மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 12

சேதி சொல்லும் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

##~##

 ங்கைப் பேராற்றில் இருந்து பொற்குடங்களில் நீரை எடுத்து வந்தார்கள், சோழநாட்டு வீரர்கள். இங்கே, கங்கைகொண்ட சோழீச்சரத்து விமானத்தில் அந்தப் புனிதநீர் வார்க்கப்பட்டது. அத்தகைய புண்ணியம் மிக்க திருத்தலம், கங்கை கொண்ட சோழபுரம்.  

கங்கைகொண்ட சோழீச்சரத்து ஸ்ரீவிமானத்தின் வடபுற கோஷ்டங்களில் ஸ்ரீதுர்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீகாமதகனமூர்த்தி, ஸ்ரீசரஸ்வதி - ஸ்ரீசாவித்திரி எனும் இரண்டு தேவியருடன் பிரம்மதேவர், ஸ்ரீகாலகால மூர்த்தி ஆகியோரின் திருவுருவங்கள் அழகுற இடம்பெற்றுள்ளன. அர்த்த மண்டபத்துக்குச் செல்லும் வடபுறத் திருவாயிலில், இரண்டு பிரமாண்டமான துவாரபாலகர்களின் சிற்பங்களும், அவர்களுக்கு அருகே மேற்கு திசையில் ஸ்ரீசண்டீச அநுக்கிரக மூர்த்தியும், கிழக்கு திசையில் ஸ்ரீசரஸ்வதியும் திருத்தமான திருமேனியராகக் காட்சி தருகின்றனர்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 12

கீழே சிங்கம் உறுமியவாறு நிற்க, எட்டுக் கரங்களுடன் ஸ்ரீதுர்காதேவி நின்றவாறு காட்சி தருகிறாள். வலக்கரம் அபயம் காட்ட, அதேபுறம் உள்ள மற்ற மூன்று திருக்கரங்களில் முறையே வாள், அம்பு, சக்கரம் ஆகியவையும், இடது கரம் தொடைமேல் இருத்தியபடியும் திகழ, இடதுபுறம் உள்ள மற்ற கரங்களில் கேடயம், வில், சங்கு ஆகியவை காணப்பெறுகின்றன. கருணை பொழியும் திருமுகத்தோடு அன்னை பராசக்தி அற்புதமே உருவெனக் கொண்டு காட்சி தருகிறாள்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 12

இங்கு காணப்பெறும் மற்றொரு கோஷ்டத்தில், எண்கரங்களோடு ஸ்ரீபைரவர் திகழ்கிறார். திருமுடியில் தீச்சுடர்கள் ஒளிர, பிதுங்கும் விழிகளுடன் ரௌத்திரமும், கருணையும் கலந்த திருமுகத்துடன் நின்ற கோலத்தில் திகழும் இந்த தேவதேவனின் திருக்கரங்களில் திரிசூலம், மழு, வாள், பாசம், நெருப்பு, கபாலம், வில், மணி ஆகியவை காணப்படுகின்றன. மார்பில் கபாலங்கள் கோக்கப் பெற்ற புரிநூலும், இடுப்பில் பாம்பும் திகழ்கின்றன. இத்திருமேனியின் திருமுக அழகை ஏட்டில் வடிப்பது இயலாத ஒன்று!

இங்கு திகழும் ஸ்ரீபிரம்மதேவன், தாடி மீசையுடன் நான்கு திருமுகங்களும் கொண்டு, வேள்வியின் அதிபதியாக நின்ற கோலத்தில் காணப்படுகிறார். எங்கும் காண இயலாத வகையில் இங்கு ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசாவித்திரி எனும் இரண்டு தேவியர் அவருக்கு இருமருங்கிலும் நின்ற கோலத்தில் காணப்பெறுகின்றனர். பிரம்மனோ மேலிரு கரங்களில் ஸ்ருவம் ஸ்ருக் எனும் வேள்விக் கரண்டிகளையும், தர்ப்பை கட்டையையும் ஏந்தியுள்ளார். வலக்கரத்தில் உருத்திராட்ச மாலையும் இடது கரத்தில் நீர்ச் சொம்பும் உள்ளன. இப்படியரு திருக்கோலக் காட்சியை, வேறு சிவாலயங்களில் காண்பது அரிது என்றே சொல்லலாம்!

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 12

காம தகனமும், எரிந்த காமனுக்காக ரதிதேவி இறைஞ்ச, காம தகன மூர்த்தி அவனை மீண்டும் உயிர்ப்பித்ததுமான காட்சியை மிக அற்புதமான சிற்ப வடிவில், இங்கே உள்ள கோஷ்டத்தில் வடித்துள்ளனர். ஒரு காலை மடித்து, ஒரு காலைத் தொங்கவிட்ட நிலையில், நான்கு திருக்கரங் களுடன் சிவபெருமான் அமர்ந்தவாறு, தன் நெற்றிக் கண்ணால் காமதேவனை நோக்குகிறார். அவன் தீயின் தகிப்பு தாளமல், இரு கரங்களையும் உயர்த்தித் தடுக்க முற்படுகிறான். எரியும் அவன் திருவுடலை ரதிதேவி பின்புறம் அமர்ந்தவாறு தாங்கிப் பிடித்தபடி, ஒரு கரத்தை தலைக்குமேல் உயர்த்தி ஈசனை வேண்டுகிறாள். அற்புதமான இந்தக் காட்சியை மிக நுட்பமாக வடித்திருக்கிறார்கள் சிற்பிகள்.

வடபுற படிக்கட்டை ஒட்டித் திகழும் கோஷ்டத்தில், ஈசனார் தேவியுடன் அமர்ந்தவாறு, தரையில் அமர்ந்துள்ள விசார சர்மருக்கு தலையில் தான் தரித்திருந்த கொன்றை மாலையை எடுத்துச் சூட்டுகிறார். இந்தக் காட்சியை ஸ்ரீசண்டீச அநுக்கிரக மூர்த்தி அருளும் காட்சி என்பர். இந்தக் கோஷ்டத்துக்கு இருமருங்கும் ஸ்ரீசண்டீசர் புராண வரலாறு சிற்றுருவ சிற்பங்களாகச் சித்திரிக்கப்பெற்றுள்ளன.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 12
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 12

மண்ணியாற்றில் சிவலிங்க பூஜை செய்யும் விசார சர்மர், குரா மரத்தில் மறைந்து அவரை கண்காணிக்கும் தந்தை எச்சதத்தன், திருமஞ்சனக் குடத்தைக் காலால் இடறும் தந்தை, தந்தையின் கால்களை மழுப்படையால் வெட்டும் தனயன், பசுக்கூட்டங்கள் என சிற்பங்களெல்லாம் அழகு செய்ய, நடுவே ஸ்ரீசண்டேச அநுக்கிரக மூர்த்தியின் கோலக் காட்சி இடம்பெற்றுள்ளது. உண்பன, உடுப்பன, சூடுவன என மூன்றையும் தந்து ஸ்ரீசண்டீச பெரும்பதம் அருளும் திருக்கோலம், இங்கு வெகு அற்புதம்!

அர்த்த மண்டப வாயிற் படிக்கட்டின் எதிர்ப்புறம், அமர்ந்த கோலத்தில் ஸ்ரீஞான சரஸ்வதியின் அழகிய திருவுருவம் காட்சி தருகிறது. வாயிலின் இருமருங்கும் பிரமாண்டமான துவாரபாலகர் சிற்பங்கள் யானையை விழுங்கும் பாம்புடன் காணப் பெறுகின்றன. திருக்கோயில் வளாகத்தின் வடகிழக்கில் உள்ள சிற்றாலயத்தில், இருபது கரங்களுடன் திகழும் துர்கா தேவி(மகிஷாசுர மர்த்தனியின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

மூலவர் திருக்கோயில் மகாமண்டபத்தின் வடகிழக்கில் சௌரபீடம் எனும் சூரிய பீடம் உள்ளது. இதனை நவக்கிரகம் எனக் கூறி வழிபடுகின்றனர், பக்தர்கள். தேவியின் திருவுருவமும் சௌரபீடமும் மேலைச் சாளுக்கிய நாட்டிலிருந்து எடுத்து வரப் பெற்ற திருமேனிகள். இப்படியாக, ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் தலம், பல அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டு, அழகுறத் திகழ்கிறது.

- புரட்டுவோம்