்ள குளத்தில் பார்வதி நீராடிக்கொண்டிருந்தபோது, விநாயகர் காவல் இருந்தாராம். அப்போது சிவபெருமான் அங்கே வர, விநாயகர் அவரைத் தடுத்தாராம். இதில் கோபமுற்ற சிவன், விநாயகரின் தலையைக் கொய்துவிட்டாராம். பின்னர், தவறுதலாக யானையின் தலை விநாயகருக்குப் பொருத்தப்பட, ஆனைமுகக் கடவுள் ஆனார் விநாயகர். மேலும், இந்த இடத்தில்தான் பார்வதிதேவி தவம் இருந்து சிவனின் அன்பைப் பெற்றார் என்றும் தலபுராணம் சொல்கிறது.

சிவனும் பார்வதியும் 'திரியுக் நாராயண்’ என்ற இடத்தில் இருக்கும் விஷ்ணு ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டார்கள் என்றும், மகாவிஷ்ணுவே திருமண விழாவில் கலந்துகொண்டு நடத்தி வைத்தார் என்றும் தல வரலாறு சொல்கிறது. அத்துடன், திருமணத்தின்போது மூட்டப்பட்ட வேள்வித் தீ இன்று வரை ஆலயத்தின் முன் தொடர்ந்து எரிந்து வருவதாகவும் ஐதீகம். இதனால் இந்தக் கோயிலை 'அஹண்ட் தூனி’ ஆலயம் என்று அழைக்கிறார்கள். அஹண்ட் தூனி என்றால் 'நிரந்தரமான நெருப்பு’ என்று அர்த்தம். மூன்று யுகங்களாக அணையாமல் நெருப்பு எரிவதால்தான் 'திரி யுக் நாராயண் ஆலயம்’ என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த அக்னிகுண்ட சாம்பலைப் புனிதப் பொருளாகச் சேகரித்துச் செல்கின்றனர்.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

கோயிலின் கர்ப்பக்கிரஹத்தில் 2 அடி உயரம் உள்ள நாராயணர் விக்கிரகமும், அவருக்கு இடதுபுறம் லட்சுமியும், வலதுபுறம் சரஸ்வதியும் காட்சி தருகிறார்கள். பத்ரி நாராயணர், சீதாராமர், குபேரர் திருவுருவங்களும் இருக்கின்றன. மணக்கோலத்தில் சிவனும் பார்வதியும் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்கள். கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கும் நாராயணரும் இருக்கிறார்.

கௌரி குண்ட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மலை நகரமே சீதாப்பூர். அன்றைய இரவு நாங்கள் அங்குதான் தங்கினோம். ஓங்கி உயர்ந்த மலைகள் மற்றும் ஆழமாய்ப் பாய்ந்தோடும் ஆறுகளுக்கு அருகில் அற்புதமாக அமைந்திருக்கிறது சீதாப்பூர். கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் யாத்ரீகர்கள் அவசியம் தங்கி மகிழும் விதத்தில் இருக்கிறது இவ்வூர்.

கரிய மாமுகில் படலங்கள் கிடந்தவை
      முழங்கிடக் களிறென்று
பெரிய மாசுணம் வரையெனப் பெயர்தரு  
  பிருதியெம் பெருமானை,  
வரிகொள் வண்டறை பைம்பொழில்  
  மங்கையர் கலியன தொலிமாலை
அரிய இன்னிசை பாடுநல்லடியவர்க்
  கருவினை யடையாவே'

என்ற திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தை முணுமுணுத்தபடியே இரவு அங்கே உறங்கிப்போனோம். மறுநாள் அதிகாலையில், பத்ரிநாத் நோக்கிய எங்கள் பயணம் ஆரம்பமானது.

விடியற்காலையிலேயே எழுப்பி வெந்நீர் கொடுத்தார்கள். குளித்து முடித்து பத்ரிநாத் நோக்கிக் கிளம்பினோம். வழியிலேயே சுமார் 100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது ஜோஷிமட். கிட்டத்தட்ட நண்பகலில் ஜோஷிமட் சென்று அடைந்தோம்.

பக்தர்கள் எம்பெருமானிடமும், எம்பெருமான் பக்தர்களிடமும் அன்பு (ப்ரீதி) செய்யும் இடம் ஆகையால் 'திருப்பிருதி’ என்றும் அழைக்கப்படுகிறது ஜோஷிமட். இந்த திருத்தலத்தை 10 பாசுரங்களால் போற்றிப்  பாடியிருக்கிறார் திருமங்கையாழ்வார். அதில் முதல் 9 பாசுரங்கள் 'பிருதி சென்றடை நெஞ்சே’ என முடிகிறது.

ஜோஷிமட் என்பதை ஜோதிமட் எனவும் சொல்கிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,150 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பத்ரிநாத் உள்பட பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் செல்லும் ஆரம்ப வாயிலாகவும் இது விளங்குகிறது.

ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட பீடங்களில் இதுவும் ஒன்று. ஜோஷிமட் ஆரம்பத்தில் 'கார்திகேயபுரா’ என்றே அழைக்கப்பட்டு இருக்கிறது.

பத்ரிநாத்துக்குச் செல்லும் பாதை தினமும் மாலை 4:30 மணியுடன் மூடப்பட்டு விடும். அதன்பிறகு இங்கே வந்து சேருபவர்கள், ஜோஷிமட்டில் தங்கியாக வேண்டும். விடுதிகளில் தங்குவதற்கு 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான வாடகையில் பல தரத்திலும் அறைகள் கிடைக்கின்றன.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

இங்கே இருக்கும் நரசிம்மர் மற்றும் வாசுதேவர் ஆலயங்கள் ஆதிசங்கரரால் கட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து 8-ஆம் நூற்றாண்டில் இங்கு வந்து மடத்தை ஸ்தாபித்திருக்கிறார் ஆதிசங்கரர். அவர், இங்கே ஒரு முசுக்கொட்டை மரத்தடியில் தவம் இருந்ததாகவும், அதன் பின்னர் ஞானம் பெற்று சங்கரபாஷ்யத்தை இயற்றியதாகவும் சொல்கிறார்கள்.

சிலர், ரிஷிகேஷில் இருந்து 190 கி.மீ. தூரத்தில், நந்தாகினி ஆறும் அலகநந்தா ஆறும் சங்கமிக்கும் நந்தப் பிரயாகையே திருப்பிருதி என்று சொல்கிறார்கள். நந்தப் பிரயாகையில் கோபாலனுக்குக் கோயில் ஒன்று இருக்கிறது.

பத்ரிநாத்துக்கும் வடக்கே இமயத்தில் வேறு எங்கோ திருப்பிருதி இருக்கிறது என்ற இன்னொரு கருத்தும் நிலவுகிறது.

ஜோஷிமட்டுக்கு 10 கி.மீ. தூரத்தில் தபோவனம் இருக்கிறது. இங்கே இயற்கையான வெந்நீர் ஊற்று உண்டு. தௌலிகங்கா என்னும் ஆற்றை இங்கிருந்து கண்டு மகிழலாம். இங்கிருந்து ஒளலி என்னும் இடத்துக்குச் செல்ல அமைக்கப்பட்டு இருக்கும் ரோப், ஆசியாவிலேயே மிகப் பெரியது.

ஜோஷிமட்டின் தெற்கில் திரிசூல் மலையும், வடமேற்கில் பத்ரி சிகரமும், வடக்கில் காமத் என்ற சிகரமும் பனிபோர்த்திக் காணப்படுகின்றன. கண்வ மகரிஷி இந்த க்ஷேத்திரத்தில் வசித்திருக்கிறார்.

ஸ்ரீபத்ரிநாராயணர் ஆதிசங்கரரின் கனவில் தோன்றி, தமக்கு இங்கே ஓர் ஆலயம் அமைக்குமாறு கட்டளையிட்டதாகவும், அதன்படியே ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் தலபுராணம் சொல்கிறது.

ஜோஷிமட்டில் நரசிம்மர் ஆலயமும் வாசுதேவர் ஆலயமும் புகழ்பெற்றவை. நரசிம்மர் ஆலயத்தில் இருக்கும் விக்கிரகம் பற்றி விசித்திரமான கருத்து ஒன்று நிலவுகிறது.

இந்த திருவுருவின் வலது கரம் நூலிழை அளவுக்கு மெலிந்து இருக்கிறதாம். அது ஒருநாள் முறியும் என்றும், அப்போது பத்ரிநாத் போகும் வழியில் இருக்கும் ஜெய் மற்றும் விஜய் என்னும் இரு மலைகள் இணையும் என்றும், பத்ரிநாதர் ஆலயத்தில் இருக்கும் மூலவர் மறைந்து, ஜோஷிமட்டுக்கு 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் பவிஷ்ய பத்ரி என்னும் இடத்தில் கருநிற சாளக்ராமக் கல்லால் ஆன வடிவில் தோன்றுவார் என்றும் உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்.

பத்ரிநாதர் ஆலயம் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் மூடப்படும்போது, பத்ரிநாதரின் திருவுருவம் நரசிம்மர் ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இங்கே பத்ரி நாராயணரின் திருவுருவம் ஆராதிக்கப்படுகிறது.

நரசிம்மர் சாளக்ராமக் கல்லால் உருப்பெற்றிருக்கிறார். நரசிம்மர் நடுவிலும், அவருக்கு வலப் பக்கத்தில் பத்ரி நாராயணர், குபேரர், சண்டிதேவி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இடப்பக்கம் கருடர், ராமர், லட்சுமணர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர், விநாயகர், சூரியன் ஆகியோருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. கருவறையை, 'நரசிம்மத்வார்’ என்கிறார்கள்.

இந்த நரசிம்மர் ஆலயத்துக்கு மிக அருகிலேயே வாசுதேவர் ஆலயம் இருக்கிறது. இங்கே கருவறையில் வாசுதேவர் என்ற திருநாமத்தோடு, சதுர்புஜங்களோடு நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான் காட்சி தருகிறார்.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஊர்வசிதேவி ஆகியோரும் தரிசனம் தருகின்றனர். நடனமாடும் விநாயகர், பிரம்மா, இந்திரன், சந்திரன் ஆகியோரது விக்கிரகங்களும் இருக்கின்றன.

பிருதி சென்று தரிசித்த திருப்தியோடு, பத்ரிநாத் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

- யாத்திரை தொடரும்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு