Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

தஞ்சாவூர் - வெள்ளாம்பரம்பூர் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் வி.ராம்ஜி

ஆலயம் தேடுவோம்!

தஞ்சாவூர் - வெள்ளாம்பரம்பூர் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் வி.ராம்ஜி

Published:Updated:
##~##

முத்துப் பல்லக்கு ஆடி அசைந்து வந்துகொண்டிருந்தது. சிவனடியார்கள் அதைக் கர்மசிரத்தையாகத் தூக்கிக்கொண்டு, பள்ளம் மேடுகளில் வெகு கவனமாக நடந்து வந்தார்கள். உள்ளே இருப்பவரும் ஒரு சிவனடியார்தான்! சிறு வயதிலேயே சிவஞானம் பெற்ற மகான் அவர்.

'அடடா... இன்னும் சிறிது நேரத்தில் அப்பர்பெருமானைத் தரிசிக்கப் போகிறோம்’ என்கிற சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் வந்துகொண்டிருந்தார் அந்த இளைஞர். தவிர, 'சோழ தேசத்தின் பல தலங்களுக்கும் செல்வதற்கு முன்னால், நாவுக்கரசரைத் தரிசித்து அவரின் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெற்றால் பேரானந்தமாக இருக்குமே! வழித் துணையாக சூட்சும ரூபமாக திருநாவுக்கரசர் எப்போதும் உடன் இருப்பார். பெரியோரின் துணை, இந்தப் பிள்ளைக்கு மிகவும் அவசியம் அல்லவா!’ என்று சிந்தித்தபடி பல்லக்கில் அமர்ந்திருந்தார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தஞ்சைக்கு அருகில், திருப்பூந்துருத்தி கிராமத்தில் ஒரு மடத்தைக் கட்டி, அதில் தங்கி சிவபூஜையும் சிவத் தொண்டும்புரிந்து வருகிறாராம் அப்பர். இந்தச் சிறியவனை ஒரேயரு பார்வை பார்த்தால் போதும்... சோழ தேசம் முழுவதும் அலைந்து திரிவதற்கும், இன்னும் இன்னும் சிவனருள் பெறுவதற்கும் பலமும் சக்தியும் கூடுமே..!’ என்று எண்ணியபடி, திருப்பூந்துருத்தி திசை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார் அந்த இளையவர்.\

ஆலயம் தேடுவோம்!

ஊர் நெருங்க நெருங்க, அவரின் ஆர்வத் துடிப்பு பன்மடங்காகியது. 'பல்லக்கை விட்டு இறங்கி, நேரே அப்பரின் மடத்துக்கு ஓடிவிடலாம்தான். ஆனால், சிவனடியார்கள் என்னை விடமாட்டார்கள். அடியவர்க்குச் செய்யும் அன்பும் உபசாரமும் ஆண்டவனுக்கே செய்யும் தொண்டு என்று சொல்லி, என்னை நகரவிடாமல் செய்துவிடுவார்கள். அப்பர் பெருமானே, இதோ... இன்னும் சில விநாடிகளில் உங்களைத் தரிசித்து விடுவேன். உங்களின் ஆசீர்வாதம் பெற்றுவிடுவேன். உங்களிடம் அளவளாவி ஆனந்தத்தில் மூழ்குவேன்’ என்று நெஞ்சில் கைவைத்துக் கண்கள் மூடி, மானசீகமாக நாவுக்கரசரிடம் பேசினார் அவர்.

ஊர் வந்தது. அவரைப் பார்ப்பதற்காக ஊர்மக்கள் திரண்டு எல்லை யிலேயே காத்திருந்தார்கள். பல்லக்கு வந்ததும், 'நமசிவாயம்... நமசிவாயம்’ என்று குரல் கொடுத்தார்கள். பரவசமும் சிலிர்ப்புமாக இருந்தார்கள். பின்னே... பல்லக்கில் வந்திருப்பது, பால்யத்திலேயே பகவானின் பேரருளைப் பெற்ற திருஞானசம்பந்தராயிற்றே! பல்லக்கில் இருந்து எட்டிப் பார்த்து, மக்களின் சந்தோஷங்களையும் உற்சாக வரவேற்பையும் பெற்றுக்கொண்ட திருஞானசம்பந்தர், அந்த நிமிடமே நாவுக்கரசரைத் தரிசித்து விடமாட்டோமா என்று தவித்தார். கூட்டத்தைப் பார்த்து, 'அப்பர்பெருமான் எங்கே இருக்கிறார்? தெரியுமா எவருக்கேனும்?’ என்று, தாயைப் பிரிந்த கன்று போல் ஆதங்கத்துடன் கேட்டார். உடனே, 'இதோ... அடியேன் இங்குதான் இருக்கிறேன்’ என்று பதில் வந்தது. அதைக் கேட்டுப் பரவசமான ஞானசம்பந்தர், 'ஐயா... உங்கள் குரல்தான் கேட்கிறது. ஆனால், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லையே..?’ என்று கூட்டத்தின் நாலாபக்கமும் பார்வையைச் சுழலவிட்டார் ஞானசம்பந்தர்.

