மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 39

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

இரகுவம்மிச தீபம்!பி.என்.பரசுராமன்

##~##

கு வம்சம்- சம்ஸ்கிருதத்தில் உள்ள தலைசிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. மகாகவி காளிதாசனால் எழுதப்பட்ட இந்த நூலில் 19 சர்க்கங்கள் உள்ளன. முதல் சர்க்கம்- திலீபனில் தொடங்கி, 19-வது சர்க்கம் அக்னிவர்ணன் என்ற மன்னனின் அவலமான முடிவைச் சொல்வதுடன் முடிகிறது.

யாழ்ப்பாணத்து நல்லூர் மகாவித்வான் அரசகேசரி என்பவர், இந்த நூலை அப்படியே தமிழில் அற்புதமான பாடல்களாகவே இயற்றித்தந்துள்ளார். இவரது இந்த நூல் ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது. இதை மொழிபெயர்ப்பு நூல் என்பதை விட, மொழி மாற்ற (ட்ரான்ஸ்லிட்ரேஷன்) நூல் என்று சொல்லும் அளவுக்கு, அப்படியே தமிழில் வழங்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் அரசாண்ட பரராச சேகரர் என்ற மன்னனின் மருமகனான அரசகேசரி, வர்ணனைகளில்கூட மூல நூலில் இருந்து மாறுபடாமல் எழுதியிருக்கிறார். 27 படலங்களாக வகுக்கப்பட்டிருக்கும் இந்நூல், 1887-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்டது.

'இரகு வம்மிசம்’ என்ற பெயர்கொண்ட இந்த நூலில் உள்ள அரும் பெரும் பாடல்களுக்கு, 85 ஆண்டுகளுக்கு முன்னால்...யாழ்ப்பாணத்தில் உள்ள புன்னாலைக் கட்டுவன் எனும் ஊரைச் சேர்ந்த சி.கணேசையர் என்பவரால், அபூர்வமான உரை வகுக்கப்பட்டிருக்கிறது.

அந்த நூலில் இருந்து சில தகவல்கள்...

ஞானப் பொக்கிஷம்: 39

திலீபனுக்கும் அவர் மனைவி சுதக்ஷிணைக்கும் பிள்ளையாக ரகு பிறந்தான் (இந்த ரகுவை முன்னிட்டுதான். ரகு குலம் என்ற பெயர் வந்தது). பிள்ளை பிறந்ததும்... திலீபனும் சுதக்ஷிணையும் மகிழ்ந்தார்கள்.

இதைச் சொல்லும் காளிதாசரின் ரகு வம்ச ஸ்லோகம்,

சசீ புரந்தரௌ ஐயந்தேந
யதா நநந்தது: ததா தத்ஸமௌ
ஸா மாகதீ ந்ருபஸ்ச
ஸுதேந நநந்தது:

கருத்து: இந்திராணியும் இந்திரனும் ஐயந்தன் என்ற புதல்வனால் எப்படி மகிழ்ந்தார்களோ, அப்படி... அவர்களுக்கு ஒப்பான, அந்த மகத தேசத்தைச் சேர்ந்தவளான சுதக்ஷிணையும் அரசன் திலீபனும் பிள்ளையினால் மகிழ்ந்தார்கள். இதை அப்படியே சொல்லும் அரச கேசரியின் இரகு வம்மிசப் பாடல்

சயந்தனைச் சசிபெறு தகவின் மைந்தனைப்
பயந்தனள் தெய்வதுந்துபியும் பம்பின
வியந்தன பாரெலா மிகுந்த வோகையே
நயந்தரு களிப்பினால் நவிலு மோ தையே

(இரகுவுற்பத்திப் படலம்-15ம் பாடல்)

திலீபனுக்குப் பிறகு, ரகு அரசனாக ஆனான். அதைக் காளிதாச மாகவி சொல்லும்போது;

ஸ ராஜ்யம் குருணா தத்தம்
ப்ரதிபத்ய அதிகம் பபௌ
தினாந்தே நிஹிதம் தேஜ:
ஸவித்ரே வஹுதாசந:

(ரகுவம்சம் 4-ஆம் ஸ்கந்தம் 1-வது ஸ்லோகம்)

கருத்து: பகலின் முடிவில், அதாவது மாலைப் பொழுதில், சூரியனால் தன்னிடம் வைக்கப்பட்ட ஒளியை அடைந்து, அக்னி ஒளி வீசுவதைப் போல; தந்தையால் கொடுக்கப்பட்ட அரசைப் பெற்று, ரகு இளமையிலேயே சீரும் சிறப்புமாக விளங்கினான்.

ஞானப் பொக்கிஷம்: 39

இதே தகவலை, காளிதாசரின் அடியற்றி, அரசகேசரி சொல்வதைப் பார்க்கலாம்!

கனை கழல் வீரனுங் காவலான்றரு
புனை மணி முடியடும் பொலிந்து தோன்றினான்
தினகரன் நிவாந்தகாலத்திற் சேர்த்திய
வினவொளி கொடுகன லிலங்கிற் றென்னவே

(இரகு வம்மிசம் திக்கு விசயப் படலம் 1-ம் பாடல்)

காளிதாசர் சொன்ன கருத்தையே, அரகேசரி அருந்தமிழ்ப் பாடலாகப் செய்திருந்தாலும், இப்பாடலுக்கு விருத்தியுரை கண்ட கணேசையர், விரிவாகவே உரை கண்டு வியப்பில் ஆழ்த்துகிறார். ரகு வம்ச உரையில் காணக் கிடைக்காத தகவல்கள் அவை...

சூரியன் மாலைக் காலத்தில் கொடுத்த ஒளியால், அக்னி விளங்கினாற் போலத் திலீபன் தன் முதுமைக் காலத்தில் கொடுத்த ராஜ்ஜியத்தினால் ரகுவும் விளங்கினான் என்பது கருத்து.

அக்னி இயல்பாகவே ஒளியுடையதாக இருந்தாலும், சூரியனின் ஒளியாலே தன் ஒளி மங்கி இருந்தது. பிறகு, சூரியன் அஸ்தமனமாகும்போது அதன் ஒளியோடும் கூடி உலகில் அதிகமாக விளங்கியது போன்று, ரகுவும் இயல்பாகவே புகழ்பெற்றவனாக இருந்தாலும், திலீபனின் ஆட்சி காலம் வரை தன் புகழை மறைத்திருந்து, பின் முதுமையில் திலீபன் கொடுத்த ராஜ்ஜியத்தோடும் கூடி, முன்பை விட அதிகமாகச் சீரும் சிறப்புமாக விளங்கினான் - என்பது விருத்தியுரை.

உபமானம் சொல்வதில் காளிதாசருக்கு ஈடு இணை கிடையாது என்பது, அயல்நாட்டு அறிஞர்கள்கூட அறிந்த உண்மை. அரகேசரியாரின் பாடல்களில் அவற்றை விரிவாகவே பார்த்தோம்! இனி, குல குருவான வசிஷ்டர் ரகுவுக்குக் கொடுத்த ஒரு தீபத்தையும் பார்க்கலாம். ரகுவினுடைய பெருமைக்கெல்லாம் காரணம், வசிஷ்டர் கொடுத்த அந்தத் தீபம்தான்!

அந்த விளக்கில்... புத்தி - அகல், தூய்மையான எண்ணெய் - ஆசை, அரும்பொருள் உடைய நூல்கள் - அழகிய திரிகள், அறிவு - தீபம். அதாவது... ரகுவின் புத்தியில், தூய்மையான ஆசையை உருவாக்கி, அரும்பெரும் நூல்கள் சொல்லும் உபதேசங்களையெல்லாம் அவனுக்கு விளக்கி, ரகுவின் அறிவை ஒளி வீசச் செய்தார் வசிஷ்டர்.

அந்த விளக்கை நமக்குக் காட்டுகிறது இரகு வம்மிசம்.

வரும் பொருள் உணரு நேசம் மாசறு தயிலம் வாக்கி
அரும் பொருள் கலைகள் என்னும் அணித்திரி அநந்த மாட்டிப்
பெரும் பொருட் புத்தியென்னும் அகலிடைப் பெரிதினாக
இரும் பொருள் அறிவுத் தீபம் இருளறக் கொளுத்தியிட்டான்

(இரகுவுற்பத்திப் படலம் 38ம் பாடல்)

ரகுகுலத் திலகனான ஸ்ரீராமரருளால் கிடைத்த இரகு வம்மிசத் தில், வசிஷ்டர் ரகுவுக்குக் கொடுத்த தீபம் நமக்கும் கிடைக்க, அந்த ரகுகுல திலகனையே வேண்டுவோம்!

- இன்னும் அள்ளுவோம்...