மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! 13

சேதி சொல்லும் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

##~##

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான் திருக்கோயில் வெகு பிரசித்தம். இதை, ஸ்ரீவைகுண்டநாதர் ஆலயம் என்றும் சொல்வார்கள். நவதிருப்பதிகள் எனப்படும் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது இந்தக் கோயில்.

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள எழிலார்ந்த சிறுநகரம், ஸ்ரீவைகுண்டம். நம்மாழ்வாரின் இரண்டு பாசுரங்களில் போற்றப்படுகிற இந்தத் தலத்து நாயகனாம் ஸ்ரீவைகுண்டநாத பெருமாளும் கோயிலும், கோயிலில் உள்ள சிற்பங்களும் மனத்தைக் கொள்ளை கொள்ளச் செய்யும் பேரழகு கொண்டவை!

இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள், விஜயநகரப் பேரரசு காலத்தில் தென்பாண்டி நாட்டு ஆட்சியாளர்களால் தோற்றுவிக்கப்பட்டன. ஒன்பதுநிலை ராஜகோபுரத்தின் கல்ஹாரப் பகுதிச் சுவரிலும் (பித்தி), வடக்குப் பிராகாரத்தில் உள்ள திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் முன்மண்டபத்திலும் காணப்படுகிற சிற்பங்கள், சொல்லில் அடங்காத அழகுடன் மிளிர்கின்றன.

அதுமட்டுமா..? கோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் உட்பகுதியிலும் திருமாலின் திருக்கோலங்கள் பல உள்ளன. வாயிற்காவலர்களான ஜயன், விஜயன் மற்றும் பெண்கள், யானை மற்றும் குதிரைகள், பறவைகள், தவிர அழகும் நுணுக்கங்களும் கொண்டு திகழ்கிற கும்ப பஞ்சரங்கள் என, சிற்பப் படைப்புகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 13

இந்த வரிசையில் ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி ஆகியோர் பெருமாளுக்கு இருபுறமும் அமர்ந்திருக்க, படமெடுத்தாடும் பாம்பின் கீழ் அமர்ந்திருக்கிறார் பெருமாள்.

கோபுரச் சுவரின் வெளிப்புறம், கீழ்த்திசை நோக்கியபடி திகழ்கிறது திரிவிக்கிரம மூர்த்தியின் சிற்பம். வாமனனுக்கு, ஸ்ரீமகாபலிச் சக்கரவர்த்தி கையில் நீர்ச்சொம்பை வைத்துக்கொண்டு நீர் வார்த்துக் கொடுக்கும் காட்சி ஒருபக்கம் அமைந்துள்ளது. குள்ளனாக வந்த வாமனர் திரிவிக்கிரம உருவம் காட்டி, ஓரடியால் பூமியை அளந்து, இரண்டாவதாக மற்றொரு காலை தலைக்கு மேல் உயர்த்தி, வானத்தை அளக்கிறார். இந்தச் சிற்பத்தில், எட்டுத் திருக்கரங்களுடன் திகழும் அழகே அழகு!

வானத்தை அளந்த திருவடியை பிரம்மன் விண்ணக கங்கையால் அபிஷேகிக்கும் காட்சி சிலிர்க்கவைக்கிறது. அருகில் இரண்டு தூண்கள்; அவற்றில் தத்ரூபமாக வடிக்கப் பட்ட இரண்டு புறாக்கள். அதேபோல் கோபுரம் முழுவதும் உள்ள தூண்களில், ஆங்காங்கே புறாச் சிற்பங்கள்!

திருவேங்கடமுடையான் சந்நிதி திகழும் திருமண்டபத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள நான்கு தூண்கள் மற்றும் அதிஷ்டானத்து விளிம்புகளிலும் அழகுப் பதுமைகளாகப் பல சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. வாயிற் காவலர்களாகத் இரண்டு வீரர்களின் சிற்பங்கள் இரண்டு பக்கமும் திகழ, இடையேயுள்ள இரண்டு தூண்களில் வில்லேந்திய ஸ்ரீராமனின் திருவுருவங்கள் காணப்பெறுகின்றன. ஒரு வீரன் தன் ஒரு காலை உயர்த்தியவாறு வாளும் கேடயமும் ஏந்திக்கொண்டு, இன்னொருவனைத் தாக்கியவாறு நிற்கின்றான். அவன் தலை அலங்காரமும் மீசையும், அணிந்துள்ள ஆபரணங்களும், கோபம் காட்டும் விழிகளும் இந்தப் படைப்பைத் தத்ரூபமாக்கியுள்ளன. எதிர்ப்புறம் நிற்கும் மற்றொரு வீரன் அழகிய கொண்டை அலங்காரத்துடன் கைகளில் வாளும் வளைதடியும் ஏந்தியபடி உடல் முழுவதும் ஆபரணங்களுடன் திகழ்கிறான்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 13

அதேபோல் ஒரு கையில் வில்லும், மறு கரத்தில் ராம பாணமும் ஏந்தியபடி ஸ்ரீராமன், ஸ்ரீஅனுமனின் தோள்களை அணைத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது, அந்தச் சிற்பத்திலேயே அவர்களின் நெருக்கமும் அணுக்கமும், வாஞ்சையும் தோழமையும் பளிச்சிடுகின்றன. மறுபுறம் சுக்ரீவன் கரம் கூப்பித் தொழுகிறான். அனுமனோ வாய் பொத்திய நிலையில் பணிவுடன் நிற்கிறான். கீழே மூன்று வானரங்கள் வாளும் கேடயமும் ஏந்திப் போருக்குச் செல்கின்றன. இத்தனையும் ஒரு தூணாகவே விளங்குவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 13

இதேபோன்று, மற்றொரு தூணில் வில்லேந்திய ராமன் நிற்க, அருகே சீதா. ஸ்ரீராமனோ வில்லேந்திய திருக்கரத்துடன் அனுமனின் தோள்களைப் பிடித்தபடி திகழ்கிறார். சில தூண்களில் இசைக்கருவிகளை இசைக்கும் பாவனையில் இசைக்கலைஞர்களின் உருவங்கள் உள்ளன.

மண்டப அதிஷ்டானத்து விளிம்புகளில் உள்ள சிற்பத் தொகுதிகளில் அற்புதமானவை குறப்பெண்களின் சிற்பம். இரண்டு குறப் பெண்கள் கைகளில் பிரம்புக் கூடைகளை இறுக்கிப் பிடித்தபடி, உணவுக் கலங்களை ஏந்திச் செல்கின்றனர். அவர்கள் தோளில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள், அந்த உணவை எடுத்துச் சாப்பிடுகின்றனர். இரண்டு பெண்களும் இரு குழந்தைகளின் தலைமீது தங்கள் கரங்களை வைத்திருப்பது அழகு!

இந்தக் கோயிலின் வடபுற திருச்சுற்று மண்டபத்தின் கூரை விளிம்புகளாகிய கொடுங்கைப் பகுதிகளில் அமைந்துள்ள சிற்பங்களும் தனிச்சிறப்பு கொண்டவையே!

இரண்டு பூனைகள் சேவலையும், பெட்டைக் கோழியையும் வாயால் கவ்விப் பிடித்துச் செல்ல, இடையே இரண்டு கோழிக் குஞ்சுகள் பயந்து ஓடுகின்றன. அதேபோல், படமெடுத்தாடும் பாம்பின் முன் மகுடி வாசிக்கும் பாம்பாட்டி, சேட்டைகள் பல செய்யும் குரங்குகள் என அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் தலத்துக்கு வருவோரைக் கவர்ந்திழுக்கும் கலைநயமிகுந்த காலம் கடந்த படைப்புக்கள் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

- புரட்டுவோம்