Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

பூர்ணம் என்றால் நிறைவு. பூஜ்ஜியம் என்றால் பெருமைக்கு உரியது. சூன்யம் என்றால் கண்ணுக்குப் புலப்பட வேண்டிய பொருட்கள் அனைத்தும் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருப்பது. அதை 'அவ்யக்தம்’ எனச் சொல்லுவது உண்டு. பௌத்தம் அப்படி சுட்டிக்காட்டும். உபநிடதம், 'பூர்ணம் என்றால் முழுமை பெற்றது; எடுக்க எடுக்கக் குறையாதது’ என்கிறது (பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவ சிஷ்யதெ).

பூஜ்ஜியத்திலிருந்து பூஜ்ஜியத்தைக் கூட்டினாலும் கழித்தாலும் பூஜ்ஜியம் அப்படியே இருக்கும். அதன் சேர்க்கையால், குறைவான இலக்கங்களும் நிறைவை எட்டுகின்றன. 1 என்ற இலக்கத்துடன் பூஜ்ஜியங்களைச் சேர்த்து வந்தால் 1-ன் பெருமை படிப்படியாக உயரும். 1,00,000- ஐந்து பூஜ்ஜியங்களுடன் இணைந்ததால் ஒன்று லட்சமாயிற்று. எண்ணால் எதைச் சுட்டிக்காட்டுகிறோமோ, அதன் பெருமைதான் எண்ணில் இருக்கும். காலியான குடம் (சூன்யம்), நீர் நிரம்பியதும் தண்ணீர் குடமாகிறது. தண்ணீரின் அளவு குடத்தால் வெளிப்படுகிறது. குடம் எப்போதும் சூன்யம்தான்.

'6041’ இது தொடர்வண்டி ஒன்றின் எண். இதைக் கேட்டதும் குறிப்பிட்ட அந்த தொடர்வண்டி ஞாபகத்துக்கு வரும். கணக்கில் தீர்வை எட்டுவதற்கு எண்ணிக்கை உதவுகிறது. எண்ணிக்கை ஒரு உபகரணம். தர வரிசையில் சிறந்தது 'ஒன்று’. மதிப்பெண்ணில் 'ஒன்று’ என்பது தரம் தாழ்ந்துவிடும். தேர்வில் ஒன்றுக்கு முதலிடம். பூஜ்ஜியம் என்றால் முழுமை. அதேநேரம் பூஜ்ஜியம் என்றால் சூன்யம். குறிப்பிடும் பொருளின் தரவரிசையில் எண்ணிக்கையின் தரம் நிர்ணயமாகிறது. வரைபடத்தின் விளக்கம் டிப்பணியில் (அடிக்குறிப்பில்) இருக்கும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

ஒவ்வொரு விளக்கத்துக்கும் 1, 2, 3 என்ற எண்ணிக்கையைப் பயன்படுத்துவர். எந்த உருப்படியின் விளக்கம் என்பதை எண்ணிக்கை சுட்டிக்காட்டும். நமது சிந்தனையின் கணிப்பு, எண்ணிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. நமது மனமே இலக்கத்தை நிர்ணயிக்கிறது. மனம்தான் எண்ணிக்கையை வரையறுக்கிறது. எதைச் சுட்டிக் காட்டுகிறோமோ, அதன் தரம் எண்ணிக்கையில் பிரதிபலிக்கும்.  பொருத்தத்தில் வரும் எண்ணிக்கை, நாம் எதிர்பார்க்கும் பொருளின் தரத்தை வரையறுக்கும் கருவியாகப் பயன்படும்.

சூரிய கிரணங்கள் ஒவ்வொரு நாளும் சந்திரனில் விழும் அளவானது பிரதமை, துவிதியை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. தகுதியை வரையறுக்க எண்ணிக்கையைப் பயன்படுத்தினர். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 இப்படி 100 வரை எண்ணிக்கை உண்டு. 2, 4, 6 என்றும் 3, 5, 7 என்றும், 4, 8, 12 என்றும், 5, 10, 15, 20 என்றும், 10, 20, 30, 40 என்றும், 20, 40, 60, 80 என்றும், 50, 100 என்றும், 100, 200, 300 என்றும், 1000, 10000 என்றும் எண்ண முடியாத அளவு எண்ணிக்கையில் முற்றுப்பெறும். இது, வேதம் அறிமுகம் செய்த கணக்கு (ஏகஸ்மைஸ்வாஹா த்வாப்யம்ஸ்வாஹா...).

வேள்வியில் அளிக்கப்படும் பொருளின் தரம் எண்ணிக்கையில் பிரதிபலிக்கும். மூன்றோடு முடிவுறும் பொருளின் அட்டவணையை வேதம் அறிமுகம் செய்யும். உதாரணமாக நேற்று, இன்று, நாளை... ரிக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம்... அக்னி, வாயு, சூரியன்... இப்படி விளக்கும்போது 1, 2, 3 என்ற எண்ணிக்கை, விளக்கும் பொருளின் தரத்தைச் சுட்டிக்காட்டும். (பூதம், பவ்யம் பவிஷ்யத் வவுட்ஸ்வாஹா...).

7 பொருட்களின் விரிவாக்கம் அல்லது மாறுபாடு பிரபஞ்ச வடிவில் தோற்றம் அளிக்கிறது என்கிறது ந்யாய சாஸ்திரம். 7 என்ற எண்ணிக்கையை 6-ஆக சுருக்கவும் முடியாது; 8-ஆக வளர்த்தவும் முடியாது என்ற தத்துவத்தை விளக்கும் (த்ரவ்யகுண கர்மஸாமான்யவிசேஷ ஸமவாய அபாவா:). பொருளின் பெருக்கம், குறைவு ஆகியவற்றைச் சுட்டிக்காட்ட பிரதமை, துவிதியை என்று எண்ணிக்கையைப் பயன்படுத்தும் ஜோதிடம். இந்த எண்ணிக்கையானது ஏற்ற - குறைச்சலை வெளியிடும்.

இப்படி, எண்ணிக்கை என்பது மனம் விரும்பும் எண்ணத்தை சுட்டிக்காட்டும் கருவியாகத் திகழ்கிறது. எண்ணிக்கைக்கு தன்னிச்சையாக எந்தப் பொருளும் இல்லை. 10 பொருத்தங்கள் என்று சொன்னால் 11-வது பொருத்தம் இல்லை. 9-ல் அடக்கவும் முடியாது என்ற விளக்கம் உண்டு. சுருங்கச் சொல்லுதல், விரிவாக்கி விளக்குவது என்று நடைமுறையில் உண்டு. விரிவாக்கத்தின் சாரம்தான் சுருங்கியிருக்கிறது. 23 பொருத்தம், 12 பொருத்தம், 10 பொருத்தம் என்று பலவாறாக விளக்கியிருக்கும் ஜோதிட நூல்கள். அத்தனை யும் 10-ல் அடக்கப்பட்டிருப்பன என்று பொருள்.

1 முதல் 9 வரை எண்ணிக்கை - நட்சத்திரப் பொருத்தம்; 27-ல்  பதின்மூன்றைத் தாண்டி 14 ஆனால் ஸ்திரீதீர்க்கம்; 4 - ன் பெருக்கம் மாஹேந்திரம்; 5-ன் பெருக்கம் த்ரிகோணம். ராசியின் 4-ன் பெருக்கத்துக்கு கேந்திரம்; 'இரண்டு பன்னிரண்டு’ - த்வித்வாதசம்; 'ஆறு எட்டுக்கு’ - ஷஷ்டாஷடதம்; ஏழின் பெருக்கம் - ஸமஸப்தகம்;  6, 8, 12- க்கு த்ரிகம்... இந்த விளக்கவுரைகளை எளிதில் புரிந்துகொள்ள எண்ணிக்கை உதவும்.

12 ராசிகளில் 1, 2, 4, 5, 7, 8 9, 12 ஆகியன அபசயம். அதாவது, குறைந்துகொண்டு வரும் இயல்பைச் சுட்டிக்காட்டும். 3, 6, 10, 11 ஆகியன உபசயம்; வளர்ந்துகொண்டே வருவதை விளக்கும். விரிவான விளக்கவுரைகளை சுருக்கிச் சொல்லவும், ஒரு பொருளின் தனித்தன்மையை பறைசாற்றவும்... குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கேட்டதும் பொருளின் விளக்கமானது மனத்தில் உதயமாவதற்கு ஏதுவாக, ஜோதிடம் எண்ணிக்கையை ஒரு கருவியாகப் பயன்படுத்தும்.

பத்துப் பொருத்தத்தில் ரஜ்ஜுவும், வேதையும் இல்லாமல் இருப்பது நிறை; இருந்தால் குறை. பாக்கி எட்டு பொருத்தங்கள் பல கோணங்களில் தாம்பத்தியத்தின் நிறைவை வரையறுக்கின்றன. அத்தனையும் அவர்களின் மனத்தின் இயல்பை சுட்டிக்காட்டும். மனம் எதிரிடையான சிந்தனையில் இல்லை என்பதை ரஜ்ஜுவும் வேதையும் நிர்ணயிக்கும். மற்றவை மன நெருக்கத்தின் இறுக்கத்தை வரையறுக்கும். குறை இல்லாமல் இருந்தால் இணையும் தகுதி பெற்றவர்களாவர். மற்ற பொருத்தங்கள்... இணைந்தவர்கள் நட்புடன், என்றைக்கும் பிரியாமல் மகிழ்ச்சி பெறுவதற்கான அவர்களின் மனப்பக்குவத்தைச் சொல்லாமல் சொல்லும்.

குமாஸ்தா வேலைக்கு அடிப்படைத் தகுதி பத்தாவது தேர்ச்சி பெற்றால் போதும். கல்லூரி படிப்பும், பட்ட மேற்படிப்பும் சிறப்பு அளிக்கும் என்றாலும், அந்தப் படிப்பு குமஸ்தா வேலைக்கு கட்டாயம் என்று இருக்காது. குறை இல்லாமல் இருப்பது ஒரு தகுதி. ஆணும் பெண்ணும் தாம்பத்தியத்தில் இணைய இந்த இரண்டும் (ரஜ்ஜு, வேதை) போதுமானது. இவை இரண்டும் ஒட்டுதலை உறுதி செய்யும். மற்றப் பொருத்தங்கள் ஒட்டுதலைப் பராமரிக்கும். நமக்கு இரண்டு தேவை என்பதால், பொருத்தத்தில் பத்து மிக முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

விளக்கவுரையை உள் வாங்கி உரைக்கு வழங்கி செயல்படுவது 'வச்யம்’. ஆணும் பெண்ணும் அவர்களின் எண்ணத்துக்கு இணைந்து செயல்படும் பக்குவத்துக்கு வச்யம் என்று பொருள். அரசின் கட்டளைக்கு அனைவரும் இணங்குவர். தலைவனின் கட்டளைக்கு தொண்டன் அடிபணிவான். தலைவனது சொல்லை ஆராய முற்படமாட்டான். அதேபோன்று கணவன் சொல்லை ஆராயாமல், மனதோடு இணைந்து செயல்பட எண்ணுவது வச்யம்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

பிறக்கும்போதே 3 குணங்கள் நம்மில் குடி கொண்டிருக்கும். இன்ப- துன்பத்தை சமநிலையில் பார்ப்பது. இன்பத்தில் நிலை மறந்து ஆட்டம் போடாமலும், துன்பத்தில் மனம் வாடி படுக்காமலும் இருக்கவேண்டும். ஆடாமல் அசையாமல் மனத்தை திடமாக வைத்திருப்பதை ஸத்வ குணம் என்பர். எதிரிடையான விளைவுகள் மனத்தைத் தாக்கும்போது,  பீறிட்டு எழுச்சியடைந்து எதிரியைத் தாக்கும் முயற்சியில் இறங்குவது ரஜோகுணம். பாம்பைச் சீண்டியவுடன் படம் விரித்து எதிர்ப்பை வெளியிடும். இது ரஜோகுணத்தின் வெளிப்பாடு. வெட்கம், ஸங்கேசம், பயம் ஆகியவற்றின் அழுத்தத்தால் எதிர்ப்பை ஏற்று செயல்படாமல் இருப்பது தாமஸம். எருமை மாட்டின் மேல் மழை பெய்தாலும், சுமையை வைத்தாலும் அது அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருக்கும். இது பொறுமை அல்ல. மனம் செயல்படாமல் படுத்துவிட்டது என்று அர்த்தம். சோம்பேறித்தனம், உறக்கம், மயக்கம் போன்றவற்றின் எடுத்துக்காட்டு தாமஸம். இந்த குணங்கள் மனத்தில் இருக்கும். தேவ கணம், மனுஷ்ய கணம், ராஷஸ கணம் என்ற கணப்பொருத்தத்தில் இருவரது இயல்பும் வரையறுக்கப்படும். இதுவும் மனம் சார்ந்த பொருத்தம்.

ஆணில் ஆண்மையும், பெண்ணில் பெண்மையும் நிச்சயம் இருக்க வேண்டும். அலி தாம்பத்தியத்துக்கு உதவாது. ஆணிலும் பெண்ணிலும் அலி உண்டு. ஆணில் பெண் இயல்பும், பெண்ணில் ஆண் இயல்பும் தென்படுவது உண்டு.  ஆணின் பிந்துவில் ஜீவாணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்க வேண்டும். பெண்ணில் உயிருள்ள முட்டைகள் உருவாகும் தகுதி இருக்க வேண்டும். சுக்கிரமும், சோணிதமும் சுத்தமாக, திறமை பெற்றதாக இருக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இதை யோனிப்பொருத்தம் சுட்டிக்காட்டும். ஆண்- ஆண் யோனியாகவும், பெண்- பெண் யோனியாகவும் இருக்க வேண்டியது அவசியம். மூக்கும், முழியும், முலையும், தலையும் இருக்க வேண்டும் பெண்ணுக்கு. மீசையும், தாடியும், ஆஜானுபாகுவும் ஆணிடம் தென்படவேண்டும் (ஸ்தன கேசவதீநாரீ லோசம:புருஷ:ஸ்ம்ருத:). மீசை என்பது ஆண்மையின் அடையாளம் என்கிறது வேதம் (யத்ச்மச்ருண: தத்புருஷாணாம்ரூபம்). நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்கும் தகுதி இருவரிலும் இருக்க வேண்டும். அதற்கு இருவர் பங்கும் இருப்பதால் உடல் அமைப்பும், படிப்படியான வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்று யோனிப்பொருத்தம் வரையறுக்கும்.

நீரில் இருந்து உயிரினங்கள் தோன்றின. படிப்படியாக புழு, பூச்சி, ஊர்வன, விலங்கினம் வழி மனித இனம் உருவாயிற்று என்று சாஸ்திரம் சொல்லும் (அனாதி அவித்யாவசனயா ப்ரவர்த்தமானே... கேனாபிபுண்யகர்ம விசேஷேணஇதானீமிதன் மானுஷ்யே....). நமது துரதிர்ஷ்டம்... உலகம் அந்தப் பெருமையை டார்வினுக்கு அளித்து பெருமைப்பட்டது. டார்வின் பிறப்பதற்கு முன்பே ஸனாதனம் இருப்பதை அவர் அறியார். கருவறையில் நீரில் குழந்தை உருவாகிறது. வெளிவந்தவுடன் தரையில் நீந்துகிறது. நான்கு காலில் முட்டுக்குத்துகிறது. பின்னர் இருகால்களால் நடக்கிறது. இந்த செயல்பாட்டை கண்ணுற்றும், நம்மவர்களுக்கு... அந்தத் தகுதியை வெளிநாட்டவர்க்கு உரிமையாக்குவதில் அலாதியான பக்தி உண்டு.

நட்சத்திரங்களில் விலங்கினங்களின் இயல்பு இருக்கும். தகப்பன், குழந்தையை உச்சிமுகர்ந்து மகிழ்வான். முகர்ந்து மகிழ்வது விலங்கினம். பிற்பாடு அவன் நட்சத்திரத்தை காதில் ஓதுவான். கீரி, பாம்பு, புசு, புலி, எலி, பூனை... இப்படி இருவரது நட்சத்திரங்களுக்கு உரிய விலங்கினம் பகையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிருகப் பொருத்தம் (யோனிப் பொருத்தம் என்றும் சொல்வது உண்டு. இருவரின் இயல்பும் அதில் வெளிப்படும்). பிறந்த ராசியும், ராசிக்கு உடையவனும் ஒன்றாகவோ, நட்பாகவோ இருப்பதை, அவர்களின் இறுக்கத்துக்கு அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

கால்கள், கடி, உதரம், கண்டம், சிரஸ்ஸு - இந்த ஐந்து வரிசையில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு ரஜ்ஜு என்று பெயர். வரிசை மாறிய நட்சத்திரங்களை இணைக்கலாம். இதில், ஒரே வரிசையில் இருக்கும் நட்சத்திரங்களில் ஆரோஹணத்திலோ, அவரோஹணத்திலோ இருந்தால்... இருவருக்கும் ஜன்ம நட்சத்திரம் வருவதால், நட்சத்திரப் பொருத்தம் ரஜ்ஜுவில் அடங்கிவிட்டது.

ஜன்ம, அனுஜன்ம, த்ரிஜன்ம நட்சத்திரங்கள் ரஜ்ஜுவிலும் இணைந்திருக்கிறது. வேதைப் பொருத்தமும் ரஜ்ஜுவில் அடங்கிவிட்டது. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றுக்கொன்று வேதை. இது, சிரோரஜ்ஜுவில் அடங்கிவிட்டது. இப்படி, ஒவ்வொரு வேதையும் ஒவ்வொரு நட்சத்திர வரிசையில்... அதாவது, ரஜ்ஜுவில் அடக்கம். ரஜ்ஜுவை விலக்கும்போது, வேதையும் தானாகவே விலகிவிடும்.

முதல் ஆரோஹ வரிசையில் இருக்கும் நட்சத்திரம் 2-வது அவரோஹ வரிசையில் தென்படும் நட்சத்திரம் வேதையாகும். 2-வது ஆரோஹத்தில் இருக்கும் நட்சத்திரம், அதே வரிசையில் 3-வது அவரோஹத்தில் இருப்பது வேதையாகும். உதாரணமாக கண்ட ரஜ்ஜுவில் ஆரோஹத்தில் இருக்கும் ரோகிணிக்கு 2-வதில் அவரோஹத்தில் இருக்கும் கண்ட ரஜ்ஜுவான ஸ்வாதி வேதையாகும். 2-வதில் ஆரோஹத்தில் இருக்கும் கண்ட ரஜ்ஜுவான அஸ்தத்துக்கு, 3-வது அவரோஹத்தில் இருக்கும் கண்ட ரஜ்ஜுவான சதயம் வேதையாகும். நூல் பிடித்தது போல் ஒரே கோட்டில் தென்படுவதால் 'ரஜ்ஜு’ என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது. நேர் கோட்டில் இருக்கும் இரு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று வேதையாகும். இதை விலக்கும்போது ஷஷ்டாஷ்டகம், அஷ்டஷஷ்டகம் ஆகிய இரு ராசிப்பொருத்தம் இன்மையும் விலகிவிடும்.

கிரஹங்களுக்கு 3, 5, 7, 9, 10.4.8 - இந்த ராசிகள் ஒன்றுக்கொன்று பார்வை இருக்கும். 6-க்கும், 8-க்கும் ஒன்றுக்கொன்று பார்வை இருக்காது. அதாவது இருவரின் சந்திரன்... அதாவது நட்சத்திரம்... இன்னும் சொல்லப் போனால், மனம் ஒன்றுக்கொன்று பார்க்க வில்லை என்றால், தொடர்பற்றதாக மாறிவிடும்.

ஆகையால் வேதை தொடர்பை துண்டிப்பதால், இந்தப் பொருத்தம் முக்கியமாகிறது. குணங்கள் நிரம்பியிருந்தால், அதில் ஒரு தோஷம் மறைந்துவிடும். சந்திரனில் தென்படும் கறுப்புப்புள்ளி, சந்திரனின் ஒளியில் மறைந்துவிடுகிறது. ஆனால் வேதை என்ற தோஷம் அத்தனை நல்ல குணங்களையும் அழித்துவிடும் என்று விளக்கமளிக்கும் ஜோதிடம்.

அறுசுவையை ஏற்றவனுக்கு, நார்த்தங்காய் சுவை அத்தனையும் அடக்கி முன் நிற்கும் என்பார்கள். அதுபோல், வேதம் விலக்க வேண்டிய பொருத்தத்தில் முதன்மையில் தென்படுகிறது (ஏகோஹிதோஷோவேதாக்ய: குணான்ஹந்தி பஹீனபி).

பொருத்தங்கள் பத்தும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து இருப்பதால், ஆராய்ந்து முடிவெடுக்கும் பொறுப்பு ஜோதிடனுக்கு உண்டு. தங்களது விருப்பப்படி ஒன்றை உயர்த்தியும் தாழ்த்தியும் சொல்வன்மையால் அப்பாவி மக்களை ஈர்ப்பது பாவமாகும். நம்பி வரும் மக்களுக்கு வருங்காலத்தை உணர்த்துவதில் நேர்மையும் சான்றும் இருக்க வேண்டும்.

- சிந்திப்போம்...

அடுத்த கட்டுரைக்கு