Election bannerElection banner
Published:Updated:

ஆறு முகங்களுடன் ஆனைமுகன்!

ஆறு முகங்களுடன் ஆனைமுகன்!

##~##

றுபடை வீடு என்றாலே முருகக் கடவுள்தான் நம் நினைவுக்கு வருவார். அதேபோல், ஆறுமுகம் என்றாலே நினைவுக்கு வருவதும் இவரின் திருமுகம்தான். ஆனால், தம்பியின் ஆறுபடைவீடுகளில் ஒன்றில், தம்பியைப் போலவே ஆறு முகங்களுடன் அற்புத தரிசனம் தருகிறார் அண்ணன் ஸ்ரீவிநாயகப் பெருமான்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில், சண்முகா நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீஆறுமுக விநாயகர் திருக்கோயில். சிறிய ஆலயம்தான் என்றாலும், ஸ்ரீஆறுமுகத்துடன் காட்சி தரும் விநாயகரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தபடி இருக்கிற ஆலயம் இது.

சூரனை வீழ்த்திவிட்டு, அந்த உக்கிரம் தணியாமல் கடும் கோபத்துடன் இருந்தாராம் முருகக் கடவுள். தம்பியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, முருகப்பெருமானைப் போலவே ஆறுமுகங்களைக் காட்டியபடி எதிரே நின்றாராம் விநாயகர். அதைக் கண்டு சிரித்ததில் கந்தனின் கடும் கோபம் முழுவதும் காணாமல் போனது என்றொரு கதை உண்டு. எனவே, இங்கு ஸ்ரீஆறுமுக விநாயகராக அருட்காட்சி தருகிறார்.

''ஸ்ரீஆறுமுக விநாயகரை வணங்கினால், சகல ஞானங்களையும் யோகங்களையும் பெறலாம். சண்முகா நதியில் நீராடிவிட்டு, சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் சிறப்பையும் பலனையும் தரும். ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம், மிளகு, ஜீரகம் மற்றும் நல்லெண்ணெய் கலந்து படைத்தால், வியாபாரம் விருத்தியாகும்; கல்வியில் மேன்மை பெறலாம்; இல்லத்தில் நிம்மதி குடிகொள்ளும்'' என்று தெரிவித்தார் பாலசுப்ரமணிய குருக்கள்.

ஆறு முகங்களுடன் ஆனைமுகன்!

மூலவர் ஸ்ரீஆறுமுக விநாயகர். தவிர ஸ்ரீசுந்தர விநாயகரும், ஆண்டித் திருக்கோலத் தில் ஸ்ரீமுருகப்பெருமானும், ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீகாளியம்மனும் அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்குச் சற்றுத் தள்ளி, தோகையடி விநாயகர் கோயில் உள்ளது. இங்கே, புலிப் பாணி சித்தரும் போகரும் காட்சி தருகின்றனர்.

தைப்பூசம், ஆடி அமாவாசை, ஆடிப் பதினெட்டு ஆகிய நாட்களில் பழநி முருகப் பெருமானுக்கு, அலகு குத்திக்கொண்டு வரும் பக்தர்கள், இங்கு வந்து விநாயகரை வணங்கிய பிறகுதான் அலகு குத்திக் கொள்வார்களாம்.

விநாயக சதுர்த்தி நாளில் ஸ்ரீஆறுமுக விநாயகரை வணங்கினால், சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்று உறுதியுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

- உ.சிவராமன்

படங்கள்: வீ.சிவக்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு