Election bannerElection banner
Published:Updated:

வெள்ளெருக்கு வனத்தில்... அழகன் ஆனைமுகன்

ராஜேஷ்குமார்

##~##

கோவை நகரத்தின் நெரிசலுக்கும் போக்குவரத்துக்கும் பயந்து, என் எழுத்துப் பணிக்கு ஏற்ற சரியான இடம் எது என்று நான் யோசிக்க ஆரம்பித்தபோது, கோவையின் பிரபலமான கட்டடப் பொறியாளர் கிருஷ்ணராஜ் என்னைச் சந்தித்தார். மருதமலையின் அடிவாரப் பகுதியில் 'க்யூரியோ கார்டன் அவென்யூ’ என்ற பெயரில் ஒரு புதிய காலனியை அமைத்து, அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தரப் போகும் ஒரு திட்டத்தோடு இருப்பதாகச் சொன்னார்.

1989-ஆம் ஆண்டு கிருஷ்ணராஜ் சொன்ன திட்டத்தின்படி. எனக்கும் அங்கே ஒரு வீடு கட்டித் தர வேண்டும் என்று சொன்னேன். என்னைப் போலவே பலரும் அங்கே வீடு கட்ட விரும்பியதால், வேலைகள் மளமளவென ஆரம்பமாகி, 1991-க்குள் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அங்கே எல்லாரும் குடியேறினோம். அதன்பிறகுதான், அந்தப் பகுதியில் ஒரு சிறிய கோயில்கூட இல்லையே என்கிற ஆதங்கம் எங்களுக்கு ஏற்பட்டது. உடனே எல்லோரும் கலந்து பேசினோம். விநாயகர் கோயில் ஒன்றைக் கட்டுவது என்று முடிவு செய்தோம். வயதில் மிகவும் மூத்த ஒருவர், 'கோயில் கட்டுவது சாதாரண விஷயம் இல்லை. இங்கே கோயில் கட்டலாமா, வேண்டாமா? இங்கே பெரியவர் (விநாயகர்) வந்து அமர அவருக்கு விருப்பமா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்'' என்று சொன்னார்.

நான் கேட்டேன்... ''எப்படித் தெரிந்துகொள்வது?''

''பிரஸ்னம் பார்க்க வேண்டும்.''

''சரி, பார்த்துவிடுவோம்!''

வெள்ளெருக்கு வனத்தில்... அழகன் ஆனைமுகன்

கேரளாவின் பழைமையான கிராமம் அது. வயது முதிர்ந்து பழுத்த பழமாக இருந்த நம்பூதிரி ஒருவரின் வீட்டில் பிரஸ்னம் பார்த்தோம். எங்களின் விநாயகர் கோயில் விருப்பத்தைச் சொன்னோம். அவர் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டுப் பின்பு சோழிகளை உருட்டிப் போட்டார். தொடர்ந்து நான்கைந்து தடவை சோழிகளை உருட்டிப் போட்டபடியே இருந்தார். பின்பு நிமிர்ந்து எங்களை நோக்கினார். முதல் கேள்வியாய், அந்தக் கேள்வியை மலையாள மொழியில் கேட்டார்... ''நீங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் அரசமரம், ஆலமரம், வேப்பமரம் மூன்றும் இணைந்த நிலப்பகுதி ஒன்று காலியாக இருக்கிறதா?''

குழப்பத்தோடு நாங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தோம், யோசித்தோம். முதலில் அது எந்த இடம் என்று எங்களில் யாருக்கும் சட்டென்று பிடிபடவில்லை. என்றாலும், சற்றுத் தள்ளி கிழக்குப் பார்த்தபடி ஒரு பத்து சென்ட் நிலம் இருப்பதும், அங்கே 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓர் அரச மரமும் ஆலமரமும் பின்னிப் பிணைந்து வளர்ந்து இருப்பதும், அந்த இரண்டு மரங்களுக்கு பக்கத்திலேயே ஒரு வேப்பமரமும் இருப்பதும் புரியவந்தது. பிரமிப்பும் எங்களை ஆட்கொண்டது.

''ஆமாம், அப்படி ஒரு இடம் எங்கள் குடியிருப்புக்குச் சற்றுத் தள்ளி இருக்கிறது. ஆனால், அந்த இடம் அவ்வளவு சுத்தமாய் இருக்காதே?'' என்றோம்.

அவர் மெள்ளச் சிரித்தார். ''இப்போது அந்த இடம் சுத்தமாக இல்லாமல் போனாலும், முன்னொரு காலத்தில் அது ஒரு பவித்ரமான, புனிதமான இடமாக இருந்தது. முனிவர் ஒருவரின் வேத பாடசாலையாக இருந்த அந்த இடம், பிறகு வேத கோஷங்கள் உறைந்துபோன இடமாக மாறியது. இது ஒரு சிறப்பு என்றால், இன்னுமொரு கூடுதல் சிறப்பும் இந்த இடத்துக்கு உண்டு...''

அது என்ன என்பது போல நாங்கள் அவரையே ஆர்வத்தோடு பார்க்க, அவர் சொன்னார்... ''ஸ்ரீ விநாயகப்பெருமானுக்கு வெள்ளெருக்கு வேரில் வாசம் செய்யப் பிடிக்கும். வேத பாடசாலையாக இருந்த அந்த இடம் அதற்கு முன்பாக வெள்ளெருக்கு வனமாக இருந்தது. வெள்ளெருக்குப் பூக்கள் பூத்துக் குலுங்கிய அந்த இடத்தில் விநாயகர் உட்கார்ந்தால், அது மிகவும் விசேஷமாக இருக்கும். அந்த இடத்தைத் தவிர, வேறு இடத்தில் நீங்கள் கோயில் கட்டுவது அவ்வளவு உசிதம் இல்லை.''

வெள்ளெருக்கு வனத்தில்... அழகன் ஆனைமுகன்

அவர் தீர்க்கமான குரலில் சொல்லிக் கைகளைக் கூப்பிவிட, நாங்கள் வெளியே வந்தோம்.

விநாயகர் கோயிலுக்கு ஏற்ற இடம் அதுதான் என்று முடிவானாலும், அந்த நிலத்தை வாங்கப் பணம் வேண்டுமே?! 1991-ல் அந்த நிலத்தின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய். அதற்காக நிதி வசூல் முயற்சியில் ஈடுபட்டபோது, போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் கோயில் கட்டும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவரவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்கள். பத்து பேர் மட்டும் கூடிப் பேசினோம். பிரஸ்னத்தில் சொன்னபடி கோயிலை அந்த இடத்தில் கட்டியே தீருவது என்ற முனைப்போடு, நிலம் வாங்கும் செலவைப் பத்து பேரும் பங்கிட்டுக்கொண்டு, நிலத்தை வாங்கிப் பதிவு செய்து, கோயிலைக் கட்டத் தொடங்கியும்விட்டோம். அப்போது கையில் போதுமான நிதி இல்லை. ஆனால், கோயில் ஒவ்வொரு அங்குலமாக உயர உயர, பணம் ஏதோ ஒரு வழியில் வந்துகொண்டே இருந்தது. கோயில் கட்டும் பணி நிறைவடைந்தபோது, கும்பாபிஷேக செலவுக்கும் போதுமான நிதி இருந்தது எங்களையெல்லாம் வியக்க வைத்தது.

கோயிலில் எழுந்தருளிய விநாயகருக்கு ஒரு நாமகரணம் சூட்டவேண்டும் என்று பல பெயர்களைத் துண்டுச் சீட்டுகளில் எழுதிக் குலுக்கிப்போட்டு, ஒரு சீட்டை எடுத்துப் பார்த்தோம். அதில், 'ஸ்ரீஆபத்சகாய விநாயகர்’ என்று வந்தது. அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட கும்பாபிஷேகங்களை நடத்திவைத்த ஆன்மிகப் பெரியவர் ஒருவரும் பக்கத்தில் இருந்தார். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை அவர் பார்த்துவிட்டு, 'இந்த விநாயகர் கொள்ளை அழகாக இருக்கிறார். எனவே, இவரை இனிமேல் 'ஸ்ரீஆபத்சகாய சுந்தர விநாயகர்’ என்று அழைப்போம்'' என்று கூற... அந்தப் பெயரிலேயே இன்றும் அருள்கிறார் விநாயகர்.

கோயிலுக்குப் பக்கத்திலேயே ஒரு பிரபலமான பள்ளிக்கூடம் இருப்பதால், மாணவ- மாணவிகளின் கூட்டம் பரீட்சை நேரங்களில் இங்கே அலைமோதும். கோயில் சிறியதுதான்! ஆனால், சீரியது. இந்தக் கோயிலைச் சுற்றிப் பரிவார தெய்வங்கள் பல இருந்தாலும், ஸ்ரீபால ஆஞ்சநேயர் பிரசித்தம். ஒரு குழந்தையின் முகம் போல் இந்த ஆஞ்சநேயரின் முகம் இருப்பதால், இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இவர் ஒரு சோட்டா அனுமன். 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் சேமிப்புப் பணத்தைக் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்து, கோயிலுக்குத் தேவையான பொருள்களை வாங்க உதவியுள்ளார்கள் என்பது ஹைலைட்!

முன்பெல்லாம் கோவைவாசிகளுக்கு வடவள்ளி என்றால், மருதமலை முருகன் நினைவு வருவார்; இப்போதோ, முருகனின் அண்ணனான ஸ்ரீஆபத்சகாய சுந்தர விநாயகரின் நினைவும் கூடவே வருகிறது என்றால், அதற்குக் காரணம் விநாயகர் அமர்ந்துள்ள இடம்தான். வரப்ரசாதியான இந்தப் பிள்ளையாரை வழிபட்டு அருள்பெற்ற நண்பர்கள் நிறையப் பேர்! அவர்களில் சிலர் பெரிய அதிகாரிகளாகவும், சிலர் வெளிநாட்டிலும் வேலை பார்க்கின்றனர்.

நீங்களும் இங்கே ஒருமுறை வாருங்கள். ஸ்ரீஆபத்சகாய சுந்தர விநாயகர் முன்பாகக் கைகளைக் குவித்து, கண்களை மூடி, ஒரு நிமிஷம் நின்று பாருங்கள். உங்கள் உடலிலும் உள்ளத்திலும் ஒரு சுகம் ஊடுருவிப் பரவுவதை உணர்வீர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு