Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

தசாவதார திருத்தலங்கள்!

தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

Published:Updated:
##~##

குருவாயூரில் நிர்மால்ய தரிசனம் காண்பது பெரும் புண்ணியம். ஆதிசங்கரர் வகுத்த பூஜை முறைப்படி, அதிகாலை 3 மணிக்கு நாகசுரம் மற்றும் சங்கு முழங்க, குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச் செய்வர். இப்படிக் காட்சி கொடுப்பதற்கு நிர்மால்ய தரிசனம் என்று பெயர். இந்த தரிசனத்தைக் காணும் பக்தர்களின் ஒட்டுமொத்த பாவங்களும் தொலையும்; புண்ணியம் பெருகும்.

தொடர்ந்து விசுவரூப தரிசனம் நடைபெறும். அடுத்து தைல அபிஷேகம். அதன் பிறகு திருமேனியை வாகைத் தூள் சாற்றி எண்ணெய் களைவார்கள். பின்னர் சங்காபிஷேகம் நிகழும். நிறைவாக தங்கக் கலச நீரால் பூர்ணத் திருமஞ்சனம் செய்து, ஸ்வாமிக்கு நெற்பொரி, கதலிப் பழம், சர்க்கரை ஆகியவற்றை நைவேத்தியம் செய்வர். அப்போது ஸ்ரீஉன்னி கிருஷ்ணனாக காட்சி தரும் பகவானைக் காணக் கண்கோடி வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உஷத் பூஜையும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இந்த பூஜையின்போது, நெய்ப் பாயசமும், அன்னமும் பிரதான நைவேத்தியங்கள். மீண்டும் நடை திறக்கும்போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக் குழல், மஞ்சள் பட்டு ஆகிய அலங்காரங்களுடன் அற்புதமாகக் காட்சி கொடுப்பார். இத்தனை பூஜைகளும் காலை ஆறு மணிக்குள் நடைபெறும்.

தசாவதார திருத்தலங்கள்!

குருவாயூர் கோயிலில் உச்சி பூஜையின்போது 'சீவேலி’ உற்சவம் நடைபெறும். யானை மீது சீவேலி மூன்று முறை பிராகாரத்தை வலம் வருகிறது. முதல் வலத்தின்போது பரிவார தேவதைகளுக்கு அன்ன பலி இடுவர். அடுத்து பால் அபிஷேகம். 9 மணிக்கு வெள்ளிக் கலச தீர்த்தத்தால் அபிஷேகம். தொடர்ந்து பந்தீரடி பூஜை. இதை வேதம் ஓதும் நம்பூதிரிகள் (ஓதிக்கன்மார்) செய்வர். அப்போது சாதமும், சர்க்கரைப் பாயசமும் நைவேத்தியம் செய்யப்படும்.

அதேபோன்று இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையில் நெய் அப்பம், இலை அடை, பால் பிரதமன் ஆகியவை நைவேத்தியங்கள். இந்த பூஜைக்குப் பிறகு அத்தாழ சீவேலி. பிறகு சுற்று விளக்கு பிரார்த்தனை இருந்தால், ஆலயமெங்கும் விளக்குகள் எரிய, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, மூன்று அல்லது ஐந்து யானைகளுடன் பக்தர்களும் வலம் வருவார்கள்.

குருவாயூர் கோயிலில் சாயங்காலம் நிகழும் தீபாராதனையைத் தரிசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏழு அடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல விளக்குகளை ஏற்றி ஆராதிக்கிறார்கள். இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபடுவதாக  ஐதீகம்.

வாழ்வில் ஒருமுறையேனும் குருவாயூர்   கண்ணனையும், அவனுக்கு நிகழும் பூஜை களையும் கண்குளிர தரிசித்து வாருங்கள்; அருள் தந்து பொருள் தந்து உங்கள் வாழ்க்கையையும் குளிரச் செய்வான் ஸ்ரீகுருவாயூரப்பன்.

குருவாயூர் போன்றே கண்ணனின் லீலை களால் சிறப்புற்ற இன்னொரு தலமும் உண்டு!

ஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஆவூர் வழியே தஞ்சை செல்லும் சாலையில், சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு. கண்ணன் காளிங்கநர்த்தனனாய் அருளும் மிக அற்புதமான க்ஷேத்திரம் இது.

இங்கே வசித்த அந்த அன்பன் ஒருவனுக்கு கண்ணன் மீதும் சங்கீதத்தின் மீதும் அவ்வளவு ஈர்ப்பு! சங்கீதம் பயில வேண்டும் என்பதில் தீவிர ஆசை கொண்டவன், நீடாமங்கலம் கிராமத்துக்குச் சென்று, அங்கே வசித்த சங்கீத வித்வான் ஒருவரிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவர், தன் தாய்மாமனே என்பது அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது.

பழம் நழுவி பாலில் விழுந்ததாகக் கருதி பூரித்துப் போனான்! ஆனால்... அவனுடைய மாமாவோ  இசை கற்றுத் தர மறுத்துவிட்டார். ஆற்றாமையும் வேதனையுமாக ஸ்ரீகிருஷ்ணரிடம் ஓடி வந்து கதறி அழுதான்.

அந்த நிமிடமே அங்கு நறுமணம் சூழ்ந்தது. ஜதியின் லயத்துடன் வந்தது சலங்கை சப்தம்! 'இந்தத் தாளத்துக்கு தக்கபடி பாடு; உனது பாடல் ஒலிக்கும் இடத்துக்கெல்லாம் நான் வருவேன். உனது இசைக்கு நானே குரு!’ என்று அருளினார் கிருஷ்ணர்.

அவ்வளவுதான்! மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அந்த இளைஞன் பாடினான்; பாடிக்கொண்டே இருந்தான். அவனது பாடல்களில் ஒன்று கண்ணனை இப்படி அழைக்கிறது...

ஆடாது அசங்காது வா கண்ணா -
உன் ஆடலில் ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுது எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா!
உன் ஆடலைக் காண தில்லை அம்பலத்து
இறைவனும் தன் ஆடலை விட்டு
இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே
ஒரு மாமயில் சிறகணி மாதவனே
நீ ஆடாது அசங்காது வா!

எவ்வளவு அற்புதமான பாடல்!

இன்னொரு சுவாரஸ்யம்... இந்தப் பாட்டுக் காரர் தொடை தட்டிப் பாடுவதைத் தவிர்த் தாராம். காரணம், இவரது பாடலைக் கேட்க ஓடோடி வரும் கண்ணன், இவரின் மடியில் அமர்ந்து கொள்வானாம்!

சரி, யாரிந்த அன்பர்? அவர்தான் இசையுலகம் போற்றும் ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர்!

- அவதாரம் தொடரும்...

ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவால் உருவாக்கி வணங்கப்பட்ட பின் பிரம்மன், கண்ணன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது. இந்த விக்கிரகம் 'பாதாள அஞ்சனம்’ என்ற உயர் தர கல்லில் வடிவமைக்கப்பட்டது. குருவாயூரப் பனது உற்சவர் விக்கிரகம் பொன்னால் ஆனது.

* குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, அகோவனம், செஞ்சந்தனம் ஆகிய ஐவகைத் திரவியங்களை பன்னீரில் கலந்து அரைத்த நறுமணச் சந்தனத்தையே குருவாயூரப்பனுக்குப் பூசுகிறார்கள்.

* அதிகாலையில் குருவாயூரப் பனை தரிசிப்போருக்கு கோயில் செக்கில் ஆட்டிய அபிஷேக எண்ணெயுடன் அபிஷேக தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. விக்கிரகத்தில் இருந்து அபிஷேக எண்ணெயை வாகை மரப் பட்டையால் ஆன கலவையால் அகற்றுவர். இதை 'வாகை சார்த்து’ என்பர்.