Election bannerElection banner
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

சூரியனார் சாபவிமோசனம் பெற்ற தலம் ராமானுஜபுரம் ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி திருக்கோயில்வி.ராம்ஜி

'அடுத்தவர் பிரச்னையில் மூக்கை நுழைத்தால், இப்படித்தான்... நிறைய விளைவுகளையும் கவலைகளையும் சந்திக்க வேண்டும்’ என்று அலுத்துக்கொள்பவர்கள் பலருண்டு. குறிப்பாக, குடும்பத்தில் நடக்கும் சண்டையில், சமரசம் செய்கிறேன் என்று போனாலோ, அல்லது தன் கருத்தை அங்கே முன்வைத்தாலோ, விழி பிதுங்கி மாட்டிக்கொண்டு அல்லாடுகிற அனுபவம் இங்கே பலருக்கும் உண்டு.

அதே போன்றுதான் ஒருமுறை, ''அவர் எவ்வளவு பெரியவர்! எத்தனை சக்தி வாய்ந்தவர்! அவருக்கு எதிராக நாம் உணர்ச்சிவசப்பட்டுப் பேச, இப்போது வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டோமே! இது தேவையா?'' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு புலம்பினார் ஒருவர். அவர் நம்மைப் போன்ற சாமானியர் அல்ல... உலகுக்கே ஒளியை வழங்குகிற சூரியபகவான்.

''மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டை. இரண்டு பேருக்கும் இடையே தகராறு. கர்வத்தாலும் ஆணவத்தாலும் வந்த இந்த மாமனார்- மாப்பிள்ளை சண்டை, ஒருகட்டத்தில் அப்பாவுக்கும் மகளுக்குமான சண்டையாக மாறியதே, அப்போதாவது சுதாரித்திருக் கலாம். அன்றைக்கு யார் முகத்தில் விழித்தோமோ, சாபத்தை வாங்கிக்கொண்டு, தலம் தலமாக ஓடுகிறோம்'' என்று வாய்விட்டுப் புலம்பினார் சூரிய பகவான்.

சிவனார் மீது மாமனார் தட்சனுக்குக் கோபம். ஆகவே, தான் நடத்துகிற யாகத்துக்கு மருமகனுக்கு அழைப்பு அனுப்பவில்லை. கணவருக்கு மரியாதை தர மறுக்கிற அப்பாவின் மீது கடும் கோபத்தில் இருந்தாள் உமையவள். 'என் கணவரை உலகே கொண்டாடுகிறது. போற்றி வணங்குகிறது. நீங்கள் மட்டும்தான் அவரை அவமதிக்கிறீர்கள். இது என்ன நியாயம்?’ என்று முகத்துக்கு எதிரே கேட்டுவிட்டு வருகிறேன் என்று உமையவள் புயலெனக் கிளம்பினாள். கணவர் சிவனார் எத்தனை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை அவள்.

ஆலயம் தேடுவோம்!

யாக வேளையில் சென்றாள். அப்பாவிடம் ஆவேசமாகக் காரணம் கேட்டாள். கணவரை இழித்துத் தந்தையார் பேச... கோபம் தலைக்கேறியது அவளுக்கு. 'என் கணவருக்கு மரியாதை செய்யாமல் நடத்தப்படும் இந்த யாகத்தை அழிக்கிறேன்’ என்று சொல்லி, யாகத் தீயில் விழுந்தாள்.  

அந்த யாகத்தீயில் இருந்துதான் அகோர வீரபத்திரரை உருவாக்கினார் ஈசன். அவரைக் கொண்டே அங்கிருந்தவர்களைத் துரத்தினார்; அழித்தொழித்தார்.

யாகத்துக்கு வந்திருந்த சூரிய பகவான் பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாம். இந்த மாமனார்- மாப்பிள்ளைச் சண்டையில், தேவையில்லாமல் மூக்கை நுழைத்தார். வீரபத்திரருக்கும் சூரியனாருக்கும் கடும் வாக்கு வாதம் வந்தது. அதில், தட்சனுக்கு ஆதரவாக சூரியனார் வார்த்தைகளை விட, ஆவேசமான அகோர வீரபத்திரர், 'ஈசனே... உலகுக்கே வெளிச்சம் கொடுக்கிற சூரியனாரின் புத்தி இருளில் கிடக்கிறது. உங்களைப் பூரணமாக உணராமல் ஏதேதோ உளறுகிறார். அவரின் தேஜஸ் குலைந்து, தொழிலும் நசியட்டும் எனச் சாபமிடுங்கள்’ என்று வானம் பார்த்து, சிவனாரை வேண்டினார்.

அவ்வளவுதான். சூரிய பகவான் ஒளியிழந்தார். களையிழந்தார். பிறகு, தேவகுரு பிரகஸ்பதியின் அறிவுரைப்படி, பூவுலகில் அவர் சொன்ன புண்ணிய க்ஷேத்திரத்துக்கு வந்து தவம் செய்தார். மாசி மாத மக நட்சத்திர நன்னாளில், 'அகில உலக நாயகனே! பாவங்களைப் போக்கி புண்ணியங்களைத் தரும் ஸ்ரீகாசியம்பதி வாழ் விஸ்வநாதரே! என் சாபத்தை எடுத்துக்கொண்டு விமோசனம் தாருங்கள், ஸ்வாமி! இந்தச் சிறியவனை மன்னித்தருளுங்கள்’ என மன்றாடி வேண்டினார். அங்கே, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்; இரண்டு திருக்குளங்களை அமைத்து, அந்த நீரைக் கொண்டு அபிஷேகித்து ஆராதித்தார்.

ஆலயம் தேடுவோம்!

அந்தத் திருக்குளங்கள் சூரிய புஷ்கரணி, லிங்க புஷ்கரணி என இன்றைக்கும் அழைக்கப்படுகின்றன. தவத்தின் பலனாக, சிவ-பார்வதி சமேதராகக் காட்சி தந்தருளினார் ஈசன். 'அவசரப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தது போதும். இந்தத் தவற்றை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன். என்னைப் போல அவசரப் பட்டு எத்தனையோ பேர் வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை சிறக்க, இங்கே இந்தத் தலத்தில் இருந்தபடி, எல்லாரையும் அருள்புரிய வேண்டுகிறேன் ஸ்வாமி!’ எனப் பிரார்த்தித்துக் கேட்டுக் கொண்டார் சூரிய பகவான்.

'அப்படியே ஆகட்டும்’ என்று சொன்ன சிவனார், அன்றிலிருந்து பார்வதிதேவியுடன் இந்தத் தலத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலிக்கலானார் என்கிறது ஸ்தல புராணம்.

ஒருகாலத்தில், பாஸ்கரபுரி என்றும் பாஸ்கர க்ஷேத்திரம் என்றும் போற்றப்பட்ட இந்தத் தலம், இன்றைக்கு ராமானுஜபுரம் என்று அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது ராமானுஜபுரம். கும்ப கோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். ஜாதகத்தில் சூரியனால் தோஷங்கள் இருந்தால், இங்கு வந்து ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதரைத் தரிசித்தால் போதும்; தோஷம் நீங்கும்.

வெப்பத்தால் உண்டாகும் வியாதிகள், இதயம், கண்கள் மற்றும் வயிறு தொடர்பான நோய் வந்து தாக்கினால், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் நிவாரணம் பெறலாம் என்பது ஐதீகம்!

ஆனால் என்ன... ஒருகாலத்தில் பிரமாண்டமாகத் திகழ்ந்த ஆலயம், இன்றைக்கு தன் பிரமாண்டத்தையும் பேரழகையும் தொலைத்துவிட்டு நிற்கிறது. குடிசையில் இருந்தவருக்கு வீட்டையும் செல்வத்தையும் வாரி வழங்கிய சிவனார், இப்போது ஓலைக்குடிசை ஒன்றில் இருந்தபடி உலகையே ரட்சித்து வருகிறார்.

ஆலயம் தேடுவோம்!

கோயில் நுழைவாயில் என்ன, கோயிலுக்கு அருகில் உள்ள இரண்டு தீர்த்தக் குளங்கள் என்ன... அழகிய நீண்ட பிராகாரங்கள், மண்டபங்கள், நந்தி, பலிபீடம், கொடிமரம் என எல்லாம் இருந்த ஆலயத்தில், இப்போது இவை ஏதுமே இல்லை என்பதுதான் மிகக் கொடுமையான விஷயம்.

கும்பகோணம், சுவாமிமலை, திருப்புறம்பியம், சூரியனார்கோவில் என்று அந்தத் தலங்களுக்கு வந்து வணங்கிச் செல்பவர்கள், இதோ இந்த ராமானுஜபுரத்துக்கும் வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவனாரையும் அம்பிகையையும் வழிபட்டுச் செல்வதை அன்றைய நாளில் வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம்.

''கடந்த 1910-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடந்ததற்குப் பிறகு, இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்ததாகத் தெரியவில்லை. அதையடுத்து, கோயிலும் பராமரிப்பின்றிப் போனது. வழிபாடுகளும் மெள்ள மெள்ளக் குறைந்தன.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கி யிருக்கும் இந்த ஊரில், கோயிலும் வழிபாடுகளும் திருவீதியுலா வும் தழைத்தோங்க வேண்டாமா?

சூரிய பகவான் கடும் தவம் புரிந்த தலத்தை, சூரியனைப் போலவே மீண்டும் பிரகாசமாக மிளிரச் செய்வது நம் கடமை அல்லவா!

காசிக்கு நிகரான தலம் இது. ஏனென்றால், ஸ்ரீவிஸ்வநாதரும் அன்னை ஸ்ரீவிசாலாட்சியும் குடிகொண்டிருக்கும் கோயிலாயிற்றே! உலகையே ரட்சித்து அருள்கிற சிவனாரும், உலகுக்கே வெளிச்சம் தருகிற சூரிய பகவானும் கோலோச்சுகிற இந்தக் கோயிலின் கும்பாபி ஷேகத் திருப்பணியில் பங்கு பெறுங்கள். உங்களால் இயன்றதைச் செய்யுங்கள்.

சூரிய- சந்திரர்கள் இருக்கும் வரை, உங்கள் சந்ததியும் வாழையடி வாழையென வளமுடன் வாழ்வார்கள்!

படங்கள்: க.சதீஷ்குமார்

எங்கே இருக்கிறது?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது ராமானுஜபுரம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம்- திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ள இந்த ஊர், சூரியனார் தவமிருந்து சாப விமோசனம் பெற்ற திருத்தலம். இங்கே உள்ள இறைவன்- ஸ்ரீவிஸ்வநாதர்; அம்பாள்- ஸ்ரீவிசாலாட்சி.

டவுன் பஸ் வசதி சற்று குறைவுதான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு