Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
சி
றகடித்துப் பறந்து வந்தது அந்தப் பஞ்ச வர்ணக் கிளி. விண்ணுக்கும் மண்ணுக்குமாய் வளர்ந்து நின்ற திரிவிக்கிரமன்போல், வானுயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை ஒரு முறை வலம் சுற்றி, அப்படியே கோபுர மாடத்தில் ஒய்யாரமாக அமர்ந்தது.

'எவ்வளவு புனிதமான திருத்தலம்..! எத்தனை எத்தனை மகான்கள் இங்கு வந்து தரிசித்திருப்பார்கள்..! அதோ, சங்கு- சக்ரதாரியாய் பரவாசுதேவர் திகழ, எவ்வளவு அற்புதமாகக் காட்சி அளிக்கிறது ஸ்ரீரங்க விமானம்! இந்த ரங்க விமானத்தை ஒருமுறை தரிசித்தாலும் போதுமே... சர்வ பாவ விமோசனம் அல்லவா!’ என்று எண்ணிச் சிலிர்த்ததோ என்னவோ... உடலைக் குலுக்கி, தலையைச் சிலுப்பிக்கொண்ட அந்தக் கிளி, கோபுரத்தில் இருந்து புறப்பட்டு, சற்று தாழப் பறந்தது.

'ஸ்ரீராமன் தனக்குத் தந்த ரங்கவிமானத்தை விபீஷணாழ்வான் காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்தானாம். காலப் போக்கில் அது மண்மேடிட்டுப் போக, என்னைப் போன்ற ஒரு கிளிதானே ஸ்லோகங்கள் பாடி, அதன் மூலம் சோழ மன்னன் ஒருவனுக்கு, இங்கு ஸ்ரீரங்க விமானம் புதையுண்டு இருப்பதை அடையாளம் காட்டியது. அவனும் கோயிலை அகழ்ந்தெடுத்துத் திருப்பணிகள் செய்ய, அவனுக்கு கிளிச் சோழன் என்ற பெயரும் கிடைத்ததே..!’

- இப்படியரு எண்ணத்தால் எழுந்த பெருமிதமோ என்னவோ, தாயார் சந்நிதி பக்கம் தரையிறங்கி, மிக கம்பீரமாக நடைபோட்டது அந்தக் கிளி. அங்கு அமர்ந்திருந்த பண்டிதர்கள் கூட்டத்தைச் சுற்றி சுற்றி வந்தது. அவர்களையும் நடுநாயகமாக அமர்ந்திருக்கும் அந்த நபரின் உரையையும் கேட்க கேட்க பரவசம் பொங்கியதுபோலும்; படபடவென சிறகடித்துத் தன் உணர்வை வெளிப்படுத்தியது அந்தக் கிள்ளை!

பஞ்சவர்ணக் கிளிக்கு மட்டுமா? அரங்கனின் ஆலயத்தைச் சுற்றியிருந்த புல், பூண்டு, செடி, கொடி, மரங்கள்... அவ்வளவு ஏன், ஆலயத்தைச் சுற்றி ஓடும் காவிரிக்கும்கூட அந்தப் பரவசம் தொற்றிக்கொண்டதுபோலும்! அதன் பாய்ச்சலில் அப்படியரு துள்ளல்; வேகம்!

இயற்கையையே பரவசப்படுத்தும் அளவுக்கு அப்படி என்ன நிகழ்கிறது ஸ்ரீரங்கத்தில்?!

ராமாயண அரங்கேற்றம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

ஜெகம் புகழும் புண்ணிய கதையாம் ஸ்ரீராமனின் காவியத்தை தெள்ளுதமிழில் படைத்த கம்பன், ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். கவிச் சக்ரவர்த்தியிடம் இருந்து மடைதிறந்த வெள்ளமெனப் பிரவாகித்தது ராம காவியம்.

உலகம் யாவற்றையும் இறைவன் உண்டாக்குகிறான்; கொஞ்ச காலம் அதை நிலைபெறச் செய்கிறான்; பிறகு, அவற்றை மறைக்கிறான். இது அவனுக்கு விளையாட்டு.  இந்த விளையாட்டானது காலத்தால் ஒரு தொடர்ச்சியாகவும், எங்கும் வியாபித்ததாகவும் நடக்கிறது. நம்முடைய செயல் ஒவ்வொன்றும் அந்த விளையாட்டுக்குள் அடங்கியவையே! அவனே நமக்குத் தலைவன்; நமக்குப் புகலிடமும் அவனுடைய சரணங்கள்தானே!

கம்பரும் அந்தக் கடவுளையே சரண்புகுந்து...

உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார் அவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

- என கடவுள் வாழ்த்துடன் துவங்கி, தன்னைத் தாழ்த்தி இறையையே உயர்த்திக் காவியம் படைத்தார்.

பாலகாண்டம், அயோத்தியா காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம் என பல பகுதிகளை அருளுரையும் பொருளுரையுமாக கம்பர் விவரிக்க, மெய்ம்மறந்து கேட்டுக் கொண் டிருந்தது கூட்டம்.

அடுத்து யுத்த காண்டம் ஆரம்பமானது. வழக்கம்போல், கடவுள் வாழ்த்து முடித்து, மந்திரப் படலத்தை நிறைவு செய்த கம்பர், இரண்யவதைப் படலத்தை ஆரம்பித்தார்.

ஏறக்குறைய போர் முடிவாகிவிட்ட சூழலில், ஸ்ரீராமனின் பெருமைகளைக் விவரித்த விபீஷணன், அகங்காரத்தால் அழிந்த இரண் யனின் கதையை மேற்கோள் காட்டி, ராவ ணனுக்கு அறிவுரை சொல்வதுபோல் கவி அமைத்திருந்தார் கம்பர். அப்போது கூட்டத்தில் பண்டிதர் ஒருவர் எழுந்தார்...

''அன்பரே! வால்மீகி முதலாக ராமகாவியம் படைத்த ஆன்றோர்கள் எவரும் ராமாயணத்தில் இரண்யவதையைச் சொல்லவில்லையே... நீவிர் எதை அடிப்படையாக வைத்துப் பாடுகிறீர்... இதை நாங்கள் எப்படி ஏற்பது?'' என்றார்.

அவரது கருத்தை ஆமோதிப்பதுபோல் கூட்டத்தில் இன்னும் பலரும், 'ஆமாம்... ஆமாம்...’ எனக் குரல் எழுப்பினர். அரங்கேற்றம் சற்றே தடைப்பட்டது!

கம்பர் கலங்கினார். மனதால் பரம்பொருளைச் சரண்புகுந்தார். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது!

'யாரடா சிரிப்பது’ எனக் கேட்பது போல்... 'மறுத்துப் பேசுவது யார்’ எனும் கேட்கும் தொனியில்... அண்டம் அதிரக் கேட்டது ஒரு சிம்மகர்ஜனை - இடிபோன்றதொரு சிரிப்பொலி!

கம்பனின் கூற்று சரிதான் என ஆமோதிக்கும் விதமாக, தான் ஏற்றுக்கொண்டதை அங்கிருந்த அனைவருக்கும் உணர்த்தும் வகையில், ஸ்ரீரங்கக் கோயிலில் விக்கிரக ரூபமாய்த் திகழ்ந்த நரசிம்ம ஸ்வாமியின் சிரிப்பொலி, பண்டிதர்கள் அனைவருக்கும் கேட்டது. அனைவரும் சிலிர்த்துப் போனார்கள். கம்பனின் பெருமையை, பக்தியை உணர்ந்தவர்கள் தங்கள் தவற்றுக்கு மன்னிப்பு வேண்டினார்கள். தெய்வத் திருவருளைக் கண்டு கம்பரும் எம்பெருமானின் திருவடி தொழுதார்...

சாணினும் உளன், ஓர்தன் மை அணுவினைச் சதகூறிட்ட
கோணினும் உளன் மாமே ருக் குன்றினும் உளன்...

- என, எங்கும் நிறைந்த இறைவனின் பெருமையைக் கூறும் பிரகலாதனின் கதையை, இரண்யகசிபுவின் அகங்காரத்தை, அலட்சியத்தை, நரசிம்ம அவதார மகிமையை விவரித்து முடித்து, ராமாயண காவியத்தைத் தொடர்ந்தார். கம்பராமாயண அரங்கேற்றம் இனிதே நிறைவுற்றது.

கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு அருளிய அந்த மூர்த்தி ஸ்ரீமேட்டழகியசிங்கராக ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் அருள்பாலிக்கிறார். தாயார் சந்நிதி அருகில் அமைந்திருக்கிறது இவரது சந்நிதி.

வாழ்வில் தடைகள் யாவும் நீங்க, வெற்றி கள் பெற, மனதில் இருக்கும் வீண் பயம் நீங்க, நினைத்தது நிறைவேற நரசிம்மரை வழி படுவது சிறப்பு. குறிப்பாக, திருவரங்கத்து ஸ்ரீரங்கனையும் ஸ்ரீரங்கநாயகித் தாயாரையும் வழிபட வரும் பக்தர்கள், தவறாமல் ஸ்ரீமேட்டழகியசிங்கரையும் தரிசித்து வணங்க, நலன்கள் யாவும் கைகூடும்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

ஸ்ரீரங்கத்திலேயே நாம் தரிசிக்கவேண்டிய மற்றுமொரு நரசிம்மரும் உண்டு. அவர் ஸ்ரீகாட்டழகியசிங்கர்!

ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கிழக்கில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால், ஸ்ரீகாட்டழகியசிங்கர் ஆலயத்தை அடையலாம்.

மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது ஆலயம். மண்டபமும் தெய்வச் சந்நிதிகளும் அற்புதம். தசாவதார சிற்ப வேலைப்பாடுகளும் சிறப்பு! பெரும்பாலும் நாயக்க மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். ஸ்ரீகஜானனர், ஸ்ரீயோக அனந்தர், ஸ்ரீயோக நாராயணர், ஸ்ரீயோக வராஹர் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீகருடன் ஆகியோரை வணங்கியபின், கருவறை தரிசனம்!

மகாலட்சுமியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மராக அற்புத தரிசனம் தருகிறார் ஸ்ரீகாட்டழகியசிங்கர். ஸ்வாமியின் பிரம்மாண்ட திருவுருவம் மெய்சிலிர்க்கச் செய்கிறது. உள்ளம் உருக வழிபடுகிறோம். மிகத் தொன்மையான ஸ்வாமி இவர் என்கிறது திருவானைக்கா புராணம்.

வேறு சில வரலாற்றுத் தகவல்களும் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்... இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக, காட்டு மிருகங்கள் உலவும் இடமாகத் திகழ்ந்ததாம். வன விலங்குகளிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க, வல்லபதேவ பாண்டியன் என்ற மன்னன் இங்கே ஸ்ரீலட்சுமிநரசிம்மரை பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்ததாகச் சொல்கிறது வரலாறு. வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்பவனும் இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலில், ஸ்வாதி நட்சத்திரத் திருநாளில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். பிரதோஷ வழிபாடும் விசேஷம்!

ஆதியந்தம் இல்லாத அந்த இறைவனே, இந்த உலகுக் கும் நம் வாழ்வுக்கும் ஆதாரம். இந்த எண்ணத்தை மனதில் இருத்தி, சகல நலன்களையும் வாரி வழங்கும் ஸ்ரீகாட்டழகியசிங்கரையும், ஸ்ரீமேட்டழகியசிங்கரையும் வழிபட்டு, நம் வாழ்வையே வரமாக்குவோம்!

- அவதாரம் தொடரும்...