Published:Updated:

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஆக்னேய கிரகங்கள்; வெப்பத்தை உமிழ்பவை. சந்திரன், புதன், வியாழன், சுக்கிரன் ஆகியன ஸெளம்ய கிரகங்கள். அதாவது தட்ப கிரகங்கள்; குளிர்ச்சியை வெளியிடுபவை. இந்த வெப்ப தட்பங்கள் அவர்களின் இயல்பு.

ஒரு பொருளின் தோற்றத்துக்கு தட்பம் வேண்டும். அது மாறுதலை அடைய வெப்பம் வேண்டும். விதை முளைப்பதற்கு நீரும், அது வளர்வதற்கு சூரியனின் வெப்பமும் வேண்டும். ஆறு பருவ காலங்கள் உருவாக வெப்பதட்பங்களின் விகிதாசாரக் கலவை காரணமாகிறது. உலக இயக்கத்துக்கு வெப்பதட்பத்தின் பங்கு உண்டு. வெப்பதட்பத்தின் இணைப்பு, ஒரு பொருளை செழிப்பாக்கவும் செய்யும்; அழிக்கவும் செய்யும். இந்த 9 கிரகங்களின் சேர்க்கையானது சிந்தனையைச் செழிப்பாக்கவும் செய்யும்; தாறுமாறாக்கி அலைக்கழிக்கவும் செய்யும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரகங்களின் தாக்கம் சிந்தனை மாறுதலுக்குக் காரணமாகும். அது மகிழ்ச்சி அல்லது துயரத்தில் முற்றுப்பெறும். கிரகங்களின் தாக்கம் காலம் வாயிலாக வாசனையைத் தட்டி எழுப்பும். வாசனையின் கலப்பில் சிந்தனை உருமாறிவிடும். சுதந்திரமான சிந்தனை தலையெடுக்காது. உருமாறிய சிந்தனையை தனது சிந்தனையாக மனம் ஏற்றுக்கொண்டு செயல்படும். இப்படி, கிரகங்களின் தாக்கம் மனத்தில் ஊடுருவி இடம்பிடித்துவிடும். அதன் இயல்பான வெப்பதட்பங்கள், சிந்தனையின் தரத்தை நிர்ணயித்துவிடும். உலகில் தென்படும் வெப்பதட்பத்தின் தாக்கம் உடலையும் உள்ளத்தையும் பாதிப்பது உண்டு. வெப்பம் அளவைத் தாண்டினால் அசதியில் துவண்டு விடுவோம். தட்பம் அதிகமானால் சுறுசுறுப்பின்றி, செயலில் சுணக்கம் ஏற்படும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சூரியன் பகலில் வெப்பத்தை உமிழ்கிறான். சந்திரன் இரவில் தட்பத்தை வெளியிடுகிறான். இரவில் சந்திர தட்பம் இல்லாமல் இருந்தால், மறுநாள் வெப்பம் தாங்க முடியாமல் போய்விடும். ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டிருக்கும் வெப்பத்தை, இரவில் சந்திரனின் தட்பம் அளவோடு தணித்துக் கொண்டிருக்கும். அன்றாட அலுவல்கள் தடையின்றி செயல்பட, பகல்- இரவில் சூரிய- சந்திரர்களின் வெப்பதட்பதின் சமநிலை காரணமாகிறது என்றுகூடச் சொல்லலாம். கடும் வெப்பத்தில் சோர்வு அடை வதும் இரவு முழு நிலவில் உற்சாகம் ஏற்படுவதும் கண்கூடு. வெப்ப தட்பத்தின் சாம்ராஜ்ஜியம்தான் உலகம் என்கிறது தர்ம சாஸ்திரம் (அக்னீஷோமா தீமகம் ஜகத்).

வேள்வியிலும் வெப்பதட்பத்தின் பங்கு உண்டு. தேவர்களுக்கு அளிக்கும் உணவு வெப்பத்துடனும் தட்பத்துடனும் இணைந்து விடும். இந்த உணவு வெப்பத்துக்கு (அக்னயேஸ்வாஹா), இந்த உணவு தட்பத்துக்கு (ஸோமாயஸ்வாஹா) என்று சொல்வது உண்டு. மனிதன் வெப்பத்தின் வழியாகவும், தட்பத்தின் வழியாகவும் ஆன்ம லாபத்தை பெறுகிறான் என்கிறது உபநிடதம். சூரிய மண்டலத்தில் இணைந்து க்ரம முக்தியைப் பெறுகிறான். சந்திர மண்டலத்தில் இணைந்தும் ஆன்ம லாபம் அடைவது உண்டு (த்வாவிமைன புருஷ ஷெளலோகெசூரியமண்டலபேதினௌ சந்திரமஸ: ஸாயுஜ்யம் ஸலோகதாமாப்னோதி). வேள்வி செய்பவன், அக்னி (வெப்பம்) வாயிலாக தேவலோகத்தையும், சந்திரன் (தட்பம்) வாயிலாக பித்ரு லோகத்தையும் பார்க்கிறான் என்கிறது வேதம் (தேவலோகம் வா அக்னினா யஜமானோனுபச்யதி...).

வேதம் வேள்வியின் மறைவில் அன்றாட வாழ்க்கையின் அடித் தளத்தை வரையறுக்கும். ஒரு பொருளை பக்குவமாக்க நீரோடு கலந்த நெருப்புதான் சிறந்தது. அக்னி (வெப்பம்) பாத்திரத்தில் பட்டு அதில் இருக்கும் நீரில் ஊடுருவி, அதன் துணையுடன் அரிசியை சாதமாக்கும். இரண்டின் இணைப்பில் செயல்பாடு சிறக்கும். வளரும் விஞ்ஞான விளக்கங்களை நம்பி ஒன்றை ஒதுக்கி ஒன்றை ஏற்பது உடல் சுகாதாரத்தை தாறுமாறாக்கி விடும்.

நம் உடலிலும் வெட்பமும் தட்பமும் கைகோர்த்து செயல்படுவதை உணர முடியும். இரண்டில் ஒன்று குறைந்தாலோ, அதிகமானாலோ, அழிந்தாலோ வாழ்க்கை முற்றுப் பெற்றுவிடும். அதுபோல் 9 கிரகங்களின் இணைப்பின் பலனை அறிந்துகொள்ள வேண்டும். வெப்ப கிரகம் அல்லது தட்ப கிரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு காலத்துக்கு உகந்தவாறு, மக்களின் சிந்தனைக்கு ஒத்துவரும்படி பலன் சொல்வது அதர்மம். முழுமையான ஜோதிட அறிவு இன்றி செயல்படுவது கத்தி முனையில் நடப்பதாகும்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்தில் குறைந்தபட்சம் மூன்று கிரகங்கள், பெண் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 7-ல் இருந்தால் அவள் வருங்கால கணவனை இழப்பாள் (ஆக்னேயை:விதவாஸ்தகை:....) என்கிறது ஜோதிடம்.  செவ்வாய் மட்டுமே கணவன் இழப்பை ஏற்படுத்தும் என்றில்லை; செவ்வாயைத் தவிர, வெப்ப கிரகங்களும் கணவனின் இழப்பை நடைமுறைப்படுத்தும். 7-ல் இருக்கும் கிரகங்களை பன்மையில் குறிப்பிட்டாலும், ஐந்தில் ஒன்று பலம் பெற்றிருந்தாலும் கணவனை இழக்க நேரிடலாம் என்ற விளக்கமும் உண்டு. கணவனின் இழப்பு என்பது இரண்டு விதம். பிரிந்து வாழ்வது, மரணம்- பிரிவை இறுதியாக்குவது என்று சொல்லலாம். இதில் மரணத்தைவிட, பிரிவு என்பது துயரத்தைத் தூக்கிக் காட்டும். வெப்பத்தின் தாக்கத்தை, அழிந்துவிட்டால் உணர முடியாது. உயிரோடு இருக்கையில் தாக்கம் செயல்பட்டால் பொறுக்க முடியாமல் போய்விடும்.

பொதுவாக வெப்ப கிரகங்கள் 7-ல் இருந்தால் கணவனை இழந்த துயரையோ, பிரிந்த துயரையோ ஏற்க நேரிடும் என்கிறது ஜோதிடம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்கிற நியதி வேரூன்றியிருந்த காலத்தில், தாம்பத்தியத்தை இன்பமயமாக்க ஜோதிடம் அறிவுரை வழங்கியது. பண்பைப் பற்றி அக்கறை இல்லாத இன்றைய சூழல், மறுமணத்தை ஏற்று துயரத்தை எளிதில் தாண்டி விடுகிறது. வாழ்க்கையை பண்போடு வளமாக்கி மகிழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பவர்களுக்கு மட்டுமே ஜோதிடத் தகவல்கள் வழிகாட்டியாக இருக்கும். வருங்கால சந்ததியினர் நிச்சயமாகப் பண்போடு வாழ நினைப்பார்கள். அவர்களுக்கு ஜோதிடம் வரப்ரசாதமாக அமையும்.

பற்களால் கடித்து அரைத்துப் பக்குவமாக்க சூடோடு கலந்த உமிழ் நீர் உதவும். உணவு ஆமாசயத்தில் இணையும் தகுதியை நீரும் நெருப்பும் (வெப்பதட்பம்) தான் ஏற்படுத்துகின்றன. நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று பகையானாலும் இணைப்பில் நட்பைப் பெற்று உயர்வுக்கு ஒத்துழைக்கிறது. உடம்பில் அதன் இணைப்பு வாழ வைக்கிறது.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

படம்- 1: இப்படி 1, 2, 3 என்ற இணைப்பில் வெப்ப கிரகங்கள் கணவனின் பிரிவுக்கு அல்லது மறைவுக்குக் காரணமாகலாம் என்கிறது ஜோதிடம். ஐந்து கிரகங்கள் ஓரிடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. ஒன்றாகவும் இரண்டாகவும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதால் பலமான வெப்ப கிரகம் (பாப கிரகம்) இழப்புக்கு வழி வகுக்கும். சந்திரன், புதன், குரு, சுக்கிரன் - இந்த தட்ப கிரகத்தில் ஏதாவது ஒன்று பலம் பொருந்திய நிலையில், ஒரு வெப்ப கிரகத்தோடு 7-ல் இடம் பெற்றிருந்தால் இழப்பு இருக்காது. அந்தக் கணவனைத் துறந்து வேறு கணவனை ஏற்பாள் என்று ஜோதிடம் சொல்லும். வெப்பதட்ப கிரகங்கள் இணைந்து 7-ல் தென்பட்டால், வருங்கால கணவனை முதலில் ஏற்று, பிறகு அவனைத் துறந்து மற்றொரு கணவனை ஏற்பாள் என்று சொல்லும் (மிச்ரை:புனர்பூபவேத்).

படம் -2: இங்கு வெப்ப கிரகமும் தட்ப கிரகமும் இணைந்த நிலையில் துயரத்தை சந்திக்க வைக்காமல் மகிழ்ச்சியை ஏற்க வைக்கிறது. நமது கண்ணோட்டம் மகிழ்ச்சி. அதை, தனியான வெப்ப கிரகம் தராது. தட்பம் கலந்த வெட்பம் அதை ஈட்டித் தரும். தனியான தட்ப கிரகமும் எதிரிடையான பலனை அளிக்கும் என்கிறது ஜோதிடம்.

படம்- 3: வெப்பத்தில் தொடர்பில்லாத தட்ப கிரகம் 7-ல் இருக்கிறது. குரு வெப்ப கிரகத்தில் வராது. 7-ல் இருக்கும் குரு, 7-க்கு உடையவனாக இந்து ஆதிபத்யம் இருப்பதால், அது 'கேந்திராதி பத்யம்’ என்ற தோஷமாக உருவெடுக்கிறது. 7 மனைவியின் லக்னம். அதற்கு உடையவன் குரு. அவன்தான் மனைவியிடம் இருந்து கிடைக்கும் இன்பத்தை அள்ளி அளிக்க வேண்டும். ஆனால், தனியாக வெப்ப சம்பந்தம் இல்லாதிருப்பதால், இன்பத்தின் வளர்ச்சியை மாறுபாட்டை உண்டு பண்ண வெப்பத்தின் தொடர்பு இல்லாததால் மனைவியை இழக்க வைப்பான் என்கிறது  ஜோதிடம். 'கேந்திராதிபத்யம்’ என்ற தகுதியைப் பெற்ற குரு, மனைவியை இழக்க வைப்பார் என்று சொல்லும். அத்துடன், ஒரு வெப்ப கிரகம் இணைந்து 7-ல் இருந்தால், வெப்பத்தின் சேர்க்கையில் இன்பத்தின் பரிணாமத்தை ஏற்படுத்தி மனைவியை மகிழ வைக்க அவகாசம் அளித்து அவளைத் தக்கவைப்பான் என்று சொல்லும். ஆக, இரண்டின் சேர்க்கை கொடுக்க வேண்டிய பலனை விரிவாக்கி உணரவைத்து விடும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

வெப்பம், தட்பம் என்கிற பாகுபாட்டில் இருந்து வெளிவந்து சுபன், பாபி என்ற அடைமொழியில் அவர்களைப் பிரித்து பாப கிரகம் மட்டும் இருந்தால் இழப்பு, சுப கிரகத்துடன் இணைந்தால் இழப்பு இல்லை என்று விளக்கவுரை அளிக்கும் பழக்கம் உண்டு. நுணுக்கமான தட்ப- வெப்பத்தை, பாப- சுப வார்த்தைகளால் வெளியிடுகிறோம். உண்மையில் காலத்தோடு இணையும் தகுதி வெப்பதட்பங்களுக்குத்தான் உண்டு. ஒரு விஷயத்தை செம்மையாக்க இரண்டின் விகிதாசாரக் கலவை அவசியம்.

உருவம் இல்லாத காலத்தில் வெப்பதட்பம் பளிச்சிடும். கிரகங்களின் தாக்கம் வெப்பதட்பம் வாயிலாக காலத்தில் ஊடுருவும். இந்த பஞ்ச பூத சித்தாந்தம் வெப்பதட்ப வடிவில் கிரகங்கள் வாயிலாக வெளிப்படுகிறது. நமது உடலும் பஞ்ச பூதக் கலவை யில் விளைந்தது. கிரகங்களும் பஞ்சபூத கலவையில் தோன்றியி ருக்கின்றன. தனியரு பூதம் செயல்படும் தகுதியைப் பெறாது.  மற்ற பூதங்களின் இணைப்பில்தான் செயல்பாடு சிறக்கும்.

'பஞ்சீகரணம்’ என்ற தத்துவத்தை தர்ம சாஸ்திரம் ஏற்கும். ஆன்மிகவாதிகளும் அதை மறுக்கமாட்டார்கள். ஜோதிடமும் அதை வைத்து தன்னை வளர்த்துக் கொண்டது. இயற்கையில் உருப் பெற்றது ஜோதிடம் என்கிற பெருமை உண்டு. அதன் கொள்கை கள் இயற்கையோடு இணைந்தவை. தனி நீரும், தனி நெருப்பும், செயல்பாட்டில் சிறக்காது. நீரில் இருந்து நெருப்பு, நெருப்பில் இருந்து நீர்... இந்த இரண்டும் வேதத்தில் உண்டு (அக்னேராப: ஆபோக்னி:). நீரில் இருந்து இடி மின்னல்கள் உண்டு. ஆக ஜோதிடத் தகவல்கள் அத்தனையும் இயற்கையின் கோட்பாட்டை இணைத்துகொண்டு வளர்ந்து நமக்கு வளமளிக்கிறது.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism