Election bannerElection banner
Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சதுர்புஜ கிருஷ்ணர்!

கிருஷ்ண... கிருஷ்ணா!

##~##

ழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, மதுரையை ஆட்சி செய்த நாயக்க மன்னர் திருப்பணிகள் செய்தது, ரிஷிகள் தவமிருந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டது எனப் புராதனப் பெருமைகள் பல கொண்ட திருத்தலம், மதுரை ஸ்ரீமதனகோபால ஸ்வாமி கோயில். சௌராஷ்டிர இனத்தவரால் சீரமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற அற்புதமான கோயில்களில் இதுவும் ஒன்று.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு வடக்குப் பகுதியில், மேலமாசி வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீமதனகோபால ஸ்வாமி திருக்கோயில். கிழக்குப் பார்த்து அமைந்த இந்த ஆலயத்தை 'தென்னக பிருந்தாவனம்’ எனப் போற்றுகின்றனர் கிருஷ்ண பக்தர்கள்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகில், 'ஸ்ரீஇம்மையிலும் நன்மை தருவார்’ எனும் சிவாலயம் உள்ளது. ஒருகாலத்தில், வனப் பகுதியாக இருந்த இந்த இடத்தில், சிவனார் கடுந்தவம் மேற்கொண்டாராம். அப்போது அவர் எழுப்பிய யாகத் தீயானது, அக்கினிகுண்டத்தில் இருந்து மேலெழும்பி, தேவலோகம் வரை சென்றது. அக்கினியின் வெப்பம் தாங்காமல், தேவர்கள் அவதிப்பட்டு, அல்லாடினர். 'திருமாலே கதி’ என அவரை நோக்கி ஓடிப் போய், விவரம் சொல்லிக் கதறினார்கள்.

சங்கடம் தீர்க்கும்  சதுர்புஜ கிருஷ்ணர்!

அதைக் கேட்ட திருமால் அந்தத் தலத்துக்கு வந்திறங்கி, ஸ்ரீவேணுகோபாலனாக எழுந்தருளினார். தன் வேணுகானத்தால் அந்த இடத்தை ரம்மியமாக்கினார். அங்கே உக்கிரம் மொத்தமும் தணிந்து, அக்னி சாந்த நிலையை அடைந்தது. சிவனாரின் உக்கிரமான தவமும் முடிவுக்கு வந்தது. அன்று முதல், மதுரை திருத்தலத்தில் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியாக பக்தர்களுக்கு அருளும் பொருளும் அள்ளித் தரும் பொருட்டுக் கோயில் கொண்டார் என்கிறது ஸ்தல புராணம்.

''அற்புதமான ஆலயம். சாந்நித்தியம் நிறைந்த ஸ்ரீவேணுகோபாலரின் சந்நிதிக்கு வந்து, தங்கள் மனக்குறையை எடுத்துச் சொல்லி வேண்டினால் போதும்; குறைகளைக் களைந்து, நல்லன எல்லாம் தந்தருள்வார் பகவான். எந்தத் தலத்திலும் இல்லாதபடி, காண்பதற்கு அரிதான தோற்றமாக சதுர்புஜங்களுடன், அதாவது நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி காட்சி தருகிறார் இங்கே. 'அட... இத்தனை அழகானவனா கிருஷ்ணன்!’ என்று அந்த மன்மதனே வியந்து, தலைகுனிந்து போனானாம். அதனால், இங்கே உள்ள ஸ்வாமிக்கு ஸ்ரீமதனகோபால ஸ்வாமி எனும் திருநாமம் அமைந்தது'' என்கிறார் கோயிலின் சுந்தர்ராஜ பட்டர்.  

நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன், புல்லாங்குழலும் சங்கு மற்றும் சக்கரமும் ஏந்தியபடி வெகு அழகாகக் காட்சி தரும் பகவானைத் தரிசித்தபடியே இருக்கலாம். இந்தத் தலத்தின் விருட்சம்- வாழை.

இந்தத் தலத்தின் மற்றுமொரு சிறப்பு.... நின்ற கோலம், இருந்த கோலம் மற்றும் சயனக் கோலம் என மூன்று திருக்கோலங்களில் காட்சி தருகிறார் பெருமாள். மூலவர்- ஸ்ரீசத்யபாமா, ஸ்ரீருக்மிணி சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி. உத்ஸவர்- பஞ்ச லோகத்தாலான ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராக ஸ்ரீமதனகோபால ஸ்வாமி. தாயாரின் திருநாமம்- ஸ்ரீமதனவல்லித் தாயார்.

இங்கே நடைபெறும் முக்கிய வைபவங்களில், கிருஷ்ண ஜயந்தியும் ஒன்று. இந்த நாளில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் விசேஷமாக நடைபெறுகின்றன.

கிருஷ்ண ஜயந்தி நாளில் ஸ்ரீமதனகோபால ஸ்வாமியை மனதார வழிபடுங்கள்; மங்காத செல்வம் அனைத்தையும் பெறுவீர்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார் சதுர்புஜ கிருஷ்ண பகவான்.

- லோ.இந்து, படங்கள்: வி.சதீஸ்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு