Election bannerElection banner
Published:Updated:

திருப்பம் தரும் திருப்பதி!

திருப்பம் தரும் திருப்பதி!

##~##

வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்பட வரம் அருளும் தலம் திருப்பதி. இங்கு ஏழுமலையான் குடியிருக்கும் கோயில் மிகப் பழைமையானது என்கின்றன ஞானநூல்கள். தொல்காப்பியம் போன்ற நூல்கள், இந்தத் தலத்தை 'வேங்கடம்’ என்றும் பெருமாளை வேங்கடத்தான் என்றும் குறிபிடுகின்றன. திருப்பதி நாயகனை தரிசிக்க மலையேறும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார், ஸ்ரீவழித்துணை விநாயகர். இவரை வழிபட்டு விட்டு மலையேறத் துவங்கினால், நம் துணைக்கு வந்து காத்தருள்வார் என்பது ஐதீகம்.

அதேபோன்று, மலை மேல் நடந்து செல்லும் பக்தர்கள் ஸ்ரீபாத மண்டபத்தைக் கடந்ததும் பாறை ஒன்றைப் பார்க்கலாம். ஆஞ்சநேயரின் உருவம் பதிந்துள்ள இந்த பாறைக்கு 'தலையேறு குண்டு’ என்று பெயர். இந்த இடத்தில் நின்று வணங்கி பயணத் தைத் தொடர்ந்தால், திருமலையின் உச்சிக்கு சென்று சேரும்வரை உடல்ரீதியாக எந்தப் பிரச்னையும் வராது என்பது நம்பிக்கை.

புனிதம் நிறைந்த திருமலையில் கால் பதிப்பது குற்றம் என்று நினைத்த ராமானுஜர், தன் முழங்கால்களால் நடந்தே ஏழு மலைகளையும் கடந்து, ஏழுமலையானை தரிசனம் செய்தார் என்பது வரலாறு.

திருப்பம் தரும் திருப்பதி!

கீழ் திருப்பதியில் இருந்து 12 கி.மீ. தொலைவு பயணித்தால், ஸ்ரீநிவாசமங்காபுரத்தை அடையலாம். திருமணத்துக்குப் பிறகு ஸ்ரீநிவாசன், பத்மாவதியுடன் தங்கியிருந்த இடம் இது. இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளின் திருநாமம் ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள். திருப்பதி ஏழுமலையானை முழுத் திருப்தியுடன் நின்று, நிதானித்து வழிபட முடியாதவர்கள், இவரை வழிபடலாம்.

கீழ் திருப்பதியில் இருந்து 4 கி.மீ. தொலைவு பயணித்தால் அலமேலு மங்காபுரத்தை அடையலாம். இதற்குத் திருச்சானூர் என்றும் பெயர் உண்டு. இங்கே தாயாருக்கு தனிக் கோயில் உள்ளது. கோயிலை ஒட்டி பத்மஸரோவ தீர்த்தம் எனும் குளம் உள்ளது. இந்தக் குளத்தில், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர் மீது மகாலட்சுமி தோன்றி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள்புரிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

தொகுப்பு: தேவிகா ஆனந்த், சென்னை-69

பெருமாள் தரிசனம்!

திருப்பம் தரும் திருப்பதி!

திருவாரூர் அருகே உள்ள திருத்தலம் திருக்கண்ணமங்கை. இங்கே அருள் புரியும் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.  சுமார் 16.5 அடி உயரம் கொண்ட இவர், தமிழ்நாட்டிலேயே மிக உயரமான பெருமாளாகத் திகழ்கிறார். இங்கு அருள் புரியும் தாயாரின் திருநாமம் அபிஷேகவல்லி. இந்தத் திருத்தலம் வந்து வழிபட்டு, ஒர் இரவு இங்கே தங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டு அஷ்டபுஜப் பெருமாளை தேவர்கள் வழிபடுவதாக ஐதீகம். 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான இங்கே  மட்டும்தான் பெருமாள் 8 திருக்கரங்களுடன் காட்சிதருகிறார். இதனாலேயே இவருக்கு அட்டபுயகரத்தான் என்ற பெயரும் உண்டு.

சீர்காழி அருகே உள்ள திருத்தலம் தலைச்சங்காடு. இங்கே அருளும் பெருமாளின் திருமுக ஒளி, நிலவின் ஒளியைப் போன்று காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், சந்திரன் வழிபட்ட திருத்தலம் இது என்பதால், சந்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட, அந்த தோஷம் நீங்கும் என்கிறார்கள்.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருவித்துவக்கோடு. இதை, பஞ்சபாண்டவர்கள் க்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள். ஒருமுறை அம்பரீசன், பரம்பொருளை நான்குபுறங்களிலும் நான்கு வடிவங்களுடன் வியூக அவதாரமாக தரிசனம் தர வேண்டும் என்று வேண்டினான். அதன்படி, பெருமாள் நான்கு வடிவங்களுடன் இந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்த நான்கு பெருமாள்களையும் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

தொகுப்பு: இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு