வி.ராம்ஜி

##~## |
சோழ தேசத் தலைநகர் தஞ்சாவூர் போலவோ, பாண்டிய தேசத்தின் தலைநகரம் மதுரை போலவோ, புதுக்கோட்டை நகரம் அவ்வளவு பெரிய ஊராக அப்போதும் இருந்ததில்லை; இப்போதும் இல்லை. புதுக்கோட்டை நகரம், சோழர்களின் கையிலும் பிறகு பாண்டியர்களின் கையிலுமாகவே இருந்தது.
பின்னாளில், இது சமஸ்தானமாக ஆன பின்பு, இங்கே உள்ள திருக்கோயில்களைக் கணக்கிடும்போதுதான், 'அட... இங்கே இத்தனைக் கோயில்களா!’ என அதிசயித்துப் போனார்கள், மக்கள்.
இன்றைக்குப் புதுக்கோட்டை சமஸ்தானத் துக் கோயில்கள் என்று அழைக்கப்படுகிற ஏராளமான கோயில்கள், சிற்ப நுட்பங்களுடனும் கலைத்திறனுடனும் பிரமாண்டமான ஆலயங் களாகக் காட்சி தருகின்றன. இந்த ஆலயங்களில் பெரும்பாலான கோயில்கள், சோழர்கள் காலத்துக் கோயிலாகவே அமைந்துள்ளன.
புதுக்கோட்டைக்கு அருகில் குடுமியான் மலை, சித்தன்னவாசல், நார்த்தாமலை, கொடும்பாளூர் எனப் பல ஊர்கள் உள்ளன. குடுமியான்மலையிலும் சித்தன்னவாசலிலும் உள்ள பாறைகளிலும் ஆலயங்களிலும் ஏராளமான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளதையும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதையும் நாம் அறிந்திருப்போம்.

நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ள மலைகளில் இருந்துதான் தஞ்சைப் பெரியகோயிலுக்கு கல் எடுத்துச் சென்றார்கள் என்றொரு தகவல் உண்டு. தவிர, மலையடிவாரத்தில், முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோயில் ஒன்றும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குடுமியான்மலையில் உள்ள பாறைகளில் சமணர்கள் வாழ்ந்த குகைகளும், அவர்கள் அமைத்திருந்த கல்படுகைகளும், அவர்கள் இங்கே வாழ்ந்ததற்குச் சாட்சியாக இன்றைக்கும் இருக்கின்றன. இதே புராதனப் பெருமைகளுடன் உள்ள ஊர்களில் பரம்பூரும் ஒன்று.
பரம்பூர் அந்தக் காலத்தில் பரம்பையூர் என அழைக்கப்பட்டது. சோழகேரளீஸ்வரம் என்று இந்த ஊரின் பெயர் இருந்ததாகச் சொல்லும் கல்வெட்டுகளும் இருக்கின்றன. தவிர, அகத்தீஸ்வரம் என்றும் ஒரு காலத்தில் இந்த ஊரைக் குறிப்பிட்டுள்ளனர்.
சோழர்கள் காலத்தில் இந்தப் பகுதி மிகவும் செழித்து வளர்ந்திருந்ததாகவும், முதலாம் ராஜேந்திர சோழன் இங்கே அழகிய, பிரமாண்டமான சிவாலயத்தை எழுப்பினான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜேந்திர சோழனின் மகன்களில் ஒருவன் மனுகுல கேசரி என்றும், சோழகேரளன் என்றும் அழைக்கப்பட்டானாம். சோழகேரளன் ஒருநாள் இறந்துவிட, அவனின் நினைவாகவும், அவனது ஆத்மா அமைதி பெறுவதற்காகவும், பரம்பூரை சோழ கேரளீஸ்வரம் என்றும், இங்கே உள்ள இறைவனை ஸ்ரீசோழகேரளீஸ்வரர் என்றும் சிறப்பித்து, இந்தக் கோயிலுக்கு ஏராளமான நிவந்தங்கள் அளித்தான் ராஜேந்திர சோழன் என்கிறது கோயில் ஸ்தல வரலாறு.
மிக அற்புதமான ஆலயம் இது. முழுக்க முழுக்கக் கருங் கல்லால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். இங்கே உள்ள இறைவனை ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என்றும், ஸ்ரீசோழகேரளீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். மகா மண்டபம், அர்த்த மண்டபம், பலிபீடம், நந்தி, திருச்சுற்று மாளிகை என ஒவ்வொரு இடத்திலும் நேர்த்தியான படைப்புத் திறன் வெளிப்படுகிறது.

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை என அனைத்து மூர்த்தங்களையும் நுட்பமான, நுணுக்கமான, ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் அமைத்திருப்பது தெரிகிறது.
அரச பொறுப்பில் பணியாற்றிய பரம்பூரைச் சேர்ந்த அறையான் ஆளுடையான் என்பவர் இந்தக் கோயிலின் சாந்நித்தியத்தை உணர்ந்து சிலிர்த்து, கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தார். தவிர, அர்த்த மண்டபத்தில் ஒரு நுழைவாயிலையும் அமைத்துத் தந்தார் என்கிறது ஒரு கல்வெட்டு.
இத்தனைச் சிறப்பு வாய்ந்த கோயிலில் பூஜைகளும் வழிபாடு களும் நடந்து எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் ஊர்மக்கள். கவனிப்பும் பராமரிப்பும் இன்றி, மண்டபம் சிதைந்து, மதிலும் விழுந்து, புல்லும் புதருமாகக் காட்சியளித்த வேதனையான நிலையைச் சொல்லிக் கதறுகிறார்கள், சிவ பக்தர்கள்.
வழிபாடுகளும் விழாக்களும் கோலாகலமாக நடைபெற்ற ஆலயம், மீண்டும் பொலிவுக்கு வரவேண்டாமா? அழகுடன் மிளிரும் ஆலயத்துக்குள் வலம் வந்து, ஸ்வாமியைத் தரிசனம் செய்து, அருளும் ஞானமும் பெறுவது முக்கியம் இல்லையா? சிவனாருக்கு வில்வம் சார்த்தி, புது வஸ்திரம் அணிவித்து, மணக்க மணக்க நைவேத்தியம் சமர்ப்பித்து, ஆலயத் திருப்பணிக்கு நம்மால் முடிந்ததைத் தந்து, தென்னாடுடைய சிவனாரின் பேரருளைப் பெறுவது அவசியமல்லவா?!

ஊர்மக்களும் சிவனடியார்களும் ஒன்றிணைந்து திருக்கோயில் திருப்பணிக் கமிட்டி ஒன்றை உருவாக்கி, தற்போது கோயிலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடுமியான்மலை, நார்த்தாமலை, சித்தன்னவாசல் போல, பரம்பையூர் என்று சொல்லப்படும் பரம்பூரும், அங்கே உள்ள ஸ்ரீசோழகேரளீஸ்வரரும் அனைவராலும் அறியப்படட்டும்; போற்றி வணங்கப்படட்டும்.
ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்தால் ஒரு வாக்கியம்! ஒவ்வொரு வாக்கியமாகச் சேர்ந்து கதையோ கவிதையோ கட்டுரையோ உருவாவது போல, ஒவ்வொரு கல்லாகச் சேர்ந்து, பரம்பூர் ஸ்ரீசோழகேரளீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்.
சீரமைக்கப்படும் இந்த இறைப் பணியில் நாமும் பங்கேற்போம். அது மிகப்பெரிய புண்ணியம். அந்தப் புண்ணியம், நம்மை மட்டுமின்றி நம் சந்ததியையும் வளரச் செய்யும்; செவ்வனே வாழ வைக்கும்!
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
எங்கே இருக்கிறது?
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவிலும், குடுமியான் மலையில் இருந்து சுமார் சுமார் 3 கி.மீ. தொலைவிலும், சித்தன்னவாசலில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள பரம்பூர் கிராமத்தில், கற்றளிக் கோயிலில் அழகுறக் குடிகொண்டிருக்கிறார், ஸ்ரீஅகத்தீஸ்வரர் என்கிற ஸ்ரீசோழகேரளீஸ்வரர்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பரம்பூருக்கு 5, 5ஏ, 5பி என டவுன் பஸ்கள், 45 நிமிடத்துக்கு ஒருமுறை சென்று வருகின்றன.