Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியம்: பாரதிராஜா

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
##~##

'ஹரியும் சிவனும் ஒன்றே’ என்பது தெளிந்த ஞானிகள் கண்டறிந்த உண்மை. ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மூன்று முக்கிய அவதாரங்களான ஸ்ரீபரசுராமர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய அவதாரங்கள் வணங்கி பூஜித்தது சிவனைத்தான் என்று ராமாயணமும் மஹாபாரதமும் குறிப்பிடுகின்றன. எனில், ஸ்ரீவிஷ்ணு சிவ பக்தரா? இந்தக் கதையில் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேதவியாஸர் எழுதிய பதினெட்டுப் புராணங்களில் சித்திரிக்கப் படும் சம்பவங்கள், சிவ விஷ்ணு தத்துவம் என்பது ஒன்றாகி நிற்கிற பரம்பொருளையே குறிக்கும் என்பதையே விளக்குகின்றன.

விஷ்ணுவின் கரத்தில் இருக்கும் சுதர்சனச் சக்கரம் சிவபெருமானால் அவருக்கு வழங்கப்பட்டது. சிவபூஜை செய்யும்போது தன் கண்ணையே மலராக்கிச் சமர்ப்பித்தார் ஸ்ரீமகாவிஷ்ணு. அதனால் மகிழ்ந்து சிவபெருமானால் விஷ்ணுவுக்கு தரப்பட்டதே சுதர்சனச் சக்கரம் என்ற தகவல் சிவ புராணத்திலும் விஷ்ணு புராணத்திலும் காணப்படுகிறது. பத்ம புராணம், 101-வது காண்டமான பாதாள காண்டத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. அதில் விளக்கப்படும் சிவ-விஷ்ணு தத்துவம் நம்மை வியக்கவைக்கிறது.

பிரம்மப் பிரளய காலத்துக்கு முன்னர் ஸ்ரீமகாவிஷ்ணு பாற்கடலில் அனந்தசயனராக யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார். அவரை சுற்றிலும் ரிஷிகள் தவமியற்றிக் கொண்டிருந்தனர். அவரது நாபியில் தோன்றிய தாமரையில் அமர்ந்து, பல்வேறு உலகங்களையும் ஜீவராசிகளையும் சிருஷ்டித்துக் கொண்டிருந்தான் பிரம்மன். சிருஷ்டியின் பரிமாணத்தை அதிகமாக்க விரும்பினார் விஷ்ணு. அதன்பொருட்டு, தான் துயில் கொண்டிருக்கும் பாற்கடலில் முழுவதுமாக மூழ்கியெழ நினைத்தார். எனவே, ஆதிசேஷபடுக்கையில் இருந்து எழுந்து பாற்கடலில் காலை வைத்தார். ஆனால், அண்ட சராசரங்களை விட பெரியதான அவருடைய மேனியின் முழங்கால் வரைதான் நனைந்தது, பரந்துவிரிந்த பாற்கடலின் நீரில்!

உடனே, கண்ணை மூடி கடும் தவத்தில் ஆழ்ந்தார் மகாவிஷ்ணு. திடீரென ஆகாயத்தில் பதினாயிரம் சூரியன்களுக்கு ஒப்பான பேரொளி தோன்றி, அவருடைய கண்களைக் கூசச் செய்தது. அதன் நடுவே தோன்றினார் சர்வேஸ்வரனான சிவபெருமான். ''சர்வேஸ்வரா! என்னுடைய சரீரம் முழுவதுமாக நனைய இந்த பிரபஞ்சத்திலுள்ள நீர் போதவில்லை. என் எண்ணம் நிறைவேற தாங்களே அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார் விஷ்ணு.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

உடனே சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்தார். தனது வலது துடையை, வலக் கரத்தால் தட்டினார். பாற்கடலை விடப் பெரியதான ஒரு பிரமாண்டமான ஜலப்பிரளயம் அதில் தோன்றியது. ''மஹாவிஷ்ணுவே! நீங்கள் ஜீவராசிகளைக் காக்கும் கடவுள். உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதோ என் துடையில் தோன்றியுள்ள பிரளய ஜலத்தில் தாங்கள் மூழ்கி, அதனால் பெரும் வல்லமை பெறுவீர்கள்'' என்று அருளினார்.

ஸ்ரீமகாவிஷ்ணு, ''மகேஸ்வரா! இங்கிருந்து நான் தங்கள் துடை மீது எப்படி ஏறுவது?'' என்று விநயத்துடன் கேட்டார். உடனே சிவபெருமான் வாயிலிருந்து வேத மந்திரங்கள் ஒலித்தன. அவை ஒவ்வொன்றும், பாற்கடல் பரப்பிலிருந்து பிரமாண்டமாக நின்ற சிவபெருமானின் தொடைக்குப் படிகளாகின. மகாவிஷ்ணு பயபக்தியுடன் அவற்றின் மீது ஏறி, சிவபெருமானின் துடையில் வியாபித்திருந்த நீர்ப்பரப்பில் இறங்கினார். அங்கிருந்த நீரும் விஷ்ணு முழுவதுமாக நனையப் போதுமானதாக இல்லை. ஏக்கத்தோடு சிவபெருமானைப் பிரார்த்தித்தார் அவர். அப்போது சிவபெருமான் உடலிலிருந்து விபூதி மழையாகப் பொழிய ஆரம்பித்தது. அந்த பஸ்மத்தில் விஷ்ணுவின் உடல் முழுவதும் மூழ்கியது. அப்போது சிவபெருமான் கூறினார்.

''மஹாவிஷ்ணுவே! என் துடையில் தோன்றிய பிரளய நீர் உங்கள் உடலின் கீழ்ப் பகுதியை மட்டுமே நனைத்தது. எனவேதான், என் உடலை அசைத்து அதில் தோன்றிய பஸ்மத்தை விபூதியாக்கி, உங்கள்மேல் பனிபோல் பொழியச் செய்தேன். பஞ்ச பூதங்களில் நீரும் நெருப்பும் முக்கியமானவை ஆகவேதான் உங்களை நீராலும், நெருப்பின் அம்ஸமான விபூதியாலும் அபிஷேகம் செய்தேன். எவராலும் அழிக்கமுடியாத ஆக்க சக்தி உங்களுக்குள் எப்போதும் அடங்கியிருக்கும்'' என்று கூறி வாழ்த்தினார்.

அப்போது, எல்லா தேவர்களும் ரிஷிகளும் 'ஹர ஹர மகாதேவா!’ 'ஓம் நமோ நாராயணாய!’ என்று கோஷமிட்டனர். சிவபெருமான் அனைவரையும் வாழ்த்தி மறைந்தார். மஹா விஷ்ணு பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்தார்.

விபூதியின் மகிமை

விபூதிக்கு ஒரு மகிமை உண்டு. அது, விபூதி தயாரிக்கும் முறையில் அடங்கியுள்ளது. பசு மாட்டுச் சாணத்தைப் பெரிய உருண்டை களாகப் பிடித்து வெயிலில் காய வைப்பார்கள். அதன் பின்பு நெருப்பு மூட்டப்பட்டு, எரிந்து கொண்டிருக்கும் மரக்கட்டைகள் மீது அவை வைக்கப்பட்டு எரிக்கப்படும். நன்கு எரிந்த சாண உருண்டைகள் வெண்மையான சாம்பல் உருண்டைகளாக மாறும். நெருப்பு அணைந்த பின்னர், அவற்றை எடுத்துப் பொடியாக்கி உதிர்த்து சல்லடையிலும், மெல்லிய துணியிலும் சலித்து மென்மையான வெண்மையான தூளாகப் பிரித்தெடுத்து, அதில் வாசனை திரவியங்களைச் சேர்த்து விபூதி தயாரிக்கின்றனர்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

சிவனை வழிபடும் பக்தர்கள் விபூதி அல்லது திருநீறை நெற்றியில் மூன்று பட்டைகளாக அணிவது சம்பிரதாயம். நெருப்பும் நீரும் இணைந்த தத்துவமே சிவவிஷ்ணு தத்துவம் என்பதை உணர்த்தவே திருநீறை நீரில் குழைத்து நெற்றியிலும், கைகளிலும், மார்பிலும் மூன்று பட்டைகளாகப் பூசுகின்றனர். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றினையும் அழித்தால் இறைவன் திருவடியை அடையலாம் என்பதையே விபூதியின் மூன்று பட்டைகள் விளக்குகின்றன.

விபூதிக்கு திருநீறு என்று பெயருண்டு. ஆதலால் ஞானிகள் இறைவனைப் பூஜிக்கும் முன்பு நீராடி... நீறாடி என இருமுறை கூறுவார்கள். முதலில் குறிப்பிட்ட 'நீராடி’ என்பது தண்ணீரில் ஸ்நானம் செய்வதையும், இரண்டாவது 'திருநீறு’ தரித்துக் கொள்வதையும் குறிக்கிறது. இதற்கு முன்னோடியாக இருந்தது மஹாவிபூதியே. விபூதி தயாரிப்பதில் மற்றொரு தத்துவமும் அடங்கியுள்ளது. ஏதாவது ஒரு பொருளை நெருப்பில் போட்டால் அது எரிந்து கரியாகி கறுப்பாகத் தோற்றம் அளிக்கும். ஆனால் காய்ந்து லேசான கருமை நிறம் கொண்ட சாணி உருண்டைகளை தீயிலிட்டால், அது வெண்மையான பஸ்பமாக மாறுகிறது. தீமைகளை அழிக்க வல்லது திருநீறு என்ற தத்துவத்தையே இது விளக்குகிறது.

ஒன்றுக்கொன்று முரண்பாடான பண்புகளைக் கொண்ட நீரும் நெருப்பும் நட்புடன் ஒன்றையன்று சார்ந்திருப்பது சிவ சந்நிதியிலும் விஷ்ணு சந்நிதியிலும்தான். சிவனையும் விஷ்ணுவையும் சேர்த்து சங்கரநாராயணன் என்ற வடிவில் பலர் வழிபடுகின்றனர். அதற்கான ஆலயங்கள் பலவும் உள்ளன. வல பாகம் சிவனாகவும், இட பாகம் விஷ்ணுவாகவும் சித்திரிக்கப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் விஷம் வந்தது. அதனை சிவபெருமான் உட்கொண்டு தேவர்களையும் அசுரர்களையும் காத்தார். அதன் பின்பு அமிர்தம் தோன்றியது. பகவான் விஷ்ணு மோகினியாக வடிவெடுத்து அமிர்தத்தை தேவர்களுக்கு விநியோகித்தார். விஷத்தை அருந்தி மரணத்தைத் தடுத்தவர் சிவன்; அமிர்தம் வழங்கி மரணமில்லாப் பெருவாழ்வைத் தந்தவர் மோகினியாக வந்த விஷ்ணு. இவர்கள் இருவரும் ஐக்கியமான வடிவமே சங்கர நாராயண வடிவம்.

தமிழ்நாட்டில் சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஆலயத்தில் சங்கர நாராயணர் சந்நிதி உள்ளது. பிரித்துப் பார்க்க முடியாத சக்திதான் சிவனும் விஷ்ணுவும். அதனால்தான் சிவபெருமானின் அவதாரம் என்று போற்றப்படும் ஆதிசங்கரர் மாந்தர்கள் நல்வழியைக் கடைப்பிடித்து மோக்ஷத்தை அடைய, ''பஜ கோவிந்தம்'' என்று பாடி வைத்தார். அவரும் சிவவிஷ்ணு பேதம் பாராட்டவில்லை. விஷ்ணுதான் பெரியவர், சிவன்தான் பெரியவர் என்று ஒரு சிலர் வாதிடலாம். அவர்கள் பரிபூரண ஞானத்தை அடையவில்லை என்பதையே அது குறிக்கிறது.

''சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணும்
விஷ்ணோஸ்ச ஹ்ருதயம் சிவஹ''

என்ற வாக்கியங்கள் சிவனின் இதயம் விஷ்ணு என்றும், விஷ்ணுவின் இதயம் சிவன் என்றும் வர்ணிக்கிறது.

'சிவாய விஷ்ணு ரூயாய
விஷ்ணவே சிவரூபிணே’

என்ற வரிகளால் சிவவிஷ்ணு ரூபங்களில் பேதமில்லை என்று அறியலாம்.

- இன்னும் சொல்வேன்...