சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

நாரதர் கதைகள்- 12

இது நான்கு வேத சாரம்எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

##~##

பூமியிலுள்ள எல்லோருக்கும் விதம் விதமாக புத்திமதி கூறி, பாடம் எடுத்து, பக்குவப்படுத்தி, அவர்களை நல்வழிப்படுத்தும் நாரதரின் மேன்மை, வைகுந்தவாசனான நாராயணருக்கும் எட்டியது.

தன்னுடைய பக்தன் எல்லா உலகிலும் சஞ்சரித்து நல்ல பெயர் வாங்குகிறான் என்பது சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருந்தது. நாரதரை மனத்தால் நினைக்க, அவர் இன்னமும் சில விஷயங்களில் தெளிவாகவில்லை என்று தெரிந்தது.

நாரதர், பூமியில் ஒரு கிராமத் தின் வழியே நடந்து போய்க் கொண்டிருக்க, அந்த இடத்தில் நாராயணர் தோன்றினார். நாரா யணனைக் கண்டதும், நாரதர் மகிழ்ச்சியில் ஆனந்தப் பரவசம் அடைந்தார். சுற்றிச் சுற்றி வந்தார். பலமுறை விழுந்து வணங்கினார். மனமுருகப் பாடினார். கை கூப்பினார்.

''நினைக்கிறபோது நேரில் வரும் தெய்வம் என்று உன்னைச் சொல்வார்கள். உன்னை நினைக்காத நேரம் இல்லை. ஆனால், உன்னை நான் இப்போது அழைக்கவில்லையே.,? அழைக்காதபோது வந்திருக்கிறாயே! அது என் பொருட்டா, உன் பொருட்டா?'' என்று பணிவாக வேண்டினார்.

''நன்றாகப் பாடம் நடத்துகிறாய்!''

''எல்லாம் உங்கள் அருள்.''

''விதம் விதமாக நீதிகளை நிலைநாட்டுவதில் உனக்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதைச் சுத்தமாகச் செய்கிறாய்.''

''உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் ஆசி இல்லாது நான் இயங்க முடியுமா?''

''ஆனால், சொல்லிக் கொடுப்பவருக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.''

''அதுதானே பார்த்தேன். வெறுமே கையில் கத்தியை வைத்திருக்கிறீர்களே... இன்னும் என் இடுப்பில் சொருகவில்லையே என்று. சொருகிவிட்டீர்கள். நல்லது. நான் பாடம் நடத்துவது உண்மைதான்; சொல்லிக்கொடுத்ததும் வாஸ்தவம்தான். எனக்கு என்ன தெரியவில்லை என்பதுதான் தெரியவில்லை.''

''அப்படியானால், உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நினைக்கிறாயா?''

''அப்படிச் சொல்லவில்லை. எனக்கு என்ன தெரியாது என்பது தெரியாது என்று

சொல்கிறேன். எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்கும், எது தெரியாது என்று நிற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?''

நாரதர் கதைகள்- 12

''மிகுந்த அடக்கம் உள்ளவன் நீ!''

''உங்கள் கருணை. தொடர்ந்து ஏதாவது கேள்வி கேட்கவேண்டும் என்றால் தாராளமாகக் கேட்கலாம்'' என்றவர் தொடர்ந்து,

''வந்து வசமாகச் சிக்கிக்கொண்டேன். என்னை வறுத்து எடுப்பதற்கென்றே வந்து விட்டீர்கள். எங்கோ பிழை செய்திருக்கிறேன். அல்லது, எல்லோருக்கும் உதவி செய்கிறேன் என்று கர்வப்பட்டிருக்கிறேன். அந்தக் கர்வத்தை சுத்தமாகத் துடைத்து எடுக்க வேண்டும். நான் தயார்!'' எனப் புலம்ப... நாராயணன் சிரித்தார்.

நாரதர் தொடர்ந்தார்... ''எனக்குள் சில ஐயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். கேள்விகள் இருக்கின்றன; பதில்கள் தெரியாது என்ற நிலை எனக்கு இருக்கிறது. உண்மைதான். என்னிடம் உள்ள முதல் கேள்வி இது... கேட்கலாமா?''

''கேள் நாரதா, உனக்கு பதில் சொல்லாமல் யாருக்குச் சொல்லப் போகிறேன்?''

