மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்: 11

ஒரு கதை... ஒரு தீர்வு!அருண் சரண்யா, ஓவியம்: சசி

##~##

சுரேஷ் என் நெருங்கிய நண்பன். அவனது வீட்டுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அன்று, வாசலிலேயே எனக்கு ஒரு புது அனுபவம் உண்டானது. நண்பன் வசிக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் மொத்தம் 40 ஃப்ளாட்கள். வாட்ச்மேன் உண்டு.

அந்த வளாகத்தின் வாயிலில் காலெடுத்து வைத்தவுடனேயே, ஒருவன் வேகமாக வந்து வழி மறித்தான். அவன் உடை அழுக்காக இருந்தது. பற்கள் மொச்சை மொச்சையாக இருந்தன.  

'யாரைப் பார்க்கணும்?' என்றான்.  

'சுரேஷ்'' என்றேன்.

'இங்கே இரண்டு சுரேஷ் இருக்காங்க. எந்த சுரேஷ்?'' என்றான்.  

'6-சி'' என்றேன் நான், பொறுமையாக.

தன் கையிலிருந்த பட்டியலைப் பார்த்தான். இதனிடையில், விற்பனைப் பிரதிநிதி ஒருவன் கையில் சில பொருட்களுடன் உள்ளே நுழைய முயல, 'ஒன் நிமிட் இரு சார்!'' என்று என்னை நிற்க வைத்துவிட்டு, இவன் அவனிடம் ஓடினான். தொடர்ந்து இரு நிமிடங்களுக்கு அவர்களுக்கிடையே வாதம் நிகழ்ந்தது. இந்த ஆசாமி அந்த விற்பனைப் பிரதிநிதியை உள்ளே அனுமதிக்கவே இல்லை. கோபத்துடன் அந்த விற்பனைப் பிரதிநிதி வெளியேறினான்.

பிறகு என்னிடம் வந்தவன், 'நீங்க பார்க்கப்போகும் சுரேஷ் எங்க வேலை பாக்கிறாரு?'' என்று கேட்டான். சொன்னேன்.  

என் பதிலில் திருப்தி அடைந்தவனாக, ''சரி, போங்க!'' என்று என்னை உள்ளே செல்ல அனுமதித்தான்.

'நேரம் தவறாமையைப் பற்றி அடிக்கடி லெக்சர் கொடுப்பியே...  இன்னிக்கு என்ன சொல்லப் போறே? அஞ்சு நிமிஷம்தானே லேட்னு சொல்லப் போறியா?'' என்று கேலியாக வரவேற்றான் நண்பன்.

'உன் வீட்டு காம்பவுண்டுக்கு நான் பத்து நிமிஷம் முன்பே வந்துவிட்டேன். இங்கே உன் ஃப்ளாட்டுக்கு வரத்தான் பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சு!'' என்றேன்.

புரியாமல் விழித்தான். நடந்ததை விவரித்தேன். நண்பன் மிகவும் ஆத்திரப்பட்டான். 'இடியட்! வர்றவங்ககிட்டே இப்படியா ஒருத்தன் நடந்துப்பான்! சே... வழக்கமான வாட்ச்மேனுக்கு உடம்பு சரியில்லே. அதனாலே தற்காலிகமா இவனைப் போட்டிருக்காங்க. இவன் கொஞ்சமும் நாகரிகம் தெரியாதவனா இருக்கான். சார், மேடம்னு மரியாதையா கூப்பிடத் தெரியலே. யார் வந்தாலும் ரொம்பக் கொடாயுறான். எப்பவும் அழுக்கு டிரஸ்லதான் இருக்கான். ஆளும் மூஞ்சியும்! வா, இப்பவே போய் அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன்!'' என்றபடி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான் சுரேஷ்.

'எதுக்கு இவ்வளவு கோபப்படறே? உன் கோபத்தைப் பார்த்தால் துர்வாசர்... இல்லை, இல்லை... உதங்கர்தான் நினைவுக்கு வரார்'' என்றேன்.  

'​துர்வாசர் தெரியும். அது யாரு உதங்கர்?'' என்றான் நண்பன்.  

உதங்கரை அவனுக்கு அறிமுகப்படுத்தினேன். உதங்கர் குறித்து நான் கேள்விப்பட்டிருந்த ஒரு கதையை அவனுக்குச் சொன்னேன்.

விடை சொல்லும் வேதங்கள்: 11

தங்கர் ஒரு மகரிஷி. மாபெரும் ஞானி. பாரத யுத்தத்தின்போது குருக்ஷேத்திரத்தில் பகவான் கண்ணன் விஸ்வரூபம் எடுத்ததை அறிந்து, தான் அந்தக் காட்சியைக் காணக் கொடுத்துவைக்கவில்லையே என்று வருந்தினார். அதையறிந்த கண்ணபிரான் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தந்தருள, ஆனந்த பரவசத்தில் ​மூழ்கினார் உதங்கர்.  

'வேறென்ன வேண்டும்?'' என்று உதங்கரிடம் கேட்டார் கண்ணன்.  

'இதைவிட வேறென்ன வேண்டும்?'' என்று மெய்சிலிர்த்தார் உதங்கர். எனினும், கண்ணன் மீண்டும் வற்புறுத்தவே, 'எனக்கு எப்போது தாகம் எடுத்தாலும், நான் வேண்டும்போது தண்ணீர் கிடைக்க வேண்டும்'' என்றார். இந்த எளிய வரத்தை உடனடியாக வழங்கினார் கண்ணன்.

நாட்கள் கடந்தன. ஒருநாள், பரந்த மணல்வெளிப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தார் உதங்கர். அப்போது அவருக்குக் கடும் தாகம் எடுத்தது. 'கண்ணா, தாகம்’ என்று கண்களை ​மூடித் துதித்தார். அடுத்த நிமிடமே அவர் எதிரில் ஒரு புலையர் வந்தார். பார்க்கவே அருவருப்பாக இருந்தது அவரது தோற்றம். அவர் கையில் ஒரு குவளை இருந்தது. 'தண்ணீர் அருந்துகிறீர்களா?'' என்று கேட்டார்.  

உதங்கருக்கு அவரைப் பார்க்கப் பார்க்க வெறுப்பு அதிகரித்தது. 'வேண்டாம்’ என்று மறுத்துவிட்டு, வேகமாக அங்கிருந்து நகர்ந்தார். பின்பு, 'கண்ணா, இது என்ன அநியாயம்!'' என்று குமுறினார் உதங்கர். கண்ணன் உடனே அங்கு காட்சி தந்து, ''எதை அநியாயம் என்கிறாய்?'' என்று கேட்டார்.

'வரம் வழங்கிவிட்டு, அதைப் பயன்படுத்த முடியாதபடி செய்யலாமா?'' என்றார் உதங்கர்.

'தாகம் எடுக்கும்போது தண்ணீர் வேண்டும் என்றீர்கள். அதற்கு ஏற்பாடு செய்தேன். நீங்கள்தானே அந்தத் தண்ணீரை மறுத்தீர்கள்?'' என்றார் கண்ணன்.

'சாமர்த்தியமாகப் பேசுவதாக எண்ணவேண்டாம், கண்ணா! அந்தத் தண்ணீரை ஒரு தீண்டத்தகாதவன் கையிலா கொடுத்து அனுப்பது? தண்ணீர் கொடுத்தனுப்ப உனக்கு வேறு யாருமே கிடைக்கவில்லையா?'' என்று கோபப்பட்டார் உதங்கர்.

'அடடா, நீங்கள் இதையெல்லாம் தாண்டியவர், மேம்பட்டவர் என்று நினைத்தேனே! அது தவறாகி விட்டதே!'' என்றார். உதங்கர் மௌனம் சாதித்தார்.

'உதங்கரே, உங்கள்மீது இருந்த அபிமானம் காரணமாக, உங்களுக்குத் தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீருக்குப் பதிலாக அமிர்தத்தையே வழங்கலாம் என முடிவு செய்தேன். இந்திரனை அழைத்து, உங்களுக்கு அமிர்தம் அளிக்கச் சொன்னேன். அவன் தயங்கினான். 'அமிர்தத்தைப் பெறக்கூடிய அளவுக்கு அவர் என்ன அத்தனை உயர்ந்தவரா?’ என்று கேட்டான். நீங்கள் மாபெரும் ஞானி என்று அவனிடம் உங்களுக்காகப் பரிந்துரைத்தேன். 'அப்படியானால் அதை நானே சோதித்துத் தெரிந்துகொள்கிறேன்’ என்றபடி புலையனின் உருவில் உங்களிடம் வந்தான். ஆனால், உருவத்தில் வேற்றுமை பாராட்டி, உயர்வு தாழ்வு எனப் பாகுபாடு பார்த்து, நீங்கள்தான் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்!'' என்றார் கண்ணன்.

உதங்கர் தலைகுனிந்தார்.

'கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால், என்னை எதுக்கு உதங்கரோடு ஒப்பிட்டே?'' என்றான் சுரேஷ்.

'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! வாட்ச்மேனின் வேலை, சரியாகக் காவல் காப்பதுதான். வார்த்தையில் நாகரிகம், உடையில் சுத்தம் என்பதெல்லாம் அதிகப்படி விஷயங்கள். வாசலில் தற்போது காவல் காக்கும் அந்த இளைஞன் தோற்றத்திலும், அணுகுமுறையிலேயும் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், அவன் தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறான். முன்பின் தெரியாதவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அவனைப் பாராட்டுவதுதானே முறை! பக்குவமாக எடுத்துச் சொன்னால், மற்ற விஷயங்களிலும் தன்னை மாற்றிக்கொள்வான் என்றே நினைக்கிறேன். சொல்லப்போனால், யூனிஃபார்ம் எடுத்துக் கொடுத்து, இவனை உங்கள் பிளாட்டில் நிரந்தர ஊழியனாகக்கூட வேலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம்!'' என்றேன்.  

ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, தனது வாகனத்தை வளாகத்துக்குள் நிறுத்திய ஒருவரை சரியான இடத்தில், சரியாக கோணத்தில், மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு நிறுத்துமாறு அந்த வாட்ச்மேன் கூறிக்கொண்டிருந்தது எங்களுக்குத் தெரிந்தது.

- தீர்வுகள் தொடரும்...