Published:Updated:

பயணம்... பரவசம்! - 18

லதானந்த்

##~##

ஜோஷிமட் திருத்தல தரிசனம் முடிந்ததும், மதிய சாப்பாட்டை முடித்துக்கொண்டு பத்ரிநாதரைத் தரிசிக்கப் புறப்பட்டோம். நாங்கள் கடக்க வேண்டிய தூரம் 43 கி.மீ. மட்டுமே! ஆனாலும், மலைப் பாதையில் மிக மெதுவாகவே முன்னேற முடிந்தது. வழியெங்கும் அதல பாதாளத்தில், ஜீவ நதியான அலகநந்தா பெருத்த ஓசையோடு தொடர்ந்து வருகிறது. கைப்பிடிச்சுவர் அற்ற, மிக ஆபத்தான சாலையில் பயணம் செய்யவேண்டி இருந்தது. இடையில், நாங்கள் சென்ற வாகனம் பழுதுபட்டதால், பயண நேரம் கூடுதல் ஒரு மணி நேரத்தை எடுத்துக்கொண்டது. மாலை சுமார் 6 மணி அளவில் பத்ரிநாத் சென்றடைந்தோம்.

கேதார்நாத்தைவிடக் குளிர் இங்கு சற்றே குறைவுதான். இருந்தாலும், கை, கால்கள் குளிரினால் நடுங்கியபடிதான் இருந்தன. இங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அறை, கேதார்நாத் அறையைவிட ஓரளவு பரவாயில்லாமல் இருந்தது. கை கால் முகம் கழுவிக்கொண்டு, சுமார் 1 கி.மீ. தூரத்தில் இருந்த ஆலயம் நோக்கிப் புறப்பட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆலயத்தை அடைவதற்கு முன்னர் பத்ரிநாத் பற்றி லேசாகப் பார்க்கலாமா?

இமயமலையின் கார்வால் பகுதியில், அலகநந்தா நதியின் கரையில், சுமார் 11,200 அடி கடல்மட்டத்துக்கு மேல் இருக்கிறது பத்ரிநாத். நர நாராயண மலைத்தொடர்களுக்கு இடையில், நீலகண்ட சிகரத்துக்குக் கிழக்கே 9 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்தோ- சைனா (திபெத்) எல்லையில் இருந்து 24 கி.மீ தூரத்தில் இருக்கிறது இந்தத் தலம். நீலகண்ட சிகரம் போன்றவற்றை அடையும் மலையேறும் குழுக்களுக்கு நுழைவாயிலாக இருப்பதும் பத்ரிநாத் திருத்தலம்தான். இந்தப் பகுதியில் ஏராளமான இலந்தை மரங்கள் இருந்தனவாம். 'பத்ரி’ என்றால் இலந்தை என்று பொருள். எனவே, இங்கிருக்கும் ஆண்டவர் பத்ரிநாராயணன் என அழைக்கப்பட்டாராம். பத்ரிநாத்தை 'பத்ரிகாஸ்ரம்’ என்றும் அழைக்கிறார்கள்.

பயணம்... பரவசம்! - 18

இன்னும் ஒரு தல வரலாற்றையும் உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். அதன்படி, இலந்தை மரங்கள் நிரம்பிய இந்த இடத்தில் மகாவிஷ்ணு தவம் இருந்தபோது, அவருக்குக் குடைபோல் இருந்து காத்த லட்சுமி தேவியே ஓர் இலந்தை மரமாக (பத்ரியாக) மாறிப் போனாராம். 'பத்ரி விஷால்’ என அவரை பக்தர்கள் போற்றினராம். லட்சுமியின், அதாவது 'பத்ரி’யின் நாதருக்கு (விஷ்ணுவுக்கு) பத்ரிநாத் என்று பெயரும் ஏற்பட்டதாம்.

பாண்டவர்கள் சொர்க்கத்துக்குப் போகும் வழியில் பத்ரிநாத்தைக் கடந்து சென்றதாக மகாபாரதம் சொல்கிறது. பத்ரிநாத் ஆன்மிகச் செல்வத்தால் நிரம்பிய பூமி என்கிறது பத்ம புராணம். நாரத மகரிஷி தவம் செய்த இடம் இது. இங்கே பாய்ந்தோடும் அலகநந்தா ஆறு பற்றியும் ஒரு புராணக் கதை இருக்கிறது.

மக்களுக்கு சுபிட்சம் கொடுக்க ஆகாயத்தில் இருந்து கங்கை இறங்கினாளாம். ஆனால், கங்காதேவியின் வருகையை ஒரே நேரத்தில் பூமியால் ஏற்க இயலவில்லையாம். அதனால், கங்கை 12 ஆறுகளாகப் பிரிந்தாளாம். அதில் ஒன்றுதான் அலகநந்தா ஆறு என்கிறார்கள்.

இப்போதிருக்கும் ஆலயம், ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டிருக்கிறது. பாதை வசதிகள் அற்ற காலத்தில் பக்தர்கள் நூற்றுக்கணக்கான மைல் தூரத்தை நடந்தே கடந்து வந்திருக்கிறார்கள். தற்போது ஆண்டுதோறும் 6 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

தங்குவதற்குப் பல விடுதிகள் இருக்கின்றன. திருப்பதி தேவஸ்தான விடுதியும் உண்டு. உணவுப் பொருட்களின் விலை மிகவும் அதிகம். பல விடுதி அறைகளில் குளிப்பதற்கு வெந்நீர் ஹீட்டர்கள் இருந்தாலும், காலை 4 முதல் 6 வரை இரண்டு மணி நேரம் மட்டுமே ஹீட்டர் செயல்படுமாறு செய்திருக்கிறார்கள்.

இனி, பத்ரிநாத் ஆலயம் பற்றிப் பார்ப்போம்...

சாளக்கிராமக் கல்லினால் உருவான கறுப்பு நிறச் சிலை ஒன்றை அலகநந்தா ஆற்றில் ஆதிசங்கரர் கண்டெடுத்தார். அதை அவர் தற்போது பத்ரிநாத் ஆலயம் அருகே இருக்கும் வெந்நீர்க் குளத்துக்கு அருகில், ஒரு குகையில் பிரதிஷ்டை செய்தார். 16-ஆம் நூற்றாண்டில் கார்வால் மன்னர், மூர்த்தியின் திருவடிவை, தற்போதுள்ள ஆலயத்துக்கு மாற்றினாராம்.

ஆலயத்தின் உயரம் சுமார் 50 அடி. ஆலயத்தின் முகப்பானது, கற்சுவர்கள் மற்றும் வளைவான ஜன்னல்கள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆலயத்தினுள் நுழைவதற்கு விசாலமான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தென்னாட்டில் இருக்கும் ஆலயங்களின் கோபுர வடிவமோ அல்லது வட நாட்டு ஆலயங்களின் கூம்பு வடிவமோ இங்கே இல்லை. மாறாக, இந்தத் திருக்கோயிலின் முகப்புத் தோற்றம் புத்த விஹாரங்களை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

பயணம்... பரவசம்! - 18

நாங்கள் கோயிலுக்கு வந்த நேரம், பக்தர்கள் வரிசையாகச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். இந்த ஆண்டில் பக்தர்களின் தரிசனத்துக்காக ஆலயம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே நாங்கள் பத்ரிநாத் சென்றுவிட்டதால், கூட்டம் குறைவாகவே இருந்தது.

கர்ப்பகிரகம், தரிசன மண்டபம், சபா மண்டம்  என மூன்று பகுதிகளாக ஆலயம் இருக்கிறது. மண்டபத்தினுள் நுழைந்ததும் எதிர்ப்படும் பெரிய ஹால் கர்ப்பக்கிரகத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது. சுவர்களிலும் தூண்களிலும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. மகாவிஷ்ணுவின் இரட்டை திருக்கோலங்களான நர நாராயணர் தோற்றங்கள் இங்கே புனிதமாகப் போற்றப்படுகின்றன.

அரவிந்தவல்லித் தாயார், குபேரர், கருடர், நாரதர், நர நாராயண வடிவங்களோடு, குளிர்காலத்தில் ஜோஷிமட்டுக்குச் செல்லும் இக்கோயில் உத்ஸவர் ஆகியோர் உடனிருக்க பத்ரிநாராயணர் காட்சி அளிக்கிறார். பெருமாள் மட்டும் சாளக்கிராமக் கல்லால் வடிக்கப்பட்டு இருக்கிறார். மற்ற விக்கிரகங்கள், உத்ஸவ மூர்த்திகள்.

பத்ரிநாராயணர் இலந்தை மரத்தின் கீழ் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். சிலையின் உயரம் ஒரு மீட்டர். நான்கு கரங்கள் கொண்டவராக, மேல் வலது கரத்தில் சங்கும், மேல் இடது கரத்தில் சக்கரமும் தரித்திருக்கிறார். கீழ்க்கரங்கள் யோக முத்திரை காட்டுகின்றன. பெரும்பாலும் கிடந்த கோலத்தில் அருள்புரியும் பெருமாள், இங்கே அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். வெளிச்சுற்றில் மகாலட்சுமிக்கு (அரவிந்தவல்லித் தாயார்) சந்நிதி இருக்கிறது.

ஆதிசங்கரருக்கும் இங்கே ஆலயம் உள்ளது. பெரியாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். இந்தத் திருத்தலம் 'திருவதரியாஸ்ரமம்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார் பத்ரிநாத் திருத்தலத்தை 'வதரி’ என்றே குறிப்பிடுகிறார். அதை உறுதிப்படுத்தும் பாடல்:

வெந்திறல் களிறும் வேலைவாயமுதும்
விண்ணொடு விண்ணவர்க்கரசும்
இந்திரற் கருளி எமக்கும் ஈந்தருளும்
எந்தை எம் அடிகள் எம்பெருமான்
அந்தரத்தமரர் அடியினை வணங்க
ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்திழிந்த கங்கையின் கரைமேல்
வதரியாச்சிரமத்துள்ளானே'

பத்ரிநாத்தில், ஸ்வாமி கர்ப்பக்கிரஹத்துக்கு மிக அருகில் அமர்ந்து, ஆண்டவனை மனம் குளிரச் சேவிக்கலாம். இங்கே பெருமாளைத் திரைபோட்டு மறைப்பதே இல்லை. திருமஞ்சனம், நைவேத்தியம் முதலானவை நம் கண் எதிரிலேயே செய்யப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக ராவால் என்று அழைக்கப்படும் கேரள நம்பூதிரிகள் தலைமை அர்ச்சகர்களாக இருந்து வருகிறார்கள். கற்கண்டு, துளசி மற்றும் உலர்ந்த பழங்கள் பிரசாதமாக தரப்படுகின்றன.    

மிகக் குளிர்ந்த நீர் ஓடிக்கொண்டிருக்கும் அலகநந்தா ஆற்றங்கரையிலேயே கோயிலை ஒட்டி வெந்நீர் ஊற்று இருப்பது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. மருத்துவ குணம் நிரம்பியதாக இந்த வெந்நீர் கருதப்படுவதால் பக்தர்கள் பலரும் இதில் நீராடுகின்றனர். இதை 'தப்த குண்டம்’ என்கிறார்கள். இந்தக் குளத்து நீரின் வெப்ப நிலை 55 டிகிரி சென்டிகிரேட். ஆனால், சுற்றியுள்ள பகுதிகளின் வெப்ப நிலையோ பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவாக இருக்கிறது.

ஆலய தரிசனம் முடித்துவிட்டு 'இந்தியாவின் கடைசி கிராமம்’ என அழைக்கப்படும் மானா கிராமத்தைப் பார்க்கப் புறப்பட்டோம்.

அது என்ன மானா?

- யாத்திரை தொடரும்...

பயணம்... பரவசம்! - 18

பஞ்ச பத்ரிகள்!

புண்ணிய திருத்தலமான பத்ரிநாத் பஞ்ச (ஐந்து) பத்ரிகளுள் ஒன்றாக கொண்டாடப்படு கிறது. யோகாத்யன் பத்ரி, பவிஷ்ய பத்ரி, ப்ரிதா பத்ரி மற்றும் ஆதி பத்ரி ஆகியன பிற பத்ரி தலங்கள்.

விஷால் பத்ரி: பத்ரிநாராயணர் எழுந்தருளி இருக்கும் பத்ரிநாத்தே 'விஷால் பத்ரி’ என்று அழைக்கப்படுகிறது.

யோகாத்யன் பத்ரி: பத்ரிநாத்தில் இருந்து 24 கி.மீ. தூரத்திலும், ஜோஷிமட்டில் இருந்து 20 கி.மீ. தூரத்திலும் அமைந்திருக்கிறது இது. பாண்டுகேஷ்வர் என்ற பெயரும் உண்டு.

பவிஷ்ய பத்ரி: ஜோஷிமட்டில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் இருக்கும் சிற்றூர் இது.

ப்ரிதா பத்ரி: ஆதிசங்கரர் சிறிது காலம் பத்ரிநாதரை இங்கே வணங்கினாராம். அனிமத் என்ற பெயரும் இதற்கு உண்டு.

ஆதி பத்ரி:  கர்ணப் பிரயாகையில் இருந்து 16 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது இது. குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள பல ஆலயங்கள் இங்கே இருக்கின்றன. அவற்றுள், மன நாராயணன் ஆலயம் பிரசித்திபெற்றது. முன்னோர்களுக்கான சிராத்த கர்மங்களை நிறைவேற்றும் 5 புண்ணியத் தலங்களில் பத்ரிநாத்தும் ஒன்று. (மற்றவை: காசி, கயா, அலகாபாத் பிரயாகை மற்றும் ராமேஸ்வரம் ஆகியன).