##~## |
புதுக்கோட்டையில், நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில். அரிசிக் கடை வீதியில் அழகுற அமைந்துள்ள ரங்கநாதர் கோயில், புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே களை கட்டத் துவங்கிவிடும் என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
சுமார் 400 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் இது. முன்னொரு காலத்தில், கோதை நாச்சியார் ஸ்ரீரங்கத்தில் இருந்து இந்த வழியே ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றாள் என்றும், அப்போது இங்கே இந்த இடத்தில் எழுந்தருளிய பிறகே கிளம்பிச் சென்றாள் என்றும் சொல்வர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிறகு, இந்த இடத்தின் உன்னதத்தை அறிந்த பாண்டிய மன்னர்களில் ஒருவர், இங்கே ஸ்ரீரங்கநாதரின் திருவிக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பியதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.
ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில், தெற்குத் திசை பார்த்தபடி அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீரங்கநாதரை கண்ணாரத் தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.

திருமாலின் திருமார்பில் ஸ்ரீமகாலக்ஷ்மித் தாயாரும் குடிகொண்டிருக்கிறாள். இங்கு வந்து, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்தால், தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்; இல்லறம் சிறக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீஆண்டாள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கே உள்ள ஸ்ரீஆண்டாளை, தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி அர்ச்சித்து வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவிக்கின்றனர், பெண்கள்.
புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு இங்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். அந்த நாளில் புரட்டாசி விரதம் மேற்கொண்டு, பெருமாளைத் தரிசித்து, தங்களது வேண்டுதலைத் தெரிவித்தால், விரைவில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பது மக்களின் நம்பிக்கை.
- க.அபிநயா
படங்கள்: தே.தீட்ஷித்