ஆனந்தத்தில் திருமண்டங்குடி மக்கள்
##~## |
சைவ - வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றும் தலங்கள், தமிழகத்தில் ஏராளம். கும்பகோணத்துக்கு அருகில், அதாவது சுவாமிமலையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமண்டங்குடி. வைணவத்தைச் செழிக்கச் செய்த தொண்டரடிப் பொடியாழ்வாரின் அவதாரத் தலம் இது. இங்கே, அழகுற அமைந்துள்ளது திருமாலுக்கான ஆலயம். இதே ஊரில், ஸ்ரீதிரிபுவனேஸ்வரர் எனும் திருநாமத்துடன் சிவனாருக்கும் கோயில் இருக்கிறது என்று கடந்த 8.3.11 இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.
'மூன்று புவனங்களைச் சேர்ந்த அனைவருக் கும் இந்தத் தலம் தெரிய வேண்டும் என்பதற்காக, மூன்று புவனங்களையும் ஆள்கிற ஈசனுக்கு, திருமண்டங்குடியில் கோயில் அமைத்தான் மூன்றாம் ராஜராஜன். இங்கே, அம்பாள்- ஸ்ரீதிரிபுரசுந்தரி; ஸ்வாமி- ஸ்ரீதிரிபுவனநாதர்.
ஒருகாலத்தில் மிக அற்புதமான ஆலயமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தில், இன்றைக்கு வழிபாடு களும் இல்லை; ஸ்வாமிக்கு நைவேத்தியமும் இல்லை’ என்று கவலையும் கண்ணீருமாகத் தகவல் தெரிவித்திருந்தோம்.

இங்கே அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, ஞானப்பள்ளி தட்சிணாமூர்த்தி என்கிறார்கள். அப்பேர்ப்பட்ட குரு பகவான் கோலோச்சும் திருத்தலம் களையிழந்து காணப்படுகிறது என்று குமுறியிருந்தோம். 'உலகாளும் ஈசனின் கோயிலைப் பாருங்கள்’ என்று தலைப்பிட்டு எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு, ஏராள மான வாசகர்கள் கோயில் திருப்பணிக் கமிட்டியினரிடம் நேரிலும் போனிலுமாகப் பேசினார்கள். அதையடுத்து நிதிகள் குவியத் துவங்கின. திருப்பணிகள் ஆரம்பித்தன.
இதோ... பிராகாரம், கோஷ்டம், மண்டபம், திருச்சந்நிதிகள் என அந்த இடமே பொலிவு பெறத் தொடங்கிவிட்டது. தொண்ணூறு சதவிகிதப் பணிகள் நடந்து, வருகிற 16.9.13 அன்று திங்கட்கிழமை காலை 9 முதல் 10 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 'சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகு, ஸ்ரீதிரிபுவனேஸ்வரர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்குப் பெரிதும் காரணமாகத் திகழ்ந்த சக்தி விகடனுக்கும் அதன் வாசகர்களுக்கும் நன்றி!’ என ஆனந்தக் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்.
'மூவுலகையும் காக்கும் இறைவன் ஒரு கால பூஜை கூடவா இல்லாமல் இருப்பது?’ என வேதனையுடன் எழுதியிருந்தோம். இதோ, அந்தக் கோயிலில் இனி பூஜை புனஸ்காரங்கள் அனுதினமும் நடக்க இருக்கின்றன. கும்பாபிஷேக நன்னாளில், ஸ்ரீதிரிபுவனேஸ்வரரைத் தரிசியுங்கள். எல்லா நலனும் பெறுங்கள்!
- வி.ராம்ஜி
படங்கள்: க.சதீஷ்குமார்