Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

தசாவதார திருத்தலங்கள்!

தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

Published:Updated:
##~##

ழகை ரசிக்கலாம்; ருசிக்கவும் முடியுமா என்ன?! முடியும் என்கிறது, கண்ணனின் பேரழகைத் தன் கண்களால் அள்ளிப் பருகி மகிழ்ந்த லீலாசுகரின் பேரானந்த அனுபவம்.

கண்ணனைக் காண்பது எப்போது என ஏங்கித் தவித்திருந்தாராம் லீலாசுகர். ஆனால்... தலையில் மயில்தோகை சூடி, அரையில் சதங்கை அசைய, பாதங்களில் தண்டைகள் ஒலிக்கத் தளிர்நடை போட்டு அவன் அருகில் வந்தபோதோ, மயங்கிப்போனாராம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூரிய- சந்திரரும், நட்சத்திரங்களும் ஸ்ரீகிருஷ்ணனின் திருமேனியில் தவழும் ஆபரணங்களில் இருந்து ஒளி பெற, அவனின் பேரழகோ  ஒட்டுமொத்த உலகுக்கும் ஆபரணமாய்த் திகழ்கிறது என்று வியந்து போற்றுகிறார் லீலாசுகர். அதுமட்டுமா? கண்ணனின் தத்தைப் பேச்சு அமிர்தம் என்றால், கருணை பொழியும் அவனது புன்னகையோ தேனாய் இனித்ததாம் அவருக்கு. அந்த இனிப்பைத் தன் பாடலால் நமக்கும் ஊட்டுகிறார், பாருங்கள்...

தசாவதார திருத்தலங்கள்!

மதுரம் மதுரம் வபுரஸ்ய விபோர
மதுரம் மதுரம் வதனம் மதுரம்
மதுகந்தி ம்ருது ஸ்மிதமேத தஹோ
மதுரம் மதுரம் மதுரம் மதுரம்.

லீலாசுகருக்கே இப்படியென்றால், மதுசூதனப் பிள்ளையை மடியில் கிடத்தித் தாலாட்டிய யசோதா பிராட்டியின் நிலையை எண்ணிப் பாருங்கள்!

இல்லையில்லை... குழந்தையின் அழகை ரசிப்பதற்கெல்லாம் அவளுக்கு எங்கே நேரம்? அவன் சுட்டித்தனத்தை கட்டுப்படுத்தவே நேரம் போதாதே அவளுக்கு! ராமாவதாரத்தில் கோசலை ஸ்ரீராமனைப் பெற்றதோடு சரி; பிள்ளையை வளர்த்ததெல்லாம் கைகேயிதான். அந்தக் கணக்கைச் சரிசெய்ய வேண்டாமா? துவாபர யுகத்தில் யசோதையாய் பிறந்து, இந்தப் பொல்லாத பிள்ளையிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறாளாம் கோசலை.

ஒன்று, வெண்ணெயைத் திருடித் தின்னுகிறான்; அல்லது, மண்ணை அள்ளி வாயில் போட்டுக்கொள்கிறான். கேட்டால், 'இல்லை’ என்று கைகளாலும் கண்களாலும் அபிநயிக்கிறான். 'வாயைத் திற, பார்க்கலாம்!’ என்று அதட்டினால், தன் வாயினுள் அண்ட பகிரண்டத்தையும் காட்டி பிரமிக்க வைக்கிறான்.

சரி, அவன் சேஷ்டைகளைக் குறைக்கக் கட்டிப்போடலாம் என்று உரலோடு சேர்த்துக் கட்டி வைத்தால், உரலையும் சேர்த்து இழுத்து வந்து மருத மரங்களில் மோதி முறியவைக்கிறான். மரங்களோ, கந்தர்வர்களாக மாறி அவனை வணங்கிச் செல்கின்றன.

இப்படி, எத்தனை எத்தனை லீலைகள் தெரியுமா? யசோதை மட்டுமல்ல; கலியுகத்தில் நாமும் அனுபவித்து மகிழ, அவன் நிகழ்த்திய அருளாடல்கள் ஏராளம் உண்டு. அதில் சில குருவாயூரிலும் நிகழ்ந்தன.

தசாவதார திருத்தலங்கள்!

ருமுறை, ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள மரச் சுவர்கள், தூண்கள் ஆகியன பெரும் சேதம் அடைந்தன. பின்னர், பிரஸ்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி, மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களை கருங்கற்களால் நிர்மாணிக்க தீர்மானித்தனர். அதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர்.

ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை குறிக்க, ஒரு தூணில் 'கம்ச வத’ காட்சியை வடித்திருந்தார் சிற்பி.

ஒருநாள், சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து ''இங்கு கிருஷ்ணனை வேணு கோபாலனாகச் செதுக்கியிருக்கும் தூணை வையுங்கள்!'' என்றான்.

சிற்பிக்கோ வியப்பு! ''அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை வடிக்கவில்லையே!'' என்றார் அவர். உடனே சிறுவன், சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றான். அங்கே ஸ்ரீகிருஷ்ணர், வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். அதைப் பார்த்துத் திகைத்துப்போன சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை. வந்தது குருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார். அந்தத் தூண் ஸ்ரீகுருவாயூரப்பனா லேயே படைக்கப்பட்டதாக ஐதீகம். அங்கே வைப்பதற்காகத் தயார் செய்திருந்த 'கம்ச வத’ தூணை, கோயிலின்  உட்பிராகாரத்தில் வைத்திருக்கிறார்கள்.

ற்றொரு தருணத்தில், மஞ்சுளா என்ற வாரியர் குலப் பெண்ணுக்கு அருள்பாலித்தான் குருவாயூரப்பன். அந்தப் பெண் தினமும் இரவில் குருவாயூரப்பனுக்குச் சார்த்த, பூமாலை கொண்டு வருவது வழக்கம்.

ஒருநாள், அவள் வரத் தாமதமானது. அதற்குள் கோயில் நடை மூடப்பட்டுவிட்டது.  கலக்கமடைந்தாள் மஞ்சுளா. அவளை ஆசுவாசப்படுத்திய பூந்தானம் என்ற அடியார், அவள் நின்றிருக்கும் ஆலமரத்தின் அடியையே இறைவனின் திருவடியாக பாவித்து, பூமாலையை அங்கேயே சமர்ப்பிக்கும்படி சொன்னார். மஞ்சுளா அப்படியே செய்தாள்.

தசாவதார திருத்தலங்கள்!

மறுநாள் காலையில், விக்கிரகத்தின் மீதுள்ள பூமாலைகளை மேல்சாந்தி அகற்ற முற்படும் போது, ஒரு மாலையை மட்டும் அவரால் கழற்ற முடியவில்லை. அதைக் கண்ட பூந்தானம் பக்திப் பரவசத்துடன், 'அது மஞ்சுளாவின் மாலை என்றால், அதுவும் கீழே விழட்டும்’ என்றார். உடனே, மாலை கீழே விழுந்தது, அதனால், அந்த ஆலமரம் உள்ள இடம் பூஜைக்குரியதானது. அதை 'மஞ்சுளால் தரை’ என்கிறார்கள்.

இங்கு குழந்தையாகவே அருளும் ஸ்ரீகுருவாயூரப்பனை உண்ணி(குழந்தை)கிருஷ்ணன் என்கிறார்கள் பக்தர்கள். கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில்.... மேலிரு கரங்களில் சங்கு- சக்கரமும், கீழிரு கைகளில் கதாயுதம்- தாமரையும் கழுத்தில் துளசி, முத்து மாலைகளும் தவழ, கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனத்துடன் வலப்புற மார்பில் ஸ்ரீவத்ஸம், வைஜயந்திமாலையும், கௌஸ்துபமும் அணிந்து 'ஸ்தானகம்’ எனும் நின்ற நிலையில் அருள் புரியும் குருவாயூர்க் குழந்தையைக் காணக் கண்கோடி வேண்டும்.

குருவாயூரப்பன் தினமும் 12 திவ்ய கோலங்களில் பக்தர்களை அனுக்கிரகிப்பதாக ஐதீகம். நிர்மால்ய தரிசனம்- விசுவரூப தரிசனம்,  தைலாபிஷேகம்- வாத ரோகாக்னன், வாகை சார்த்தல்- கோகுலநாதன், சங்காபிஷேகம்- சந்தானகோபாலன், பால அலங்காரம்- கோபிகா நாதன், பால் முதலிய அபிஷேகம்- யசோதா பாலன், நவகாபிஷேகம்- வனமாலா கிருஷ்ணன்,  உச்சிக்கால பூஜை- சர்வாலங்கார பூஷணன், சாயங்கால பூஜை- சர்வமங்கள நாயகன், தீபாராதனை- மோகனசுந்தரன், அத்தாழ (இரவு) பூஜை- விருந்தாவனசரன்,  திருப்பள்ளி பூஜை- சேஷசயனன்.

ஆதிசங்கரர் வகுத்த பூஜை முறைப்படி அதிகாலை 3 மணிக்கு நாகசுரம் மற்றும் சங்கு முழங்க, குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச் செய்வர். இதற்கு நிர்மால்ய தரிசனம் என்று பெயர். இதை தரிசிப்பது பெரும் புண்ணியம்! ஏன் தெரியுமா?

- அவதாரம் தொடரும்...