ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுகிறது. இங்கு மூலவராக பெருமாளும், தாயாராக ரெங்கநாயகியும் அருள் பாலிக்கிறார்கள். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற சிறப்புடையது.
ஆழ்வார்கள் பன்னிருவரில் தலைவராகிய நம்மாழ்வாருக்கு மோட்சம் என்றழைக்கப்படும் வைகுந்த பதவி அளிப்பதே வைகுண்ட ஏகாதசி நாளின் சிறப்பாகும். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை நடுநாயகமாக கொண்டு முன் பத்து நாட்கள் ‘பகல் பத்து’ என்றும் ஏகாதசி தினத்தில் இருந்து பின் பத்து நாட்கள் ‘ராப்பத்து’ என்றும் 20 நாட்கள் இந்த திருவிழா நடைபெற்றது.

இதில் முக்கிய நிகழ்வான வேடுபறி நிகழ்ச்சி நேற்று ஸ்ரீரங்கத்தில் சிறப்பாக நடந்தது.
சோழப் பேரரசில் தளபதியாக இருந்து பின் சிற்றரசரான திருமங்கைமன்னன் பெருமாளிடம் கொண்ட பக்தியால் ஸ்ரீரங்கம் கோயிலில் திருப்பணி செய்தார். போதுமான நிதியில்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டு திருப்பணி செய்து வந்தார்.
அவரை திருத்துவதற்காக, பெருமாள் மாறுவேடத்தில் வந்தார். இதை அறியாமல் திருமங்கை மன்னன் வழக்கம் போல் பெருமாளையும் வழிமறித்தார். அப்போது பெருமாள், திருமங்கை மன்னன் காதில் ‘ஓம் நமோ நாராயணா‘ என்ற மந்திரத்தை ஓதினார். இதன் மகிமையால் திருமங்கைமன்னன் திருந்தி திருமங்கையாழ்வாராக மாறினார். ஆழ்வாராக மாறியதும் ‘வாடினேன் வாடி' என்ற பாடலை பாடியதாக புராணங்கள் கூறுகின்றன.

இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளில் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்கிறது. இந்நிகழ்ச்சி, நேற்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை கோயில் வளாக மணல்வெளியில் நடந்தது. நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியபடாள் வாசல் வழியே மணல்வெளிக்கு வருவதால் நேற்று பரமபத வாசல் திறப்பு கிடையாது.
வேடுபறி நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று ஸ்ரீரங்கத்தில் திரண்டிருந்து, நாராயணனின் ஆசியைப் பெற்றுச் சென்றனர்.
-க. கவின் பிரியதர்ஷினி
(மாணவ பத்திரிகையாளர்)
படங்கள்: தே.தீட்ஷித்