''மாயை என்றால் என்ன? எது மாயை? என் எதிரே நீங்கள் இருக்கிறீர்கள். நினைத்தவுடன் வருகிறீர்கள். உங்கள் எதிரே நான் நிற்கிறேன். எனக்கும் உங்களுக்கும் ஒரு சம்வாதம் நடந்து கொண்டிருக்கிறது. நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள்: நானும் தெளிவாக இருக்கிறேன்.

இதோ, நாம் பார்க்கிற ஊரும் தெளிவாக இருக்கிறது. பூமி தெளிவாக இருக்கிறது. வானம் தெளிவாக இருக்கிறது. தேவர்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் எல்லோரும் சௌக்கியமாக, நல்லபடி வாழ்கிறார்கள். நல்லபடி வாழாதவர்கள் தண்டனை பெற்றுத் திருந்துகிறார்கள். எல்லாம் ஒரு நியதியாய், அழகாய்த்தானே நடந்துகொண்டிருக்கிறது!

இங்கே மாயை என்பது என்ன? எனக்குப் புரியவில்லையே! இங்கு நடப்பதைத் தாண்டி, வேறு ஒரு மயக்கம், அல்லது ஒரு மாயை ஒருவருக்கு எப்படி ஏற்படும்?''

''நல்ல கேள்வி. இந்தக் கேள்வியின் ஜீவ ரசத்தை யார் புரிந்துகொள்வார்களோ, அவர்கள் மிகுந்த புத்திமான்களாகவும் கல்விமான்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறாய். வா, கொஞ்சம் நடப்போம், பதில் சொல்கிறேன்'' என்று நாராயணர் சொல்ல, இருவரும் நடந்தார்கள்.

எதிரே பல பெண்கள் குடத்து நீரை வைத்துக்கொண்டு வந்தார்கள். பெண்கள் கூட்டமாக வந்ததால் நாரதரும் நாராயணரும் சற்று ஒதுக்கமாக நின்றுகொண்டார்கள். இரண்டு ஆண்கள் நிற்பதைப் பார்த்து, அந்தப் பெண்கள் தலைகுனிந்தபடியும் ஓரக் கண்ணால் பார்த்தபடியும் நடந்தார்கள். அவர்களில் கடைசியாக ஒரு பெண், கை வீசி ஒயிலாக நடந்தாள். அவள் நாரதரைப் பார்த்து, 'அட, அழகாக இருக்கிறாரே’ எனச் சற்று நிதானித்து, நடந்தாள்.

அவளது அபரிமிதமான அழகும், அங்க லாவண்யங்களும், பெரிய கண்களும், உதடுகளும், முத்து வரிசைப் பற்களும், தண்ணீரைச் சுமந்து போகிற லாகவமும்  நாரதரைக் கிறங்கடித்தன.

''அடேயப்பா, இந்தக் கிராமத் தில் இப்படி ஒரு பெண்ணா! தேவலோகத்துப் பெண்களுக்கு ஈடாக இருக்கிறாளே!'' என்று நாரதர் நினைத்தார். அவளைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டார். திரும்பி நாராயணரைப் பார்த்தார்.

நாரதர் கதைகள்- 12

''அடேய், உனக்கில்லாத பெண்ணா? போய்க் கேள்!'' என்று சொல்ல, நாரதர் நாராயணரை மறந்தார். உடனே அவளைப் பின்தொடர்ந்து, அவள் வீட்டுக்கே போய், தான் யார் என்று சொன்னார். அந்த வீட்டார் அவருக்குத் தங்கள் பெண்ணை மகிழ்ச்சியோடு திருமணம் செய்து கொடுக்க முன்வந்தார்கள். அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.

அன்று மாலையே அவர்களின் திருமணம் நடந்தது. அவர்களுக்கென்று ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அவர் இனிமையாகப் பாடுவதைக் கேட்டு, பலர் அவருக்குப் பரிசளித்தார்கள். நாரதர் நாராயணரைப் பாடி, வீணை மீட்டி நிறையச் சன்மானங்கள் பெற்றார். நிறையப் பொருள்கள் வாங்கி, வீட்டை நிரப்பினார். மனைவிக்கு நல்ல உடைகளும் நகைகளும் வாங்கிக் கொடுத்தார். நன்கு சாப்பிட்டார். இரவும் பகலும் மனைவியோடு கூடிக் களித்தார். குழந்தைகள் பெற்றார்.  

அவர்களுக்கு மொத்தம் பதினாறு குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொன்றும் மணி மணியாய் இருந்தன. அற்புதமாகப் பாடின; பேசின. அவர்கள் குடும்பமாக ஓரிடத்தில் அமர்ந்து நாராயணனை நோக்கிப் பாடுகிறபோது, ஊர் அசந்தது. ''என்ன அற்புதமான குடும்பமடா இது!'' என வியந்தது. தம்பூர் ஸ்ருதியை மனைவி மீட்ட, குரலெடுத்து நாரதர் பாட, மற்ற குழந்தைகளும் கோரஸ் சேர்ந்துகொள்ள, 'கந்தர்வ கானம்... கந்தர்வ கானம்’ என்று ஊரே சிலாகித்தது.

நாரதரின் நாராயண கானம், உலகமெங்கும் பரவியது. பல தேசத்து அரசர்கள் அவரை விரும்பினார்கள். அவரைத் தங்கள் அவையில் வந்து பாடச் சொன்னார்கள். நாரதர் ராஜ்ஜியம் ராஜ்ஜியமாகப் பயணப்பட்டுக்கொண்டே இருந்தார். மனைவியோடும் குழந்தைகளோடும் வந்த அவரை அரசர்கள் வரவேற்றார்கள். கும்ப மரியாதை செய்தார்கள். ரத்தின ஆடை போர்த்தினார்கள். கிரீடம் வைத்தார்கள். பாதங்களுக்குச் சலங்கை போட்டார்கள். கையில் தங்கக் காப்பு கட்டினார்கள். மனைவிக்கு ஆரம் கொடுத்தார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் தங்கச் சங்கிலி அணிவித்தார்கள். மிகப் பெரிய பெருமையெல்லாம் நாரதரை வந்து சேர்ந்தது.

ஒருநாள்... இடி இடித்தது. மழை பெய்தது. நாரதர் தன் மாளிகையின் வாசலைத் தாழ் போட்டுக்கொண்டு, எங்கும் வெளியில் போக வேண்டாம் என்று தீர்மானித்தார். மழை அதிகமாயிற்று. தெரு முழுவதையும் மழைநீர் வளைத்துக் கொண்டது. ஊர் முழுவதையும் வளைத்துக் கொண்டது. கடல் பொங்கி உள்ளே நுழைந்துவிட்டது என்று கூக்குரலிட்டார்கள். ஆறு பிரவாகம் கொண்டது. திசை திரும்பியது. மழை அதிகரித்தது. ஆற்று வெள்ளம் நாலாப் பக்கமும் பாய்ந்தது. குடிசைகளை அடித்துக்கொண்டு போயிற்று. வீடுகளை, மாட, மாளிகைகளை வேகமாக முட்டிற்று.

நாரதர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பெரிய படகு தயார் செய்தார். அதில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டார். மிக பத்திரமாக கரை ஏற்றுகிறேன் என்று தைரியம் கொடுத்து, குழந்தைகளை அமைதியாக இருக்கச் சொல்லி, மனைவியைத் துடுப்பு போடச் சொல்லி, கோல் கொண்டு மெள்ள ஊன்றி ஊரைக் கடந்தார். மழை இன்னும் வலுத்தது. வெள்ளம் படகைத் தள்ளிக்கொண்டு போய் சமுத்திரத்தில் தள்ளியது. சமுத்திரத்தின் பெரிய அலைகள் தூக்கித் தூக்கிப் போட்டன. பல குழந்தைகள் வெளியே விழுந்தன. நாரதர் கதறினார். ''அய்யோ... என் குழந்தை!'' என்று அலறினார்.

''மிக அழகாகப் பாடுவாளே, அதோ போய்க் கொண்டிருக்கிறாளே! காப்பாற்ற யாரும் இல்லையா?'' என்று கண்ணீர் விட்டார்.அத்தனைக் குழந்தைகளும் தத்தளித்து நீரில் விழுந்து, ஒவ்வொன்றாய் மடிந்தன. ஒரு கட்டத்தில் படகின் பலகை எகிறி மனைவியின் தலையில் அடிக்க, அவள் அதே இடத்தில் பிணமானாள். உருண்டு நீரில் விழுந்தாள். நாரதர் மட்டும் படகில் தவித்துக் கிடந்தார்.

''எல்லாம் போயிற்று! எல்லாம் போயிற்று!'' என்று அழுதார். சட்டென திடுக்கிட்டாற்போல் விழித்துக்கொண்டார்.

நாரதர் கதைகள்- 12

''என்ன போயிற்று? அவர்கள் போய் நாழியாயிற்று. என்னவோ போயிற்று போயிற்று என்றீர்களே... எது போயிற்று? தண்ணீர்தானே? வேண்டுமா, மறுபடி வரச் சொல்லவா?'' என்று நாராயணர் கேட்க, நாரதர் தடாலென அவர் காலில் விழுந்தார்.

''வேண்டாம். மறுபடியும் வரச்சொல்ல வேண்டாம். தண்ணீர் எடுத்தவர்கள் நடந்து போன இடத்தின் காலடித் தடம் காய்வதற்குள் நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன்.

காலம் என்பது நம் மூளைக்குள் இருக்கிறது.

காலம் என்பது விதம் விதமான உயிர்களுக்கு விதம் விதமாக இருக்கிறது. ஒரு புழு, தான் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக நினைத்துக் கொள்ளலாம். ஒரு யானை, தான் ஆயிரம் வருடங்கள் வாழ்வதாக நினைத்துக்கொள்ளலாம். ஒரு மனிதன் தனது ஆயுள் இத்தனை என்று எண்ணிக் கொள்ளலாம். உண்மையில் காலம் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை.

சில நொடிகளில் நான் பெரிய வயது வரை வாழ்ந்துவிட்டேன். விதம் விதமான அனுபவங் களைப் பெற்றுவிட்டேன். ஒரு பெண்ணை மோகித்த அந்த க்ஷணம், அந்தப் பெண்ணோடு என் வாழ்க்கை நடந்து விட்டது. எதை வேகமாக மோகிக்கிறோமோ அதுவே நம்முடைய வாழ்க்கையாகிறது. அதை அடை வதே நம்முடைய தவிப்பாகிறது. அந்தத் தவிப்பே காலத்தால் கோக்கப்பட்டு நம்முடைய வாழ்க்கையாகிறது.

எதிலும் மோகப்படாமல் இருப்பதல்லவா வாழ்க்கை? எந்தக் காலத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதல்லவா வாழ்க்கை? தேவர்களுக்குக் கிடைத்த இந்த லட்சணம் எனக்குக் கிடைத்தது. இருப்பினும், நடுவே விட்டுவிட்டேன். சில கணங்கள் என்னை மறந்துவிட்டேன்.

இதுதான் மாயை. மிகச் சிறந்த புத்திமானை யும், கல்விமானையும், தேவனையும், எல்லாம் தெரிந்தவனையும் கவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிற மிகப் பெரிய விஷயம் இந்த மாயை. இந்த மாயையில் சிக்காதவன், நாராயணா, நீ மட்டும்தான்! உன் காலடியைப் பற்றிக்கொண்டால்தான் மாயையில் சிக்காமல் இருக்கமுடியும். எந்த ஆசையும் எனக்குள் ஏற்படாது, எந்தக் கவலையும் என்னைத் தீண்டாது, எந்த மாயையிலும் நான் சிக்காது இருக்க நாராயணா, நாராயணா..! என்னைக் காப்பாற்றுவாய்'' என்று கதறி, கண்ணீர் விடுத்து, நாராயணரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டார்.

நாராயணர் நாரதரை நிமிர்த்தினார்.

''நீ சிரஞ்ஜீவி! நீ சொல்கிற அத்தனை வார்த்தைகளும் சிரஞ்ஜீவித்தனம் உடையவை! சொல். எது மாயை என்று யாருக்கு தேவையோ அவர்களுக்குச் சொல். யார் புரிந்துகொள்ள முடியுமோ, புரிந்து கொள்ளட்டும்.

காலம் என்பது என்ன என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர்களுக்கு இந்தக் கதையைச் சொல். வாழ்க்கை என்பது என்ன என்று எவர் கேட்டாலும், அது நொடி நேரத்தில் முடிவது என்று அவர்களுக்குச் சொல். நமக்குள் இருக்கிற காலம், நாம் போட்டுக் கொள்கின்ற காலம், நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்கின்ற காலம் வேறு; உண்மைக் காலம் வேறு என்பதை உலகத்தோர் புரிந்துகொள்ளட்டும்.

நாரதா, சொல்..! சகலருக்கும் சொல், உன்னுடைய பாடம் பூர்த்தியாயிற்று. நீ மகா ஞானி, நீ மகா ஞானி!'' என்று நாராயணர் நாரதரைத் தழுவிக்கொண்டார்.

நாரதரின் இந்த அனுபவம் மிகவும் சூட்சுமமான விஷயம்.

- தொடரும்