##~## |
சிவாலயங்களில் எப்படியும் இரண்டு விநாயகர்கள் காட்சி தருவார்கள். அதாவது, கோஷ்டத்தில் நர்த்தன கணபதி இருப்பார். அடுத்து, பிராகாரத்தில் மற்றொரு விநாயகரைத் தரிசிக்கலாம். ஆனால், ஒரே கோயிலில் 14 விநாயகர்கள் காட்சி தருகிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?
மதுரைக்கு அருகில் தென்கிழக்கே வைகையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது திருப்பூவனம் எனப்படும் திருப்புவனம். இங்கே, இறைவனின் திருநாமம்- ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர். அம்பாள்- ஸ்ரீமின்னம்மை என்கிற ஸ்ரீசௌந்தர நாயகி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பாண்டிய தேசத்தின் 13-வது கோயில் இது என்கின்றனர். பாண்டிய மன்னன் கட்டிய இந்தக் கோயிலுக்கு திருமலை நாயக்க மன்னரும் பல திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்துள்ளார். 4 யுகங்களைக் கடந்த கோயில், 'ரசவாதம் செய்த படலம்’ எனும் 36-வது திருவிளையாடல் நிகழ்ந்த தலம் ஆகிய பெருமைகளும் உண்டு. 'புஷ்பவனக் காசி’ என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் பித்ருக்களுக்கான கடமையைச் செய்வது கூடுதல் பலனைத் தரும்.

இந்தத் தலத்தில்... கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுமதி பெற்றுக் காரியத்தில் இறங்க ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீமகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், சூரியனார் வழிபட்ட ஸ்ரீபாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.
சூரியனின் சாபம் நீங்கப் பெற்ற தலம் என்கிற பெருமையும் திருப்புவனம் தலத்துக்கு உண்டு. அதை அறிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இங்கு வந்து வழிபட்டு, பித்ருக்களை ஆராதித்து, சூரிய நமஸ்காரம் செய்து, விநாயகரை வழிபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல வரலாறு. ஸ்ரீபாஸ்கர விநாயகருக்கு அருகில் சூரிய தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டு, ஸ்ரீபாஸ்கர விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபட்டால் சகல தோஷங் களும் நீங்கி, சௌபாக்கியத்துடன் வாழலாம் என்பது நம்பிக்கை என்கிறார் கோயிலின் செந்தில் பட்டர்.
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைத் தரிசித்து வணங்கிட, நம் வாழ்வு வளமாகும்.
- லோ.இந்து, படங்கள்: எபினேசர்