'இதோ... இங்கே பல்லக்கைத் தூக்கிக் கொண்டிருக்கிறேனே...’ என்று மூச்சிரைத்தபடியே அப்பர் சொல்ல, அடுத்த கணம் விருட்டென்று பல்லக்கில் இருந்து குதித்து இறங்கினார் ஞானசம்பந்தர். பதறிப் போனார். 'அபசாரம் செய்து விட்டேனே...’ என்று கண்கலங்கினார். 'கவலை வேண்டாம். அடியார்க்கும் அடியாராக இருப்பதே உண்மையான சிவத்தொண்டு’ என்று சொல்லிப் புன்னகைத்தார் அப்பர்.

ஆலயம் தேடுவோம்!

நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் சந்தித்துக் கொண்ட இடம் இன்றைக் கும் உள்ளது. இதனை 'சம்பந்தர் மேடு’ என்கிறார்கள். தற்போது இந்தக் கிராமத்தை, வெள்ளாம்பரம்பூர் என்று அழைக்கிறார்கள். இந்த வெள்ளாம்பரம்பூரும் அருகில் உள்ள தென்னரம்பூரும் சேர்ந்து 'தென் பரம்பைக்குடி’ என்று இருந்ததாகவும், அங்கே உள்ள தலம் திருஆலம் பொழில் என்று அழைக்கப்பட்டதாவும் சொல்கிறது ஸ்தல வரலாறு. இந்தத் தலத்தில் இறைவனின் திருநாமம்- ஸ்ரீஆத்மநாதர். அம்பாள்- ஸ்ரீஞானாம்பிகை.

வெள்ளாம்பரம்பூரில் அமைந்துள்ள ஆலயத்தில், ஸ்ரீஏகாம்பரேஸ்வரரும் ஸ்ரீகாமாட்சி அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள். காஞ்சியில் உள்ளது போலவே, ஸ்ரீகாமாட்சி அம்பாளும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரும் இங்கு கோலோச்சு கின்றனர் என ஒருகாலத்தில் கொண்டாடப்பட்ட கோயில் இது என்கின்றனர் ஊர்மக்கள். ஆனால் என்ன... இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து, சுமார் நூறு வருடங்களாகிவிட்டன. கோயிலில் வழிபாடுகள் குறைந்து, பக்தர்களின் வருகை இல்லாமலும், சீரமைப்புப் பணிகள் நடைபெறாமலும் இருக்க... ஒருகட்டத்தில் கோயில் முழுவதுமே சிதிலமாகிப் போனதுதான் கொடுமை!

''எப்படியும் இது ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த கோயிலாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கோயிலும் பிராகாரமும் மிகப் பிரமாண்டமாக ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. பிறகு முள்ளும் புதருமாக மாறிவிட்டது. சுவர்கள் பெயர்ந்து விழுந்துவிட்டன. முன்னெல்லாம் 'ஸ்ரீகாமாட்சி அம்பாளைப் பார்க்கப் போறோம்’ என்று சொல்லி, காஞ்சியம்பதிக்குச் செல்ல இயலாதவர்கள் இங்கே வந்து ஸ்ரீகாமாட்சி அம்பாளைத் தரிசித்துச் செல்வார்கள். ஆனால், இன்றைக்கோ ஸ்ரீகாமாட்சியின் பேரருளைப் பெறுவதற்கு பக்தர்களைக் காணோம்!'' என்று வருத்தத்துடன் சொல்கிறார், கோயிலின் செயல் அலுவலர் கோவிந்தராஜு.

ஆலயம் தேடுவோம்!

இங்கே, ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி செய்து வேண்டிக்கொண்டால், பிறவிப் பயனை அடையலாம் என்பது ஐதீகம். ஆனால், உழவாரப் பணி செய்வதற்கு முன்னதாக, கோயிலில் திருப்பணிகள் செய்யவேண்டியது அவசியம். திருப்பணிகள் செய்தால்தானே சந்நிதிகளும் மண்டபங்களும் இருக்கும்; இவையெல்லாம் இருந்தால்தானே, தூசும் தும்புமாக இருக்கக்கூடாது, ஒட்டடையாகவும் ஒழுகலாகவும் இருக்கக்கூடாது என்றெல்லாம் பார்த்துப் பார்த்து கோயிலில் உழவாரப் பணி செய்து, சுத்தமாகப் பராமரிக்கமுடியும்.

வெள்ளாம்பரம்பூர் ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலில் திருப்பணி நடைபெற அள்ளித் தாருங்கள்; அன்னை, அருளையும் பொருளையும் நமக்கு அள்ளித் தருவாள். ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் திருப்பணிக்கு, நம்மால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ, எவ்வளவெல்லாம் செய்ய முடியுமோ... அதை உடனே செய்வோம். விரைவில் கும்பாபிஷேகம் நடந்து, சிவனார் குளிர்ந்து, நம் சிந்தையில் அமைதியையும் வாழ்வில் நிம்மதியையும் நிறைக்கச் செய்வார்.

வெள்ளாம்பரம்பூர் சிவாலயத்தில் கும்பாபி ஷேகம் சீக்கிரமே நடக்கட்டும். மக்கள், வெள்ளமெனத் திரண்டு வந்து சிவ- பார்வதியின் பேரருளைப் பெறட்டும்!

படங்கள்: ஆர்.அருண்பாண்டியன்

எங்கே இருக்கிறது?

தஞ்சாவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர் திருத்தலம். இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெள்ளாம்பரம்பூர் கிராமம். இங்கே இறைவன்- ஸ்ரீஏகாம்பரேஸ்வரர். அம்பாள்- ஸ்ரீகாமாட்சி அம்பாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism